வெள்ளி, 29 மார்ச், 2024

இயற்கையின் ஆழிப்பேரலையும் சமுதாயத்தின் புரட்சிகரப் பேரலையும்!

 

இயற்கையின் ஆழிப்பேரலையும் சமுதாயத்தின் புரட்சிகரப் பேரலையும் . . . (வேறொரு பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் இது!)

---------------------------------------------------------------------------------------------------------------

இயற்கையின் உள்ளார்ந்த அமைப்பால் ஏற்படுகிற ஒன்றே ஆழிப்பேரலை. பூகம்பம், எரிமலை, புயல் போன்ற இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த வகையே.நமது விருப்பு வெறுப்பைப்பொறுத்து அவை இல்லை. அதுபோன்றதே சோசலிச, கம்யூனிசப் பேரலை.

 சமுதாய அமைப்பில் உள்ள முரண்பாடுகள் வரலாற்றில் அவ்வப்போது சமுதாய மாற்றத்திற்கான அலைகளை உருவாக்கியே தீரும். அதை யாராலும் தடுக்கமுடியாது. இதைத்தான் காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் ஆய்ந்து கூறினார்கள். இது அவர்களின் 'விருப்பு வெறுப்புக்களைச்'' சார்ந்த ஒன்று இல்லை!

 இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் சமுதாய நிகழ்ச்சிகளுக்கும் ஒரு வேறுபாடு . . . ஆழிப்பேரலை நிகழ்ச்சியில் மனிதர்களுக்குப் பங்கு கிடையாது. இயற்கையின் புறவய விதிகள் மட்டுமே அதில் செயல்படுகிறது. ஆனால் சமுதாயப் புரட்சியில் மனிதர்களின் அகவய வளர்ச்சிக்கும் முன்முயற்சிகளுக்கு இடம் உண்டு.

 ஆனால் தனி மனிதர்களின் அகவய உணர்வுகளுக்கு அப்பால் . . . வெளியே . . . புறவயமாக நீடிக்கிற அடிப்படைக் காரணங்களால் ஏற்படுவதே சமுதாய மாற்றம். அதில் மனிதர்களின் அகவயச் செயல்பாடுகளுக்கு பங்கு உண்டு. ஆனால் அவையே புறவயவிதிகளைமீறி, சமுதாய மாற்றத்தைத் தடுத்துவிடமுடியாது.

 இதுதான் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை.

 ஓராயிரம் சாரு மசூம்தார்கள் கொல்லப்பட்டாலும், ஒருபோதும் சமுதாய மாற்றம் நின்றுவிடாது. இந்த நம்பிக்கை ஒருவருக்கு வேண்டும். என் வாழ்க்கையிலேயே - நான் இறப்பதற்குமுன்னே - அந்தச் சமுதாய மாற்றத்தைப் பார்த்துவிடமுடியும் என்று நான் எண்ணிவிடக்கூடாது. அவ்வாறு எண்ணுவது ஒரு குட்டிமுதலாளித்துச் சிந்தனைப் போக்கே. ஒருவரின் வாழ்க்கை உச்சபட்சம் 100 நூறாண்டுகள். ஆனால் சமுதாயமாற்றங்கள் நிகழ்வதற்கு அதைத் தாண்டிய காலம் தேவைப்படலாம். தேவைப்படும். 1970-களில் பத்தாண்டுகளில் புரட்சி வெற்றிபெற்றுவிடும் ( Decade of Liberation) என்று கூறப்பட்டது இளைஞர்களின் எழுச்சிக்காக முன்வைக்கப்பட்ட ஒரு முழக்கமே. அவ்வளவுதான்.

 இதில் ஒன்றை உணரவேண்டும். கம்யூனிசப் புரட்சி நடைபெறும் என்று புறவய விதிகளைக்கொண்டு விளக்கிய காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் தம் காலத்திலேயே அதைப் பார்க்கவில்லை. அவ்வாறு பார்த்துவிடலாம் என்று அவர்கள் கருதியதும் இல்லை. மேலைநாடுகளில் நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு ஒரு முதலாளித்துவச் சமுதாய அமைப்பாக முழுமையாக மாறுவதற்கு சுமார் நான்கு நூற்றாண்டுகள் ஆகியது என்பதே உண்மை.

 ஒன்றுபட்ட புரட்சிகர இயக்கங்கள் உறுதியாக உருவாகத்தான் செய்யும். சமுதாயத்தில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் தீரும். ஒருவர் இதை விரும்புவதாலோ அல்லது ஒருவர் இதை விரும்பாததாலோ இது நடக்காமல் இருக்காது.

