பேராசிரியர் ச.வே.சு. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பேராசிரியரின் தமிழ்ப்பணிபற்றி ... தன் இறுதிமூச்சுவரை தமிழுக்காவே செயல்பட்ட பேராசிரியர்பற்றி.. நான் 5 ஆண்டுகளுக்குமுன்பு இட்ட முகநூல் பதிவை இன்று மீள்பதிவாக இங்கு இடுகிறேன். தனிப்பட்டமுறையிலும் என் ஆய்வு வாழ்க்கைக்குத் திசைகாட்டிய பேராசிரியர் அவர்கள். நான் முதுகலைப் பட்டங்களைப் (தமிழ், மொழியியல்) பெற்றபிறகு, வேலை தேடி சென்னைக்கு வந்தபோது (1975) ... பேராசிரியர் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர். முனைவர் பட்டத்திற்கான ஆய்வை அந்த நிறுவனத்தில் தொடங்க அப்போதுதான் பல்கலைக்கழக இசைவைப் பெற்றிருந்தார். எனக்கு அவர் அளித்த அறிவுரை .. '' வேலை இப்போது வேண்டாம். தமிழையும் மொழியியலையும் இணைத்து ஆய்வு மேற்கொள்ளுங்கள்'' என்று கூறி. பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வுமாணவராக இணைத்துவிட்டார். அவரால் தான் பெரும்பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவனாக ஆகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இல்லையென்றால்,எனது வாழ்க்கை வேறு திசையில் சென்றிருக்கலாம். இன்று அவர் நம்முடன் இல்லை...அவரை நன்றியுடன் நினைத்துக்கொண்டு, இப்பதிவை இடுகிறேன்.
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் … தமிழாய்வுலகில் அனைவராலும் பேரா. ச.வே.சு. என்றழைக்கப்படும் பேராசிரியர். அகவை 80 தாண்டியும் குற்றாலத்திற்கு அருகே தமிழூர் என்ற ஊரைத் தோற்றுவித்து, இன்றும் தளராமல் தமிழாய்வுப் பணிகளில் ஈடுபட்டுவருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.ஏ. ( ஹானர்ஸ்) பட்டம்பெற்று, பின்னர் கேரளாவில் பெரும்பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, பாளை தூய சவேரியர் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றிவிட்டு, கேரளாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார். தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். தொல்காப்பியர் உட்பட பல தமிழ்நூல்களை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இவரைப்பற்றிப் பேரா. ச. அகத்தியலிங்கனார் கூறும்போது “ தொகுக்கவேண்டிய நூல்களைத் தொகுப்பார். பதிப்பிக்கவேண்டிய நூல்களைப் பதிப்பிப்பார். தெளிவுரை எழுதவேண்டி நிற்கும் நூல்களுக்குத் தெளிந்த நீரோடைபோன்று தெள்ளிய உரைகளை எழுதி, அவற்றிற்கு வளம் சேர்ப்பார். அதுபோன்றே மொழிபெயர்க்கவேண்டிய இலக்கண நூல்களை மொழிபெயர்ப்பார்”. இவருடைய இலக்கணத்தொகை ( எழுத்து, சொல், பாட்டியல் ) மூன்று நூல்களும் தமிழாய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும். 49 தமிழ் இலக்கண நூல்களை உள்ளடக்கிய “ தமிழ் இலக்கண நூல்கள் – மூலம் முழுவதும் –குறிப்பு விளக்கங்களுடன் “ என்ற நூல் இலக்கண ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் ஒரு நூல். 60 –க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவருடைய வழிகாட்டுதலில் 44 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ராஜா அண்ணாமலைச்செட்டியார் விருது, தமிழக அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நான் முனைவர் பட்ட ஆய்வாளராக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சேர்வதற்கு உதவிபுரிந்தவர் என்பதை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக