புதன், 29 நவம்பர், 2023

மாற்றொலிகள், ஒலியன்கள் என்ன வரையறை?

 மாற்றொலிகள், ஒலியன்கள் என்ன வரையறை?

இரண்டு பேச்சொலிகள் சொற்களில் ஒரே இடத்தில் வந்து, பொருண்மை (meaning difference) வேறுபாட்டைத் தந்தால் அவை இரண்டும் தனித்தனி ஒலியன்கள் (Phonemes) . இதை வேற்றுநிலை வழக்கு ( Contrastive distribution) என்று அழைப்பார்கள். படம், கடம் - இவற்றில் சொல்முதலில் ப -வும் வருகிறது; க-வும் வருகிறது. மற்ற ஒலிகள் எல்லாம் ஒன்றுபோல் இருந்தாலும், இந்த இரண்டு ஒலிகளின் வேறுபாடே பொருண்மை வேறுபாட்டுக்குக் காரணம். எனவே இரண்டும் தனித்தனி ஒலியன்கள். ஆங்கிலத்தில் cold, gold . இரண்டிலும் k, g என்ற ஒலி வேறுபாடே பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படை. எனவே அவை ஆங்கிலத்தில் தனித்தனி ஒலியன்கள்.

கடல், அக்கா - தங்கம், பங்கம் - காகம் , தாகம் இவற்றில் க - என்பதற்கு மூன்று பேச்சொலிகள் உள்ளன. ஆனால் இவை ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வராது. இதுபோன்ற வருகையை துணைநிலை வழக்கு (Complementary distribution) என்று அழைப்பார்கள். ஆனால் இந்த மூன்று பேச்சொலிகளுக்கும் இடையில் ஒலி ஒற்றுமை ( Phonetic Similarities) இருக்கிறது. எனவே இவை மூன்றும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களே (members of a single family) . இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றியமைத்துக்கொள்கிறது. அதற்குக் காரணம், முந்தைய , பிந்தைய ஒலிச் சூழலே (Contextual environment) . எனவே இந்த மூன்றும் ஒரே ஒலியனின் மாற்றொலிகளே ( Allophones) .

---------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு. வேல்முருகன் சுப்பிரமணியன்

-------------------------------------------------

ஐயா, நன்றி.. ஆனாலும் இந்த வரையறையின் வலு சரியாக எனக்கு புலப்படவில்லை.

முந்தைய பதிவில்

ஒரே எழுத்து ஒன்றுக்குமேற்பட்ட ஒலியன்களுக்கு பயன்படுகிறது. காட்டாக, c என்பது k,s இன் ஒலியைப்பெறுகின்றது என்று காட்டுகிறீர்கள். - சரிதான்.

அதற்கும்

கு என்பது ku,gu (அதாவது க் என்பது k, g) ஒலிகளைக்கொடுக்கிறது என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லைதானே!

அதற்கு அடுத்தபடியாக பொருண்மைவேறுபாட்டைப்பற்றிச்சொல்கிறீர்கள்.

தமிழிலும்

=> பாங்கு

=> பாக்கு பொருண்மைவேறுபாட்டைக்கொண்டவைதானே. இதும் car, city என்று நீங்கள் காட்டும் எடுத்துக்காட்டும் எங்கு எப்படி வேறுபடுகின்றன?


ந. தெய்வ சுந்தரம்

-------------------------

நண்பரே. தங்கள் குழப்பத்திற்குக் காரணம் . . . தமிழ் ஒலியன்களையும் ஆங்கில ஒலியன்களையும் ஒன்றுபோல் பார்ப்பதே காரணம்.

பேச்சொலிகளைப் பொருத்தமட்டில். . . ஆங்கிலத்தில் உள்ள [k] வும் ('"cat", "cut") , [g] வும் தமிழில் உள்ள [k], [g] ஆகியவையும் பேச்சொலிப் பிறப்பில் ஒன்றுதான். இரண்டின் பிறப்பொலியல் பண்பு அல்லது இயற்பியல் பண்பு ஒன்றுதான். ஆனால் ஆங்கிலத்தில் அவை பொருண்மை வேறுபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேற்றுநிலை வழக்கில் (contrastive distribution) வருகிறது. எனவே அங்கே - ஆங்கிலத்தில் - அவை இரண்டும் தனித்தனி ஒலியன்கள். ஆனால் தமிழில் [k] வருமிடத்தில் [g] வராது. இதுதான் துணைநிலை வழக்கு (Complementary distribution) என்று குறிப்பிடப்படுகிறது.

நான் ஆங்கிலத்தைப் பேசும்போது . . . 26 எழுத்துக்களை வைத்துக்கொண்டு 44 ஒலியன்களை அங்கு வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறினேன். c என்ற எழுத்து ஆங்கிலத்தில் [k] என்ற ஒலியனுக்கும் (cat, cut) பயன்படுத்தப்படுகிறது; [s] என்ற ஒலியனுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று ஆங்கிலம்பற்றிப் பேசும்போது குறிப்பிட்டேன். இதற்குதம் தமிழுக்கும் தொடர்பு கிடையாது.

அடுத்து, 'பாங்கு' 'பாக்கு' இரண்டுக்கும் பொருண்மை வேறுபாட்டுக்குக் காரணம் , / ங்/ /க்/ என்ற வேறுபட்ட ஒலியன்கள் வருவதே. இரண்டும் தனித்தனி ஒலியன்கள். அதுபோன்று, 'ங்' என்ற பேச்சொலிக்குப்பிறகு அல்லது ஒலியனுக்குப்பிறகு வருகிற 'கு' -வில் உள்ள /k/ ஒலியன்னானது [g] என்று உச்சரிக்கப்படுகிறது. /k/ ஒலியனின் ஒரு மாற்றொலியான [k] மாற்றொலியானது சொல்முதலிலும் சொல்நடுவில் இரட்டித்து வரும்போதும் வரும் (காக்கை, அக்கா) ; சொல் நடுவில் மூக்கொலிகளுக்குப் ( மெல்லினம்) பின்னால் வரும்போது தன்னை [g] என்ற மாற்றொலியாக (தங்கம், சங்கு) மாற்றிக்கொள்ளும்.

பேச்சொலிகளில் ஆங்கில [k] [g] வுக்கும் தமிழ் [k] [g] வேறுபாடு கிடையாது. ஆனால் அவை ஆங்கிலத்தில் தனித்தனி ஒலியனாகப் பயன்படுகின்றன. தமிழில் ஒரே ஒலியனின் மாற்றொலிகளாகப் பயன்படுகின்றன.

பேச்சொலிகளைப் பொறுத்தமட்டில் எந்தவொஉர பேச்சொலியுஉம் எஎல்லா மொழிகளிலும் ஒரேமாதிரியாகத்தான் உச்சரிக்கப்படும். அதாவது ஒரே ஒலிப் பிறப்பியல்தான். ஆனால் பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறதா இல்லையா என்பதைப்பொறுத்துத்தான் அவை ஒரு குறிப்பிட்ட மொழியில் தனி ஒலியனா, அல்லது ஒரே ஒலியனின் மாற்றொலிகளாக என்று முடிவுசெய்யமுடியும்.

இதை ஒலியனியியல் (Phonology) பின்வருமாறு விளக்குவார்கள். கத்திரிக்காய், வாழைக்காய் நீங்கள் வாங்கினாலும் நான் வாங்கினாலும் அவற்றின் பண்புகள் ஒன்றுதான். ஆனால் தாங்கள் அதைக் கூட்டாகப் பயன்படுத்தலாம். நான் பொரியலாகப் பயன்படுத்தலாம். பயன்படுகிற முறையில் வேறுபாடு. பேச்சொலியியல் (Phonetics) என்று பார்க்கும்போது, ஆங்கில [k] [g] -வும் தமிழ் [k][g] வும் ஒன்றுதான். ஆனால் பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைவதில் ஆங்கிலத்திற்குத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. அதாவது ஒலியனியலில் வேறுபடுகிறது (Phonemics) . அதனால்தான் உலகப் பேச்சொலி கழகம் ( international Phonetic Association) ஆய்வு உலகப் பொதுமையானது. Phonology -யில் Phonetics, Phonemics இரண்டும் அடங்கும்.

அடுத்து, ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டுக்கும் (spelling) உச்சரிப்புக்கும் (pronunciation) வேறுபாடு உண்டு. காரணம், அத்தனை ஆங்கில ஒலியன்களுக்கும் ஆங்கில எழுத்துக்கள் கிடையாது. எனவே சொற்களின் உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ளவேண்டும். அதானல்தான் ஆங்கிலத்திற்குத் தனியே Pronunciation dictionary ( Daniel Jones ) உள்ளது . தமிழில் அதுமாதிரி தேவை இல்லை. எழுதுவதை அப்படியே வாசிக்கலாம், மாற்றொலி வேறுபாடுமட்டும் தெரியவேண்டும்.

--------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India