 ஆனால் ஒரு எச்சரிக்கை. ''காலம் கனியும் அல்லது கனியட்டும்; அப்போது நானும் அதில் இணைவேன்'' என்று ஒருவர் கூறி, தமது செயலற்றப் பண்பை நியாயப்படுத்திவிடக்கூடாது! சமுதாய மாற்றங்களில் மனிதர்களுக்குப் பங்கு உண்டு. இதை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது! ''காற்று அடிக்கட்டும், தூசி விலகும்'' என்று இருக்கக்கூடாது! ''மலையை அகற்றிய மூடக்கிழவன்'' என்ற சீனக் கதையின் பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும!

 

புதன், 27 மார்ச், 2024

மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (2)

 மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (2)

--------------------------------------------------------------------------
//இலக்கியத்தில் இலக்கியப்படைப்பு, இலக்கிய ரசிப்பு, இலக்கிய ஆய்வு என்று பிரிவுகள் இருப்பதுபோல . . . மொழி ஆய்விலும் ஒரு மொழியைத் தெரிந்திருப்பது அல்லது பயன்படுத்துவது வேறு, மொழியைப்பற்றிய ஆய்வை மேற்கொள்வது வேறு; மொழியின் சிறப்பை உணர்ந்து மகிழ்வடைவது வேறு; மொழி உரிமைகளுக்காகப் போராடுவது வேறு. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் வேறுபடுத்தியும் பார்க்கவேண்டும் - ஆய்வுநோக்கில்!//
//எடுத்துக்காட்டாக, அன்பிற்குரிய இராமகி ஐயா அவர்கள் நாம் அயல்மொழிச்சொல் என்று கருதிக்கொண்டிருக்கிற ஒரு சொல் தமிழ்ச்சொல்தான் என்று ஆய்வின் அடிப்படையில் கூறும்போது நான் மகிழ்வடைவேன். அதேவேளையில் அவர் அந்த முடிவை தனது விருப்பத்தின் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது ஆய்வின் அடிப்படையில் கூறுகிறாரா என்பதையும் கருதிப்பார்க்கவேண்டும். அவரது முடிவுகள் எல்லாம் தெளிவான ஆய்வுமுறைகளின் அடிப்படையில் இருப்பதால் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. ஒன்று தமிழின் பெருமை; மற்றொன்று தெளிவான ஆய்வுவிதிகளுக்கு இந்தக் கருத்து உட்பட்டு இருத்தல்.//
//இவ்விடத்தில் ஒன்றை மிக அழுத்தமாகத் தெரிவிக்கவிரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணம் (தொல்காப்பியம். நன்னூல், Wren and Martin English Grammar) என்பது வேறு. எந்தவொரு மொழியையும் பொதுவாக ஆய்வு செய்வதற்கான கோட்பாடுகள், ஆய்வுமுறைகள் என்பது வேறு. மொழியியல் இந்த இரண்டாவது பிரிவைச் சேர்ந்தது. அது எந்தவொரு மொழியின் குறிப்பிட்ட இலக்கணம் இல்லை. இந்தத் தெளிவு முதலில் தேவை. இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.//
//எந்தவொரு அறிவியலும் தொடர்ந்து மாறும்; வளரும். அதற்கு அடிப்படை . . . ஆய்வுக்கு உட்படுகிற அனைத்துமே - இயற்கையோ, சமுதாயமோ - மாறக்கூடியவை; வளரக்கூடியவை. அதுபோன்று அறிவியல் ஆய்வுமுறைகளும் மாறும்; வளர்ச்சி அடையும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு அறிவியலும் கிடையாது. உயிருள்ள எந்தவொரு மொழியும் அந்த மொழிச்சமுதாயத்தின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப மாறத்தான் செய்யும். மாறவும் வேண்டும். மொழி ஆய்வுமுறையும் தனது எல்லை விரிவடைய விரிவடைய மாறத்தான் செய்யும். தமிழ்மொழி ஒரு உயிருள்ள மொழி; தொன்மையோடு தொடர்ச்சியாக நீடித்துவருகிற ஒரு மொழி. எனவே மாற்றமும் வளர்ச்சியும் அதற்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் தமிழ்மொழி ஆய்வும் அமையவேண்டும் என்பதே எனது கருத்து. ஒரு உயிர் அணுவிற்கு வளர்-சிதை - மாற்றம் தொடர்ந்து நடைபெறுவதுபோல, மொழிக்கும் ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' நடைபெறும். இது நமது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது இல்லை. புறவயமான உண்மை.//

மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (1)

 மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (1)

---------------------------------------------------------------------
முகநூல் பதிவுகளில் தற்போது மொழிபற்றிய பதிவுகள் மிக அதிகமாகவே வந்துகொண்டிருக்கின்றன. வரவேற்கவேண்டிய ஒரு வளர்ச்சி இது. இந்த வளர்ச்சியை அடுத்த உயர்கட்டத்திற்குக் கொண்டுசெல்ல . . .
ஒருவர் தமது பதிவு மொழிதொடர்பானவற்றில் எந்தப் பிரிவில் எழுதுகிறோம் என்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டு பதிவிட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஒரு சில பிரிவுகளைமட்டும் இங்குப் பதிவிடுகிறேன்.
1) மொழியைக் கற்பித்தல் (முதல், இரண்டாம், மூன்றாம் மொழி கற்றல் & மொழித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மொழி கற்பித்தல்)
2) மொழியைக் கற்றல்
3) மொழிப் பயன்படுத்தம்
4) ஆட்சிமொழி, பயிற்றுமொழி , மொழி வளர்ச்சித்திட்டம் போன்ற மொழிக்கொள்கை தொடர்பான ஆய்வு
5) குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தைக் கற்பித்தல்
6) குறிப்பிட்ட மொழியின் இலக்கண ஆய்வு
7) குறிப்பிட்ட மொழியின் சொல்லாக்க விதிகள்
8)குறிப்பிட்ட மொழியின் வேர்ச்சொல் ஆய்வு
9) குறிப்பிட்ட மொழியின் வரலாற்று இலக்கண ஆய்வு
10) மொழிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான உறவுகள்
11) மொழிக்கும் மனித மூளை, மனம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகள்
12) மொழிபெயர்ப்புத் துறை
13) அகராதியியல் துறை
14) கணினிமொழியியல்
மேற்குறிப்பிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் மொழியியல் துறை அறிவு மிகவும் பயன்படும். இதனால் மொழிகளின் உலகப்பொதுமை தெரியவரும். மொழியியல் துறைகளிலும் பல பிரிவுகள் உள்ளன. (1) கோட்பாட்டு மொழியியல், (2) செயற்படுத்த மொழியியல், (3) மொழிக்கும் பிற துறைகளுக்கும் இடையில் உள்ள உறவுகள் என்று அவை அமையும்.
ஒருவர் மேற்கண்ட எல்லாப் பிரிவுகளிலும் முழுமையான அறிவு பெறுவது என்பது கடினம். ஏனென்றால் மொழித்துறை என்பது ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது.
இருப்பினும் மொழி ஆய்வின் எந்தப் பிரிவில் ஒருவர் ஈடுபட்டாலும், தம் தாய்மொழியின் இலக்கணம், அகராதி பற்றிய அறிவு உறுதியாகத் தேவை. இந்த அறிவு இல்லாமல் ஒருவர் மொழி ஆய்வுத்துறையிலோ அல்லது மொழி பயிற்றல் துறையிலோ பணிசெய்யமுடியாது. அதுபோன்று மொழியியல் துறையின் மாணவரோ ஆசிரியரோ தம் தாய்மொழியின் இலக்கணம், அகராதித் துறையில் அடிப்படை அறிவு இல்லாமல் மொழியியல் ஆய்வில் ஈடுபடமுடியாது.
இவற்றையெல்லாம் நான் இங்குப் பதிவிடுவதற்கான காரணம் . . . மொழிபற்றிய பதிவுகளை இடுபவர்கள் முதலில் தெளிவாகத் தாங்கள் எந்தப் பிரிவுபற்றிப் பதிவிடுகிறோம் என்பதில் தங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்; மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்தவேண்டும். தாங்களும் குழம்பிக்கொண்டு, மற்றவர்களையும் குழப்பிவிடக்கூடாது. ஒவ்வொரு அறிவியலும் தனக்குள் தற்போது பல்வேறு நுட்பப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. அதுபோன்றே மொழி அறிவியலும் ஆகும். எனவே தமிழ்மொழி ஆய்வில் இந்தத் தெளிவோடு எந்தவொருப் பதிவும் முகநூலில் அமைந்தால் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது எனது கருத்து.
எல்லா உணர்ச்சிகளு

தமிழ்மொழி ஆய்வாளர் ஒருவர் என்னைப்பற்றிக் கூறிய ''பாராட்டுக்கள்'' கீழே . .

 தமிழ்மொழி ஆய்வாளர் ஒருவர் என்னைப்பற்றிக் கூறிய ''பாராட்டுக்கள்'' கீழே . . .

-----------------------------------------------------------------------
//இந்த வினாவினை எழுப்பியவர்க்கு எல்லா இலக்கணமும் தெரியும். இருந்தும் இவ்வினாவினை வினவுதற்கு பாரிய நோக்கம் உண்டு. தமிழின் நுட்பங்களை ஒழிக்கவேண்டுமென்பதே அந்நோக்கம். அந்நோக்கத்திற்கு அவர் பயன்டுத்தும் கருவி கணிணி; கணிணி தரப்படுத்துதல் (standardization). அவ்வளவே.//
//தமிழ்ப்பேராசிரியர் இந்த விதியினை அறிந்திருந்தும் ஒழித்துக்கட்டிவிட்டார். ஓரம்பில் ஏழு மராமரங்களைத்துளைத்த இராமபிரான் போல, ஒருவரி வினாவில் இரண்டு விதிகளை ஒழித்துக்கட்டிவிட்டார். என்னே அவர்தம் ஆற்றல். ஒரு சொல் இருந்தாலும் அதனை விட்டுவிடக்கூடாதென அதற்கு ஒரு சூத்திரம்செய்த பவணந்தியாரும், தொல்காப்பியரும் utter waste .//
//ஒரு வினாவிலேயே இரண்டு விதிகளை ஒழித்ததுப்போல், இன்னுமொரு நூறு வினாக்களை எழுப்பினாரென்றால் நன்னூலும், தொல்காப்பியமுமே அன்னாரின் ஆய்வால் ஒழிந்துபோகாதோ. வாழ்க அவர்தம் கொற்றமும் ஜனநாயகமாண்பும்.//
//தமிழ்த்துறையில் ஓய்வுபெற்ற தமிழ்ப்பேராசிரியர்க்கு வருவதால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கவேண்டும். அவர் கூறும் காரணம் கணிணிக்கு தரப்படுத்தலுக்காக.//
அவருடைய ''பாராட்டுக்களுக்கு'' மிக்க நன்றி.
எனக்கு இருக்கிற ''தமிழ் இலக்கண அறிவு '' இவ்வளவுதான் நண்பரே. என்ன செய்ய?
தங்களுடன் விவாதிக்கிற அளவுக்குத் ''தொல்காப்பியம் - நன்னூல் அறிவு '' எனக்கு இல்லை என்பது உண்மையே. அப்படியே இருந்தாலும் ''அவர்கள் இருவரும்'' எனக்கு ''வேண்டாதவர்கள்''! ''கணினியும் மொழியியலும் ஆங்கில இலக்கணமும் மட்டுமே'' எனக்குத் தெரியும். அதுவும் ''முழுமையாகத் தெரியுமா?'' என்பது மற்றொரு ஐயம்! எனவே , ''தொல்காப்பியத்தையும் நன்னூலையும்''எப்படியாவது''ஒழித்துக்கட்டிவிடவேண்டும்'' என்பதே எனது ''முழு நோக்கம்''! அவர்கள் இருவரும் எனக்கு ''விரோதிகள்''!
தாங்கள் தங்கள் பணிகளைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்! நானும் எனது பணியைத் (தங்கள் கருத்துப்படி, ''தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஒழித்துக்கட்டுவதற்கும் தமிழ் இலக்கணத்தின் நுட்பங்களை ஒழித்துக்கட்டுவதற்கும்'' ) தொடர்கிறேன்.

Lexeme / Word and Wordform - explanation

 Lexeme / Word and Wordform - explanation

-----------------------------------------------------------------------
" The basic lexical form found in a dictionary is here called "Lexeme" or "Word". The different inflected forms of a lexeme/word are called "Wordforms". The different wordforms of a lexeme/word belong to a same grammatical category and form its paradigm. Their lexical meaning is same. For example, the different inflected wordforms "go, goes, went, gone, going, to go" form a paradigm for the word "go".
Though the basic lexical meaning of the different wordforms belonging to a paradigm is similar, their syntactic distribution / positions are different. The inflectionally variant forms of the same lexeme do not, in general, have the same distribution; and that is the why Syntax and Inflection are complementary parts of grammar. For example, the wordform "goes" cannot occur in the syntactic position where the wordform "gone" occurs.
He has gone
*He has goes.
However, the lexical meanings of both wordforms are same.
The different wordforms of a Word or Lexeme are inflected for different inflectional / grammatical properties.
go - inflected for present tense
goes - inflected for 3rd Person Singular and Present tense
went - inflected for Past tense
gone - inflected for Past Participle
going - inflected for Present Participle
to go - inflected for Infinitive Participle
( Umadevi, K. " English Equivalence for Tamil Inflection ( A Transfer Module in Tamil - English Machine Translation system)" , Ph.D., dissertation submitted to the University of Madras, 2014, , p.44. )

''சொல்'' என்பதற்கான வரையறை . . .

 ''சொல்'' என்பதற்கான வரையறை . . .

-------------------------------------------------------------------------
சொற்களை (1) அகராதிச்சொல் (Lexeme / Dictionary Word) , (2) இலக்கணக்கூறு அல்லது இலக்கணப்பண்பு ஏற்ற சொல் (Inflected Form - Wordform) என்று வகைப்படுத்தலாம்.
அகராதிச்சொல் என்பது பொருண்மையோடு ( lexically- oriented) தொடர்பு உடையது; இலக்கணப்பண்பு ஏற்ற சொல் என்பது தொடரியலோடு (Syntactically- oriented) தொடர்புடையது.
அகராதியில் பார்க்கிற பெயர்ச்சொற்கள் அல்லது வினைச்சொற்கள் , சொற்றொடர்களில் பயின்று வரும்போது குறிப்பிட்ட இலக்கணப் பண்புகளை ஏற்றுவரும்.
அகராதியில் பார்க்கிற 'ஆசிரியர்' என்ற சொல், 'ஆசிரியர் வந்தார்' என்று தொடரில் அமையும்போது 'ஆசிரியர்' என்பது 'எழுவாய்' என்ற இலக்கணப் பண்பைப் பெற்ற சொல்லாகும்.; வெறும் அகராதிச்சொல் இல்லை. தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் வேறு வேறு.
அதுபோன்று 'படி' என்ற அகராதி வினைச்சொல் 'நீ படி' என்று வரும்போது முன்னிலை ஒருமை இறவாக்காலம் என்ற இலக்கணப் பண்பை ஏற்ற ஒன்று. 'வந்து, வர , வராமல்' போன்றவையெல்லாம் 'வா' என்ற அகராதிச்சொல்லின் பொருண்மையை உள்ளடக்கி இருந்தாலும், தொடரியலில் அடிப்படையில் வேறு வேறு. 'வந்து' என்பதுடன் வரும் சொற்கள் வேறு; 'வர' என்பதுடன் வரும் சொற்கள் வேறு.
இலக்கணப்பண்பு ஏற்ற சொல்லுக்கு(Wordform) மூன்று பண்புகள் இருக்கும்.
ஒன்று, ஒரு தொடரில் அது ஒட்டுமொத்தமாக இடம் மாறலாம். 'நான் நேற்று வீட்டுக்கு வந்தேன்' என்பதில் உள்ள 'வீட்டுக்கு' என்பது 'வீட்டுக்கு நான் நேற்று வந்தேன்' என்பதில் இடம் மாறலாம். (பொதுவாக, தொடரில் பெயர்ச்சொற்கள் தங்களுடைய அடைகளோடும், வினைகள் தங்களது அடைகளோடும் இடம் மாறும்.) இந்தப் பண்பை ஆங்கிலத்தில் "Positional mobility" என்று அழைப்பார்கள்.
அடுத்து, இலக்கணப்பண்பு ஏற்ற சொல்லின் நடுவில் பொதுவாக வேறு எந்த விகுதியும் வராது. 'வந்தான்' என்ற வினைமுற்றுச் சொல்லின் நடுவில் வேறு எந்த விகுதியும் செருகுவது கடினம். இதை ஆங்கிலத்தில் ''Uninterruptability" என்று அழைப்பார்கள்.
அடுத்து, இலக்கணப்பண்புகளை வெளிப்படுத்தும் விகுதிகள் பொதுவாக ஒரு சொல்லுக்குள் ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் அமையும். மாறி அமையாது. 'வந்தான்' என்பதில் வினையடி - காலம் - திணை,எண்,பால் விகுதி என்பது ஒரு குறிப்பிட வரிசையில் அமைந்துள்ளது. இது மாறி அமையாது. இதை ஆங்கிலத்தில் "Internal Stability" என்று அழைப்பார்கள்.
மேற்கூறிய மூன்று பண்புகளையும் பெற்ற சொல் வடிவங்களும் அகராதியில் இடம்பெறுகின்ற சொல் வடிவமும் வேறு வேறு. அகராதிச்சொற்கள் இரண்டு அகராதிச் சொற்களை உள்ளடக்கிய தொகையாகவும் இருக்கலாம்.
'சொல்' என்பதை வரையறுக்கப் பலர் முயன்றுள்ளனர். ஆனால் ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றே கருதுகிறேன்.

சரியான சொல் எது? எதையாவது ஒன்றைத் தரப்படுத்தவேண்டும்.

 சரியான சொல் எது? எதையாவது ஒன்றைத் தரப்படுத்தவேண்டும். நண்பர்கள் உதவி தேவை!

-----------------------------------------------------------------------
(1) கருத்துகள் - கருத்துக்கள் ('க்' மிகுமா?)
(2) நாள்கள் - நாட்கள் ('ள்' என்பது 'ட்' என்று மாறுமா?)
(3) கால்சட்டை - காற்சட்டை ('ல்' என்பது 'ற்' என்று மாறுமா?
(4) செயல்படு - செயற்படு ('ல்' என்பது 'ற்' என்று மாறுமா?)
(5) ஒருவர் தனது நூல்களை வெளியிட்டார் - ஒருவர் தமது நூல்களை வெளியிட்டார் ('தனது' ? 'தமது'?)
(6) ஒரு உயிர் - ஓர் உயிர் ('ஒ' என்பது 'ஓ' என்று மாறுமா?)
(7) அவரைப்பற்றி - அவரைப் பற்றி ('பற்றி ' என்ற பின்னொட்டு வேற்றுமை விகுதியோடு இணைந்து வருமா? தனித்து வருமா?)
8. என்னால் வரமுடியும் - என்னால் வர முடியும் ('முடியும்' என்ற துணைவினை முதன்மைவினையோடு இணைந்து வருமா? தனித்து வருமா?)
(9) நான் போகவேண்டும் - நான் போக வேண்டும்.('வேண்டும்' என்ற துணைவினை முதன்மைவினையோடு இணைந்துவருமா? தனித்து வருமா?)
(10) வந்துகொண்டிருக்கிறான் - வந்து கொண்டிருக்கிறான் ('கொண்டிருக்கிறான்' என்ற துணைவினை தனித்து வருமா? முதன்மைவினையோடு இணைந்து வருமா?)
(13) பல மாணவர்கள் - மாணவர்கள் பலர்
(14) சில நூல்கள் - நூல்கள் சில
(15) பசுகள் - பசுக்கள் ('க்' தேவையா இல்லையா?
(16) பூகள் - பூக்கள் , ஈகள் - ஈக்கள் ( இதில் வேறுபாடு உண்டா என்பது தெரியவில்லை. பலுக்கும்போது 'க்' தானாக வருகிறது!)
மேற்கூறியவற்றில் தமிழ் உரைநடையில் இருவேறுபட்ட கருத்து(க்)கள் நிலவுகின்றன. மேற்கூறியவற்றைத் தரப்படுத்தினால் தமிழ் உரைநடை சீராக இருக்கும்.
பெரும்பாலும் இன்றைய தமிழ் உரைநடையில் இவற்றில் ஒரு ('ஓர்') ஒழுங்கு இல்லை. எழுதும்போது எனக்குத் தயக்கம் ஏற்படுகிறது.
பொதுவாக, மேற்கூறிய 16-உம் தரப்படுத்தவேண்டிய முக்கியச் சொற்கள் ('சொல்கள்') என நான் கருதுகிறேன். இவற்றில் ஒரு முடிவு எடுத்துத் தரப்படுத்தினால் பல சிக்கல்கள் ('சிக்கல்கள் பல') தீரும்.
நடை வேறுபாடு என்று மேற்கூறியவற்றை எடுத்துக்கொள்ளமுடியாது. 'வந்தார்கள்' - 'வந்தனர்' என்பவை இரண்டும் சரி. இதை நடை வேறுபாடு என்று கூறிவிடலாம். ஆனால் மேற்கூறிய 16-இல் அவ்வாறு கூறமுடியாது. இலக்கணம் தொடர்பானவை அவை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India