புதன், 29 நவம்பர், 2023

மொழி என்பது ஒரு வெறும் கருவியா? அல்லது ஒரு இனத்தின் உயிர்நாடியா? கிரந்த எழுத்துக்களைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கலாமா? கூடாதா?

மொழி என்பது ஒரு வெறும் கருவியா? அல்லது ஒரு இனத்தின் உயிர்நாடியா? கிரந்த எழுத்துக்களைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கலாமா? கூடாதா என்பதுபற்றி முகநூலில் பேராசிரியர் நண்பர் மதிவாணன் பாலசுந்தரம், மருத்துவர் ஐயா இரவீந்திரன் வெங்கடாச்சலம் ஆகியோருடன் நான் பகிர்ந்துகொண்ட எனது கருத்துக்கள்

------------------------------------------------------------------------------------------------------------------

1) மொழி என்பது வெறும் கருத்துப்புலப்படுத்தக் கருவி இல்லை. ஒரு இனத்தின் அடையாளம். தேசிய இனங்கள் என்ற ஒரு வரலாற்று அரசியல் உருவாக்கம் நீடிக்கிறவரையில் . . . அவற்றின் மொழிகளுக்கும் அரசியல் முக்கியத்துவம் உண்டு. ஏகாதிபத்திய காலனித்துவம் நீடிக்கிறவரையில் . . . தேசிய இனங்களின்மீதான இன ஒடுக்குமுறை நீடிக்கிறவரையில் . . . மொழியானது இன அரசியல் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒன்று.

2) ஆங்கிலம் இன்று ''உலக மொழியாக'' ஆக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் . . . ஆங்கிலமொழியின் எழுத்துகள் எண்ணிக்கை, வரிவடிவம், சொல் எண்ணிக்கை, இலக்கண அமைப்பு போன்றவை காரணம் இல்லை. முழுக்க முழுக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் 17,18,19,20 ஆம் நூற்றாண்டுகளில் உலகந்தழுவிய அரசியல் பொருளாதார ஏகாதிபத்திய விரிவாக்கமே! கருத்துப்புலப்படுத்தத்திற்கு ஆங்கிலமொழி சிறந்த கருவி என்ற காரணம் கிடையாது! இதுபற்றி Robert Phillipson " Linguistic Imperialism" & "Linguistic Imperialism Continued" என்ற இரண்டு நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார்.

3) இயன்றவரை அயல்மொழிச்சொற்களைத் தவிர்த்து எழுதலாம். இயலாதவர்கள் பயன்படுத்தட்டும். ஆனால் அதற்காகக் கிரந்த எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்கள் என்று கூறி, அவற்றைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கக்கூடாது. அவை அயல்மொழி எழுத்துக்களாகவே இருக்கட்டும்.

4) மருத்துவர் ஐயா இரவீந்திரன் வெங்கடாச்சலம்

--------------------------------------------------------

// ஏன் அவற்றை அயலொலி எழுத்துக்கள் எனப்பெயரிட்டு நெடுங்கணக்கில் சேர்த்து இலக்கணப்படுத்தக் கூடாது? கணினித் தமிழில் கிரந்தத்தை நீக்கி நிரல்கள் எழுத முடியுமா?//

ந. தெய்வ சுந்தரம்

-------------------------------------

நிரல்களின் மொழிகளுக்கும் மனிதனின் இயற்கைமொழிகளுக்கும் தொடர்பு கிடையாதே! அவை அனைத்துக்கும் கணினியின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கேற்ப . . . கணினியியல் துறையில் உருவாக்கப்பட்ட செயற்கைமொழிகள்தானே! அடுத்து, கணினியில் தமிழ்மொழி ஆய்வுக்குக் கிரந்தம் தேவை இல்லையே! தமிழல் உரைகளில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் தமிழ் எழுத்துகொண்டு மாற்று என்றால் கணினி மாற்றிக்கொடுத்துவிடும். அப்படி மாற்றினால் பொருண்மைச் சிக்கல் ஏற்படும் என்றால், அங்கே அவற்றைப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்.

5) இன்றைய தமிழின் அடுத்த கட்டவளர்ச்சிக்காக எவ்வளவோ பணிகள் செய்ய வேண்டியிருக்கின்றன. எழுத்துக்கள் இன்றைய கட்டத்தில் ஒரு பிரச்சினையே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இன்றைய தமிழில் உள்ள அனைத்து ஒலியன்களுக்கும் எழுத்து வடிவங்கள் உள்ளன. மொழியசைகளுக்கும் (உயிர்மெய்) வரிவடிவங்கள் உள்ளன. புதிய ஒலியன்கள் தமிழில் தோன்றவில்லை. அயல்மொழிகளின் கலப்பால் தமிழில் அயல்மொழிகளின் பேச்சொலிகள் இன்றைய தமிழில் கலந்துவருகின்றன. ஆனால் அவையெல்லாம் தமிழுக்கே உரிய ஒலியன்கள் இல்லை. எனவே புது எழுத்துக்களும் தேவை இல்லை. இருக்கிற எழுத்துவடிவங்களுக்கும் புதிய வரிவடிவங்கள் தேவை இல்லை. மேலும் இன்றைய கணினியியலின் வளர்ச்சியினால் எந்தவித வரிவடிவ மாற்றங்களும் தேவை இல்லை.

6) மருத்துவர் ஐயா, 300 ஆண்டுகளுக்குமேல் நீடித்த ஆங்கிலேய ஆட்சி, அதற்குமுன் நீடித்த முகலாயர் ஆட்சி இவையெல்லாம் தமிழர்களிடையே பேச்சில் அயல்மொழிச் சொற்களைத் திணித்துள்ளன. கீழே விழுந்து காயம்பட்ட ஒருவனுக்கு, அந்தக் காயத்தின்மீதான கல், மண், ரத்த உறைவு போன்றவற்றை முதலில் நீக்கிவிட்டு, மருத்துவம் அளிப்பதுபோன்று . . .பிறமொழி பேசுபவர்களின் அரசியல் ஆட்சி . . . தமிழைக் காயப்படுத்தியுள்ளது. ஆகவே அந்தக் காயத்தின்மீதான அழுக்குகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுவதற்குப்பதிலாக . . . காயத்தின்மீது அழுக்குகள் இருக்கின்றன, அவை இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைக்கமுடியாது அல்லவா? ''அழுக்குகளையும்'' காயம்பட்ட உடலின் பகுதிகளாகவே இருக்கட்டும் என்று விட்டுவிடமுடியுமா? வழக்கிழந்த ஹீப்ரோமொழியையே திட்டமிட்டு மீண்டும் வழக்குமொழியாக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் . . . தமிழின்மீதான அயல்மொழிப் பாதிப்புக்களை அகற்றுவது ஒரு பெரிய சிக்கல் இல்லை! அவ்வாறு செய்யாமல், ''அழுக்குக்களுக்காக'' நமது உடலின் உறுப்பைச் சேதப்படுத்துவது தவறே! திட்டமிட்டு ஒரு மொழியை வளர்க்கமுடியும் என்பது இன்றைய மொழியியல் அறிவியல் கருத்து (Language Policy: Language Planning: Language Development) . அதற்கான வழிமுறைகள் எல்லாம் முன்வைக்கப்பட்டு, பல மொழிகளுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இங்குத் தேவைப்படுவது . . . தமிழினத்தின் மொழியான தமிழ்மொழியைத் திட்டமிட்டு வளர்க்கவேண்டும் என்ற மொழி உணர்வே ஆகும்.

7) மருத்துவர் திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம்

-----------------------------------------------------------

//ஆங்கிலம் உலக மொழியானதற்குக் காரணம் அது ஆதிக்க மொழியாக இருந்தது மட்டுமல்ல - அதன் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையும் பிற மொழிச் சொற்களைத் தாராளமாக ஏற்றுக்கொண்டதும் ஆகும். ஆங்கிலத்தில் 70% விழுக்காடு அளவு பிற மொழிச் சொற்களே உள்ளன.//

ந. தெய்வ சுந்தரம்

--------------------------------

மருத்துவர் ஐயா. அது ஆங்கிலத்தின் திறமை இல்லை. அப்படி ஒரு திறமை என்பது என்பது எந்தவொரு மொழி அமைப்பிலும் கிடையாது. தங்களுடைய காலனியச் சுரண்டலுக்காக ஆங்கிலத்தை உலகமொழியாக ஆக்கவேண்டும் என்ற ஆங்கிலேயே ஏகாதிபத்தியங்களின் செயல்பாடே பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்வதற்கான நிலையை அளித்தது என்பதே உண்மை. ஆங்கிலம் பேசாத காலனி நாடுகளில் உள்நாட்டு மக்களின் சேவைகளைப் பெறுவதற்கும், அவர்களோடு தொடர்புகொள்வதற்கும் ஆங்கிலேயர்கள் பிறநாட்டு மொழிகளின் சொற்களை ஆங்கிலத்திற்குள் சேர்த்துக்கொண்டார்கள். இதுதான் உண்மை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------தமிழில் பேச்சொலி வடிவங்களுக்கு வரிவடிவம் கிடையாது. பேச்சொலிகள் என்று பார்த்தால் 50-க்கும் மேற்பட்ட பேச்சொலிகள் உள்ளன. 'க' என்ற ஒலியனுக்கே மூன்று மாற்றொலிகள் உள்ளன. ஆனால் மூன்றுக்கும் தனித்தனி எழுத்துவடிவம் கிடையாது. மூன்றும் இடத்தைப் பொறுத்து மாறும் மாற்றொலிகள் என்பதால், ஒரு எழுத்துதான்! சொற்களில் வருமிடத்தைப்பொறுத்து, மூன்று மாற்றொலிகளாக உச்சரிக்கப்படுகிறது. பேச்சொலிகளுக்குத்தான் எழுத்துவடிவம் என்றால், தமிழில் மூன்று வடிவங்கள் தேவை. இதுபோன்று பிற வல்லினங்களுக்கும்!

எனவே தமிழுக்குத் தெளிவான ஒரு கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுத்துக்கள் நிலவுகின்றன. எந்தவொரு மொழியிலும் அதில் பயன்படுகிற அனைத்துப் பேச்சொலிகளுக்கும் எழுத்துவடிவங்கள் கிடையாது. கிடையவேகிடையாது! வடமொழிகளில் 'க' -வுக்கு நான்கு வரிவடிவங்கள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம், நான்குமே ஒலியன்கள். எனவே எழுத்துக்களுக்கு அடிப்படையான ஒலியன் ஆய்வைக் கணக்கில் கொள்ளாமல், மாற்றொலிகளுக்கெல்லாம் எழுத்து தேவை என்று கூறுவது தவறு என்பதே எனது கருத்து.

ஒரு மொழியின் அனைத்துப் பேச்சொலிகளுக்கும் - உலகில் மனித மொழிகளில் பயன்படுகிற அனைத்துப் பேச்சொலிகளுக்கும் - தனி வடிவம் கொடுத்து எழுதவேண்டிய தேவை இருந்தால், அதற்கு உலகப் பேச்சொலிக் கழகத்தின் (International Phonetic Association - IPA) பேச்சொலிக்குறியீடுகளைப் (Phonetic transcription) பயன்படுத்திக்கொள்ளலாம்.

எனவே ஒலியன் குறியீடுகளுக்கும் (Phonemic Transcription) பேச்சொலிக் குறியீடுகளுக்கும் (Phonetic Transcription) இடையில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில்தான் ஒரு மொழியின் எழுத்து வடிவங்களைப் பற்றி விவாதிக்கவேண்டும். (தமிழில் மொழியசைக்கும் எழுத்துவடிவங்கள் உண்டு - அவைதான் உயிர்மெய் எழுத்துக்களின் வடிவங்கள்). இதற்குமேல் இதுபற்றிப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதே எனது கருத்து.

இலக்கணம், மொழியியல் ஆகியவை தெளிவான ஆய்வுமுறைகளையும் ஆய்வுநெறிமுறைகளையும் கொண்டவை. நமது விருப்பப்படி இவற்றில் நாம் இயங்கமுடியாது! இயங்கக்கூடாது!

------------------------------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India