தொல்காப்பியம் வடமொழி இலக்கணங்களின் தழுவலா ? இல்லை என்பதைத் தனது ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் நிறுவியுள்ளார்.
--------------------------------------------------------------------------
'' மேனாட்டு இலக்கண மரபு, மேனாட்டினரால் மிகச் சிறந்ததாக மதிக்கப்படும் வடமொழி இலக்கண மரபு, இன்று அறிவியல் அடிப்படையில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மொழியியல் கொள்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் தமிழ் இலக்கண மரபை மதிப்பிடும்போது அதன் பெருமையும் சிறப்பும் நுண்மையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தமிழ் மரபு, மேனாட்டு வடமொழி இலக்கண மரபுகளுடன் மேலெழுந்த வாரியாக நோக்கினால் சிற்சில ஒற்றுமைகளைக் கொண்டிருப்பினும் அடிப்படையில் அவற்றினின்றும் வேறுபட்டுத் தனித்துயர்ந்து நிற்கின்றது. தொல்காப்பியம் மிக நெடிய அம்மரபினைப் போற்றிப் பொதிந்து வைத்திருக்கும் கருவூலமாக இன்றளவும் நின்று நிலவுகின்றது. ''
தமிழ் இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே தமிழ் இலக்கண மரபின் மிகப்பழைய வடிவை முழுதும் தன்னகத்தே கொண்டிருப்பதாக அமைந்து விளங்குகிறது. பின்வந்த இலக்கண நூல்களில் வீரசோழியமும் பிரயோகவிவேகமும் வடமொழி இலக்கண மரபைப் பெரிதும் பின்பற்றியுள்ளன.''
தமிழ் இலக்கண மரபின் தனித்தன்மையையும் குறிப்பாகத் தொல்காப்பியம் அம்மரபினை முற்றும் வெளிப்படுத்துவதையும் அம்மரபு மேனாட்டு, வடமொழி இலக்கண மரபுகளின்றும் பெரிதும் வேறுபட்டதும் சிறப்புடையதும் ஆகும் என்பதையும் (மேலே கண்டோம்). ''
''ஆனால் , இன்று பெரும்பாலோரிடையே நிலவிவரும்கருத்து இவ்வுண்மைக்கு மாறானதாகும். வடமொழி இலக்கணக் கொள்கைகளிலிருந்தே தமிழ் இலக்கண மரபு வளர்ச்சி யடைந்தது; அம்மொழி இலக்கணங்களின் தழுவல்கள் அல்லது தமிழாக்கங்களே தமிழ் இலக்கண நூல்கள் என்ற கருத்து நம் நாட்டு ஆய்வாளரிடையேயும் மேனாட்டு ஆய்வாளரிடையேயும் பரப்பப்பட்டுள்ளது.''
'' தமிழ் இலக்கண மரபு வடமொழி மரபினின்றும் பெரிதும் வேறுபட்டது; தனித்தன்மை உடையது; ஒற்றுமைகள் அல்லது தழுவல்களாகக் காட்டப்படுவனவற்றுள் பெரும்பாலானவை வேறுபாடுகளே; சிறுபான்மை மொழிப்பொதுமைகளின் அடிப்படையில் அமைந்த ஒற்றுமைகளே. மேம்போக்கான ஆய்வினாலேயே அவை ஒற்றுமைகளாகவோ தழுவல்களாகவோ காட்டப்பட்டன.''
''கிரேக்க, ரோம, வடமொழி , தமிழ் மரபுகள் பழமையான இலக்கண மரபுகள் ... இவற்றுள் தமிழ் மரபு மேனாட்டு , வடமொழி இலக்கண மரபுகளினின்றும் பெரிதும் வேறுபட்டு நிற்கின்றது... தமிழ் இலக்கண மரபு அம் மரபுகளினின்றும் கொள்கை அடிப்படையில் வேறுபட்டு நிற்பதுடன் இன்றைய மொழியியல் கண்ணோட்டத்தில் அம்மரபுகளிலும் சிறப்புடையதாகத் தோன்றுகின்றது. தமிழ் இலக்கண மரபின் கோட்பாட்டு அடிப்படையை முழுமையாக ஆய்ந்து வெளிப்படுத்தல் இன்றைய தமிழறிஞர் கடனாகும். ''
'' தொல்காப்பியும் பாணினியின் அஷ்டாத்தியாயீயும் முற்றிலும் வேறுபட்ட இரு இலக்கண மரபுகளுக்குரியவை... இம்முடிவு தொல்காப்பியத்தில் வடமொழி இலக்கண மரபின் தாக்கமே இல்லை என்று கூறுவதாகாது. தொல்காப்பியர் வடமொழி இலக்கண மரபை அறிந்தவர் என்பதற்கு தொல்காப்பியத்திலேயே சான்றுகள் உள்ளன. ''
''எனவே தொல்காப்பியத்தில் வடமொழி மரபின் தாக்கம் மேம்போக்கான புறக்கூறுகள் சிலவற்றில் காணப்படினும் அடிப்படை இலக்கணக்கொள்கை, இலக்கணக் கூறுகளுக்குத் தரப்பட்டுள்ள சிறப்பிடம், விளக்குமுறை உத்திகள் ஆகிய அனைத்திலும் தொல்காப்பிய மரபு தனித்து நிற்கின்றது என்பதில் ஐயமில்லை.''
----------------------------------------------------------------------------------------------------------
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எங்களுடைய மொழியியல் பேராசிரியரான க. பாலசுப்பிரமணியன் அவர்களின் '' தொல்காப்பிய இலக்கண மரபு '' என்ற நூல் தமிழ் ஆய்வாளர்களும் தமிழ் மாணவர்களும் தவறாமல் படிக்கவேண்டிய ஒரு ஆய்வுநூல். தமிழ் இலக்கணம், இலக்கியம், இக்கால மொழியியல், அகராதியியல் ஆகியவற்றில் மிகச் சிறந்த அறிவுடைய பேராசிரியரின் நூல் இது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக