வியாழன், 21 மே, 2020

பேராசிரியர் க. கைலாசபதி

பேராசிரியர் க. கைலாசபதி ... தமிழ் இலக்கிய ஆய்வை ஒரு மிகச்சிறந்த உயரத்திற்கு இட்டுச் சென்ற ஆய்வாளர். வெறும் இலக்கியச் சுவைக்கான ஆய்வு... இரசனைக்கான ஆய்வு என்று இருந்த தமிழாய்வை .... சமூகவியல் துறையோடு இணைத்து.... தமிழ் இலக்கியங்களின் உள்ளடக்கங்களையும் வடிவங்களையும் உத்திகளையும் இணைத்துப் பார்த்த ... தமிழாய்வைச் சரியான திசையில் திருப்பிய ஆய்வாளர். என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் தமிழ் இலக்கிய ஆய்வில் ஆர்வம் கொள்ள வைத்த பெரும் பேராசிரியர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப்பற்றி நான் எழுதிய பதிவை மீண்டும் மீள்பதிவாக இடுவதில் மகிழ்வடைகிறேன்.


பேரா. க. கைலாசபதி ...தமிழ் இலக்கிய ஆய்வுலகிலே தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றவர். தமிழ் இலக்கிய ஆய்விலே ஒரு புதிய பார்வைக்கு வழிவகுத்தவர். அறிவியல் அணுகுமுறையைப் புகுத்தியவர். சமூகவியல் அடிப்படையைப் பின்பற்றி வெற்றி கண்டவர். ‘சங்க இலக்கியம்’ என்றழைக்கப்படும் மிகப் பழைய சான்றோர் செய்யுட்களிலிருந்து தற்காலத் தமிழ் இலக்கியங்கள்வரை அவரது ஆய்வு பரந்து விரிந்து காணப்படுகிறது. தமிழ் இலக்கியங்களுக்கும் அவற்றின் விளைநிலமாகிய தமிழ்ச் சமூகத்திற்கும் இடையே நிலவும் உறவுகளைத் தமிழ் ஆய்வுலகுக்குத் தெளிவுபடுத்தியவர். தமிழ் இலக்கியங்களின் வரலாற்றை அறிவியல்பார்வைகொண்டு, சமூகவியல் அணுகுமுறையைப் பின்பற்றி ஆராய்ந்து கூறியவர். இலக்கியத்தின் தோற்றம், அவற்றின் பண்புகள், வளர்ச்சிப்போக்குகள் ஆகியவற்றைப்பற்றித் தெளிவான விளக்கங்களை முன்வைத்தவர். ஆய்வியல் நெறிமுறைகளைத் தெளிவுபடுத்தியவர். தமிழில் ஒப்பியல் ஆய்வுக்கு வழிகாட்டியவர். தமிழ் ஆய்வுலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய ஆய்வுலகில் குறுகிய காலத்தில் அவர் பெற்ற வெற்றியும் சிறப்பும் தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகும். அவரது ஆய்வின் முடிவில் சிலர் வேறுபடலாம். ஆனால் அவரது ஆய்வுநெறிமுறைகளை அனைவரும் பாராட்டுகின்றனர் என்பதில் ஐயமில்லை.
மலேயாவில் ( 1933) பிறந்து, அங்குப் பள்ளிக்கல்வியைப் பெற்று, பின்னர் இலங்கையில் கல்லூரிக்கல்வியைப் பெற்றார். தினகரன் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக (1961) இணைந்தார். முதுகலைப் பட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் உலகறிந்த மார்க்சிய அறிஞர் – கிரேக்கமொழிப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் வழிகாட்டுதலில் தமிழ் வீரயுகப்பாடல்கள்பற்றி ஒப்பிலக்கிய ஆய்வுமுறையில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் (1966) பெற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். 1974 –இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவரானார். 1977-78 –இல் அமெரிக்காவில் பெர்க்லியில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து திரும்பியபின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றினார். 1982 – இல் எதிர்பாராதவகையில் தனது 49 ஆவது வயதில் மறைந்தார். அவருடைய பல நூல்களில் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், அடியும் முடியும், ஒப்பியல் இலக்கியம், தமிழ் நாவல் இலக்கியம் ஆகியவை தமிழாய்வாளர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பிடத்தக்க ஆய்வுநூல்களாகும். 1970-களில் என்போன்ற தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தமிழிலக்கிய ஆய்வுக்கடலில் எத்திசையில் பயணிப்பது என்பதைக் காட்டும் கலங்கரைவிளக்கமாக இருந்தார்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India