--------------------------------------------------------
மு. சண்முகம்பிள்ளை என்றும் எம் எஸ் பிள்ளை என்றும் கல்வியுலகில் அழைக்கப்படும் இவர் பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேரா. வ. அய். சுப்பிரமணியம் , பேரா. ச. அகத்தியலிங்கம் ஆகியோர் வரிசையில் இடம்பெற்ற மூத்த மொழியியல் அறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே எம்.ஏ., எம்.லிட்., முனைவர் பட்டங்களைப் பெற்று, பேரா. தெ.பொ.மீ. –க்குப் பிறகு அங்கே மொழியியல்துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் பவுண்டேஷனிலும், கோமல் பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் மொழியியலில் உயராய்வு மேற்கொண்டார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழோடு மொழியியல், நாட்டுப்புறவியல் நாடகம், இதழியல் ஆகிய துறைகளையெல்லாம் இணைத்து, தமிழ் மாணவர்களைப் பன்முகப்பட்ட அறிவுள்ளோர்களாக வளர்த்தெடுப்பதில் முனைப்பு காட்டினார். தமிழாய்வு என்பது இலக்கியங்களையும் இலக்கணங்களையும் வெறும் மனப்பாடம் செய்து பட்டியலிடுவதில்லை , மாறாகப் பிற துறைகளையும் சார்ந்து, அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்வதே என்பதை ஆய்வாளர்களுக்குத் தெளிவுபடுத்தியவர். அங்கு மொழியியலுக்கென்று தனித்துறை நிறுவப்பட்டதில் இவருக்கே பெரும்பங்கு. நாட்டுப்புறவியல் ஆய்வுக்குத் தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றுத் தந்தவர்களில் ஒருவர். இன்று நாடகத்துறையில் சிறந்து விளங்கும் பேரா. மு. இராமசாமி, இலக்கணப் பேராசிரியர் சேதுப்பாண்டியன் போன்றோர் இவருடைய வளர்ப்புப்பிள்ளைகளே. தனது பேராசிரியரைப்பற்றி முனைவர் மு. இராமசாமி கூறுகிறார் : ‘ யானை தான் சென்ற பாதையில் ஆழமான சுவடுகளை இட்டுச்செல்வதுபோல, தான் செல்கிற இடங்களிலெல்லாம் தனது மாணவர்களைப்பற்றிப் பெருமையாக அழுத்திச் சொல்லிவிட்டுச் செல்வார்’. பல அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவருடைய ‘இக்கால மொழியியல்’ நூல்தான் இன்றும் தமிழகத்தில் தமிழ், மொழியியல் மாணவர்களுக்கு அடிப்படை நூலாக நீடிக்கிறது. அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழை , குறிப்பாகப் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக