பேராசிரியர் க. முருகையன் … நம்மிடையே இன்று வாழும் ஒரே பேச்சொலியியல் ( Phonetics) பேராசிரியர். இவரும் தமிழ்த்துறையிலிருந்து மொழியியலுக்கு வந்தவர்தான். இளங்கலையில் இயற்பியல் படிப்பு. பச்சையப்பன் கல்லூரியில் பேரா. மு.வ. அவர்களின் தமிழ் பி.ஏ.ஹானர்ஸ் மாணவர் (1957-60). பேரா. துரை. அரங்கனார், பேரா. பரமசிவானந்தம் ஆகியோர் அவருடைய ஆசிரியர்கள். பேரா. தெ.பொ.மீ.யின் அறிவுரையின்படி மொழியியல் முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். பின்னர் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பேரா. அகத்தியலிங்கம் வழிகாட்டுதலில் கலித்தொகைபற்றி மாற்றிலக்கண மொழியியல் நோக்கில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார். 1965-67 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் கவுன்சில் நிதியுதவியுடன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பேச்சொலியியலில் சிறப்புக் கல்வி பெற்றார். பிரபல பேச்சொலியியல் பேராசிரியர் ஆபர்கிராம்பி, பேரா. ஆஷர், பேரா. ஜோன்ஸ் ஆகியோரெல்லாம் இவருக்கு ஆசிரியர்களாகயிருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையின் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இன்று தமிழகத்தில் தமிழ் பேச்சொலியியல்பற்றி எதையும் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லக்கூடிய ஒரே பேராசிரியர். இன்றும் தொடர்ந்து பேச்சு – எழுத்துமாற்றி ( Automatic Speech Recognizer – ASR) , எழுத்து-பேச்சுமாற்றி ( Text to Speech – TTS) ஆகிய தமிழுக்கான மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு உறுதுணையாக இருந்துவருகிறார். காந்தளகம் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்குத் தமிழில் உள்ள பன்னிரு திருமுறைகளைப் பிற மொழிகளில் ஒலிபெயர்ப்பதற்குத் தேவையான ஆய்வுகளைச் செய்துகொடுத்துள்ளார். பகுத்தறிவுச் சிந்தனையாளர். நானும் அவருடைய மாணவன். தற்போது பேராசிரியர் இவ்வுலகில் இல்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக