ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா? அதை ஏன் முற்போக்காளர்கள் கண்டிக்கவில்லை? -----------------------------------------------------------------

 தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா?

அதை ஏன் முற்போக்காளர்கள் கண்டிக்கவில்லை?
-----------------------------------------------------------------
நெல்லையில் அண்மையில் நடைபெற்ற ஆணவக்கொலையைத் தொடர்ந்து, மற்றொரு விமர்சனமும் முகநூலில் பார்க்கிறேன். ''தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா?'' என்பதே அந்த விமர்சனத்தின் உள்ளடக்கம்.
தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் அந்த உணர்வு அவர்களிடையே தோன்றி நீடிப்பதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்கவேண்டும்.
நூற்றாண்டுகாலமாகத் தலீத் மக்களின்மீதான பிற சாதியினரின் மிகக் கொடுமையான தீண்டாமையை யாராலும் மறுக்கமுடியாது. ஒரு சாதி, இரண்டு சாதிகள் இல்லை . . . தமிழகத்தில் உள்ள அனைத்து ''மேல்சாதியினரும் இடைச்சாதியினரும்'' தலீத் மக்களிடம் தீண்டாமையைப் பின்பற்றினர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர்களை யாரும் தொடக்கூடக் கூடாது. இந்தச் சாதியினரின் குழந்தைகள் தலீத்களைத் தெரியாத்தனமாக தொட்டுவிட்டால், 'தீட்டு' என்று கூறி, குழந்தைகளின் ஆடைகளைக் களைவதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன்! ஆதிக்கச் சாதியினரின் தெருக்களில் தலீத்கள் காலணிகூட அணிந்துசெல்லக்கூடாது! ஊருக்கு வெளியே தனியே தலீத்களுக்குத் தனிக் குடியிருப்பு! பள்ளிக்கூடங்களில் தனி அமர்வு! கோயில்களில் ஏனைய சாதியினருடன் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்யக்கூடாது!
இதுபோன்ற நிலை தலீத் அல்லாத மேல்சாதியினர், இடைச்சாதியினர் யாருக்கும் கிடையாது என்பதே உண்மை. அவர்களுக்கிடையில் திருமண உறவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் தொடுவதற்குத் தடை இல்லை. இணைந்து பள்ளிகளில் அமரத் தடை இல்லை! கோயில்களில் நுழையத் தடை இல்லை!
தலீத் மக்களும் இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சூழல் அப்போது இருந்தது இல்லை எனக் கருதுகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் தலீத் மக்களிடையே கல்வி, தொழில் போன்றவற்றின் காரணமாக விழிப்புணர்வு வந்துள்ளது. தலீத் இளைஞர்கள் விழிக்கத் தொடங்கினர். கல்வி, தொழில் ஆகியவற்றால் சற்று வாழும் வசதிகளைப் பெற்ற தலீத் இளைஞர்கள் தங்களது முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கொந்தளிக்கத் தொடங்கினர்.
இந்த வளர்ச்சி நிலையில் தலீத் அல்லாத பிற சாதியினரின் குடும்ப வாரிசுகளுடன் கல்வி நிறுவனங்கள், உற்பத்தித் தளங்களில் தலீத் இளைஞர்கள் தொடர்புகொள்ளும் ஒரு வளர்ச்சி நிலை ஏற்பட்டது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு காதல், திருமணங்கள் நீடிக்கத் தொடங்கியுள்ளன. இதை மேல்சாதியினர் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை! தலீத்களைத் தாக்கத் தொடங்கினர். இதுவரை எதிர்த்துப்போராடாத தலீத் மக்கள் இப்போது திருப்பித் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். தலீத் இளைஞர்கள் தங்கள்மீது பிற சாதியினர் வன்முறைத் தாக்குதல் தொடுக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதை விரும்பவில்லை. திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள்.
இதன் பின்விளைவு . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதினர், இடைத்தட்டு சாதியினர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் தொடங்க ஆரம்பித்தது.. இதுபோன்ற தற்காப்புத் தாக்குதல்களில் தலீத் இளைஞர்கள் ஈடுபடும்போது, அவர்களிடையே 'சாதிய உணர்வு' வளரத்தானே செய்யும்! இது அவர்கள்மீது 'திணிக்கப்பட்ட' ஒரு 'கட்டாயச் சூழல்தானே'!
ஒட்டுமொத்தமாகச் சாதிய உணர்வு அடிப்படையில் மேல்சாதியினர், இடைத்தட்டுச் சாதியினர் 'சாதிய ஒடுக்குமுறைகளை' தலீத் மக்களின்மீது ஏவும்போது, தலீத் இளைஞர்கள் தற்காப்புக்காக, சுய மரியாதைக்காக ஒன்றுபட்டு போராடவேண்டிய சூழல் ஏற்பட்டது. தாங்கள் தாக்கப்பட்டால், திருப்பித் தாக்குவோம் என்று தலீத் இளைஞர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதை மனத்தளவில்கூட ஏற்றுக்கொள்ள மேல்சாதியினர் தயார் இல்லை. இதன் விளைவு . . . தலீத் மக்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வன்முறைகளில் ஈடுபடவேண்டிய தேவை அவர்கள்மீது திணிக்கப்பட்டது. இதை நான் சரி என்று கூறவரவில்லை. வர்க்க உணர்வின் அடிப்படையிலான அரசியல் உணர்வு தலீத் மக்களிடையேயும் பிற சாதியின மக்களிடமும் வளராத காரணத்தால், ஆதிக்கச் சாதியினர்களிடையே நீடிக்கிற பணக்காரர்கள் தங்கள் நலன்களுக்காக இப்போராட்டங்களை 'சாதியப் போராட்டங்களாக' வளர்க்கத் தொடங்கினர். எல்லாச் சாதிகளிலும் உள்ள பணக்காரர்கள் தங்கள் தங்கள் சாதிகளில் 'அடியாட்களை' 'கூலிப்படைகளை' வளர்த்துவிடுகிறார்கள். இதை இந்தியச் சமூகத்தின் ஆளும் வர்க்கங்களும் திட்டமிட்டும் 'தூண்டிவிடுகின்றனர்'. அவர்களுக்கு மக்களிடையே வர்க்க அடிப்படையிலான அரசியல் உணர்வு தோன்றி வளர்ந்துவிடக்கூடாது. 'சாதிய மோதலா' அல்லது 'வர்க்க அரசியலா' - எது வளரவேண்டும் என்பதில் ஆளும் வர்க்கங்கள் தெளிவாக இருக்கின்றன!
அதன் விளைவே . . . இன்றைய சாதிய அடிப்படையிலான வன்முறைகள்! எனவே, தலீத் இளைஞர்கள் மத்தியில் இன்று சாதிய உணர்வு நீடிக்கிறது என்றால், அது அவர்களின் 'தற்காப்புக்காக' வளர்ந்துள்ள ஒன்றாகும். இது தவறான ஒன்று என்பது 100 விழுக்காடு உண்மை. மேல்சாதியினரின் சாதியக் கொடுமைகளை எதிர்த்து நிற்க 'சாதிய உணர்வையே' தலீத் மக்கள் கையாளக்கூடாது! மேல்சாதியினரின் சாதிய உணர்வுக்கு மாற்று தலீத் மக்களின் சாதி உணர்வு இல்லை! உண்மையான வர்க்க அரசியல் உணர்வும் அதன் அடிப்படையிலான போராட்டங்களுமே உண்மையான , சரியான வழிமுறைகள்! ஆனால் ஆளும் வர்க்கங்கள் அதுபோன்ற அரசியல் உணர்வுகள் தலீத் மக்களிடையே வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சாதிய அடிப்படையிலான மோதல்கள்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கவலைப்படவும் அவர்களுக்குத் தேவை இல்லை! உழைக்கும் மக்கள் தங்களுக்கிடையே சாதிய அடிப்படையில் மோதிக்கொண்டால் ஆளும் வர்க்கங்களுக்கு நல்லதுதானே! இது பிரித்தாளும் சூழ்ச்சிதானே!
இதிலிருந்து தலீத் இளைஞர்களை மட்டும் அல்லாமல் பிற சாதியின இளைஞர்களையும் அரசியல் படுத்தவேண்டும். இங்குக் கவனமாகப் பார்க்கவேண்டியது ஒன்று. தற்போதைய தேர்தல் அரசியலுக்குச் சாதிய அடிப்படையிலான மோதல்கள் தேவை. எனவே அவை சாதிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தத்தான் செய்யும்.
நான் கூறுவது, சமூக வளர்ச்சிக்கான, உழைக்கும் மக்களுக்கான . . . வர்க்க அடிப்படையிலான அரசியல்!
சாதிய அடிப்படையிலான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியதுதான்! அதற்கு மாற்று வர்க்க அடிப்படையிலான அரசியல் உணர்வுதான்! ஆனால் இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? இதுவே இன்று நம்முன் நீடிக்கிற வினா! விடை தேடலாம்!
என்னுடைய வயது இப்போது 75. கடந்த 65 ஆண்டுகளாக நான் பார்த்த நேரடியான அனுபவமும் (குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்!) , எனது தத்துவ அரசியல் அடிப்படையுமே மேற்கூறிய எனது கருத்துகளுக்கு அடிப்படை.

சாதி அடிப்படையிலான . . . வர்க்க அடிப்படையிலான 'ஆணவக்கொலைகளுக்கு' இன்றைய தீர்வு . . .

 சாதி அடிப்படையிலான . . . வர்க்க அடிப்படையிலான 'ஆணவக்கொலைகளுக்கு' இன்றைய தீர்வு . . .

-------------------------------------------------------------------------
ஆணவக்கொலைகளைத் தடுத்துநிறுத்த தனிச்சட்டம் தேவை என்று கூறப்படுகிறது. தனிச்சட்டம் வரட்டும்! வரவேற்போம்!
ஆனால் இன்றைய சூழலில் அச்சட்டத்தினால் பெரிதாக எந்த மாற்றைத்தையும் கொண்டுவந்துவிடமுடியாது! ஆதிக்க சாதியினர் பலவகைகளில் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு!
மாறாக, கிராமப்புறங்களில் சமுதாய உணர்வுடைய (சாதி உணர்வு இல்லை!) மேல்சாதியின இளைஞர்கள் . . . தலீத் மக்களின்மீதான வன்முறைகளை . . . ஆணவக்கொலைகளை . . . தடுத்துநிறுத்த ஒன்றுதிரளவேண்டும்! தலீத் மக்களின் போராட்டங்களுக்கு மேல்சாதியின இளைஞர்களே தலைமைதாங்கவேண்டும்! இவர்களைப் பயன்படுத்தித்தான் மேல்சாதியினரின் மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் 'தலீத் எதிர்ப்பு ' ( வர்க்க உள்நோக்கத்துடன்) நடவடிக்கைகளைச் செயல்படுத்துகின்றனர். இது தடுத்துநிறுத்தப்பட வேண்டும்!
இதுபோன்ற செயல்பாடுகள் கிராமப்புறங்களில் பெருகவேண்டும். இதுவே இன்று மேற்கொள்ளக்கூடிய வழிமுறை!
ஆனால் இது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழலாம்! சாத்தியமாக்க வேண்டும்! வேறு வழி இல்லை!

ஆணவக்கொலை . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதியினர்க்கு இடையில் மட்டும்தானா? தலீத் மக்களிடையே இல்லையா? ------------------------------------------------------------------

 ஆணவக்கொலை . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதியினர்க்கு இடையில் மட்டும்தானா? தலீத் மக்களிடையே இல்லையா?

-------------------------------------------------------------------------
மேல்சாதிகளின் குடும்பங்களைச் சார்ந்த பெண்களை, தலீத் சாதியினரின் ஆண்கள் காதலித்துத் திருமணம் செய்வதால்மட்டும் ஆணவக்கொலை நடக்கிறதா? தலீத் மக்களிடையேகூட பிரிவுகள் இருக்கின்றன; அவர்களிடையேயும் 'ஆணவக்கொலை' நடைபெறுகிறதே, அதை யாரும் கேள்விக்கு உட்படுத்தமாட்டீர்களா என்று சில நண்பர்கள் முகநூலில் பதிவு இட்டிருந்தார்கள்! உண்மைதான்! அதையும் நாம் கண்டிக்கவேண்டும்; எதிர்க்கவேண்டும். அதில் ஐயமே கூடாது!
இங்குத் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான ஒன்று மட்டுமல்ல; இரு குடும்பங்களுக்கு இடையிலான ஒன்று! மணமகன், மணமகள் இருவரின் முடிவு மட்டுமல்ல இங்கு! இரு குடும்பங்களின் முடிவாகவும் இருக்கின்றன. இரு குடும்பங்களுக்கு இடையே உருவாக்கப்படும் ஒரு உறவாகவும் பார்க்கப்படுகிறது! ஆனால் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் திருமணம் செய்யும் இருவரின் முடிவாகவே பெரும்பாலும் நீடிக்கிறது. அங்கு இருவரின் வர்க்க நிலை கணக்கில் கொள்ளப்படலாம். மிகப் பெரிய பன்னாட்டு முதலாளிகளின் குடும்பம், அங்குள்ள சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மணமக்களின் இனம், நாடு போன்றவற்றையெல்லாம் வர்க்கத் தகுதி பின்னுக்குத் தள்ளிவிடும்.
இங்கும் வர்க்கநிலையைமட்டும் கணக்கில் கொள்ளும் 'உயர்வர்க்கக் குடும்பங்கள்' இருக்கின்றன! அக்குடும்பத்தினர் சாதி, இனம், நாடு தாண்டியும் திருமண உறவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
திரைப்பட நாயகர்கள், நாயகிகள்கூட சாதி, மதங்களைவிட 'செல்வநிலையையே' கணக்கில் கொள்கிறார்கள்!
ஆனால் கிராமப்புறங்களில் . . . முதலாளித்துவம் முழுமையாக வளர்ந்து நீடிக்காத இடங்களில் . . . திருமணங்களில் முதலில் 'சாதியே' கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால் அத்துடன் 'வர்க்க நிலையும்' கணக்கில் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் எனக்குத் தெரிந்து சில பணக்காரக் குடும்பங்களின் பெண்கள், தங்கள் சாதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளிகளை அல்லது வேலையாட்களைக் காதலித்துத் திருமணம் செய்வதை அக்குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை. அதனடிப்படையில் ஏழை மணமகன்களை மட்டுமல்ல, தங்கள் (மண) மகள்களையே வெட்டிச் சாய்த்த நிகழ்ச்சிகள் உண்டு! இது தொடர்ந்துகொண்டும் இருக்கிறது! மறுக்கமுடியாது!
அதுபோன்று, தலீத் மக்களிடையேயும் சில பிரிவுகள் நீடிக்கின்றன. ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவர், மற்றொரு பிரிவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வதில் அங்கும் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இது மிகச் சிறுபான்மை! அதற்காக இந்த 'வன்கொடுமையைக்' கண்டிக்கக்கூடாது என்பது இல்லை. உறுதியாகக் கண்டிக்கவேண்டும். எதிர்க்கவேண்டும்! இதில் ஐயமே இல்லை!
ஆங்காங்கே மிகச் சிறிய அளவில் இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் இடையேயும் இப்பிரச்சினை தோன்றி நீடித்து, கொலைகளிலும் முடிகிறது. அதையும் நாம் எதிர்க்கவேண்டும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்வதை உறுதியாக எதிர்க்கவேண்டும்!
ஆனால் . . . ஒரு பெரும் மக்கள் தொகுதியையே 'தீண்டத்தகாதவர்கள்' என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒதுக்கிவைத்து, ஊருக்குவெளியே 'குடியிருக்கச்செய்து' , 'அவர்கள் உடலைக்கூடத் தொடக்கூடாது என்று கூறி, பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளை அவர்கள்மீது ஏவிவிடுகிற 'மேல்சாதிகளைச் சேர்ந்த உயர்வர்க்கங்களின் ' 'வன்கொடுமையைக் ' கண்டிக்காமல் இருக்கமுடியாது! அந்தப் பலவகையான சாதிய ஒடுக்குமுறைகளில் ஒன்றுதான் இந்தக் காதலையொட்டிய 'ஆணவக்கொலை'! ஒருவரைச் 'சாதி' 'வர்க்கம்' என்று இரண்டு அடிப்படைகளிலும் இச்சமுதாயம் பார்க்கிறது! இதுதான் உண்மை!
சாதிக்குள் உயர் வர்க்கம் - ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்! காதலர்களின் குடும்பங்கள் முதலில் சாதியைக் கணக்கில் கொள்ளும்! அதிலேயே பிரச்சினை என்றால் திருமணம் எதிர்க்கப்படும்! அவ்வாறு இல்லாமல் சாதி ஒன்றுதான், ஆனால் வர்க்கம் வேறு என்றால், அப்போது வர்க்கநிலையும் கணக்கில் கொள்ளப்படும்! சாதியும் வர்க்கமும் இங்குப் பின்னிப் பிணைந்து நீடிக்கிறது. இதில் நமக்குத் தெளிவு வேண்டும்!
சாதிய அடிப்படையில் நடைபெறுகிற கொலைகளும் 'சாதிய ஆணவக்கொலைகள்தான்'! வர்க்க அடிப்படையில் நடைபெறுகிற கொலைகளும் 'வர்க்க ஆணவக்கொலைதான்'! இரண்டையுமே நாம் எதிர்க்கவேண்டும்! காதலர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்து, ஆனால் வேறுபட்ட வர்க்கங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் கொலைசெய்யப்பட்டால் அதுவும் 'ஆணவக்கொலைதான்'!
ஆனால் தலீத் மக்களிடையே சில பிரிவுகள் இருந்தாலும், அவர்களை அனைவரையும் ஒன்றாகத்தான் உயர்சாதியினர் 'தீண்டத் தகாதவர்களாகப்' பார்க்கிறார்கள்! இதுதானே உண்மை! திருமண உறவில்மட்டுமா தலீத் மக்கள் கொல்லப்படுகிறார்கள்? ஒடுக்கப்படுகிறார்கள்? இந்தச் சூழலில் 'தலீத்' என்பதற்காகவே காதலர்கள் கொலைசெய்யப்படுவதை 'ஆணவக்கொலை' என்று கண்டிப்பதுதானே உண்மையான ஒரு ஜனநாயகவாதியின் கடமையாக இருக்கமுடியும்?

தேர்தல் அரசியலும் சாதியம் தக்கவைப்பும் . . .

 தேர்தல் அரசியலும் சாதியம் தக்கவைப்பும் . . .

------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் தற்போதைய 'தேர்தல் அரசியல்' சாதி அடிப்படையிலான ஒன்றாகத்தான் நீடிக்கிறது. குறிப்பிட்ட தொகுதியில் எந்த சாதியினர் அதிகம் என்பதை அடிப்படையாகக்கொண்டே தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்றனர். அடுத்து, அமைச்சர் பதவிகளை அளிப்பதிலும் சாதிய அடிப்படை நீடிக்கிறது. 'நாங்கள் அனைத்துச் சாதியினர்களுக்கும் ஒதுக்கீடு செய்கிறோம்' என்று இந்தக் கட்சிகள் தங்களை நியாயப்படுத்தலாம். ஆனால் அது உண்மை இல்லை!
கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதிலும் குறிப்பிட்ட பகுதியில் எந்தச் சாதி அதிகமாக இருக்கிறது என்பதையே அடிப்படையாகக் கொள்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்தத்தில் 'சாதியப் பிரிவினைகள்' தக்கவைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தைக் கைகளில் வைத்துள்ள 'மேல்சாதியினர்களுக்கு' இது பயன்படுகிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிசேர்வதைத் தடுக்கிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிதிரளும் சூழல் எப்போது வருகிறதோ, அப்போதுதான் ஓரளவாவது 'மேல்சாதியினரின்' தீண்டாமை நீங்கும். தலீத் மக்களுக்குத் தனித்தொகுதி ஒதுக்குவதால்மட்டும் அவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி இல்லாமல் போய்விடாது.
கோயில் வழிபாடுகளிலும் பெரும்பாலான இடங்களிலும் சாதிய வேறுபாடு நீடிக்கிறது. . கோயில் வழிபாடுகளில் பிராமணர்களின் ஆதிக்கத்தைப் பிற மேல்சாதியினர் ஏற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, திருமணம், பிற சடங்குகள் ஆகியவற்றில் பிராமணர்களின் 'ஆதிக்கத்தை' இந்த மேல்சாதியினர் தாமே முன்வந்து ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கோயில்களுக்குள் நுழைய அல்லது திருவிழா கொண்டாட தலீத் மக்களை அனுமதிப்பதில்லை.
ஆக, மொத்தத்தில் அரசியல், வழிபாடு, திருமண உறவு ஆகிய மூன்றிலும் தலீத் மக்களின்மீது இந்த மேல்சாதியினர் வன்கொடுமைகளில் இறங்குகின்றனர். இந்த மூன்றிலும் சாதி வேறுபாடு என்று மறைகிறதோ அன்றுதான் தமிழ் மண்ணைப் 'பகுத்தறிவு மண்' என்று கூறமுடியும்.
சாதிய வன்கொடுமை செயல்கள் தனிமனிதர் பிரச்சினை இல்லை என்பதைத் தலீத் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும். கொலை உட்பட வன்முறையில் பாதிக்கப்படுகிற தலீத் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சில இடங்களில் வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினாலும், அதுவே சாதியக் கொடுமைகளுக்குத் தீர்வு ஆகாது. மேலும் மேலும் அடித்தட்டு மக்களைப் பிரித்தாளும் மேல் வர்க்கங்களின் சூழ்ச்சிகளுக்கே அது உதவும்.
தீர்வு என்ன?
----------------------
அனைத்துச் சாதிகளிலும் இருக்கிற சமுதாய உணர்வாளர்கள் . . . சாதி எல்லையைத் தகர்த்தெறிந்து, வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து , அரசியல், பண்பாட்டுத் தளங்களில் போராடுவதுதான் தலீத் மீதான வன்கொடுமைகளுக்குத் தீர்வாக அமையும். இல்லையென்றால், மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள . . . சாதி மோதல்களை அதிகரிக்கவே முயலும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே!

ஆணவக்கொலையும் 'பகுத்தறிவு இயக்கங்களும்'!

 ஆணவக்கொலையும் 'பகுத்தறிவு இயக்கங்களும்'!

-------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் நடைபெறும் ஆணவக்கொலைபற்றிப் பல பதிவுகளை நான் இட்டுள்ளேன். எனவே புதிதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
ஆனால் ஒரே ஒரு கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம் , திராவிட இயக்கம் , பிராமணர் எதிர்ப்பு இயக்கம் என்று பல பெயர்களில் நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் . . . பிராமணர்களுக்கு எதிரான பிரமாணர் அல்லாத மேல்சாதிகளின் (பிள்ளை, முதலியார், நாயுடு, கவுண்டர் போன்ற சாதியினர்) இயக்கங்கள்தான் என்பதை ஆணவக்கொலைகள் மீண்டும் நிலைநாட்டுகின்றன.
நிலவுடைமையாளர்களாக நீடித்த பிராமணர்கள், நிவுடைமையாளர்களாக நீடித்த மேற்குறிப்பிட்ட மேல்சாதியினர்மீது செலுத்திய பண்பாட்டு ஆதிக்கத்தை . . . தீண்டாமையை . . . எதிர்த்து இந்த மேல் சாதியினர் இயக்கங்களைக் கட்டினர். பிராமணர்களின் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். இது தவறு இல்லை. ஆனால் இந்த மேல்சாதியினர் அன்றிலிருந்து இன்றுவரை அடிமட்ட விவசாயத் தொழிலாளிகளான தலீத் மக்களின்மீது சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஏன் செயல்படவில்லை? அவ்வாறு செயல்படாதது மட்டுமல்ல, தாங்களே தலீத்மக்கள்மீது சாதிய ஒடுக்குமுறையை ஏவிவிடுவது ஏன்?
தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஒடுக்குமுறையைச் செலுத்தக்கூடாது, ஆனால் தாங்கள் தலீத் மக்கள்மீதான சாதியக் கொடுமையைக் கைவிடமாட்டோம் என்பதுதானே இந்த ''இயக்கத் தலைவர்களின்'' 'இலட்சியம்'?
தஙகளைப் ''பகுத்தறிவுக் கட்சிகள்'' என்று கூறிக்கொள்கிற இந்த இயக்கங்கள் சாதியக் கொடுமைக்கு எதிரானவர்கள் இல்லை . . . மாறாக, தங்கள்மீது பிராமணியர் தீண்டாமை கூடாது;
தாங்களும் நிலவுடைமையாளர்கள்தான் . . . பிராமணர்களும் நிலவுடைமையாளர்கள்தான் . . . எனவே தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஆதிக்கம் கூடாது! இதுதான் இந்த மேல்சாதியினரின் 'பகுத்தறிவுக் கொள்கை'!
அதேவேளையில் தலீத்கள் விவசாயத் தொழிலாளிகள்தான் . . . எனவே அவர்கள்மீது தாங்கள் சாதிய வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்! இதுதான் இந்தப் 'பகுத்தறிவாதிகளின் கொள்கை'! இதற்கு எடுத்துக்காட்டுகள்தான் பல வருடங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல வருடங்களாகப் பிராமணர் அல்லாத மேல்சாதியினர் மேற்கொள்கிற 'ஆணவக்கொலைகளாகும்'!
பொருளாதாரரீதியாகவும் சாதிய ரீதியாகவும் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவருகிற தலீத் மக்கள் . . . இனியாவது தங்கள்மீதான மேல்சாதிகளின் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக . . . வர்க்க உணர்வுடன் உண்மையான சமூக இயக்கத்தைக் கட்டி. தங்களது உண்மையான விடுதலைக்காகச் செயலாற்றவேண்டும்! தமிழ்நாடு உண்மையான 'பகுத்தறிவு மண்' என்றால் , 'சுயமரியாதைக்கு முன்னுதாரணம்' என்றால் . . . தலீத்கள்மீதான மேல்சாதியினரின் வன்கொடுமை . . . ஆணவக்கொலைகள் . . . நடைபெறக்கூடாது! என்று இந்தவொரு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் தமிழ்நாட்டைப் 'பகுத்தறிவு மண்' 'சுயமரியாதை மண்' என்று கூறமுடியும்! இல்லையென்றால் இதுபோன்ற முழக்கங்கள் எல்லாம் போலித்தனம்தான். . . ஏமாற்றுக் கலைகள்தான்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India