1)
"சமையல்'' - பெயரா
? தொழிற்பெயரா?
--------------------------------------------------------------------------
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள்முருகன் அவர்கள் தனது
கட்டுரை ஒன்றில் ''சமையலர்'' என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அதையொட்டி 'சமையல்' என்பது தொழிற்பெயரா அல்லது முழுப்பெயரா என்ற ஒரு ஐயம்
ஏற்பட்டது. அதுபற்றி மருத்துவர் ஐயா அவர்களும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
எனது கருத்து பின்வருமாறு;
''சமையல்'' என்ற
சொல்லின் மூலம் தொழிற்- பெயர்தான். இதில் ஐயமே இல்லை. ஆனால் தற்போது அது
முழுப்பெயராக மாறிவிட்டது எனக் கருதலாம். அதனால்தான் ''நல்ல
சமையலை'' என்று
சொல்லுக்குமுன்னால் பெயரடையும் பின்னால் வேற்றுமை விகுதியையும் சேர்க்க முடிகிறது
எனக் கருதுகிறேன்.
தொழிற்பெயராக அது இன்றும் நீடித்திருந்தால் அதற்குமுன்
பெயரடை வரமுடியாது, மாறாக, வினையடைதான்
வரமுடியும் எனக் கருதுகிறேன். -( ''அவர் வேகமாக வருதலை விரும்புகிறார்'' - இங்கு
வருதல் என்பது தொழிற்பெயராக இருப்பதால் 'வேகமாக' என்ற வினையடையைத் தனக்குமுன்னால் ஏற்கிறது. ''வேகமாக
வந்தவனை '' இதுவும்
அப்படியே)
வினையாலணையும் பெயரும் தொழிற்பெயரும்
தங்களுக்குப்பின்னால் வேற்றுமை விகுதிகளை ஏற்பதால் பெயர்த்தன்மை உடையதாக மாறுகிறது; அதேவேளையில்
தங்களுக்குமுன்னால் வினையடைகளைமட்டுமே ஏற்பதால் இன்றும் அவை வினையின் பண்பையும்
கொண்டிருக்கின்றன. எனவே தான் ( பெயர் என்று அழைக்காமல்) தொழிற்பெயர், வினையாலணையும்பெயர்
என்று அழைக்கிறோம்.
இதையே சோதனையாக வைத்துக்கொள்ளலாம். 'பாடல்' 'ஆடல்' ஆகியவையும்
'பாடு' 'ஆடு' என்ற
வினைச்சொற்களின் தொழிற்பெயர்கள்தான் ஒரு காலத்தில்! ஆனால் இன்று அவை முழுப்பெயராக
மாறிவிட்டன. எனவே 'பாடல்கள்' என்று
பன்மை விகுதியையும் இணைக்கமுடிகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள் . . .
(தேர்தல்
- தேர் + தல்; ஊதல்
- ஊது + இல் ' , தாக்குதல்
- தாக்கு+ தல்;, கடத்தல்
- கடத்து + அல்; , மோதல்
- மோது + அல்; , வற்றல்
- வற்று +அல் , வற்புறுத்தல்
- வற்புறுத்து + அல்) .
பெயர் : + பெயரடை + வேற்றுமை
தொழிற்பெயர் : + வினையடை + வேற்றுமை
வினையாலணையும் பெயர் : + வினையடை + வேற்றுமை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக