ஆங்கில அறிவுப் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன?\
--------------------------------------------------------------------------
நண்பர் திரு மணி மணிவண்ணன்
------------------------------------------------
"இந்தியாவில் இன்னும் ஆங்கிலத்தை “முதல் மொழியாக”க் கற்பிக்கும் பேதைமை இருக்கிறது. இங்கே ஆங்கிலம் என்றுமே இரண்டாம் மொழியாகத்தான் இருக்கும். இரண்டாம் மொழி கற்பிக்கும் முறையே வேறு. அதை வெளிநாடுகளில் பார்க்கிறோம். ஆங்கிலத்தை முறையாக இரண்டாம் மொழியாகக் கற்பித்தால் இரண்டே ஆண்டுக்குள் நல்ல ஆளுமையுடன் பேச, எழுதக் கற்பிக்க முடியும். பதினைந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்தும் எழுதியும் ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ முடியாத நிலையில் மாணவர்கள் இருப்பதற்கு அடிப்படைக் காரணமே மொழி கற்பித்தலின் அடிப்படையே தவறாக இருப்பதுதான்."
ந. தெய்வ சுந்தரம்
---------------------------------
நண்பரே, தங்கள் கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன். முதல்மொழி, இரண்டாம், மூன்றாம் மொழி என்ற வேறுபாடுகள் மொழிப்பயிற்றல் அறிவியலில் (Applied Linguistics - Language Teaching) உண்டு. இதுபற்றிய தெளிவான சிந்தனை இங்குக் கிடையாது.
அதுபோன்று முதல்மொழிக்கற்றல்/ பயிற்றல், இரண்டாம்மொழிக் கற்றல் / பயிற்றல், மூன்றாம் மொழிக்கற்றல்/ பயிற்றல் ஆகியவற்றிற்கிடையே வேறுபாடுகள் உண்டு. இதுபற்றியும் இங்குத் தெளிவு கிடையாது.
இங்கு எல்லாமே ஒன்றுதான். அதன் விளைவே (12 + 3 + 2 + 3) ஆண்டுகள் ஆங்கிலம் கற்ற ஒரு முனைவர் பட்ட ஆய்வாளருக்குக்கூட ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை எழுதுவதற்கோ அல்லது ஆங்கிலத்தைத் தவறில்லாமல் பேசுவதற்கோ தேவையான மொழித்திறனைப் பெறமுடியவில்லை.
அதுபோன்று ஒரு மொழியைப் பொதுவான மொழிச்செயற்பாடுகளுக்காகக் கற்றுக்கொள்வது, ஒரு குறிப்பிட்ட மொழிச்செயற்பாடுகளுக்காகக் கற்றுக்கொள்வது (English for specific purpose) என்ற இரண்டுக்கும் இடையிலான வேறுபாடும் இங்குச் சரியாக உணரப்படவில்லை.
இதன் விளைவு . . . தாய்மொழியான தமிழிலும் முறையாக, தவறு இல்லாமல் கருத்தை வெளிப்படுத்த இயலவில்லை; ஆங்கிலத்திலும் வெளிப்படுத்த இயலவில்லை. இதற்குத் தேவையான முறையான மொழியியல் அறிவு பற்றி இங்கு யாருமே கவலைப்படுவதும் இல்லை. இந்நிலை நீடிக்கும்வரை முறையான மொழித்திறத்தை இங்கு மாணவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது. இது ஒரு வருந்தத்தக்க நிலை.
இதுபோன்று ஒரு மொழியை மொழியாகக் ( as a language) கற்றுக்கொள்வதற்கும், பயிற்றுமொழியாகக் ( medium of Instruction) கொள்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடும் இங்கு உணரப்படவில்லை.
நண்பர் திரு மணி மணிவண்ணன்
-------------------------------------
"தாய்மொழியான தமிழிலும் முறையாக, தவறு இல்லாமல் கருத்தை வெளிப்படுத்த இயலவில்லை; ஆங்கிலத்திலும் வெளிப்படுத்த இயலவில்லை"
இதே கருத்தைப் பர்க்கெலிப் பல்கலையின் மேனாள் தமிழ் இருக்கைப் பேராசிரியர் சார்ச்சு ஆர்ட்டு அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாகப் பல மேடைகளில் சொல்லி வந்திருக்கிறார்.
ந. தெய்வ சுந்தரம்
---------------------
தமிழகத்திலும் மொழியியல் பேராசிரியர்கள் 50 ஆண்டுகளாகக் கூறிவருகிறார்கள் . . .
நண்பர் திரு மணி மணிவண்ணன்
------------------------------------
ஆனாலும் அவர்களாலும் மொழிக்கல்விக் கொள்கைகளை மாற்ற முடியவில்லை
ந. தெய்வ சுந்தரம்
------------------------
அவர்களால் எப்படி மாற்றமுடியும்? செவிமடுக்க இங்கே யார் தயாராக உள்ளார்கள்? மொழியியலாளர்கள் என்றாலே தமிழுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள், பேச்சுத்தமிழை முன்னிறுத்துபவர்கள் என்ற குற்றச்சாட்டுதான் இங்கு நீடிக்கிறது.
தமிழ்மொழி ஆய்வுக்கு இன்றைய மொழியியல் அறிவே தேவையில்லை என்ற குரல் ''ஓங்கி ஒலிக்கிற வரைக்கும்'' மொழியியலாளர்கள் என்ன செய்யமுடியும்?
மொழியியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே மொழியியல் துறையைத் தமிழகத்தில் வளரவிடாமல் ஆக்கும் முயற்சிகள் இங்குத் தொடர்கின்றன.
தமிழ்மொழியியல் ஆய்வுகள் தமிழகத்தில் வளராமல் இருக்கும்வரை, மொழிப்பயிற்றல், கணினித்தமிழ் போன்ற பிரிவுகள் இங்கு வளரவேமுடியாது. மிக மிக உறுதியாகக் கூறுகிறேன் இதை! அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்.
நண்பர் திரு மணி மணிவண்ணன்
----------------------------------
ஆங்கிலக் கல்வி பற்றி ஆங்கில மொழியியல் பேராசிரியர்கள் சொல்லியிருக்க முடியாதா?
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------
தமிழகத்தில் ஆங்கிலத் துறைகளிலும் மொழியியல் வளரவில்லை. எந்த ஒரு மொழித்துறையாக இருந்தாலும் அங்கு மொழியியல் தேவை.
மொழியியல் ஒரு குறிப்பிட்ட துறைக்கான அறிவியல் இல்லை. அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஒரு அறிவியல் இது.
ஆங்கில மொழியியல், தமிழ்மொழியியல் என்று அழைப்பதுகூட தவறு என்று நான் கருதுகிறேன். இயற்பியல் உட்பட அனைத்து அறிவியல் துறைகளும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒன்று என்பதுபோல, மொழியியலும் அப்படித்தான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக