வெள்ளி, 29 மே, 2020

கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கண அறிவும் மொழியியல் அறிவும் தேவையா?

கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கண அறிவும் மொழியியல் அறிவும் தேவையா? ( தமிழ் , மொழியியல் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்களுக்கான பதிவு)
--------------------------------------------------------------------------------
இன்று இயற்கைமொழி ஆய்வு, கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பம் ஆகிய துறைகள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. கணினிக்கு மனித இயற்கைமொழிகளின் அறிவை அளித்து, அதனோடு நாம் நமது இயற்கைமொழிகளில் உரையாடலாமா? எழுத்துமூலம் உரையாடல், பேச்சுமூலம் உரையாடல் இரண்டிலும் நமது மொழிகளைப் பயன்படுத்தமுடியுமா? என்ற வினாக்கள் முன்வைக்கப்பட்டு, 'முடியும்' என்ற விடையும் தரப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கே விண்கலங்களை மிகத் துல்லியமாக நேரம், பிற இயற்கைவிசைகள் ஆகியவற்றைக் கணித்து அனுப்பும்போது, மொழியைக் கணினிக்குப் புரியவைக்கமுடியாதா? நிச்சம் முடியும் ! ஐயமே இல்லை!

வேறு கிரகங்களுக்கு ஏவுகணைகளையும் விண்கலங்களையும் அனுப்புவதற்கு ... பிரபஞ்சம்பற்றியும், அதில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றியும், அவற்றின் வெப்பம், குளிர் நிலைமைகள்பற்றியும் கிரகங்களின் ஈர்ப்பு விசைகள் பற்றியும் பூமியிலிருந்து அவை எவ்வளவு தொலைவில் ( ஒளி ஆண்டுகளில்) இருக்கின்றன என்பதுபற்றியும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு ... அந்த அறிவியல் அறிவின் அடிப்படையில்தான் பிற கிரகங்களுக்கு விண்கலங்களையோ அல்லது மனிதர்களையோ அனுப்பிவைக்கமுடியும். அவ்வாறு மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு அனுப்பும்போதும் எதிர்பாராத எதிர்மறை சக்திகளால் தோல்வியும் அடைகிறோம். இருப்பினும் அடுத்தடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இதுபோன்றதுதான் இயற்கைமொழி ஆய்வும் கணினிமொழியியலும் மொழித்தொழில்நுட்பமும்! நாம் உருவாக்கியுள்ள மின்னணுக் கருவியான கணினிக்கு .. நமது இயற்கைமொழி அறிவைக் கொடுக்கமுடியும்! அதோடு நமது மொழியில் உரையாடமுடியும்! ஐயம் இல்லை! இதற்கான முயற்சிதான் 1920 முதல் இன்றுவரை ... 100 ஆண்டுகளாக.. நடைபெற்று வருகிறது! தானியங்கு மொழிபெயர்ப்புப் பணியைக் கணினியைச் செய்யவைப்பதற்கான முயற்சிக்கு அடிப்படை .. உலக நாடுகளிடையே நடைபெற்ற போர்கள்தான். ஒரு நாடு தன் எதிரிநாட்டின் இரகசியங்களை ... அந்த நாட்டின் மொழியியில் எழுதப்பட்ட இரகசியங்களைப் புரிந்து கொள்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடிக்கணக்கான டாலர்கள் இந்த முயற்சிக்கு ஒதுக்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டில் அதுவரை நடைபெற்ற தானியங்குமொழிபெயர்ப்புப் பணிகள்பற்றி விரிவாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அது தனது அறிக்கையில் ( Automatic Language Processing Advisory Committee - ALPAC Report) இந்த முயற்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நிதி உதவியைப் பார்க்கும்போது.. அதற்கேற்ற வெற்றி கிடைக்கவில்லை என்று கூறியது. மனித மொழிகளின் நுட்பங்களைப்பற்றிய அறிவு மேலும் வளரும்போதுதான், இதுபோன்ற முயற்சிகள் வெற்றிபெறும் என்று கூறியது. இதன் விளைவாக தானியங்கு மொழிபெயர்ப்புக் கணினி உருவாக்கப்பணிகள் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தடைபட்டுநின்றன.
பின்னர் 1970-களில் பல பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் மீண்டும் இந்த முயற்சியில் தீவிரம் காட்டின. அதன் பயனாகவே இன்று கணினிமொழியியல் துறை முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
இருமுனைகளில் கணினிமொழியியல் இன்று வளர்ந்துவருகிறது. ஒரு முனை... இலக்கணம், மொழியியல்வழி ஆய்வு ( linguistic rule -based ). மறுமுனை புள்ளியியல் ஆய்வு (Statistical approach) , செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence), பெருந்தரவக உருவாக்கம் (Big Data Analysis), நரம்புவலைப்பின்னல் (Neural Network), கணினி தானே கற்றல் ( Machine Learning) ஆழ் அமைப்புசார் கற்றல்(Deep learning) போன்ற ஆய்வுமுறைகள். இன்றைக்குக் கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வியக்கத்தக்கவகையில் இருப்பதால்.. கணினியின் சேமிப்புத்திறன் ( Hard disk etc.,), நிரல்களைச் செயல்படுத்தும் நினைவகம் ( RAM) ஆகியவை இன்று இமாலய வளர்ச்சி பெற்றுள்ளதால் மேற்குறிப்பிட்ட இரண்டாவது முனைகளில் இயற்கைமொழி ஆய்வு நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
மேற்கூறியதில் .. இலக்கணம், மொழியியல் நோக்கில் இயற்கைமொழி ஆய்வில் இரண்டு பிரச்சினைகள்.. ஒன்று, குறிப்பிட்ட மொழிபற்றிய ஆழமான ஆய்வு. மனித மூளைக்கு எழுதப்பட்டுள்ள இலக்கணங்கள் கணினிக்குப் போதாது. மூளைக்கு உள்ள உலக அறிவு, பின்புல அறிவு கணினிக்குக் கிடையாது. எனவே எந்த ஒரு மொழிக்கூறையும் கணினிக்கு அளிக்கும்போது, மிக நுட்பமாக ஆய்ந்து அளிக்கவேண்டும். பலவற்றை மூளை தானே தெரிந்துகொள்வதுபோல, கணினியால் தெரிந்துகொள்ளமுடியாது. எனவே மிக நுட்பமாகக் குறிப்பிட்ட மொழிக்கு இலக்கணம் தேவை. இன்று தமிழ்மொழிக்கு ... இன்றைய எழுத்துத்தமிழுக்குக்கூட .. இது இல்லை என்பதே உண்மை. இதுபோன்ற இலக்கணங்களை உருவாக்குவதற்கு இலக்கண அறிவு, மொழியியல் அறிவு, மிகப்பெரிய தரவுகள் ஆகியவை தேவை. கணினிக்கேற்ற அகராதிகள் தேவை. மிக மிக நுட்பமான நிலைகளில் - எழுத்தியல், சொல்லியல், தொடரியல், பொருண்மையியல், சூழல்சார் பொருண்மையியல், கருத்தாடல் ஆய்வு - என்று பல நிலைகளில் குறிப்பிட்ட மொழிகளுக்கு ஆய்வுகள் தேவை. ஆனால் இந்த ஆய்வுகள் கடினமாக இருந்தாலும், பணி வெற்றிகரமாக முடிந்துவிட்டால்... இயற்கைமொழி ஆய்வு மிகச் சிறப்பாகவே அமையும்.
இரண்டாவது பிரச்சினை.. இதற்கு அதிகமான காலம், நிதி, கூட்டு உழைப்பு .. இவையெல்லாம் தேவை. அப்படியென்றால், மேற்குறிப்பிட்ட மொழியறிவையெல்லாம் கணினிக்குக் கொடுத்தால்தான், மொழித்தொழில் நுட்பக் கருவிகள் நமக்குக் கிடைக்குமா? இல்லை. நான் முன்னர் குறிப்பிட்ட மாற்றுவழிகளைப் பயன்படுத்தி, மொழியின் நுட்பங்களைக் கணினிக்குக் கற்றுக்கொடுக்கலாம். ஏராளமான தரவுகளைக் கொடுக்கலாம். மொழியின் ஒரு விதியைக் கற்றுக்கொடுப்பதற்கு, அந்த விதியை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான மொழித் தரவுகளைக் கொடுத்து, புள்ளியியல் அடிப்படையிலோ அல்லது நடைபெற்ற நிகழ்வுகளிலிருந்து புதிய நிகழ்வின் சாத்தியப்பாடுகளைக் கணினியே உணர்ந்துகொள்ள வைக்கலாம் (Probabilistic statistics) .... அதாவது கணினிக்கு நாம் கொடுக்கிற தரவுகளிலிருந்து, விதிகளை அது தானே கண்டறியப் பயிற்சி அளிக்கலாம். குறைபாடுகள் இருக்கலாம்... ஆனால் நுட்பமான மொழி அறிவு ஆய்வுக்குப் பதிலாகப் பிற அறிவியல் துறைகளை - நரம்பியல், புள்ளியியல், செயற்கை அறிவுத்திறன் ஆகிய துறைகளைப் - பயன்படுத்தியும் இயற்கைமொழி ஆய்வை மேற்கொள்ளலாம்.
ஆனால்... எவ்வளவுதான் நாம் இந்த இரண்டாவது முறையைப் பின்பற்றினாலும்... மனித மூளைக்கு உள்ள இயற்கைமொழி அறிவைக் கணினிக்குக் கொடுக்க இயலாது. மனித மூளை புதுப் புது வகைகளில் மொழித்தொடர்களை உருவாக்கக்கூடிய திறன் பெற்றது. ஆனால் அத்தனைக்கும் சில அடிப்படை மொழியியல் கொள்கைகளை அல்லது விதிகளையே பயன்படுத்தி மூளை செய்கிறது. மனித மூளையின் இந்த படைப்பாக்கக் கூறை உள்ளடக்கிய மொழித்திறனை... 100 விழுக்காடு சரியாகக் கொடுக்க இயலுமா? முடியாது என்பது மொழியியல் அறிஞர் சாம்ஸ்கியின் கருத்து. முடியும் என்பது கூகுள் நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவு இயக்குநர் பீட்டர் நார்விக் அவர்களின் கருத்து. பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் ஒன்றைமட்டும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்... பொதுவான (எண்களைக்கொண்ட) தரவுத்தளங்கள் வேறு... மொழித் தரவுத் தளம் வேறு. மொழித் தரவுகளை ஆய்வுசெய்வதற்கு அம்மொழிபற்றிய அறிவு தேவை. நுட்பமான அறிவு தேவை. இவ்விடத்தில் கணினிமொழியியல் பேராசிரியர் ( உலக அளவில் பல்கலைக்கழகங்களில் இத்துறையில் பாடநூலாகப் பயன்படுகிற " Speech And Language Processing" என்ற நூலை மார்ட்டின் என்பவருடன் இணைந்து எழுதியவர்) டேனியல் ஜுராப்ஸ்கி (Daniel Jurafsky ) கூறியுள்ள ஒரு கருத்து .. "What distinguishes language processing applications from other data processing systems is their use of knowledge of language. Consider the Unix wc program, which counts the total number of bytes, words, and lines in a text file. When used to count bytes and lines, wc is an ordinary data processing application. However, when it is used to count the words in a file, it requires knowledge about what it means to be a word and thus becomes a language processing system."
எனவே, தமிழ்க்கணினிமொழியியல் வளர்ச்சிக்குத் தேவை... மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் எந்தவொரு வழிமுறையைப் பின்பற்றி ஆய்வு மேற்கொண்டாலும்... தமிழ்மொழியின் ஆழ அகலங்களைப் பற்றிய மொழி அறிவு தேவை என்பதில் ஐயமில்லை! இங்குத்தான் தமிழ் இலக்கணம், மொழியியல் ஆய்வுமுறை ஆகியவற்றில் மிக நுட்பமான(micro- nano - levels) , மிக ஆழமான ( deep ) ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இவற்றையெல்லாம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல்... தமிழானது இன்றைய கணினி உலக அளவில் தனக்குரிய இடத்தைப் பெறமுடியாது. மின்னணுக் கருத்துப்புலப்படுத்தக் கருவிகளில் ஒரு மொழி இடம் பெறவில்லையென்றால்... அதனுடைய பயன்படுத்தம் மிகக் குறையும். அதன் விளைவு ?
Languages for which no adequate computer processing is being,developed, risk gradually losing their place in the global Information Society, or even disappearing, together with the cultures they embody, to the detriment of one of humanity's great assets: its cultural diversity - Antonio Zampolli,

வியாழன், 28 மே, 2020

பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழ்ப்பணி என்பது தமிழாய்வு, தமிழ்க்கல்வி என்பதோடுமட்டும் நின்றுவிடாமல்... தமிழ்மொழிக்கு எதிரான... தமிழினத்திற்கு எதிரான எந்த ஒரு ஆதிக்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி... அதனையும் எதிர்த்துநின்று செயல்பட வேண்டும் என்பதைத் தமிழாசிரியர்களுக்கு உணர்த்திய பெரும்பேராசிரியர்... தமிழ்ப்போராளி பேரா. சி. இலக்குவனார் அவர்கள். அவர்கள்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் மிகச் சுருக்கமாக பதிவுசெய்த ஒன்றை மீள்பதிவாக இன்று இடுவதில் பெருமையடைகிறேன்...

பேராசிரியர் சி. இலக்குவனார் (1909) … நாடறிந்த தமிழறிஞர். தமிழ்ப்பணி என்பது வெறும் ஆய்வுகள் மட்டுமல்ல, தமிழ்மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களைக் காப்பதும் அதில் அடங்கும் என்பதைத் தனது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டியவர். தமிழ்ப்பேராசிரியர்… தமிழ்ப்போராளி. இவருடைய பெற்றோர் இட்ட பெயர் ‘இலட்சுமணன்’ . இப்பெயரை ‘இலக்குவன்’ என்று மாற்றியமைத்தவர் அறிஞர் . சாமி சிதம்பரனார் ஆவார். பி ஓ எல் (1942) , எம் ஓ எல் ( 1946 – “Origin and Growth of Tamil Language” ), தமிழ் முதுகலை (1951) , முனைவர் பட்டம் (1963 – “Tholkappiyam in English with Critical Studies”) ஆகிய பட்டங்களைப் பெற்று, பல கல்வி நிலையங்களில் - நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி, நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி, விருதுநகர் கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திரா உஸ்மானியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பு உட்பட பல அரசியல்நிலைபாடுகளுக்காகப் பதவியிலிருந்து பலதடவை விலக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளானவர். ஆசிரியப்பணி, படைப்பிலக்கியப் பணி, தமிழ்ப்பாதுகாப்புப்பணி போன்ற பல்வேறு பணிகளுக்கிடையே அவர் குறிப்பிடத்தக்க தமிழ் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது உண்மையில் வியப்புக்குரியதே. தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தேவையான ஆய்வுக்கருத்துரைகளோடு ( அறிஞர் அண்ணாவின் முன்னுரையோடும்) அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. தமிழின் தோற்றம்பற்றியும் வரலாற்றின் ஊடே அதன் வளர்ச்சிபற்றியும் அவர் தெளிவான கருத்துகளைத் தனது எம் ஓ எல் பட்ட ஆய்வேட்டில் வெளிப்படுத்தியுள்ளார். மொழியியல் கண்ணோட்டத்துடன் தமிழின் ஒலியியல், தொடரியல், பொருண்மையியல், உரிச்சொற்கள், இடைச்சொற்கள்பற்றி அவர் தனித்தனியே நூல்கள் ( ஆங்கிலத்தில்) வெளியிட்டுள்ளார். இதன் பயனாகத் தமிழரல்லாதோரும் தமிழ்மொழியின் சிறப்புகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்துள்ளார். படைப்பிலக்கியம், தமிழிலக்கிய ஆராய்ச்சி, வரலாறு, பண்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றிலும் பேராசிரியர் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆங்கிலத்தில் 5 நூல்களும் தமிழில் 14 நூல்களும் இவர் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் (“Dravidian Federation” , Kuralneri” ) தமிழிலும் ( ‘குறள்நெறி’, ‘இலக்கியம்’ ) இதழ்களையும் நடத்திவந்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியும், பல்வேறு தமிழ்ச்சங்கங்கள், கழகங்களுக்குப் பொறுப்பேற்று நடத்தியும் உள்ளார். ‘பெரும்பேராசிரியர்’, ‘முதுபெரும் புலவர்’ உட்பட பல்வேறு சிறப்புப்பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. 1973 செப்டம்பர் 3 ஆம் தேதி ( அகவை 64) மறைந்தார். அவருடைய தமிழ்ப் பணிகளை இன்றும் தொடர்ந்து வருகின்றனர் அவரது மகன்கள் … பேராசிரியர் மறைமலை இலக்குவனார், திரு. திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர். மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும். http://ta.wikipedia.org/s/1amn

பேராசிரியர் . சோ. ந. கந்தசாமி

இலக்கியம், இலக்கணம், தத்துவம் என்று பலதுறை அறிவும் நிரம்பிய ஒரு பெரும்பேராசிரியர் முனைவர் சோ. ந. கந்தசாமி அவர்கள்... 84 வயதை எட்டினாலும், ஆய்வுத்துறையில் இன்றும் தளராமல் பணி செய்துகொண்டிருப்பவர். அவருடைய மாணவர்கள் பலர் இன்று உலகெங்கும் பரவியுள்ளார்கள், அவரைப்பற்றிய எனது 5 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவை மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன்.


பேராசிரியர் . சோ. ந. கந்தசாமி (அகவை 79)… Prof. SNK என்று தமிழுலகத்தில் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் . தமிழாய்வு உலகத்திற்குப் பெரிதும் அறிமுகமான தமிழ்ப்பேராசிரியர். தமிழிலக்கியம், மரபிலக்கணம், மொழியியல், தத்துவம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆங்கிலப் புலமையோடு இந்தி. சமஸ்கிருதம், பாலி ஆகியவற்றிலும் திறன் படைத்தவர். கல்வெட்டுத்தமிழிலும் சிறந்த பயிற்சியுடையவர். 1958 –இல் தமிழில் முதுகலைப் பட்டமும் 1963 – இல் ( ‘A Linguistic Study of Paripatal’ ) எம்.லிட், பட்டமும் 1971- இல் ( ‘Buddhism as Expressed in the Tamil Classics’) முனைவர் பட்டமும் பெற்றவர். பேராசிரியர்கள் அ. சிதம்பரநாதன், தெ.பொ.மீ. ஆகியவர்களிடம் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியவர். 1979 - 85 ஆம் ஆண்டுகளில் மலேசியா கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தில் பணியாற்றினார். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்திலும் முதுநிலை அறிஞராகப் பணியாற்றியுள்ளார். தத்துவத் துறையில் ஆழமான ஆய்வு மேற்கொண்டவர். ‘இந்தியத் தத்துவக் களஞ்சியம்’ என்ற தலைப்பில் மூன்று தொகுப்புகளையும் ‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்’ பற்றி மூன்று தொகுதிகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளார். மொழிபெயர்ப்பில் மிகத் திறன் வாய்ந்தவர். திருமந்திரத்தின் ஒரு தொகுதியையும் சுந்தரர் தேவாரத்தின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், தமிழிலக்கணச் செல்வம் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் வெளியிட்டுள்ளார். புத்தக விமர்சனத்தில் மிகத் திறன் படைத்தவர். கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் தமிழ்நூல்கள்பற்றிக் கருத்துரை வழங்கிவருகிறார். இவரது நூல்களுக்குத் தமிழக அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. அண்ணாமலைச்செட்டியார் விருதும் இவர் பெற்றுள்ளார். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பிய இருக்கையில் பணியாற்றிவருகிறார். இவரது நூல்கள் மற்றும் மேலதிக விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையத் தளங்களையும் நண்பர்கள் பார்க்கலாம்.
http://ta.wikipedia.org/s/57x http://muelangovan.blogspot.in/2008/08/15121936.html


புதன், 27 மே, 2020

கணினிக்கு ஒரு மொழிநடை... நமக்கு ஒரு மொழிநடை...எது சரி?

கணினிக்கு ஒரு மொழிநடை... நமக்கு ஒரு மொழிநடை...எது சரி?
-----------------------------------------------------------------------------------
நண்பர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் `அவர்களும் திரு. சிவ சிவா அவர்களும் ஒரு முக்கியமான வினாவை எழுப்பியுள்ளார்கள். அந்த வினா அனைவருக்கும் தேவையான ஒன்று என்று நான் நினைப்பதால் இங்கு அதைப் பதிவு செய்கிறேன்.

பொருள்மயக்கம் இல்லாதவகையில் ... நாம் பேசினால் ... கணினிக்குப் புரியும் அல்லவா? அதற்குத்தானே இலக்கணம் உள்ளது. ஒரு தொடரில் பயன்படுத்தப்படுகின்ற சொல்களைச் சொல்லிலக்கணத்தை முறையாகப் பின்பற்றி எழுதினால் சிக்கல் இல்லையே என்று நண்பர் வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் எண்ணுகிறார்களோ என்று நான் கருதுகிறேன்(நான் தவறாகப் புரிந்து இருக்கலாம். ) இதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால் இவ்வாறு யாரையும் நாம் கட்டுப்படுத்தமுடியாதே!. மேலும் இலக்கணத்தை முறையாகக் கற்றவர்களைத்தவிர மற்றவர்களால் முடியாதே! சாரியை, சந்தி, சொல்களைச் சேர்த்து எழுதுவது, பிரித்து எழுதுவது ஆகியவற்றில் நாம் செய்கிற தவறுகளைப் பார்த்தால் இது தெரியும்!
மொழிப் பயன்பாடானது படைப்பாக்கத்திறன் ( creative one) உடைய ஒரு செயல்பாடு (act) ! ஆனால் அதற்காக ஒருவர் ''நான் நேற்று வருவேன் '' என்று பேசக்கூடாது. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் மற்றபடி சொல் பொருளிலோ அல்லது தொடர் அமைப்பிலோ பொருள் மயக்கம் இருந்தால்... மொழிசாரக் கூறுகளையும் - அதாவது பேசப்படுகிற பொருள், பேசப்படுகிற சூழல் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்மால் பொருளைப் புரிந்துகொள்ளமுடியும்! எனவேதான் மொழிப் பயன்பாட்டில் இரண்டு இலக்கணங்கள் உள்ளன என்பது சமூகமொழியியல் அறிஞர்கள் கருத்து. தொடருக்கு இலக்கணம் (linguistic competence- usage) இருப்பதுபோல, தொடரை முறையாக முன் பின் தொடர்களோடும், மொழிசாராச் சூழலை அடிப்படையாகக் கொண்டும் பேசுவதற்கும் இலக்கணம் உள்ளது. இதை ஆங்கிலத்தில் communicative competence .. use என்று அழைக்கிறார்கள்.! மொழித்திறன் ( language performance ) என்பது மொழியிலக்கணம், பொருள் வெளிப்படுத்தும் கருத்தாடல் இலக்கணம் ( Discourse grammar) இரண்டையும் உள்ளடக்கியது ஆகும்!
அப்படியென்றால் என்ன செய்வது? கணினிமொழியியலின் நோக்கம் என்ன? நாம் பேசுவதை அப்படியே கணினி உள்வாங்கிக் கொண்டு, அதைப் புரிந்துகொள்ளவைப்பதா? அல்லது கணினியின் இன்றைய திறனை அடிப்படையாகக்கொண்டு,நமது நடையை மாற்றிக்கொள்வதா? அதாவது கணினிக்காக நமது மொழிநடையை... படைப்பாக்கத்திறன்கொண்ட நமது மொழிச்செயல்பாட்டை.. மாற்றிக்கொள்வதா?இது இயலாத ஒரு செயல்! மொழிநடையில் ஏற்படுகின்ற பொருள்மயக்கத்தைத் தீர்க்க நமக்கு மொழிப்பயன்பாட்டு இலக்கணம் துணைசெய்கிறது! இந்தத் திறன் இன்று கணினிக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை!
மற்றொரு வழிமுறை... நம்மிடையே நாம் கருத்தாடல் செய்வதற்கு ஒரு மொழிநடையையும் ( மொழிப்பயன்பாட்டு இலக்கணத்தை விட்டுவிட்டு) கணினியுடன் கருத்தாடல் மேற்கொள்ளும்போது ஒரு மொழிநடையையும் ( மொழித்தொடர் இலக்கணத்தை மட்டும் கொண்டுள்ள) பின்பற்றுவதா?
தற்போது கணினிமொழியியலார்கள் மேற்கொள்கிற வழிமுறை என்ன? கணினிக்கு மொழிபெயர்ப்புக்கோ அல்லது புரிந்துகொள்வதற்கோ நமது உரையை அனுப்பும்போது, பொருள் மயக்கம் இல்லாமல், பதிப்பித்து அல்லது சற்று மாற்றிக் கொடுப்பதுதான்( pre-editing) . அதுபோன்று, கணினி தனது புரிதலை வெளிக்கொடுத்தபிறகு, அந்த மொழிநடையை நாம் புரிந்துகொள்வதற்குச் சற்றுப் பதிப்பித்து அல்லது மாற்றி கொடுப்பதுதான் (post-editing) . இது கணினிமொழியியலின் ஒரு இடைப்பட்ட அல்லது ஒரு''சமரச நோக்கு'' வழிமுறை!
ஆனால் கணினிமொழியியலின் இறுதி நோக்கம்... படைப்பாக்கத்திறன்கொண்ட நமது மொழிநடையைப் ( creative language use) புரிந்துகொள்ள வைப்பதுதான்! அதற்குத் தேவையான மனிதனின் பின்புல அறிவு, உலக அறிவு இரண்டையும் அதற்கு அளித்து.. இறுதியாக நம்முடைய இயற்கையான உரையாடலை அது புரிந்துகொள்ளவைப்பதுதான்! மொழித்தொடர் இலக்கணம், மொழிப்பயன்பாட்டு இலக்கணம் இரண்டையும் அதற்கு அளிப்பதுதான்!
மேற்குறிப்பிட்ட வளர்ச்சியானது கணினிமொழியியல் துறையில் ஏற்படுகிறவரை... நாம் கணினிக்கு நமது இயற்கையான மொழிநடையைச் சற்று முன்பதிப்பு செய்து அளிப்பதுதான். இது ஒரு இடைப்பட்ட நிலையே!

திங்கள், 25 மே, 2020

இயற்கைமொழி ஆய்வு ( Natural Language Processing - NLP)

இயற்கைமொழி ஆய்வு ( Natural Language Processing - NLP) கணினிமொழியியல்( Computational Linguistics) , மொழித்தொழில்நுட்பம் ( Language Technology)
--------------------------------------------------------------------------------------
இயற்கைமொழி ஆய்வு என்பதுபற்றி ஒரு சிறிய விளக்கத்தை அளிக்கும்படி எனது நண்பர் பேராசிரியர் அ. சங்கரசுப்பிரமணியம் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதனடிப்படையில் இப்பதிவை இடுகிறேன்....

பெரும்பாலும் நாம் உருவாக்குகிற தொழில்நுட்பக் கருவிகள் அல்லது சாதனங்கள் நமது உடல் உறுப்புகளின் செயல்பாட்டுத் திறன்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க உதவுகின்றன. கைகள், கால்கள், கண்கள், காதுகள், வாய், தலை ஆகியவற்றிற்கு உதவுவதற்காகவும் அவற்றின் திறன்களைக் கூட்டுவதற்காகவும் திருகி (ஸ்க்ரூ டிரைவர்) , ஈருளி (சைக்கிள்), தானிகள் ( ஸ்கூட்டர், பைக், சிற்றுந்து, பேருந்து, வானூர்தி, கப்பல்) ) , கண் கண்ணாடிகள், நுண்நோக்கி, தொலைநோக்கி ( மைக்ராஸ்கோப், டெலஸ்கோப் ) , ஒலிபெருக்கி, ஒலிவாங்கி , தலைக்கவசம், முகக்கவசம், கையுறைகள், காலுறைகள், காலணிகள் ..... அடுக்கிக்கொண்டே செல்லலாம் .. உற்பத்தி செய்கிறோம். இதையே பொதுவாகத் தொழில்நுட்பச் சாதனங்கள் ( Technological innovations or instruments) .
மேலே குறிப்பிட்ட உடல் உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்று ... அனைத்து உடல் உறுப்புகளையும் கட்டுப்படுத்திச் செயல்பட வைக்கிற ஒன்று... நமது மூளையே. எனவே பிற உறுப்புகளுக்கு உதவுவதற்காக அல்லது அவற்றின் திறன்களைக் கூட்டுவதற்காகப் பல சாதனங்களை உருவாக்குவதுபோல ... மூளையும் தனது பணிகளைச் செய்ய உதவியாகப் பல சாதனங்களை உருவாக்குகிறோம்.. கணிப்பான், கணினி போன்றவையெல்லாம் இதில் அடங்கும். ஒரு பெரிய கணக்கை ... எடுத்துக்காட்டாக 87894 x 34567 = ? ... என்பதற்குச் சரியான விடையை ... மிக வேகமாகச் செய்துதர ... கணிப்பானைப் ( Numerical processing tool) பயன்படுத்துகிறோம். இதுபோன்று, எண்களை மட்டுமல்லாமல்... எழுத்துகளையும் கையாளுவதற்குத் ( Alphabets and Numerals processing - Alpha-numeric tool) தற்போது கணினி பயன்படுகிறது. மேலும் மூளைக்கு உதவியாக எண்ணற்ற தரவுகளை... அறிவை... சேமித்துவைக்கவும் தேவைப்படும்போது எடுத்துக் கையாளவும் கணினி பயன்படுகிறது.
மனித மூளையின் மற்றொரு முக்கியச் செயல்பாடு மொழிவழிக் கருத்துப்புலப்படுத்தம் ( communication through language). நாம் சிந்திக்கவும், சிந்தித்ததைப் பிறருக்கு வெளிப்படுத்தவும், பிறர் வெளிப்படுத்த விரும்புவதை புரிந்துகொள்ளவும்... மொழியே பயன்படுகிறது ( அப்படியென்றால், மொழியிழப்பு அல்லது பேச்சிழப்பு உள்ளவர்கள் சிந்திக்கவில்லையா என்று கேள்வி எழலாம். அதுபற்றிப் பின்னர் மற்றொரு பதிவில் விளக்குகிறேன்) .இந்த மொழித்திறனே நமது சமூக வாழ்க்கைக்கும் மிக அடிப்படையாக அமைகிறது.
மேற்குறிப்பிட்ட மொழித்திறனைப் பெற்றுள்ள மனித மூளைக்கு உதவியாக ... மொழித்திறன் தளத்தில் ... கணினியையும் பயன்படுத்தலாம் அல்லவா? கணினி நிரல்கள் என்பவை... மனிதன் செய்கிற சிந்தனைத் திறனை உள்ளடக்கிய வேலைகளைக் கணினியும் செய்வதற்குத் தேவையான கட்டளைகளைக் கொடுப்பதுதான்! ஆனால் இன்று ... கணினிக்கு நிரல்களை .. நமது கட்டளைகளை .. மனிதனின் இயற்கைமொழிகளில் ( ஆங்கிலமோ, தமிழோ, இந்தியோ, ஜெர்மானியமோ, மாண்டெரினோ எதுவாகவும் இருக்கட்டும்) நாம் அளிக்கவில்லை; அளிக்க இயலவில்லை! மாறாக, கணினிக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சி, சி பிளஸ், பாஸ்கல், போர்ட்ரான், பைதான், பேர்ல் என்று பல செயற்கைமொழிகளைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த மொழிகளைப் பயின்றவர்கள்தான் நமது கட்டளைகளைக் கணினிக்கு நிரலாக்கம் செய்து கொடுக்கமுடியும்.
ஏன் இந்த நிலை? செயற்கைமொழிகளைப் புரிந்துகொள்கிற கணினிக்கு.. வியக்கத்தக்க செயல்களை மிகச் சிறப்பாகச் செய்கிற கணினிக்கு... மூளைக்குப் போட்டியாகச் செயல்படுகிற கணினிக்கு ( காஸ்பரோவுக்கும் கணினிக்கும் இடையில் நிகழ்ந்த சதுரங்கம் ஆட்டத்தை மனதில் கொள்ளலாம்!) ஏன் மனிதனின் இயற்கைமொழிக்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை? புரிய வைக்க முடியாதா?
மேற்கண்ட வினாவுக்கு விடையளிக்க முயலும் ஒரு துறையே இயற்கைமொழி ஆய்வு! ஒரு பணியைச் செய்யக் கணினிக்கு நாம் செய்யவேண்டியது .. நிரலாக்கத்தில் செய்வது... அப்பணியை எவ்வாறு நாம் செய்கிறோம் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுவதே ஆகும். இதுபோன்று... மனித மொழிவழிக் கருத்தாடல் எவ்வாறு மூளையால் நிகழ்த்தப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொண்டால்... அந்த வழிமுறையையும் அதற்கான திறனையும் கணினிக்கு நிரல்கள்வழியே அளிக்கலாம் அல்லவா? பேசுவது, பேச்சை எழுத்துவடிவத்தில் மாற்றியமைப்பது, உரையாடுவது, மொழிபெயர்ப்பது, மெய்ப்புத் திருத்துவது -- இவ்வாறு பல்வேறு மொழிசார்ந்த பணிகளைக் கணினிகள் செய்யலாம் அல்லவா?
இதில் உள்ள சிக்கல் என்ன? பிரச்சினை என்ன? ஒருவர் மொழிவழியே கூறுவதை நமது மூளை எவ்வாறு புரிந்துகொள்கிறது? மூளையில் உள்ள மொழித்திறன் என்பதோடு, மூளையில் நீடிக்கிற உலக அறிவும் உதவுகிறது. '' அந்தத் துணி பச்சையாக இருக்கிறது'' , '' அந்தக் குழந்தை பச்சைக் குழந்தை '', ''அந்தப் பெண் பச்சை உடம்புக்காரி'', '' அவர் சொல்வது பச்சைப் பொய்'' , '' அவர் பச்சை பச்சையாகப் பேசுகிறார்'' ... '' பச்சை'' என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. இருந்தாலும் இந்தப் பொருள் மயக்கம் மனித மூளைக்கு ஒரு பிரச்சினையே இல்லை! இந்தச் சொல் பயின்றுவருகிற குறிப்பிட்ட தொடரில் இச்சொல்லுக்கு முன்னும் பின்னும் வருகிற சொல்கள் ஆகிய மொழிசார் கூறுகளோடு... இச்சொல் பேசப்படுகிற மொழிசாராக் கூறுகளான ''பொது உலக அறிவுயும்'' நமக்கு உதவுகிறது!
'' குமரன் செல்வியைத் தொலைநோக்கியுடன் அந்த மலையில் பார்த்தான்'' - இதற்கு இரண்டு பொருள்கள் கூறலாம். ''குமரன் தன்கைகளில் தொலைநோக்கியை வைத்துக்கொண்டு, செல்வியைப் பார்த்தான்'' '' குமரன் தன் கைகளில் தொலைநோக்கியை வைத்திருந்த செல்வியைப் பார்த்தான்''. எனவே இரண்டு வேறுபட்ட பொருள்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு உள்ளது. ஆனால் '' மருத்துவர் செல்வியை ஸ்டெதாஸ்கோப்புடன் சோதித்தார்'' - இங்கு இரண்டு பொருள்களுக்கு வாய்ப்பு இருந்தாலும், நமது பொது அறிவானது -- மருத்துவர்தான் அக்கருவியை வைத்துச் சோதிப்பார் என்ற பொது அறிவானது நமக்குப் பொருள் மயக்கம் இல்லாமல், தொடரைப் புரிந்துகொள்ள உதவுகிறது! இந்த உலக அறிவை மனித மூளை தனது முயற்சியால் பெற்று, தனக்குள் சேமித்துவைக்கிறது. ஆனால் கணினிக்கு இந்தப் பொது அறிவு இல்லை. (தற்போது இந்த அறிவையும் பல வழிகளில் கணினிக்குக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன!).
இவ்வாறு ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தாலும்... ஒரு தொடருக்குப் பல பொருள்கள் இருந்தாலும்.. மனிதமூளைக்குச் சிக்கல் இல்லை! ஆனால் கணினிக்குச் சிக்கல்! இந்தச் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது? சொல்பொருள் மயக்கம், தொடர்ப்பொருள் மயக்கம், மேலும் பல மொழிநிலைகளில் ஏற்படுகிற பொருள் மயக்கம்... இவற்றையெல்லாம் தீர்க்கக் கணினிக்கு நாம் எவ்வாறு உதவுவது? இயற்கைமொழிகளின் அமைப்பிலேயே இதற்குச் சில தீர்வுகள் உள்ளன! ''மாடுகன்று வாங்கினேன்'' , ''மாட்டுக்கன்று வாங்கினேன்'' - உம்மைத்தொகை, வேற்றுமைத்தொகை என்ற ஒரு இலக்கணக்கூறு வெளிப்பட்டு, நமக்குப் பொருள் மயக்கம் இல்லாமல், தொடரைப் புரியவைக்கிறது. '' முக்கியத் தலைவர்'' ''முக்கிய தலைவர் '' - எது சரி? இரண்டுமே சரிதான்! '' கட்சியில் முக்கியமான ( முக்கியம் என்ற பெயர்ச்சொல்லின் பெயரடை வடிவம்) தலைவர் '' என்றால் ''த்'' என்ற மெய் ஒற்று இடையில் வரும். ''வயிற்றுவலியால் முக்கிய ( முக்கு என்ற வினையின் பெயரெச்ச வடிவம்) தலைவர் '' என்றால் ஒற்று வராது! பாருங்கள், சந்திக்கு - புணர்ச்சிக்கு - எவ்வளவு பெரிய வலிமை உள்ளது பொருள் மயக்கத்தைத் தீர்ப்பதற்கு!
இதுபோன்ற பல மொழிநுட்பங்களைக் கணினிக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்! இதற்குத் தேவையானவை ... மனித மூளையில் குழந்தைப் பருவத்தில் எவ்வாறு மொழி வளர்கிறது? எவ்வாறு சேமித்துவைக்கப்படுகிறது? எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? போன்ற வினாக்களுக்கான விடைகளைத் தருகிற மொழியியல் துறை அறிவு! மொழித்திறன் சார்ந்த மூளையின் இந்தச் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு.. அதைக் கணினிக்கு ஏற்ற நிரல்களாக உருவாக்கி... கணினிக்குக் கொடுக்கவேண்டும். மூளையின் மொழித்திறன், செயல்பாடுபற்றியும் தெரியவேண்டும்! கணினியின் திறன், செயல்பாடுபற்றியும் தெரியவேண்டும். இந்த இரண்டு திறன்களையும்பற்றிய அறிவையும் இணைத்த ஒரு அறிவியல்துறையே இயற்கைமொழி ஆய்வு (Natural Language Processing - NLP), கணினிமொழியியல் ( Computational Linguistics) , மொழித்தொழில்நுட்பம் (Language Technology) ஆகும்!

இத்துறையில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று மொழித் தொழில்நுட்பம் ( Language Technology) . இரண்டு, பேச்சுத் தொழில்நுட்பம் (Speech Technology) . மொழித்தொழில்நுட்பத்தில் ஒரு மொழியின் அத்தனைக் கூறுகளையும் - மிக நுண்ணிய கூறுகளிலிருந்து ( micro-level) பெரிய அளவிலான கூறுகள்வரை (macro-level) - ஆராய்ந்து, அவற்றைக் கணினிக்கு அளிப்பதற்கான முயற்சி. இந்த முயற்சியின் வெற்றியைப்பொறுத்தே தானியங்கு பிழை திருத்தியிலிருந்து (Proof Reading) மொழிபெயர்ப்பு (Machine Translation) , கணினி-மனிதன் கருத்தாடல்வரை (Human-Machine Interaction) ... அத்தனைக்கும் கணினிநிரல்களை உருவாக்கமுடியும். இந்தப் பிரிவில் பல அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் பயனாககவே பல மொழிகளுக்குப் பலவகை மொழிக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மனித மூளை அளவுக்கு மொழியைக் கணினி கையாள ஆய்வு முன்னேறவில்லை. . அடுத்து, பேச்சுத் தொழில்நுட்பம்.... நமது பேச்சை மின்னலைகளாக மாற்றி, பின்னர் கணினியானது அதனை எழுத்துரையாக ( Speech to Text) மாற்றியமைப்பது ஆகும் ( . அதுபோல எழுத்துகளில் அமைந்துள்ள ஒரு உரையை மின்னலைகளாக மாற்றி, பின்னர் அதைப் பேச்சாக - பேச்சொலிகளாக - மாற்றுவது ஆகும் (Text to Speech) . இந்தப் பிரிவு பெரும்பான்மையாக இயற்பியலைச் சார்ந்துள்ளதால், அதிகமான வெற்றி கிட்டியுள்ளது. ஆனால் நாம் பேசுவதை எழுத்துகளில் மாற்றியமைப்பதோடு, அந்தத் தொடரின் பொருளையே... பொருண்மையையே ... கணினி புரிந்துகொள்ளவேண்டும் (Speech Understanding) . இதற்கு முன்கூறிய மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. அதனுடைய வெற்றியைப் பொறுத்துத்தான் பேச்சுப் புரிதலைக் கணினி பெறமுடியும். இந்த இரண்டு பிரிவுகளிலும் மொழியியல் அணுகுமுறை (Linguistic approach) மட்டுமல்லாமல், புள்ளியல் அணுகுமுறை (statistical approach), தரவகமொழியியல் அணுகுமுறை (Corpus linguistic approach) , ஆழ்ந்துகற்றல (Deep Learning) , செயற்கை அறிவுத்திறன் ( Artificial Intelligence, Neural Network) போன்ற பல அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியமொழிகளுக்குப் போதிய ஆய்வுகள் நடைபெறவில்லை. குறிப்பாக, தமிழ்மொழிக்கு இத்துறை அறிவு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளரவில்லை. இன்னும் அடிப்படையிலேயே இருக்கிறோம். அதற்குக் காரணம். இதன் முக்கியத்துவத்தை இங்குள்ளவர்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

சனி, 23 மே, 2020

பேராசிரியர் மு. இராமசாமி

பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் எனது 50 ஆண்டுகால நண்பர். முதுகலை (தமிழ்) படிப்பில் இணைந்து படித்தோம். அவரைப்பற்றி 5 ஆண்டுகளுக்குமுன்பாக நான் எழுதிய பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன். அன்றும் இன்றும்... தனது பண்பிலும் நேர்மையிலும் யாராலும் குறைகாணமுடியாத ஒரு மனிதர். தான் எடுத்துக்கொண்ட துறையில் - நாடகத்துறையில் - இமாலய சாதனை புரிந்துவருபவர். சமூக உணர்வுள்ள அறிஞர். மிக மிக எளிமையானவர். எதற்கும் அஞ்சாதவர். சுயநலம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவர்.

பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலை (1971-1973) படிப்பிலிருந்து எங்களது நட்பு தொடங்கி, தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. . மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரா. முத்துச்சண்முகம் அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வுக்கு நான் விண்ணப்பிப்பதற்குத் துணையாக என்னுடன் வந்தார். என்னைவிட மதிப்பெண் அவருக்கு அதிகம் . எனவே மு.ரா. வையே விண்ணப்பிக்கும்படி பேராசிரியர் கூறினார். எனக்கு இடம் கிடைக்காதே என்பதற்காக வேண்டாம் என்று மறுத்த அவரைக் கட்டாயப்படுத்தி, பேராசிரியரிடம் இணையச் சொன்னேன். பின்னர் மு.ரா. பேராசிரியரின் செல்லப்பிள்ளை ஆனார். தோற்பாவைக்கூத்தில் முனைவர் பட்டம்.. நாட்டுப்புறவியல், நாடகக்கலை இரண்டிலும் இன்று தலைசிறந்த பேராசிரியர் ... நடிகரும்கூட. அநீதியையோ அநியாயத்தையோ கண்டுவிட்டால், பொங்கி எழுவார். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பின்னர் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையின் தலைவரானார். நிஜநாடக இயக்கக்குழுவைத் தோற்றுவித்து, இன்றுவரை நடத்திவருகிறார். முற்போக்குச் சிந்தனையாளர். அவரது துணைவியார் மறைந்த பேரா. திருமதி செண்பகம் அவர்கள் சிறந்த ஒப்பிலக்கிய ஆய்வாளர். ஒரே மகன். பேரா. மு.ரா.பற்றிய மலரும் நினைவுகள் ஏராளம். முகநூல் தோட்டத்தில் அதற்கு இடமின்றி , விடைபெறுகிறேன்.




வெள்ளி, 22 மே, 2020

பேரா. சு. சுசீந்திரராஜா

பேரா. சு. சுசீந்திரராஜா அவர்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. ஆனால் அவரது மொழியியல் ஆய்வுபற்றி நிறையவே கேட்டுள்ளேன். இலங்கையைச் சேர்ந்த அவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பயின்றவரே. மூத்த மொழியியல் அறிஞர். இன்று நம்மிடையே இல்லை. அவரைப்பற்றி நான் சேகரித்த தகவல்கள் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குமுன் நான் முகநூலில் இட்ட பதிவை மீள்பதிவு செய்வதில் மிக்க மகிழ்வடைகிறேன்.

பேரா. சு. சுசீந்திரராஜா (1933) … இலங்கையின் மிகச் சிறந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியர். இலங்கையில் பள்ளிக்கல்வி பெற்று, தமிழார்வத்தினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேரா. மு.வ. அவர்களின் தலைமையில் இருந்த தமிழ்த்துறையில் பி. ஏ. (ஹானர்ஸ்) பட்டம் (1958) பெற்றார். அப்போது பேரா. தெ.பொ.மீ., பேரா. துரையரங்கனார் ஆகியோரின் வகுப்புகளுக்கும் சென்றுள்ளார். 1959 –இல் இவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ., பட்டமும் அளிக்கப்பட்டது. பின்னர் இலங்கை சென்று, ஊடகத்துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார். அப்போது இலங்கை வந்த பேரா. தெ.பொ.மீ. அவர்களின் அறிவுரையை ஏற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் (அப்போதுதான் தொடங்கப்பட்ட – 1960 ) முதுகலைப்படிப்பில் சேர்ந்தார். தொடர்ந்து முதலில் பேரா. தெ.பொ.மீ. இடமும், பின்னர் பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்களிடமும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, இத்துறையில் முதல் முனைவர் பட்ட (1967) மாணவரானார். ஆய்வாளராக இருக்கும்போதே, பேரா. தெ.பொ.மீ. அவர்களின் உதவியால் அங்கேயே விரிவுரையாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அவரது இலங்கைத் தமிழ்பற்றிய முனைவர் பட்ட ஆய்வேட்டுக்குப் புறத் தேர்வாளர்களாகயிருந்த பேரா. ஜேம்ஸ் கெயிர் ( கார்னல் பல்கலைக்கழகம், அமெரிக்கா), பேரா. ஏ.இ. ஆஷர் ( எடின்பரோ பல்கலைக்கழகம், இங்கிலாந்து) இருவரும் இவரது ஆய்வேட்டை வெகுவாகப் பாராட்டினார்கள். இரஷியாவைச் சேர்ந்த பேரா. எம். ஆன்டிரனோவ் இவரது ஆய்வேட்டைப் பாராட்டித் தனிமடல் எழுதினார். பின்னர் இலங்கை திரும்பி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலும் (1971), களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலும் பணியாற்றினார். 1980 – இல் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக நியமனம்செய்யப்பட்டு, அங்கு மொழியியல்துறையையும் நிறுவி அதன் மூத்த பேராசிரியராகப் பணியாற்றினார். 1987 – இல் ஓராண்டு இங்கிலாந்து சென்று பேரா. ஆஷருடன் ஆய்வு மேற்கொண்டார். இலங்கையில் மொழியியல் துறையை வளர்த்து, இலங்கைத் தமிழ்பற்றி மொழியியல் அடிப்படையிலான பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்ட பேராசிரியர் 1998 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். அவருடைய 65 ஆவது பிறந்தநாளையொட்டி, அவருடைய மாணவர்களும் நண்பர்களும் அவருடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து, ஒரு நூல் ( “ Studies in Srilankan Tamil Linguistics and Culture”) வெளியிட்டனர். அவருடைய மாணவரான இலங்கை மொழியியல் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் ( ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ ஆசிரியர்) தனது பேராசிரியர்பற்றிக் கூறுகிறார் ‘ பிரபலத்தில் ஆர்வம் காட்டாது, தமிழ்மொழி ஆராய்ச்சியையே தன் முதன்மைப் பணியாகக் கருதியவர்’ என்று.






வியாழன், 21 மே, 2020

பேராசிரியர் க. கைலாசபதியின் வெற்றிக்குப் பின்புலம்....

பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் ஆய்வு வெற்றியின் பின்புலம்....
-------------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஆய்வுகளைப் படித்தபிறகுதான் இலக்கிய ஆய்வை எவ்வாறு சமூக, வரலாற்று, பொருளாதாரப் பின்னணியுடன் அணுகவேண்டும் என்பதை நான், பேரா. கேசவன் உட்பட பலரும் தெரிந்துகொண்டோம். அவரைத் தொடர்ந்து, பேரா. க. சிவத்தம்பி அவர்கள். இருவருக்கும் தமிழாய்வுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது இருவருக்கும் முனைவர் பட்ட வழிகாட்டி பர்மிங்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் ( George Thomson). கிரேக்க இலக்கியங்களைச் சமூகப் பார்வையில் ஆய்ந்தவர். அனைவரும் போற்றும் ஒரு மிகப் பெரிய மார்க்சியச் சிந்தனையாளர். கிரேக்கச் சமுதாயம்பற்றிய அவரது ஆய்வு (Studies in Ancient Greek Society - 1949-1955) உலக அளவில் அனைவராலும் பாராட்டப்பெற்ற ஒன்றாகும். இதன் தடத்திலே மற்றொரு பேரறிஞர் ஜோசப் நீட்ஹாம் (Joseph Needham) ( சீனத்தின் நாகரிகமும் அறிவியலும் - "Science and Civilization in China ) என்ற மிகப்பெரிய ஆய்வுத் தொகுதிகளை வெளியிட்டார். இதுவும் ஆய்வாளர்கள் படிக்கவேண்டிய ஒரு மிகச் சிறந்த நூல். இவைபோன்று ஜே.டி. பர்னால் ( J D Bernal) எழுதியுள்ள ஒரு மிகப் பெரிய ஆய்வுநூலையும் ( "Science in History) ஆய்வாளர்கள் கட்டாயமாகப் படிக்கவேண்டும். இவர்களின் ஆய்வுத் தடத்தில் இந்தியாவில் பல தத்துவ ஆய்வுகளை வெளியிட்டுள்ளார் மறைந்த பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யா. அவற்றில் மிக முக்கியமாக ஆய்வாளர்கள் படிக்கவேண்டியது ''உலகாயதம்'' ( "Lokayatha : A study in Ancient Indian Materialism"). இந்த நூலைத் தமிழகத்தின் பேராசிரியர் எஸ். தோத்தாரி அவரகள் தமிழில் மொழிபெயர்த்து, என்சிபி ஹைச் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு நூல்கள் அனைத்தும் பேராசிரியர் க. கைலாசபதி, க. சிவத்தம்பி, நா. வானமாமாலை ஆகியோரின் ஆய்வின் வெற்றிக்குப் படிக்கற்களாக அமைந்தன. எனவே தமிழாய்வாளர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களையும் வாங்கிப் படித்தால், அவர்களது ஆய்வுகள் மிகச் சிறப்பாக அமையும் என்பதில் ஐயம் இல்லை! நான் மேற்குறிப்பிட்டுள்ள நூல்கள் அனைத்தும் அனைத்துத் துறை ஆய்வாளர்களும் படிக்கவேண்டிய நூல்கள். மிகச் சரியான ஆய்வுமுறைகளை அவை நமக்குக் கற்றுக்கொடுக்கும். இவை அனைத்தும் ஆய்வாளர்களுக்கான ஆய்வு வழிகாட்டல் ( Research Methodology) பாடத்தில் இடம்பெறவேண்டும்.

பேராசிரியர் க. கைலாசபதி

பேராசிரியர் க. கைலாசபதி ... தமிழ் இலக்கிய ஆய்வை ஒரு மிகச்சிறந்த உயரத்திற்கு இட்டுச் சென்ற ஆய்வாளர். வெறும் இலக்கியச் சுவைக்கான ஆய்வு... இரசனைக்கான ஆய்வு என்று இருந்த தமிழாய்வை .... சமூகவியல் துறையோடு இணைத்து.... தமிழ் இலக்கியங்களின் உள்ளடக்கங்களையும் வடிவங்களையும் உத்திகளையும் இணைத்துப் பார்த்த ... தமிழாய்வைச் சரியான திசையில் திருப்பிய ஆய்வாளர். என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் தமிழ் இலக்கிய ஆய்வில் ஆர்வம் கொள்ள வைத்த பெரும் பேராசிரியர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப்பற்றி நான் எழுதிய பதிவை மீண்டும் மீள்பதிவாக இடுவதில் மகிழ்வடைகிறேன்.


பேரா. க. கைலாசபதி ...தமிழ் இலக்கிய ஆய்வுலகிலே தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றவர். தமிழ் இலக்கிய ஆய்விலே ஒரு புதிய பார்வைக்கு வழிவகுத்தவர். அறிவியல் அணுகுமுறையைப் புகுத்தியவர். சமூகவியல் அடிப்படையைப் பின்பற்றி வெற்றி கண்டவர். ‘சங்க இலக்கியம்’ என்றழைக்கப்படும் மிகப் பழைய சான்றோர் செய்யுட்களிலிருந்து தற்காலத் தமிழ் இலக்கியங்கள்வரை அவரது ஆய்வு பரந்து விரிந்து காணப்படுகிறது. தமிழ் இலக்கியங்களுக்கும் அவற்றின் விளைநிலமாகிய தமிழ்ச் சமூகத்திற்கும் இடையே நிலவும் உறவுகளைத் தமிழ் ஆய்வுலகுக்குத் தெளிவுபடுத்தியவர். தமிழ் இலக்கியங்களின் வரலாற்றை அறிவியல்பார்வைகொண்டு, சமூகவியல் அணுகுமுறையைப் பின்பற்றி ஆராய்ந்து கூறியவர். இலக்கியத்தின் தோற்றம், அவற்றின் பண்புகள், வளர்ச்சிப்போக்குகள் ஆகியவற்றைப்பற்றித் தெளிவான விளக்கங்களை முன்வைத்தவர். ஆய்வியல் நெறிமுறைகளைத் தெளிவுபடுத்தியவர். தமிழில் ஒப்பியல் ஆய்வுக்கு வழிகாட்டியவர். தமிழ் ஆய்வுலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய ஆய்வுலகில் குறுகிய காலத்தில் அவர் பெற்ற வெற்றியும் சிறப்பும் தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகும். அவரது ஆய்வின் முடிவில் சிலர் வேறுபடலாம். ஆனால் அவரது ஆய்வுநெறிமுறைகளை அனைவரும் பாராட்டுகின்றனர் என்பதில் ஐயமில்லை.
மலேயாவில் ( 1933) பிறந்து, அங்குப் பள்ளிக்கல்வியைப் பெற்று, பின்னர் இலங்கையில் கல்லூரிக்கல்வியைப் பெற்றார். தினகரன் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக (1961) இணைந்தார். முதுகலைப் பட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் உலகறிந்த மார்க்சிய அறிஞர் – கிரேக்கமொழிப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் வழிகாட்டுதலில் தமிழ் வீரயுகப்பாடல்கள்பற்றி ஒப்பிலக்கிய ஆய்வுமுறையில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் (1966) பெற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். 1974 –இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவரானார். 1977-78 –இல் அமெரிக்காவில் பெர்க்லியில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து திரும்பியபின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றினார். 1982 – இல் எதிர்பாராதவகையில் தனது 49 ஆவது வயதில் மறைந்தார். அவருடைய பல நூல்களில் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், அடியும் முடியும், ஒப்பியல் இலக்கியம், தமிழ் நாவல் இலக்கியம் ஆகியவை தமிழாய்வாளர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பிடத்தக்க ஆய்வுநூல்களாகும். 1970-களில் என்போன்ற தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தமிழிலக்கிய ஆய்வுக்கடலில் எத்திசையில் பயணிப்பது என்பதைக் காட்டும் கலங்கரைவிளக்கமாக இருந்தார்.











கொரோனா - இயற்கை நிகழ்வா ? விபத்தா?

கொரோனா - இயற்கை நிகழ்வா ? விபத்தா?
--------------------------------------------------------------------------------------
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு ... ஒரு இயற்கை நிகழ்வா அல்லது விபத்தா?

ஒரு பொருள் அல்லது நிகழ்வில் ஏற்படுகிற மாற்றம் ... அதற்கு உள்ளேயே உள்ள அகக் காரணிகளால் (internal forces ) ஏற்பட்டால், அது ஒரு இயற்கை நிகழ்வே ஆகும். இந்த மாற்றமானது ஒரு அவசிய நிகழ்வாக ( Necessity) அமைகிறது.
அவ்வாறு இல்லாமல் .... அப்பொருளுக்கு அல்லது நிகழ்வுக்கு வெளியே உள்ள புறக்காரணிகளால் (external forces) ஏற்பட்டால் அது விபத்து (Accident)
ஒருவர் பிறந்து, வாழ்ந்து, தனது முதுமையில் இறப்பது என்பது ஒரு அவசிய நிகழ்வு. பொதுவாக 120 வயதுக்குமேல் மனிதர்கள் உயிருடன் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. ஒன்றிரண்டு மனிதர்கள் சற்று இன்னும் ஒன்று அல்லது இரண்டு வயது கூட வாழ்ந்து இருக்கலாம்.
கருவில் தோன்றிய உயிரியல் இயக்கம் , நாம் பிறந்து, வளர்ந்து, முதுமை அடைகிறவரை செயல்படுகிறது.. நீடிக்கிறது! பின்னர் முதுமையின் ஒரு கட்டத்தில் அந்த இயக்கம் நின்றுவிடுகிறது. பிறப்பு போன்று இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே. உயிரியல் இயக்கமானது உள்ளார்ந்த காரணிகளால் தோன்றி நீடிக்கிறது. இந்த இறப்பு நிகழ்வை யாரும் தடுக்கமுடியாது. இது இயற்கையின் இயற்கை! ஒரு அவசிய நிகழ்வு. ஒரு வாழைமரம் முளைத்து, வளர்ந்து, குலை தள்ளி, பூப்பூத்து, காய் காய்த்து, பின்னர் மண்ணோடு மண்ணாக ஆகிவிடும்!
ஆனால் உடலின் மேற்கூறிய உள்ளார்ந்த காரணிகளால் இல்லாமல்.... வெளிப்புறத்தில் உள்ள சில புறக் காரணிகளால் நமது உயிரியல் இயக்கம் நின்றுபோனால்.... அது விபத்து. ஒரு வாகன விபத்திலோ, தீ விபத்திலோ, அல்லது சிலரின் கொடூரச் செயல்களாலோ ஒருவர் இறந்தால்தான் அது விபத்து. இது ஒரு அவசிய நிகழ்வு இல்லை. விபத்தைத் தடுக்கலாம்.காய்க்க வேண்டிய வாழைமரம் ஒரு புயலால் வீழ்ந்தால் அது விபத்து!
எவ்வாறு இயற்கை நிகழ்வுகளுக்கு விதிகள் இருக்கிறதோ, அதுபோன்றுதான் விபத்துக்கும் சில விதிகள் இருக்கின்றன. விபத்துகளுக்கும் விதிகளா என்று நினைக்காலம். ஆனால் உண்டு! எடுத்துக்காட்டாக, சில ஆப்பிரிக்க நாடுகளில் ஏராளமான சிறு குழந்தைகள் வறுமையினால்... பசியினால்... இறந்துபோகின்றன. முதுமைக்கு முன்னாலேயே இறந்துவிடுகின்றன. இது இயற்கை நிகழ்வு இல்லை.. செயற்கை நிகழ்வு... விபத்து.. புறக் காரணிகளால் நடைபெறுகிறது. இந்தப் புறக் காரணிகளுக்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றைத் தகர்த்துவிட்டால்... வறுமையை ஒழித்துவிட்டால், குழந்தைகளுக்கு அங்கே இறப்பு இல்லை!
எனவே எது இயற்கை நிகழ்வு.. எது செயற்கை நிகழ்வு அல்லது விபத்து என்பதில் நமக்குத் தெளிவு தேவை!
மனித உடம்பில் கொரோனாத் தொற்றுக்குப் புறக் காரணிகளே அடிப்படை! புறமாகத் தோன்றிய ஒரு வைரசே காரணம். எனவே கொரோனாத் தொற்றும் அதனால் ஏற்படுகிற கோவிட்-19 நோயும் விபத்துகளே!
ஆனால் ஒரு பொருள் அல்லது நிகழ்வில் புறக் காரணிகள் தாமே ஒன்றும் செய்துவிடமுடியாது. அவை அப்பொருளின் உள்ளே உள்ள அகக் காரணிகளைத் தூண்டி... அல்லது பாதித்துத்தான் அப்பொருளில் மாற்றத்தை உருவாக்கமுடியும். இந்த அகக் காரணிகளால் தம்மைத் தாக்குகின்ற புறக்காரணிகளை எதிர்த்துநின்று போராட முடிந்தால், பிரச்சினை இல்லை! நமது உடலின் தடுப்பாற்றல் இயக்கம் சிறப்பாக இருந்தால்... கொரோனா வைரசு நம்மை ஒன்றும் செய்துவிடமுடியாது! ஆனால் அதற்கு தேவையான வலிமை உடலில் இல்லையென்றால், புறக்காரணிகள் செயல்பட்டு, நமது உயிரைப் பறிக்கும்!
இங்குத்தான் தடுப்பூசிகளும் பயன்படுகின்றன. அவையும் தாமே கொரோனாவை எதிர்த்துப் போராடமுடியாது. மாறாக, உடம்பின் இயற்கையான தடுப்பாற்றல் இயக்கத்தின் வழியே செயல்பட்டுத் தான்... தடுப்பாற்றல் இயக்கத்தின்மூலமாகத்தான்... கொரோனா வைரசை எதிர்த்துப் போராடமுடியும்!
எனவே , கொரோனா வைரசுத் தொற்றுக்கு வாய்ப்பு இருப்பதால், சிலர் தேவையற்ற பயத்தைக் கிளப்புகிறார்கள். பீதியடைகிறார்கள்!
அதேவேளையில் சிலர்... கொரோனா வைரசு தொற்றினால் தொற்றட்டும்... கவலையில்லை.. எப்போதோ இறக்கப்போகிறோம், இப்போதே இறந்தால் இறந்துவிட்டுப் போகிறோம்... கொரோனா வைரசுத் தொற்றுக்கு எதிரான எந்தவிதக் கவன நடவடிக்கையையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். இதுவும் சரியல்ல. விபத்து ஏற்படும் என்று தெரிந்தபிறகு முடிந்தவரை அதைத் தடுக்கலாமே! அதையும் மீறி அது உடம்புக்குள் தொற்றினால்... உடம்பின் இயற்கையான தடுப்பாற்றல் இயக்கம் போராடும்! அது அடுத்த பிரச்சினை!
எனவே, கொரோனாபற்றித் தேவையில்லாத பயமும் வேண்டாம்! அதுபோலத் தேவையில்லாத பொறுப்பற்ற செயல்களும் வேண்டாம்!
பலவகை விபத்துகளைத் தடுக்கும் வலிமை உடையது மனித உடம்பு! எதிரிகளை எதிர்த்துப் போராட அது பலவகைப் படைகளை வைத்துள்ளது.
அதேவேளையில் நாமும் தேவையான.. கவனமான.. நடவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம்.... தேவையற்ற இழப்புகளை இல்லாமல் ஆக்கலாம்! விபத்தைத் தவிர்க்கலாம்! கொரோனாவைக் கண்டு, வாழ்க்கையையே முடக்கவேண்டாம்! அதோடு வாழக் கற்றுக்கொள்வோம்! கொரோனாப் பிரச்சினை '' இந்த மாதம்.. இந்த நாள் .. இந்த நேரம் தீர்ந்துவிடும் '' என்று யாராலும் கூறமுடியாது!
மனித சமுதாயம் தனது இலட்சக்கணக்கான ஆண்டு வரலாற்றில் இதுபோன்ற எத்தனையே புறக் காரணிகளைச் சந்தித்திருக்கிறது! வெற்றி பெற்றிருக்கிறது! அதுபோல கொரோனா வைரசு பிரச்சினையும் ஒன்று!
பயம் வேண்டாம்! பீதி வேண்டாம்! அதே வேளையில் தேவையற்ற கவனக்குறைவும் வேண்டாம்!
பயமற்ற பொறுப்புணர்வே ... விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே தேவை!

புதன், 20 மே, 2020

பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன்

பேராசிரியர் ச.வே.சு. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பேராசிரியரின் தமிழ்ப்பணிபற்றி ... தன் இறுதிமூச்சுவரை தமிழுக்காவே செயல்பட்ட பேராசிரியர்பற்றி.. நான் 5 ஆண்டுகளுக்குமுன்பு இட்ட முகநூல் பதிவை இன்று மீள்பதிவாக இங்கு இடுகிறேன். தனிப்பட்டமுறையிலும் என் ஆய்வு வாழ்க்கைக்குத் திசைகாட்டிய பேராசிரியர் அவர்கள். நான் முதுகலைப் பட்டங்களைப் (தமிழ், மொழியியல்) பெற்றபிறகு, வேலை தேடி சென்னைக்கு வந்தபோது (1975) ... பேராசிரியர் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர். முனைவர் பட்டத்திற்கான ஆய்வை அந்த நிறுவனத்தில் தொடங்க அப்போதுதான் பல்கலைக்கழக இசைவைப் பெற்றிருந்தார். எனக்கு அவர் அளித்த அறிவுரை .. '' வேலை இப்போது வேண்டாம். தமிழையும் மொழியியலையும் இணைத்து ஆய்வு மேற்கொள்ளுங்கள்'' என்று கூறி. பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வுமாணவராக இணைத்துவிட்டார். அவரால் தான் பெரும்பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவனாக ஆகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இல்லையென்றால்,எனது வாழ்க்கை வேறு திசையில் சென்றிருக்கலாம். இன்று அவர் நம்முடன் இல்லை...அவரை நன்றியுடன் நினைத்துக்கொண்டு, இப்பதிவை இடுகிறேன்.

பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் … தமிழாய்வுலகில் அனைவராலும் பேரா. ச.வே.சு. என்றழைக்கப்படும் பேராசிரியர். அகவை 80 தாண்டியும் குற்றாலத்திற்கு அருகே தமிழூர் என்ற ஊரைத் தோற்றுவித்து, இன்றும் தளராமல் தமிழாய்வுப் பணிகளில் ஈடுபட்டுவருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.ஏ. ( ஹானர்ஸ்) பட்டம்பெற்று, பின்னர் கேரளாவில் பெரும்பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, பாளை தூய சவேரியர் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றிவிட்டு, கேரளாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார். தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். தொல்காப்பியர் உட்பட பல தமிழ்நூல்களை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இவரைப்பற்றிப் பேரா. ச. அகத்தியலிங்கனார் கூறும்போது “ தொகுக்கவேண்டிய நூல்களைத் தொகுப்பார். பதிப்பிக்கவேண்டிய நூல்களைப் பதிப்பிப்பார். தெளிவுரை எழுதவேண்டி நிற்கும் நூல்களுக்குத் தெளிந்த நீரோடைபோன்று தெள்ளிய உரைகளை எழுதி, அவற்றிற்கு வளம் சேர்ப்பார். அதுபோன்றே மொழிபெயர்க்கவேண்டிய இலக்கண நூல்களை மொழிபெயர்ப்பார்”. இவருடைய இலக்கணத்தொகை ( எழுத்து, சொல், பாட்டியல் ) மூன்று நூல்களும் தமிழாய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும். 49 தமிழ் இலக்கண நூல்களை உள்ளடக்கிய “ தமிழ் இலக்கண நூல்கள் – மூலம் முழுவதும் –குறிப்பு விளக்கங்களுடன் “ என்ற நூல் இலக்கண ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் ஒரு நூல். 60 –க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவருடைய வழிகாட்டுதலில் 44 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ராஜா அண்ணாமலைச்செட்டியார் விருது, தமிழக அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நான் முனைவர் பட்ட ஆய்வாளராக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சேர்வதற்கு உதவிபுரிந்தவர் என்பதை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.



பேராசிரியர் ஆர். தாமோதரன் (அறவேந்தன்)

பேராசிரியர் ஆர். தாமோதரன் (16-10-1966) என்ற அறவேந்தன்...தற்போது டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்! அண்மையில்தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது புலமையை நான் நேரில் கண்டு வியப்படைய கிடைத்த ஒரு வாய்ப்பு அது! 54 வயதுதான். ஆனால் தமிழாய்வுத் துறையில் அவர் செய்திருக்கும் சாதனைகளின் பட்டியல் மிக நீள்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் மயிலம் தமிழ்க் கல்லூரியில்  பி லிட் படித்த அவர், பின்னர் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் எம் ஃபில் பட்டமும் பெற்றிருக்கிறார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியர் இராசாராம் அவர்களின் வழிகாட்டுதலில் ஒப்பிலக்கணத்தில் ஆய்வுசெய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது ஆய்வுலகின் வழிகாட்டி மறைந்த பெரும்பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள். இவரை அறவேந்தன் அவர்கள் ''அப்பா'' என்றுதான் அழைக்கிறார், தன் ஆசிரியர்மீது இவருக்கு அவ்வளவு பற்று!
சிறிது காலம் புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி ஆகிய இடங்களில் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழகத்தின் பெரியார் ஆய்வுமையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி
உள்ளார். அதன்பின்னர் 2013 முதல் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று, இன்றுவரை அங்கே பணிபுரிந்துவருகிறார்.

20-க்குமேற்பட்ட ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். 30-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆய்வுக் கட்டுரைகள் 100-க்குமேல் உள்ளன. தொல்காப்பியம் தொடங்கி ... இன்றைய நவீன இலக்கியங்கள்வரை தன் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். குறுந்தொகை, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள், இலக்கணம், அணியிலக்கணம் , சமூக வரலாறு, தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் என்று பல தலைப்புகளில் தன் ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பெரியார், பெரியாரியம்பற்றிக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அறவாணன் அறக்கட்டளையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிவருகிறார்.
இவர் பெற்றுள்ள விருதுகள் ஏராளம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குடியரசுத் தலைவரின் 2005-2006  ஆண்டுக்கான  இளம் ஆய்வாளர் விருதை பெற்றார். மேலும் மறைந்த முதல்வர்கள் மாண்புமிகு கலைஞர், மாண்புமிகு ஜெயலலிதா ஆகியோரிடமும் விருதுகள் பெற்றுள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளார். இவரது வழிகாட்டுதலில் 20 முனைவர் - 50 எம் ஃபில் மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
இவரது ஆய்வுப்பணிகளும் சமூக உணர்வும் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவரது ஆய்வுத் திறனையும் நிர்வாகத் திறமையையும் தமிழகம் பயன்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India