கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கான அறிவியல் ஆய்வும் உடலின் தடுப்பாற்றல் மண்டலம் அல்லது இயக்கத்தின் முக்கியத்துவமும் ...
--------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக் கண்டுபிடிப்பில் உலகத்தில் 100-க்கு மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் இன்று மிகக் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி இது என்பதில் ஐயமில்லை.
நான்குவகையான வேறுபட்ட வழிமுறைகளில் இந்த நிறுவனங்கள் எல்லாம் முயன்றுவருகின்றன. வழிமுறைகள் வேறுபட்டாலும், அனைத்து வழிமுறைகளும் அடைய நினைக்கிற வெற்றி ... ஒன்றே ஒன்றுதான். மனித உடம்பின் தடுப்பாற்றல் மண்டலம் அல்லது இயக்கத்தைத் தூண்டி.... கொரோனா வைரசை எதிர்த்துநின்று போராடி வெற்றிபெறும் எதிர்ப்புப் புரதப்பொருளை (antibody) உருவாக்குவதுதான்! உடம்பின் இந்தப் புரதப்பொருள்தான் இறுதியில் கொரோனா வைரசை அழித்துக்கட்டும்! மற்றபடி வேறு எந்த மருந்தும் கொரோனா வைரசை எதிர்த்துநின்று சாகடிக்கமுடியாது! இதுதான் இங்கு நாம் கருதவேண்டிய முக்கியமான ஒரு செய்தி!
எவ்வாறு தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி... கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்புப் புரதப்பொருளை உருவாக்க வைப்பது? அது உருவாக்கப்பட்டுவிட்டால்.... உடலில் புகுந்த கொரோனா காலி!
ஒரு முறை ... கொரோனா வைரசின் மேற்பகுதியில் உள்ள ஒருவிதப் புரதப்பொருளின் (Spike Protein) மரபுக்கூறுகள் புதைந்துள்ள டி என் ஏ (DNA) என்ற ஒருவகையான வேதியியல் அமிலக்கூறுகளை (genetic materials) ஒருவகை வைரசுமூலம் உடலுக்குள் புகுத்தி... அந்த ஸ்பைக் புரதத்தை உடலுக்குள் உருவாக்கி.. தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி.... கொரோனாவை எதிர்த்துப் போராடும் எதிர்ப்புப் புரதப்பொருளை நமது உடம்பையே உருவாக்க வைப்பதாகும். கொரோனா காலி!
இரண்டாவது முறை.... நமது உடலின் செல்களே ... கொரோனாவின் மேற்குறிப்பிட்ட ஸ்பைக் புரதப் பொருளை உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான டி என் ஏ வேதியியல் அமிலக்கூறுகளை உடலுக்குள் ஏற்றுவது ஆகும். அவ்வாறு ஸ்பைக் புரோட்டின் உருவானவுடன், அதை எதிர்த்துப் போராட நமது உடலின் தடுப்பாற்றல் மண்டலம் எதிர்ப்புப் புரதப் பொருளை உருவாக்கிவிடும்! கொரோனா காலி!
மூன்றாவது முறை... கொரோனா வைரசையே எடுத்து... ஆய்வகத்தில் அதை வலு இழக்கச் செய்து... உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாதவகையில் மாற்றி... உடலுக்குள் ஏற்றுவது ஆகும். அவ்வாறு ஏற்றப்பட்டவுடன்... அதை உணர்கிற உடலின் தடுப்பாற்றல் மண்டலம்.... உடனே அதை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புப் புரதப் பொருளை உருவாக்கும். கொரோனா காலி!
நான்காவது முறை... கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டின்பற்றிய மரபுக்கூறு அறிவைக் கொடுத்து உடலுக்குக் கொடுத்து.. ....நமது உடலின் செல்களே அந்த ஸ்பைக் புரோட்டினை உருவாக்கவைப்பது ஆகும். இதை mRNA (messenger RNA) முறை என்று அழைக்கிறார்கள். இதை உடலுக்குள் செலுத்தியவுடன்... கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டினை நமது உடம்பே உருவாக்கும். உடனே உடலின் தடுப்பாற்றல் மண்டலும் அதை எதிர்த்துப் போராட எதிர்ப்புப் புரதப் பொருளை உருவாக்கிவிடும். கொரோனா காலி!
இவை போன்ற பலமுறைகளை மருந்து ஆய்வு நிறுவனங்கள் பின்பற்றி... கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க முயல்கின்றனர். இதில் நாம் பார்க்கவேண்டிய ஒரு மிக மிக முக்கியமான செய்தி... அனைத்து வழிமுறைகளும் செயற்கையாக நமது உடலின் தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி... கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி , சாகடிக்கக்கூடிய எதிர்ப்புப் புரதப் பொருளை உருவாக்க வைப்பதே ஆகும்! எனவே எந்த வழிமுறையாக இருந்தாலும்... இறுதியில் நமது உடம்பின் தடுப்பாற்றல் மண்டலம்தான் இறுதிக் கதாநாயகர். அவர் இல்லையேல்... கொரோனா தன் ஆட்டத்தைத் தொடரும்.
ஆகவே... நமது உடம்பின் தடுப்பாற்றல் மண்டலம் இயற்கையாகவே செய்யக்கூடிய ஒரு பணியை... முன்கூட்டியே செயற்கையாக அதைத் தூண்டித் தயார்படுத்தச் செய்வதே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு... பெரும்பாலோர் குணமடைந்துவருவதற்கு அடிப்படை... உடம்பின் தடுப்பாற்றல் மண்டலம் பெரும்பாலோருக்குத் தயாராகவே இருக்கிறது. சிலருக்கு வேறு பிற உடல் பிரச்சினைகளால்... தடுப்பாற்றல் மண்டலம் வலுவாகப் போராடமுடியாமல் ஆகலாம். ஆனால் யாருக்கு இந்த மண்டலம் வலுவாக உள்ளது. யாருக்கு வலுவாக இல்லை என்பதை எவ்வாறு கண்டறிவது? யாரும் இந்தப் பரிட்சைக்குத் தயாராக இருக்கமாட்டார்கள் இல்லையா? அது தேவையும் இல்லை !
தடுப்பூசி வருவது வரட்டும். ஆனால் அது வந்தால்தான்... மனிதகுலம் பிழைக்கும் என்றுமட்டும் யாரும் நினைக்கவேண்டாம்! தேவையற்ற பீதியைக் கிளப்பவேண்டாம்! நமது உடம்பின் தடுப்பாற்றல் மண்டலத்தை வலுவாக வைத்திருக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக