திங்கள், 15 ஜூன், 2020

பேரா. பெரு. பெருமாள்சாமி

பேராசிரியர் பெரு. பெருமாள்சாமி அவர்கள்.......
-------------------------------------------------------------------------------------
பேரா. பெரு. பெருமாள்சாமி அவர்கள் மைசூரில் அமைந்துள்ள இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் தற்போது பேராசிரியராகவும் துணை இயக்குநராகவும் பணியாற்றும் மொழியியல், தமிழ்மொழி அறிஞர். தமிழகத்தில் திண்டுக்கல் நகரில் பிறந்த இவர், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றபிறகு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இவருடைய முனைவர் பட்ட ஆய்வானது தமிழ்மொழிக் கருத்தாடல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாகும். ஒருவர் தனது மொழிவழியே கருத்தாடலில் ஈடுபடும்போது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே ஈடுபடுகிறார் . வேண்டுகோள், கட்டளை, விருப்பம், பாராட்டு... என்று பலவகைப் பேச்சுச்செயல்களை (Speech Acts) அவர் மேற்கொள்கிறார். அதுபோன்று, அவர் கருத்தாடலில் ஈடுபடும்போது, அக்கருத்தாடலை யாருடன் நிகழ்த்துகிறாரோ, அவர் இவருடன் கருத்தாடலைத் தொடர்வதற்குச் சில நெறிகளைப் பின்பற்றவேண்டும் (Principles of Co-operation) . கருத்தாடல் முறிந்துவிடக்கூடாது. அதற்கேற்ற கையில் இருவர்களும் தங்கள் பணிவையும் தங்களது தகுதிநிலையையும் (அதிகாரத்தையும்) வெளிப்படுத்தவேண்டும். இதில் அவர்கள் தவறினால், கருத்தாடல் முறிந்துவிடும். தடைபட்டுவிடும். எனவே தற்போதைய மொழியியல் ஆய்வில் மொழிக் கூறுகளோடு, குறிப்பிட்ட சமூக அமைப்பின் மேற்குறிப்பிட்ட கருத்தாடல் கூறுகளும் (Discourse features) ஆய்வு செய்யப்படுகின்றன. இதுபோன்ற ஆய்வுகள் குறிப்பிட்ட மொழிச்சமூகத்தின் சமூகக்கூறுகளை அறிந்துகொள்ள உதவுவதோடு, மொழிக்கற்றல் அல்லது கற்பித்தலுக்கும் மிகவும் பயன்படும்.
மேலும் இவர் இந்தியச் சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR ) குறுகிய கால ஆய்வுத் திட்டத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் அலுவலகத்தின் மொழிப் பிரிவில் இந்திய மொழிகளின் கணக்கெடுப்புத் திட்டத்தின் (Linguistic Survey of India) கீழ் வெளி உலகிற்கு சிறிதளவே அறியப்பட்ட மொழிகளைப்பற்றி ஆய்வு செய்து அம்மொழிகளின் கட்டமைப்புக்களை ஆய்வு அறிக்கையாக இந்திய அரசிற்குச் சமர்ப்பித்துள்ளார். இதற்கிணங்க, திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த கிசான் (ஒடிஸா), திபத்தோ – பர்மீய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த போடோ மேச், டோடோ (மேற்கு வங்காளம்), லிம்பு, தமங் (சிக்கிம்), கின்னெளரி (இமாச்சல பிரதேம்), இந்தோ –ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த போஜ்புரி, சுர்ஜாபுரி (பீகார்: இவ்விரு மொழிகளையும் மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து) மற்றும் ஆஸ்ட்ரோ – ஆஸியாட்டிக் (முண்டா) மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஹோ போன்ற மொழிகளையும் ஆய்வு செய்துள்ளார்.
மொழித் தரவுகளைச் சேகரிப்பதற்கு இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்றவர். இந்தியாவில் பேசப்படுகின்ற பல மொழிக் குடும்பங்களுக்கு அறிமுகமானவர். திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்தவுடன், பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகின்றன மொழிகளின் தொகுப்பை மாநில வாரியாக வெளியிடுவதற்கு பல்வேறு மாநிலத் தொகுதிகளில் உறுதுணை புரிந்தவர். தான் பெற்ற களப்பணி அனுபவத்தின் அடிப்படையில், பல்வேறு பல்கலைக்கழக மொழியியல் மாணவர்களுக்கு ஒரு மொழியின்/ தாய் மொழியின் மாதிரி இலக்கணத்தை (Sketch Grammar) வடிவமைப்பதற்குப் பயிற்சி கொடுத்தவர். மொழிப் பிரிவில் இயங்கும் இந்திய மொழிகளின் கணக்கெடுப்புத் திட்டம், தாய்மொழிக் கணக்கெடுப்புத் திட்டம் மற்றும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்திய மொழிகளின் கணக்கெடுப்பு போன்றவற்றில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவில் இருந்து அயராது உழைத்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகளுக்குமேல் வெளியீடு செய்தவர். மொழிப்பிரிவில் வெளியிடப்பட்ட பல்வேறு மொழிகளின் மாதிரி இலக்கணங்கள் புத்தக வடிவிலும், மின் இதழாகவும் (www.censusindia.gov.in) கிடைக்கின்றன.

கொல்கத்தாவில் பணியாற்றுகின்றபொழுது தமிழ்ச் சங்கப் பணிகளிலும் பங்கேற்றார். ஆய்வு அரங்குகளிலும் , பட்டிமன்றங்களிலும், பொங்கல் விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றியதற்காக இருமுறை குடியரசுத்தலைவர் விருது பெற்றவர் (2001 மற்றும் 2011 மக்கள் தொகை). யுனொஸ்கோவின் உலக மொழிகள் திட்டத்திற்காகத் தமிழகத்தில் பேசப்படும் தெலுங்கு மொழிபற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை அந்நிறுவனத்திற்குச் சமர்ப்பித்தற்காக நற்சான்றிதழ் பெற்றவர்.
தற்போது இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் பேச்சொலி அறிவியல், கல்வித்தொழில்நுட்பம், மின்தரவாக்கம், மொழி மேம்பாட்டுத்திட்டம், தாய்மொழிக் கணக்கெடுப்பு போன்ற துறைகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்.
தமிழகத்தைச்சேர்ந்த இவருடைய துறை அறிவும் பணியும் ... தமிழ் ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை. அவர் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.


பேராசிரியர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ( 1902 – 81)

பேராசிரியர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ( 1902 – 81) … தமிழ் , தமிழர் பற்றிய ஆய்வுகளில் தனது முடிவுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் நின்ற ஒரு மிகப் பெரிய ஆய்வாளர். தமிழ் ஒரு இயற்கைமொழி … உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் … தமிழே திராவிட மொழிகளுக்குத் தாய் … ஆரியத்திற்கும் மூலம் … மேலும் மூழ்கிவிட்ட குமரிக்கண்டத்திலிருந்துதான் முதல் மாந்தரினம் தன் தாய்மொழியான - உலக முதல் மொழியான – தமிழுடன் தோன்றியது. இதுவே பாவாணரின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்ற ஊரில் பிறந்த ‘தேவநேசன்’ பின்னர் ‘தேவநேயன்’ என்று அழைக்கப்பட்டார். தமிழாசிரியர் மாசிலாமணி என்பவர் இவருக்குச் சூட்டிய ‘கவிவாணர்’ என்ற அடைமொழியும் பின்னர் ‘பாவாணர்’ என்று மாற்றமடைந்து, ‘தேவநேயப் பாவாணர்’ என்று அழைக்கப்பட்டார். ‘திராவிட மொழி நூல் ஞாயிறு ‘ என்ற சிறப்புப்பட்டத்தைப் பெரியார் ஈ.வே. இரா. அவர்கள் தலைமையில் 1955 – இல் சேலம் தமிழ்ப் பேரவை அளித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் படிப்பிலும் திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப்புலவர் படிப்பிலும் தேறிய பாவாணர் 1934 – இல் பி ஓ எல் பட்டமும் பெற்றார். 22 ஆண்டுகள் பள்ளி ஆசிரியப் பணி … 12 ஆண்டுகள் கல்லூரிப் பணி … 5 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி … 6 ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதித்திட்டத்தில் பணி. ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் ‘ மொழியாராய்ச்சி ‘ என்ற இவரது கட்டுரை முதன்முதலாக 1931- இல் வெளிவந்தது. 1940 இல் ‘ ஒப்பியன் மொழிநூல்’ என்ற இவரது மிகச் சிறப்பான ஆய்வுநூல் வெளிவந்தது. அதையொட்டி, ‘இயற்றமிழ் இலக்கணம்’ என்ற இவரது நூலைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. ‘திராவிடத் தாய்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’ ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழாட்சி’, ; முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம், ‘ A critical survey of Madras University Lexicon ‘ ‘ The Primary classical Language of the World’, ‘ The Language Problem of Tamilnad and its logical Solution ‘ ‘ வேர்ச்சொல் கட்டுரைகள்’, ‘தமிழிலக்கிய வரலாறு’ ‘ இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ‘, ‘ வண்ணனை மொழிநூலார் வழுவியல்’ ஆகியவை இவர் எழுதியுள்ள நூல்களில் சில. 1956 –ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘திராவிட மொழியாராய்ச்சித் துறையில்’ இணைப்பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்கும் வங்காளமொழிப் பேராசிரியர் சுநீதி குமார் சட்டர்ஜிக்கும் ஏற்பட்ட கருத்துமோதல், இவர் தான் கொண்டிருந்த மொழிக் கோட்பாட்டு அடிப்படையில் மேற்கொள்கிற ஆராய்ச்சிக்குத் தடையாக அமைந்தது. இதன் விளைவாக, 1961 ஆம் ஆண்டு இவர் அப்பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறினார். 1959 –இல் இவரது மாணவரும் பல வகைகளில் அவருக்குத் துணை நின்றவருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தொடங்கிய ‘தென்மொழி’ இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். 1960 –இல் இவரது ஆட்சித்துறைக் கலைச்சொல்லாக்கங்களைப் பாராட்டி, தமிழ்நாட்டரசு செப்புப்பட்டயம் வழங்கி இவரைச் சிறப்பித்தது. 1974 – இல் தமிழ்நாட்டரசு வகுத்த ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டு, அப்பணியைத் தொடங்கினார். 1979 – இல் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுத்தட்டமும் விருதும் வழங்கினார். அப்போது ‘செந்தமிழ்ச்செல்வர் ‘ என்ற பட்டமும் தமிழ்நாட்டரசால் வழங்கப்பட்டது. இவருக்குப் பலவகைகளில் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிறுவனர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் உதவியுள்ளார். முக்கூடலைச் சேர்ந்த இராமகிருஷ்ணா பீடி நிறுவனத்தின் உரிமையாளரும் உதவியுள்ளார். 1981 – ஆம் ஆண்டு (5.1.81) மதுரையில் நடைபெற்ற 5 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் ‘ மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்’ என்னும் தலைப்பில் ஒன்றேகால் மணிநேரம் சொற்பொழிவாற்றினார். அன்று இரவே உடல்நலம் கெட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்த பத்தாவது நாள் (15.1.81) இயற்கை எய்தினார். மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தையொட்டி, பாவாணர் வாழ்க்கையும் ஒரு இயக்கமாகவே தோன்றி, வளர்ந்து, இன்றும் நீடிக்கிறது. உலகெங்கும் அவரது கோட்பாட்டை ஆதரிப்பவர்களும் அதனடிப்படையில் தமிழாய்வை மேற்கொள்வோர்களும் இருக்கின்றனர். மறைந்த பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார், முனைவர் வளனரசு போன்றோரெல்லாம் இவரது கோட்பாடுகளை ஏற்றவர்களில் சிலர். இன்றும் முனைவர் அரணமுறுவல், முனைவர் கு. அரசேந்திரன், திரு. பூங்குன்றன், திரு. அருளி போன்றோர் தொடர்ந்து பாவாணர் வழியில் தமிழ்த்தொண்டு ஆற்றிவருகின்றனர். இவரது நினைவாகத் தபால்தலையும் வெளியிடப்பட்டுள்ளது.மேலதிக விவரங்களுக்கு: http://ta.wikipedia.org/s/3f1

                               

வெள்ளி, 12 ஜூன், 2020

பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம்


பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் (1926-2009) … வ(டசேரி) (அய்)யம்பெருமாள் சுப்பிரமணியம் … துறைகள் பலவற்றையும் பேராசிரியர்கள் பலரையும் உள்ளடக்கிய ஒன்றுதான் பல்கலைக்கழகம் என்றால், பேரா. வ.அய்.சு. அவர்களும் நம்மிடையே நடமாடிய உயிர்ப்புள்ள , துடிப்புள்ள ஒரு பல்கலைக்கழகம்தான்! கேரளத்தில் மொழியியல்துறையை (1963) உருவாக்கினார். திராவிட மொழியியல் கழகத்தை நிறுவினார் (1971). உலகத் திராவிட மொழியியல் பள்ளியை (1997) நிறுவினார். தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்தார். ஆந்திரத்தில் குப்பம் என்ற இடத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஹம்பியில் கன்னடப் பல்கலைக்கழகமும் உருவாகக் காரணமாக அமைந்தார் எனப் பேரா. தமிழவன் கூறுகிறார். பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், இராம. சுந்தரம், ச.வே. சுப்பிரமணியன், பி.ஆர். சுப்பிரமணியன், இரா. தாமோதரன் , இளவரசு … பேராசிரியர் உருவாக்கிய மாணவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்த ஒரு பேராசிரியர். 1943-இல் நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் .. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பி.ஏ.,ஹானர்ஸ் - முதுகலைப்பட்டம் (1946). அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேரறிஞர் ஹவுஸ்கோல்டர் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் (1957). நெல்லை மதிதா இந்துக்கல்லூரியில் 6 ஆண்டுகள் (1947-53) ஆசிரியப்பணி. 1953 முதல் 58 வரை அன்றைய திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பணி. பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் மொழியியல் துறையில் பணி. 1963 – இல் மொழியியல்துறை தோற்றுவிக்கப்பட்டபிறகு அதன் தலைவராகச் செயல்பட்டார். தமிழகத்தில் 1981-இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவித்தபோது அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது தடவையும் அப்பதவியில் சில ஆண்டுகள் நீடித்தார். ஆந்திரத்தில் திராவிடப் பல்கலைக்கழகம் உருவாகியபோது, அதன் இணைவேந்தராகப் பணியேற்றார் (1997-2001). செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனம் அமைக்கப்பட்டபோது, அதன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம், திராவிடப் பல்கலைக்கழகம், விசுவபாரதிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டி.லிட்., பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளன. சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது இவருக்கு 2007-இல் வழங்கப்பட்டது. பேரா. தனிநாயகம் அடிகளாருடன் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கினார். 1972 – இல் இவர் தொடங்கிய “International Journal of Dravidian Linguistics “ இன்றுவரை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. DLA News என்ற ஒரு செய்தி இதழையும் தொடங்கிவைத்தார். ‘ புறநானூற்றுச் சொல்லடைவு ‘ என்பது இவரது ஆய்வேடாகும். இவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, இரண்டு தொகுதிகளாக – ‘ மொழியும் பண்பாடும் ‘, ‘ இலக்கணமும் ஆளுமையும்’ – வெளிவந்துள்ளன. DLA வெளியீடுகளாக ‘திராவிடக் களஞ்சியம் - 3 தொகுதிகள்’, ‘திராவிடப் பழங்குடி மக்கள் களஞ்சியம் – 3 தொகுதிகள்’ , ‘ தொல்காப்பிய மூலவேறுபாடுகள்’, தொல்காப்பியச் சொல்லடைவு’, தென்னிந்தியாவில் சமணர்’, ‘தெலுங்கு இலக்கணக் கோட்பாடுகள் ‘ ஆகியவை வெளிவந்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்க்கலை’, “Tamil Civilization “ என்ற இரு ஆய்விதழ்களைத் தொடங்கினார். மொழியியலில் நிலவுகிற புளூம்பீல்டு அமைப்பியல் கோட்பாடு ( Structural Linguisitcs), பைக் டாக்மீமிக்ஸ் கோட்பாடு (Pike’s Tagmemics) , ஹெம்ஸ்லேவ் கிளாஸ்மேடிக் கோட்பாடு ( Hjelmslev’s Glossematics), சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு ( Chomskey’s Generative Grammar) என்று பல கோட்பாடுகளைப் பின்பற்றி , தன் மாணவர்களைத் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தது உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய சாதனையாக நான் பார்க்கிறேன். அவரது மாணவர் ஒருவர் தனது பேராசிரியரை Very important Subrmaniom (VIS) என்று குறிப்பிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் மேற்கொண்ட கணினிமொழியியல் ஆய்வுகளின் விவரங்களைப்பற்றி DLA News வெளியிடுவதற்காக ஒரு பேராசிரியரை அவர் நேரில் அனுப்பிவைத்ததை நான் மறக்கமுடியாது. பேராசிரியர்பற்றிய மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளங்களைப் பார்க்கலாம். http://keetru.com/…/2009-10-07-1…/09/320-2009-08-27-08-38-34 http://www.kalachuvadu.com/issue-116/page75.asp


வெள்ளி, 5 ஜூன், 2020

பேராசிரியர் ஏ ஆர்ஏ சிவகுமரன்

பேராசிரியர் ஏ ஆர்ஏ சிவகுமரன் … நான் தொடங்கியுள்ள தமிழறிஞர் தொடர் வரிசையில் இவர் நான்காவது தலைமுறையில் வருகிறார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் ( Nanyang Terchnology University - NTU ) சார்ந்த தேசியக் கல்விக் கழகத்தில் ( National Institute of Education – NIE) தமிழ்த்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திவருகிறார். தமிழகத்தைச் சார்ந்தவர். தமிழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றவர். சிங்கப்பூரில் 1992 –க்கு முன்புவரை தமிழ்மொழியில் ஆய்வேட்டை எழுதி முனைவர் பட்டம் பெற இயலாத நிலை இருந்தது. இவரே நன்யாங் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தமிழ்மொழியில் ஆய்வேட்டை அளித்து முனைவர் பட்டம் பெற்றார். ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் (1965-1990) – ஒரு திறனாய்வு ‘ என்ற தலைப்பில் பேரா. சுப. திண்ணப்பன் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்கப்பூர் கல்விக் கழகத்தில் முதன்முதலில் வெளிநாட்டவர்களில் தமிழாசிரியர் பயிற்சிக்கு இவர்தான் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனியாகவும் வேறு பேராசிரியர்களோடு இணைந்தும் இதுவரை எட்டு தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். சில சிறுவர் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சிங்கப்பூர் தவிர மலேசியா, மொரிஷியஸ், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, இந்தோனேஷியா, தாய்லாந்து, கனடா, ரஷ்யா, லண்டன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளையும் முதன்மை உரைகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு தொடர்பான சிறப்புரைகள் ஆற்றியுள்ளார். இவரது கற்பித்தல் உத்திகளின் சிறப்பறிந்து, லண்டன் தமிழமைப்பு 500-க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களுக்குக் கற்பித்தல் உத்திகள் தொடர்பான பட்டறையை நடத்துவதற்கு 2014 ஆம் ஆண்டு இவரை அழைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியத் துறையில் 2013 – இல் வருகைதரு பேராசிரியராக அழைக்கப்பட்டார். சிங்கப்பூரில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறை மறு ஆய்வுக்குழுவில் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படும் தமிழ்மொழிப் பாடநூல்களின் மதியுரைஞராகவும் செயல்பட்டு வருகிறார். திரு லீ குவான் இயூ இருமொழி திட்டவேலை நிதிமதிப்பீட்டுக்குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றிவருகிறார். 2013 -இலிருந்து தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘நவீனத் தமிழாய்வு ‘ என்னும் ஆய்விதழின் பதிப்பாசிரியர் குழுவில் இருந்துவருகிறார். சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் அறங்காவலராகவும் இருந்துவருகிறார். சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் கழகம் இவருக்கு ‘தமிழர் திருநாள் விருது’ வழங்கியுள்ளது. இவர் பணிபுரியும் தேசியக் கல்விக்கழகமும் இவருக்கு ஐந்து முறை நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. நன்யாங் பல்கலைக்கழகமும் இவரது பணியைப் பாராட்டி, இருமுறை நீண்டகாலச் சேவை விருது வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரிந்தாலும் தமிழகத்தை மறக்காமல், பாண்டிச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இளங்கலையில் முதலாவதாக வரும் மூன்று மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தனது பெற்றோர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் சிறப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்திலும் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் தமிழுக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். தற்போது தரவுமொழியியல் ( Corpus Linguistics) அடிப்படையில் தமிழைக் கற்பிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழாய்வாளர் – தமிழ்ப் பேராசிரியர் - சிங்கப்பூரில் இவ்வாறு சிறந்த தமிழ்ப்பணிகளை மேற்கொண்டு வருவது பெருமையாக உள்ளது.


பேராசிரியர் மருதூர் அரங்கராசன்

தமிழ் இலக்கியம், இலக்கணம் இரண்டிலும் தேர்ச்சிபெற்ற ... சமூக உணர்வுடைய .. எனது இனிய நண்பர் பேரா, மருதூர் அரங்கராசன் அவர்களைப்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் இட்ட முகநூல் பதிவை மீள்பதிவு செய்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
பேராசிரியர் மருதூர் அரங்கராசன் ( 1952) … மிக அமைதியாக , ஆனால் மிக ஆழமாகத் தனது தமிழ் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முனைவர் இவர். பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவர். இவருடைய எம்.ஃபில் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘பொருள்கோள்’. முனைவர் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘தமிழில் வேற்றுமை மயக்கம்’. இந்த ஆய்வேடு நூலாக வெளிவந்தபோது, அதற்கு அணிந்துரை அளித்த பேரா. தமிழண்ணல் கூறுகிறார் : “மரபு தவறாத, மொழியியல் அறிவோடு ஆய்வை அணுகுதல் மிகுந்த சிறப்புக்குரியது; பிறர்க்கு வழிகாட்டத்தக்கது… பொற்கோவின் மாணவர் என்பதை இவர் நிலைநிறுத்துகிறார்”. இவருடைய மற்றோர் நூலான ‘ தமிழில் வேற்றுமைகள்’ என்ற நூலுக்கு ஆய்வுரை வழங்கிய பெரும்பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் கூறுகிறார் : “ வேற்றுமைபற்றி மரபு இலக்கண முறையிலும் மொழியியல் பார்வையிலும் மருதூரார் உற்று நோக்குகிறார்”. இவ்வாறு மரபிலக்கணத்தையும் மொழியியலையும் இணைத்து, தமிழ்மொழியை ஆய்கிற சிறந்த ஆய்வாளர்களில் மருதூரார் ஒருவர் என்பதில் ஐயமில்லை. தமிழ் வேற்றுமைகளைப்பற்றி ஒரு முழுமையான ஆய்வாக மேற்கூறிய இரண்டு நூல்களும் அமைந்துள்ளன. தொல்காப்பியரில் தொடங்கி, இன்றைய மொழியியலில் வேற்றுமை இலக்கணத்தைத் தெளிவுபடுத்திய சார்லஸ் ஃபில்மோர் வரை இவர் ஆய்வு விரிந்தமைந்துள்ளது. இவரது மற்றொரு சிறப்பான ஆய்வு நூல் ‘ யாப்பறிந்து பாப்புனைய …’. இந்நூல் யாப்பு அறிந்து மரபுக்கவிதை இயற்ற விரும்புவர்க்கும், யாப்பு அறிந்தபின் புதுக்கவிதை புனைய விரும்புவர்க்கும் உதவும். இந்நூலுக்குப் பேராசிரியர் தி.வே. கோபாலையரும் பேரா. இரா. சாரங்கபாணியும் அணிந்துரைகள் வழங்கியுள்ளதே இந்நூலின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கிறது. இந்நூலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு 2005-இல் வழங்கப்பட்டது. அடுத்து, இலக்கண வரலாறு என்ற வரிசையில் வெளிவந்த ‘பாட்டியல் நூல்கள்’ , ‘‘தமிழில் மரபுத் தொடர்கள்’ என்ற நூல்களெல்லாம் மருதூராரின் தமிழாய்வுத் திறனை வெளிக்காட்டி நிற்கிறது. மாணவர்களுக்குச் சந்தி இலக்கணத்தைக் கற்பிக்கும்போது, ‘சுமை’யாக ஏற்றாமல், ‘சுவை’யாகக் கற்றுக்கொடுக்கும்வகையில் இவர் ‘ தவறின்றித் தமிழ் எழுத’ என்ற நூலை எழுதியுள்ளதாகப் பேரா. ம.ரா.போ.குருசாமி அவர்களும் பேரா. தா.ம. வெள்ளைவாரணனார் அவர்களும் தங்களது அணிந்துரைகளில் கூறியுள்ளனர். ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற ஒரு கவிதை நூலையும் இவர் எழுதியுள்ளார். பள்ளியில் தமிழாசிரியாகப் பணியாற்றி, பின்னர் நெய்வேலி ஜவஹர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி, தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். இவரது இலக்கணப் புலமையை உணர்ந்த சிங்கை சிம் பல்கலைக்கழகம் ( SIM University) கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இவரைச் சிங்கைத் தமிழ் இளங்கலை மாணவர்களுக்குத் தமிழிலக்கணத்தைக் கற்றுக்கொடுக்க அழைத்துக்கொண்டிருக்கிறது. 1978 – 80 –களில் சென்னை உ.வே. சா. நூலகத்தில் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், பேரா. சா.வே.சுப்பிரமணியன், திரு. இராமன் போன்றோர்களுடன் இணைந்து, ஓலைச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் இலக்கணங்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியையும் மேற்கொண்டவர் இவர். ( தமிழிலக்கியம், மரபிலக்கணம், மொழியியல் ஆகியவற்றில் புலமைவாய்ந்த ) பேராசிரியர் பொற்கோவின் ஒரு சிறந்த மாணவர் என்பதை நிலைநாட்டியுள்ள முனைவர் மருதூர் அரங்கராசனை இங்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன்

இன்றைய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்... அவரைப்பற்றி 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் இட்ட முகநூல் பதிவு இது. // தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்த அவருடைய ஆய்வுத்திறனை அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் நேரடியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு விரைவில் ஏற்படும், ஏற்படவேண்டும் என நம்புகிறேன்.// தற்போது மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன் (1959) … இன்றைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியர். நான்கு மாநிலங்கள் ( ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம்) இணைந்து குப்பம் என்ற ஊரில் உருவாக்கியுள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழிகள் ஆய்வு மற்றும் கணினிமொழியியல் துறையின் இன்றைய பேராசிரியர் ... துறைத் தலைவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் முதுகலைப் பட்டமும் (1983) முனைவர் பட்டமும் (1989) பெற்றவர். (மறைந்த) மொழியியல் பேராசிரியர் ஜே. நீதிவாணன் அவர்களின் வழிகாட்டுதலில் “ A Survey of Methods for Teaching Tamil as other Tongue from Primary to Secondary School Level” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1987-89 இரண்டாண்டுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு, 1989 முதல் 2006 வரை கேரளா கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மலையாளத்துறையில் தமிழுக்கான மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் இன்றுவரை திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார். இடையில் இரண்டாண்டுகள் ( 2009-11) போலந்து வார்சாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 2011 –இல் பிராக் சார்லஸ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு மொழியியல் ஆய்வுத்திட்டத்திற்காக சென்றுள்ளார். அகராதியியல், மொழிவளர்ச்சித்திட்டம், சமூகமொழியியல், மொழிபெயர்ப்பியல் ஆகியவற்றில் பல சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். தமிழிலிருந்து மலையாளத்திற்கும் மலையாளத்திலிருந்து தமிழுக்கும் பல மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 2013 – இல் ஆந்திர அரசின் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றுள்ளார். பல முனைவர் பட்ட , எம்ஃபில் பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார். தேசிய அளவிலும் உலக அளவிலும் பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். தொடர்ந்து திராவிடமொழிகள், கணினிமொழியியல் , தமிழிலக்கணம் ஆகியவற்றில் சிறப்பான பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறார். தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்த அவருடைய ஆய்வுத்திறனை அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் நேரடியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு விரைவில் ஏற்படும், ஏற்படவேண்டும் என நம்புகிறேன்.

பேராசிரியர் தனிநாயகம் அடிகளார்

பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ( சேவியர் நிக்கல்ஸ் ஸ்ரனிசுலாசு) ( 1913- 1980) … தமிழ் பயிற்றல் , தமிழாய்வு, தமிழ் நிறுவனங்கள், தமிழிதழ்கள் , தமிழ் மற்றும் தமிழர் உரிமை காப்பு … என்று பல தளங்களில் தமிழ்ப்பணி ஆற்றிய பேராசிரியர். ஈழம் பெற்றெடுத்த பேராசிரியர். இலங்கையிலே பள்ளிக்கல்வியை மேற்கொண்டு, 1934-39 – இல் ரோமில் கிறித்தவப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்று, கிறித்தவக் குருமாராக ஆனார். 1940-45 –இல் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியப்பணியைத் தொடங்கினார். 1945-47 – இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும், தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆய்வு மேற்கொண்டு எம்.லிட்., பட்டமும் ( ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ – “ Nature in Ancient Tamil poetry” ) பெற்றார். 1950-51 – இல் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். பின்னர் 1952-55 –இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1955-57 – இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டுக் கல்வியியலில் முனைவர் பட்டம் ( “Ancient European and Indian Systems of Education compared with Special Reference to Ancient Tamil Education”) பெற்றார். அதே காலகட்டத்தில் ஆக்ஸ்போர்டு வதம் ( Wadham) கல்லூரியில் ஆங்கில இலக்கிய விமர்சனம்பற்றிய பயிற்சியைப் பெற்றார். 1957-61- இல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் 61-69 – இல் மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 69 –இல் அங்குப் பணி ஓய்வுபெற்று, சில ஆண்டுகள் பாரிஸ் மற்றும் வேறு சில அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் தனது தாய்மொழியாகிய தமிழ்தவிர, ஆங்கிலம், மலாய், சிங்களம் உட்பட 13 மொழிகளில் திறன் படைத்தவர் என்பது மிகவும் வியப்புக்குரியது. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய ஆய்வடங்கல் தேவை என்பது அவரது கருத்து. அவரே முன்நின்று அச்சில் ஏறிய தமிழ் நூல்களைப்பற்றிய விவரங்களை உள்ளடக்கிய “ A Reference Guide to Tamil Studies - Printed Books” என்பதை வெளியிட்டார். Tamil Studies Abroad” என்ற ஒரு தொகுதிக்குப் பதிப்பாளராக இருந்தார். “ Tamil Culture” என்ற ஒரு இதழை 1954-இல் தொடங்கி, 1967 வரை அதைப் பொறுப்பேற்று நடத்தினார். 1554 – இல் வெளிவந்த தமிழ் – போர்த்துகீசிஸ் அகராதியைத் தேடிக் கண்டுபிடித்து, அச்சிலேற்றினார். கிறித்தவத் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதற்கான தமிழ் இலக்கியக் கழகத்தை உருவாக்கினார். “ Journal of Tamil Studies “ என்ற ஒரு புதிய ஆய்விதழை 1969-இல் தொடங்கினார். அந்த இதழ் இன்றும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகிறது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் (“ International Association of Tamil Research – IATR) என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பைப் பல பேராசிரியர்கள் துணையுடன் 1964 – இல் தொடங்கினார். 1966 – இல் அதன் சார்பாக முதல் உலகத் தமிழ் மாநாட்டைக் கோலாலாம்பூரில் வெற்றிகரமாக நடத்தினார். பேராசிரியரது தமிழ் ஆராய்ச்சியின் சிறப்புபற்றிப் பேரா. செ. வை. சண்முகம் பின்வருமாறு கூறுகிறார் : ‘அவரது ஆய்வில் என்னைக் கவர்ந்தது அவருடைய சங்க இலக்கிய ஆய்வுகளே. அந்த ஆய்வுகளும் அதைப் பற்றிய வெளிநாடுகளில் செய்த சொற்பொழிவுகளுமே சங்க இலக்கியத்துக்கு உலக இலக்கியத் தகுதி கிடைக்க ஒரு காரணம்’ … ‘ தனிநாயக அடிகள் தமிழ் ஆய்வு இந்திய நிலையிலும் உலக நிலையிலும் பரவ முக்கிய காரணகர்த்தராகவும் இருந்தார். ஐரோப்பிய நூலகங்களில் இருந்த தமிழ் தொடர்பான நூல்களைக் கண்டு தெரிவித்ததன் மூலம் தமிழ் ஆய்வுக்குப் புதிய தரவுகளைத் தேடி தந்த பெருமைக்கு உரியவராகவும் அமைகிறார். அந்த ஆய்வு இன்றும் தொடர்ந்து தமிழுக்குப் புதிய தரவுகளைத் தந்துகொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது’. ஆய்வுகளோடு தன்னைக் குறுக்கிக்கொள்ளாத பேராசிரியர் இலங்கையில் தமிழ்மொழிக் காப்புக்காகப் போராடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற அங்குள்ள அரசின் கொள்கையை எதிர்த்துப் பல தளங்களில் பேராசிரியர் போராடியுள்ளார். தமிழ் வரலாற்றில் பேராசிரியர் தனிநாயகம் அடிகளாருக்குச் சிறப்பான இடம் உண்டு. பேராசிரியர்பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் மலர்களும் வெளிவந்துள்ளன. மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளங்களைப் பார்க்கவும். http://www.ulakaththamizh.org/JOTSpdf/018103113.pdf http://ta.wikipedia.org/s/70zhttp://keetru.com/index.php…


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India