பேராசிரியர் ஆர். தாமோதரன் (16-10-1966) என்ற அறவேந்தன்...தற்போது டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்! அண்மையில்தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது புலமையை நான் நேரில் கண்டு வியப்படைய கிடைத்த ஒரு வாய்ப்பு அது! 54 வயதுதான். ஆனால் தமிழாய்வுத் துறையில் அவர் செய்திருக்கும் சாதனைகளின் பட்டியல் மிக நீள்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் மயிலம் தமிழ்க் கல்லூரியில் பி லிட் படித்த அவர், பின்னர் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் எம் ஃபில் பட்டமும் பெற்றிருக்கிறார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியர் இராசாராம் அவர்களின் வழிகாட்டுதலில் ஒப்பிலக்கணத்தில் ஆய்வுசெய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது ஆய்வுலகின் வழிகாட்டி மறைந்த பெரும்பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள். இவரை அறவேந்தன் அவர்கள் ''அப்பா'' என்றுதான் அழைக்கிறார், தன் ஆசிரியர்மீது இவருக்கு அவ்வளவு பற்று!
சிறிது காலம் புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி ஆகிய இடங்களில் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் ஆய்வுமையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி
உள்ளார். அதன்பின்னர் 2013 முதல் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று, இன்றுவரை அங்கே பணிபுரிந்துவருகிறார்.
20-க்குமேற்பட்ட ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். 30-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆய்வுக் கட்டுரைகள் 100-க்குமேல் உள்ளன. தொல்காப்பியம் தொடங்கி ... இன்றைய நவீன இலக்கியங்கள்வரை தன் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். குறுந்தொகை, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள், இலக்கணம், அணியிலக்கணம் , சமூக வரலாறு, தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் என்று பல தலைப்புகளில் தன் ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பெரியார், பெரியாரியம்பற்றிக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அறவாணன் அறக்கட்டளையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிவருகிறார்.
இவர் பெற்றுள்ள விருதுகள் ஏராளம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குடியரசுத் தலைவரின் 2005-2006 ஆண்டுக்கான இளம் ஆய்வாளர் விருதை பெற்றார். மேலும் மறைந்த முதல்வர்கள் மாண்புமிகு கலைஞர், மாண்புமிகு ஜெயலலிதா ஆகியோரிடமும் விருதுகள் பெற்றுள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளார். இவரது வழிகாட்டுதலில் 20 முனைவர் - 50 எம் ஃபில் மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
இவரது ஆய்வுப்பணிகளும் சமூக உணர்வும் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவரது ஆய்வுத் திறனையும் நிர்வாகத் திறமையையும் தமிழகம் பயன்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக