தமிழுக்கு உண்மையான வளர்ச்சித் திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும்?
-----------------------------------------------------------------------------------------------------------
மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் . . . பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. அதற்குக் காரணம் . . . அன்றைய பொருளாதாரத்தில் குலங்களுக்குத் தேவையான அடிப்படை பொருளாதார ஆதாரங்களை அளித்தது பெண்களின் உழைப்பே. காய்கனி பொறுக்குதல், சிறு அளவிலான விவசாய உற்பத்தி ஆகியவற்றில் பெண்களின் உழைப்பே முதன்மையாக இருந்தது.
வேட்டைக்குச் செல்லும் ஆண்களின் வேட்டை ஒரு நாள் வெற்றி பெறும்; ஒரு நாள் வெற்றி பெறாது. அதாவது அவர்களின் வருமானம் நிரந்தரமானது இல்லை.
ஆனால் பெண்களின் வருமானம் சிறிதாக இருந்தாலும் நிரந்தரமானது. மேலும் குலங்களின் வலிமைக்குத் தேவையான குழந்தைகளைப் பெற்றுத் தருவது பெண்களே. இதுபோன்ற காரணங்களினால்தான் குலச் சமுதாய அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முதலில் தோன்றிய 'தெய்வங்களும்' பெண் தெய்வங்களே.
ஆனால் சமுதாய வளர்ச்சியில் கடும் உடல் உழைப்பு தேவையான பெரிய அளவிலான விவசாய உற்பத்தி தோன்றியபிறகு . . . முதன்மையான பொருள் உற்பத்தி ஆண்களின் கைகளுக்குச் சென்றது. அதாவது முதன்மையான பொருள் உற்பத்தியில் பெண்களுக்கு இருந்த முக்கியத்துவம், பங்கு குறைந்தது. அதையொட்டிய 'குடும்பங்களின் தோற்றத்தில்' - ஒரு ஆணின் மிச்ச மீதச் சொத்துக்கு வாரிசு பெற்றுத்தரும் ஒருத்தியாகப் பெண் தள்ளப்பட்டாள். அதன் விளைவு . . . ஆண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி நிலவத் தொடங்கியது.
ஆனால் 'பெண் புகழப்பட்டாள்' ; 'அவளது அழகு, மென்மை புகழப்பட்டது'; ஆனால் யதார்த்தத்தில் 'அவள் அடிமையே'! பெண் 'புகழப்படுவதால், பாடப்படுவதால்' அவள் அடிமை இல்லையென்று ஆகிவிடாது. என்று அவள் மனித சமுதாயத்தின் பொருளாதார உற்பத்தியில் ஆண்களுக்கு இணையான பங்கை என்று பெறுகிறாளோ, அன்றுதான் அவளுக்கு விடுதலை!
இதுபோன்றதுதான் இன்றைக்குத் தமிழின் முக்கியத்துவம் தமிழகத்தில்! பொருளாதார உற்பத்தியில் தமிழுக்கு இடம் கிடையாது; எனவே அவளுடைய வளர்ச்சியில் இங்குக் கவலை இல்லை! ஆனால் பொருளாதார உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிற ஆங்கிலத்திற்கு முதன்மை இடம்!
தமிழைப் ' புகழுவோம்! பாடுவோம்! வாழ்த்துவோம்! சிலை வைப்போம்! விழா நடத்துவோம்! உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக்கூட போட்டிப் போட்டுக்- கொண்டு நடத்துவோம்! ' ஆனால் தமிழ்ச்சமுதாயத்தில் 'அவளுக்கு' ஆங்கிலத்திற்கு உள்ள முக்கியத்துவம் . . . பங்கு . . . இங்குக் கிடையாது!
என்று தமிழுக்குத் தமிழகத்தின் பொருளாதாரத் துறையில் . . . அடிப்படைப் பொருள் உற்பத்தி, வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் 'இடம்' அளிக்கப்படுகிறதோ, அன்றுதான் தமிழுக்கான 'உண்மையான வளர்ச்சித் திட்டங்கள் தேவைப்படும்; நிறைவேற்றப்படும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக