தமிழ் இலக்கணக் கட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
தொல்காப்பியர், நன்னூலார் போன்றோரா அல்லது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாய மக்களா? தமிழின் இயங்கியல் என்ன?
--------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் மொழியின் இலக்கணக் கட்டமைப்பைத் ( Language Grammatical Structure) தேவையான தரவுகளோடு தொல்காப்பியர் கண்டறிந்து தனது இலக்கண நூலை அனைவரும் வியக்கும்வண்ணம் படைத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து அவ்வப்போது மேலும் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் . . . தமிழ்மொழியில் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி, பல இலக்கணநூல்களை உருவாக்கி அளித்துள்ளனர்.
குறிப்பாக, நன்னூல் எழுதிய பவணந்தியார்!
அதுபோன்று, இன்றும் புதிய மாற்றங்களை உள்ளடக்கி, தமிழ் அறிஞர்கள் பலர் தமிழ் இலக்கண நூல்கள் படைத்துள்ளனர்; ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர்!
இவையெல்லாம் மிகப் பெரிய பணிகள்! இதில் எந்தவொரு ஐயமும் கிடையாது!
மேற்கூறியவர் எல்லோரும் . . . தொல்காப்பியர் உட்பட . . . தமிழ்மொழியில் நிலவிய அல்லது நிலவுகிற கட்டமைப்பைக் கண்டறிந்து, முறையாக வெளிப்படுத்தி உள்ளார்கள்!
இங்கு நாம் தெளிவாக்கிக்கொள்ளவேண்டிய அறிவியல் உண்மை என்ன?
புவிஈர்ப்பு விசையை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் (Discovery) ; ஆனால் அவர்கள் அந்த விசையை உருவாக்கவில்லை (Invention) . அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புக்களும் அப்படியே.
உருவாக்கம் வேறு . . . கண்டுபிடிப்பு வேறு! புவிஈர்ப்பு விசையை (Gravitation Force) உருவாக்கியது யார்? பிரபஞ்சத்தின் (Universe) தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் இயற்கையில் ஏற்பட்ட ஒன்றே அது என்பது இன்றைய அறிவியலாளர்கள் கருத்து. இதுபற்றிய விரிவான ஆய்வுக்கு இங்கு நான் செல்லவில்லை.
அதுபோல . . . தமிழ்மொழியின் இலக்கணக் கட்டமைப்பை (யாப்பு இலக்கணம் இல்லை!) உருவாக்கியது யார்? உண்மையில் எந்தத் தனிநபர்களும் கிடையாது! தமிழ்ச் சமுதாயத்தின் . . . தமிழ் மக்களின் பொருள் உற்பத்தியில் ( Social material Production) . . சமூகச் செயல்பாடுகளில் ( Social activities) உருவாகியதே தமிழ் இலக்கணக் கட்டமைப்பு!
அதுபோல . . . தமிழ்மொழியின் மாற்றங்களை . . . வளர்ச்சிகளை . . . உருவாக்கியவர்கள் தமிழ் இன மக்களே . . . தங்களது சமூகச் செயல்பாடுகளின் ஊடே . . . அதற்காக . . . தமிழ்மொழியின் கட்டமைப்பைத் தொடர்ந்து வளர்த்துவருபவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே! எந்தவொரு தனிநபர்களும் இல்லை ! சொல் உருவாக்கத்தில் தனிநபர்கள் பங்கு இருக்கலாம்.
தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை ஒட்டி . . . இலக்கண அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன! சொற்களஞ்சியமும் விரிவடைகிறது! இவை எல்லாமுமே ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமுதாயத்தின் விளைபொருளே (Social Product of Tamil society) ! எந்தவொரு தனிநபரின் படைப்பு . . . உருவாக்கம் இல்லை!
தனிநபர்களின் . . . தமிழ் அறிஞர்களின் . . . பணியானது, நிலவுகிற தமிழ்க் கட்டமைப்பை நுட்பமாக ஆய்ந்தறிந்து நமக்கு அளிப்பதே!
தமிழ்மொழி . . . தனது வரலாற்றில் தொடர்ந்து மாறியும் வளர்ந்தும் வருகிறது! சென்ற நூற்றாண்டில் இருந்த தமிழ்மொழி அப்படியே . . . கொஞ்சம்கூட மாறாமல் . . . இருக்கமுடியாது. அப்படி இருந்தால் . . . தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என்றே பொருள்! ஆனால் உண்மையில் அப்படி கிடையாது! இயற்கையின் . . . பிரபஞ்சத்தின் வளர்ச்சியும் இப்படியே!
ஆகவே, எந்தவொரு தனிநபரும் . . . ''நான் இந்த இலக்கணப் பண்பை உருவாக்கியுள்ளேன்'' என்று கூறமுடியாது! அதுபோல, ''நான் தமிழின் இந்த இலக்கணப் பண்பை . . . மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன்'' என்றும் கூறமுடியாது!
தமிழ்மொழி ஒரு இயற்கைமொழி; எஸ்பராண்டோ போன்றோ அல்லது கணினி நிரல் மொழிகள்போன்றோ செயற்கைமொழி இல்லை! இந்த நூற்றாண்டில் . . . இந்தக் குறிப்பிட்ட நபரால் . . . உருவாக்கப்பட்ட மொழி என்று கூறமுடியாது!
ஆகவே, தமிழ் ஆய்வாளர்களின் பணியானது . . . தமிழ்மொழியின் இயங்கியல் வளர்ச்சி விதிகளை (Dialectical development of Tamil) உள்வாங்கி . . . அதன் தொடர்ந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் (Changes and Development) உள்வாங்கி . . . தமிழ் இலக்கணக் கட்டமைப்பைப்பற்றிய தங்கள் ஆய்வுகளைத் தகுந்த தரவுகளோடு முன்வைப்பதே ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
உறுதியாக, ஆங்கிலத்திலும் எழுத்துமொழி, பேச்சுமொழிக்கிடையில் வேறுபாடு உண்டு. நிறைய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழ், கிரேக்கம், அரபியம் போன்ற மொழிகளில் எழுத்துவழக்குக்கும் பேச்சு வழக்குக்கும் இடையில் உள்ள அளவுக்கு வேறுபாடு கிடேயாது. எனவேதான் பின்னர் கூறிய மூன்றுமொழிகளும் இரட்டைவழக்கு மொழிகள் (diglossic languages) என்று அழைக்கப்படுகின்றன. ஹெரால்ட் ஷிப்மேனுக்கு இது தெளிவாகத் தெரியும். அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இங்கிலாந்து ஆங்கிலத்திற்குமே வேறுபாடுகள் உண்டு. இங்கிலாந்து ஆங்கிலமொழி வழக்குகளுக்கு dialect atlas -ஏ தயாரித்துள்ளார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படையான ஒலியன்கள் (Phonemes) 44. ஆனால் ஆங்கிலத்தில் இருக்கிற வரி வடிவங்கள் - எழுத்துக்கள் (Alphabets / scripts/ letters) - 26. ஒரே எழுத்து ஒன்றுக்குமேற்பட்ட ஒலியன்களுக்குப் பயன்படுகிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு - car, care, culture, current, cat, cut -இவற்றில் c என்பது k என்ற ஒலியனுக்குப் பயன்படுகிறது; ஆனால் city, cipher, civil, citizen , circle , citation என்பது s என்ற ஒலியனுக்குப் பயன்படுகிறது. ஏன் இவ்வாறு c எழுத்து வேறுபட்ட ஒலி வடிவங்களை எடுக்கிறது என்பதற்குத் தெளிவான விதி ஆங்கிலத்தில் உண்டு. அதாவது, ஒவ்வொரு ஒலியனுக்கும் தனித்தனி வரிவடிவம் கிடையாது. 44 ஒலியன்களுக்கு 26 வரிவடிவங்கள்தான்!
ஆனால் தமிழுக்கே உள்ள ஒரு சிறப்பு, 30 ஒலியன்களுக்கும் (12 உயிர் + 18 மெய்) முப்பது வரிவடிவங்கள்; தனித்தனி வடிவங்கள். அதுமட்டுமல்ல, ஆங்கிலத்தில் மொழியசைக்குத் (linguistic syllables) தனி வரிவடிவம் கிடையாது. இரண்டு அல்லது மூன்று வரிவடிவங்களைக்கொண்டுதான் அவை வெளிப்படும். ஆனால் தமிழில் 216 மொழியசைக்கும் ( உயிர்மெய் எழுத்துக்கள்) 216 வரிவடிவங்கள். ஆகவே , தமிழின் வரிவடிவங்கள் - எழுத்துக்கள் - மிகத் தெளிவாக, தமிழின் ஒலியன்கள், மொழியசைகள் ஆகியவற்றைத் தனித்தனியே வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.
44 ஒலியன்களை வெளிப்படுத்த ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே இருந்தாலும், ஆங்கிலத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அப்படியிருக்க, 30 ஒலியன்களுக்கும் 30 எழுத்துக்களும் 216 அசைகளுக்கும் 216 எழுத்துக்களும் இருப்பது உண்மையிலேயே மிகப் பெரிய சிறப்பாகும். இதனால் ஆங்கிலத்தைக் குறைவாகவும் தமிழை உயர்வாகவும் மொழியியல் அடிப்படையில் நான் கூறவரவில்லை.எந்தவொரு மொழியும் எந்தவொரு மொழியையும்விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை!
எனவே , பேச்சொலிகள்(Phones) , ஒலியன்கள்(Phonemes) , மாற்றொலிகள் (Allophones), மொழியசை(linguistic syllable) மேற்கூற்று பேச்சொலிகள் (suprasegmental features) , மேற்கூற்று ஒலியன்கள் (Suprasegmental phoneme) போன்ற மொழி ஆய்வு அடிப்படைகளை மனதில்கொண்டு, தமிழ்மொழியை ஆய்வுசெய்யவேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழில் வல்லின எழுத்து ஆறுக்கும் ஒன்றுக்குமேற்பட்ட மாற்றொலிகள் உண்டு. (1) காக்கா, அக்கா - தங்கம், பங்கம் - காகம் அகல் ; (2) சட்டை , பசை - அச்சம் - மஞ்சள் ; (3) தாத்தா, அத்தை - பந்து, இந்து - பத், இதயம் ; (4) பட்டம், அட்டை - கண்டம், அண்டா - படம், தடம்; (5), தீர்ப்பு- கம்பு, அன்பு - கோபம், சார்பு; (6) காற்று, ஏற்று - ஒன்று, நன்று- மறம், கற்பு
ஆக, வல்லின ஒலியன்களுக்கு (Phonemes) மொத்தம் 18 வகை மாற்றொலிகள் (Allophones) . மெல்லினம், இடையினங்களுக்கு ஒரு மெய் ஒலியனுக்கு ஒரு மாற்றொலிதான். ஆக, மொத்தம் தமிழில் 18 + 6+ 6 = 30 மெய்ப் பேச்சொலிகள். ( 'தமிழ்மொழி அமைப்பியல்' - பேரா. ச. அகத்தியலிங்கம் , 2021, பக்கம் 44-46. ; A Grammar of contemporary Literary Tamil - Prof. Potko, page 4-6)
ஆடு, நாடு, ஆறு போன்றவற்றில் இறுதி உகரம் குற்றியலுகரம் (உதடு குவியா உகரம்) . படு, நடு ஆகியவற்றில் வருகிற முற்றியலுகரம் (உதடு குவிகிற உகரம்) ; மேலும் குற்றியலுகரம் பொருண்மைக்கு அடிப்படையான ஒலியனா அல்லது உகரத்தின் வெறும் மாற்றொலிதானா என்பது ஒரு விவாதம். மாற்றொலியாக இருந்தால் முற்றுகரத்திற்கும் குற்றுகரத்திற்கும் ஒரே புணர்ச்சி விதி இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. தொல்காப்பியர் குற்றியலுகரத்திற்கு என்றே தனி புணர்ச்சி இயலை வைத்துள்ளார். எனவே இதைத் தனி ஒலியனாகக் கருதவேண்டுமென்பது ஒரு கருத்து. உயிர் ஒலியன்களுக்கும் மாற்றொலிகள் உண்டு. அதைத் தனியே பார்க்கலாம்.
ஆறு வல்லின மெய் ஒலியன்கள் இருந்தாலும், அவற்றிற்கு 18 மெய்ப் பேச்சொலிகள். அதாவது மாற்றொலிகள். ஆனால் எழுத்து 6 தான் - அதாவது ஒலியன்களுக்குமட்டுமே எழுத்துக்கள்.
தமிழ்ப் பேச்சுரையை (Speech ) எழுத்துரையாக (Text) மாற்றுவதற்கு மேலும் ஆழமான ஒலியியல் ஆய்வு (Phonetic Analysis) தேவைப்படுகிறது. ஏனென்றால் ஒரு சொல்லில் எழுத்துக்கள் ( ஒலியன்கள்) அமையும்போது, ஒரு மாற்றொலியின் தன்மையை , அதற்கு முந்தைய மாற்றொலியும், பிந்தைய மாற்றொலியும் பாதிக்கின்றன. அதை ஆங்கிலத்தில் co-articulation என்று அழைக்கிறார்கள். Context dependent phones என்றும் அழைப்பார்கள். அவ்வாறு பார்க்கும்போது, சுமார் 100 பேச்சொலிகள் இவ்வாறு உள்ளன. இதுபற்றி எனது மாணவர் திரு. பிரபாகரன் என்பவர் ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டையே அளித்துள்ளார். இந்த அடிப்படையில் தமிழ்ப் பேச்சொலிகளை ஆய்வுசெய்யும்போதுதான் Text to Speech, Speech to Text தமிழ் மென்பொருள்கள் சிறப்பாக அமையும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக