பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா?
-----------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------
தமிழில் பெயருக்கு அடையாகச் செயல்படுவதற்கு - அதாவது பெயர்ச்சொல் குறித்து நிற்கும் பொருள், நபர், நிகழ்ச்சி, போன்றவற்றின் பண்புகளை அல்லது செயல்களை விளக்கி நிற்பதற்கு - இரண்டுவகையான சொற்கள் பயன்படுகின்றன. ஒன்று பெயரடை... மற்றொன்று பெயரெச்சம்.
1) நல்ல பையன் ... தீய செயல்கள் - பெயரடை
2) அழகான மயில் , வேகமான குதிரை - பெயரடை
3) படித்த மனிதர்.... உயர்ந்த கோபுரம் - பெயரெச்சம்
4) பேசிய தலைவர் ... ஓடுகிற பையன் - பெயரெச்சம்
முதலில் (1) கூறப்பட்டுள்ள பெயரடைகளை இலக்கணத்தார் குறிப்புப் பெயரெச்சம் என்று கூறுவார்கள். அதாவது காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வந்து நிற்பவை. ஆனால் அதுபற்றிய விவாதங்களை நாம் இங்கு மேற்கொள்ளவேண்டாம். பேரா. பொற்கோ அவர்கள் இத்தகைய பெயரடைகளைத் தனிநிலைப் பெயரடைகள் என்று அழைக்கிறார். இவற்றில் ஒரு அடிச்சொல்லும் , ''அ'' என்ற இறுதி விகுதியும் அமையும்.
இரண்டாவது (2) கூறப்பட்டுள்ள பெயரடைகளின் அமைப்பானது பெயர் + ஆன என்று இருக்கிறது. ''ஆன'' என்பது ''ஆகு'' என்ற வினையின் பெயரெச்சம்போலத் தோன்றினாலும், இங்கு அதை ஒரு இலக்கண விகுதியாகத்தான் பார்க்கவேண்டும். பெயர்களைப் பெயரடைகளாக மாற்றுகிற விகுதியாக இது பயன்படுகிறது. இதுபோன்ற பெயரடைகளைப் பேரா. பொற்கோ அவர்கள் ''கூட்டுநிலைப் பெயரடைகள்'' என்று அழைக்கிறார்.
மூன்றாவதாகக் (3) கூறப்பட்டுள்ள பெயரெச்சங்கள் தோற்றத்தில் இறந்தகாலத்தை ஏற்ற எச்சங்களாகத் தோன்றினாலும், அவை அவ்வாறு காட்டவில்லை. மாறாக, பொதுத்தன்மையை அல்லது பொதுப்பண்பைச் சுட்டிநிற்கின்றன. அதாவது தொடரில் சுட்டிக்காட்டப்படுகிற அந்தக் குறிப்பிட்ட மனிதர் ''படித்தவர்'' என்பதையும், அந்தக் கோபுரம் '' உயர்ந்தது'' என்பதையும் , அதாவது பொதுவான பண்புகளைக் காட்டி நிற்கின்றன.
நான்காவதாகக் (4) கூறப்பட்டுள்ள பெயரெச்சங்கள் உண்மையில் காலத்தைக் காட்டிநிற்கின்றன. ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை - நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றில் ஒன்றை - காட்டி நிற்கின்றன.
பெயரெச்சங்கள் எல்லாம் தொடர்களிலிருந்து வருவிக்கப்படுகின்றன. '' நேற்று தலைவர் பேசினார்'' என்பது '' நேற்று பேசிய தலைவர் '' என்றும் '' இப்போது பையன் ஓடுகிறன்'' என்பது '' ஓடுகிற பையன்'' என்றும் மாறுகின்றன. பெயரெச்சங்களும் அவற்றையடுத்து நிற்கிற பெயர்களும் பல வேறுபட்ட உறவுகளைக் கொண்டிருக்கும் அந்த உறவுகளைப் பொறுத்துத்தான் அந்தப் பெயரெச்சத்தின் பொருளை அறிந்துகொள்ள முடியும்.
'' படித்த பையன் '' என்பது ''பையன் படித்தான் '' என்ற தொடரிலிருந்து உருவாகுவதால், இவற்றிற்கிடையே உள்ள உறவு எழுவாய் உறவு. ஆனால் ''படித்த புத்தகம் '' (புத்தகம் படிக்கப்பட்டது) செயப்படுபொருள் உறவு, ''படித்த கண்ணாடி'' ( கண்ணாடியால் படித்தேன்) கருவி வேற்றுமை உறவு, ''படித்த பள்ளிக்கூடம்'' ( இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தேன்) இடவேற்றுமை உறவு. ஆகவே தொடரியல் அணுகுமுறை இல்லாமல், பெயரெச்சங்களின் பொருள்களைப் புரிந்துகொள்வது சிக்கலாகும்.
இங்கு நமக்குத் தேவையானது பெயரடை, பெயரெச்சங்களுக்கும் அவற்றையடுத்து வரும் பெயர்ச்சொற்களுக்கும் இடையில் ஒற்று மிகுமா , மிகாதா என்பதேயாகும்.
பொதுவாக, வல்லொற்று மிகாது என்று கூறலாம். ஆனால் விதிவிலக்குகள் இருக்கின்றன.
(1) அந்த, இந்த, எந்த ஆகிய பெயரெச்சங்களின்பின்னர் வல்லொற்று மிகும்.
அந்தக் குதிரை, இந்தப் பையன், எந்தப் புத்தகம்
(2) ''எல்லா'' என்பது ஒரு பெயரெச்சம். '' புத்தகங்கள் எல்லாம் '' .... '' எல்லாப் புத்தகங்களும்''...
இங்குக் கவனிக்கவேண்டியது.....'' புத்தகங்கள்'' என்பது முதலில் வந்தால் ''எல்லாம்'' (இடைச்சொல்???) என்பது பின்னர் அமையும். அவ்வாறு இல்லாமல் ''எல்லா'' என்பது முதலில் வந்தால், ''உம்'' என்பது ''புத்தகங்கள்'' உடன் இணைந்து ''புத்தகங்களும் '' என்று வரும். இதை முழுமையாகப் புரிந்துகொள்ள, வரலாற்று இலக்கணத்திற்குச் செல்லவேண்டும்.ஆனால் '' எல்லா'' என்பது அடையாக நிற்கிற ஒரு பெயரெச்சமாகப் பயன்படுகிறது. இந்தப் பெயரெச்சத்தின்பின் வல்லொற்று மிகும் ( எல்லாப் புத்தகங்களும்) என்று மட்டும் தெளிவாகக் கூறலாம்.
(3) ''புது'' என்பது ஒரு கட்டுண்ட உருபன் ( அதாவது தனியாக வராது!) . ''புதிய'' என்பதே இதன் கட்டில்லாத உருபன். ''புது'' என்பதன்பின்னர் வல்லொற்று மிகும்.
புதுச்செருப்பு ..... ( புதிய செருப்பு)
(4) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: இங்கு வல்லொற்று மிகும்.
செல்லாக் காசு .... கேளாக் காதினராய் ... மாறாப் பகை ...
மேற்குறிப்பிட்ட நான்கு இடங்களைத்தவிர வேறு எந்த ஒரு பெயரெச்சத்தின் பின்னும் வல்லொற்று மிகாது. இது ஒரு கட்டாயமான சந்திவிதி. சந்தி இடவேகூடாது.
''கேட்ட கேள்வி .... நல்ல புத்தகம்.... தீய பண்புகள்''
பின்வரும் பெயரெச்சங்களுக்குப்பின்னர் சந்தி வரவே வராது. இது ஒரு கட்டாயச் சந்திவிதியாகும்.
அத்தகைய, இத்தகைய, எத்தகைய
அன்றைய, இன்றைய, என்றைய
அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட
அப்போதைய, இப்போதைய, எப்போதைய
மேற்கத்திய, கிழக்கத்திய, வடக்கத்திய
முன்னைய, பின்னைய,
நேற்றைய, நாளைய, இன்றைய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக