(1) வட்டார வழக்குகளின் மறைவும் பொதுப்பேச்சுத்தமிழின் வளர்ச்சியும்
--------------------------------------------------------------------------------------------------------------------------
என்னைப்பொறுத்தவரையில் இன்றைய தலைமுறையிலேயே வட்டார வழக்குக்கூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகின்றன. எதிர்காலத் தலைமுறைகளில் உறுதியாக இந்த வட்டார வழக்கு, சாதி வழக்கு போன்றவை மறைந்துவிடுமெனக் கருதுகிறேன். சமுதாய வளர்ச்சியில் இது தானாக நடைபெறும். மேலிருந்து திணிப்பது இல்லை இது. அதுபோன்று இதை யாராலும் தடைசெய்யவும் முடியாது.
கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், பொருள் உற்பத்தி ஆலைகளில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றும் சூழல் வளர வளர, இந்த வட்டார வழக்குக்கூறுகள் மறையத்தான் செய்யும். இது மொழியின் இயங்கியல். அது எழுத்துவழக்கோ அல்லது பேச்சுவழக்கோ எதுவாகயிருந்தாலும் தேவையையொட்டி மாறவும், வளரவும் செய்யும்.
(2) பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் இல்லையா?
--------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மொழியின் இலக்கணம் என்பது அந்தக் குறிப்பிட்ட மொழியைப் பேசுகிறவர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட ஒரு ஒழுங்கமைவே.
எல்லா வழக்குக்கும் - பேச்சு வழக்கு உட்பட - ஒழுங்கமைவு அதாவது இலக்கணம் உண்டு. அவ்வாறு இல்லாமல் இருந்தால் அந்தமொழியை அல்லது வழக்கைப் பயன்படுத்த முடியாது.
நரிக்குறவர் பேசுகிற வாக்ரிபோலி மொழிக்கும் இலக்கணம் உண்டு. எழுத்து வழக்கு இல்லாத , இலக்கண நூல்கள் இல்லாத பழங்குடியினர் மொழிக்கும் இலக்கணம் உண்டு. ஆனால் அந்த இலக்கணத்தை ஆராய்ந்து இலக்கண நூல் எழுதுவது வேறு. தேவையையொட்டி இலக்கணநூல்கள் எழலாம்.
தமிழ்நாட்டில் பேச்சுத்தமிழை தங்களுடைய தாய்மொழியாகப் பெற்றுக்கொள்கிற தமிழ்க் குழந்தைகளுக்குப் பேச்சுத் தமிழைக் கற்றுக்கொள்ள இலக்கணநூல் தேவை இல்லை. ஆனால் வகுப்பறையில் முறைசார் கல்விமூலம் கற்றுக்கொள்கிற எழுத்துத்தமிழுக்கு இலக்கணநூல்கள் தேவை.
அதுபோன்று பேச்சுத்தமிழைத் தங்களது இரண்டாவது மொழியாக அல்லது மூன்றாவது மொழியாக முறைசார் கல்வி அல்லது பயிற்சிமூலம் கற்றுக் கொள்பவர்களுக்குப் பேச்சுத்தமிழ் இலக்கணநூல்கள் தேவை.
தமிழ்ச் சமுதாயத்தில் (தமிழர்களாக இருந்தால்) பேச்சுத்தமிழைப் பயன்படுத்தாதவர்கள் இருக்கமுடியாது. அன்றாடக் கருத்துப்புலப்படுத்தச் செயல்பாடுகளுக்குப் பேச்சுத்தமிழே பயன்படுகிறது. பிற முறைசார் மொழிச்செயல்பாடுகளுக்கு எழுத்துத்தமிழ் தேவை. முறைசார்கல்வியில் எழுத்துத்தமிழே செயல்பாட்டு வழக்கு. எனவே தமிழ்ச்சமுதாயத்தில் எல்லாவகையான மொழிச்செய்லபாடுகளையும் தமிழ்வழியே ஒருவர் மேற்கொள்ளவேண்டுமானால் இரண்டு தமிழ் வழக்குகளுமே தேவை.
இதுவே இரட்டைவழக்கு ( Diglossia) என்று அழைக்கப்படுகிறது. இது இரு வழக்கு (Bilingualism) இல்லை. இருவழக்குகள் என்றால் எந்த வழக்கைப் பயன்படுத்துவது என்பது தனியார் விருப்பம். ஆனால் இரட்டைவழக்குமொழியில் இந்தச் செயல்பாட்டுக்கு எழுத்துத்தமிழ், இந்தச் செயல்பாட்டுக்குப் பேச்சுத்தமிழ் என்பதைத் தனிநபர் தீர்மானிக்கமுடியாது. தமிழ்ச் சமுதாயமே தீர்மானிக்கிறது.
எனவே பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டுமே தமிழர்களின் தாய்மொழிதான். ஒன்று மதிப்புடையது, மற்றொன்று மதிப்பில்லாதது என்று கருதுவது சரியில்லை. பேச்சுத்தமிழ் என்பது பிறந்த தமிழ்க்குழந்தை இயல்பாகப் பெற்றுக்கொள்வது; எழுத்துத்தமிழ் என்பது முறைசார் கல்வி அல்லது பயிற்சி மூலம் பெற்றுக்கொள்வது. பேச்சுத்தமிழ் இல்லாத தமிழர் இருக்கமுடியாது. ஆனால் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்ளாத தமிழர்கள் இருக்கலாம். இதனால் பேச்சுத்தமிழ் உயர்ந்தது என்று கூறுவது தவறு.
மேலும் இரண்டு தமிழுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே. சொல் அல்லது விகுதிகளின் பேச்சொலி வடிவங்களே வேறுபட்டு அமைகின்றன. அந்த மாறுபாடுகளுக்கும் தெளிவான விதிகள் உண்டு. எனவேதான் எழுத்துத்தமிழை முறைசார்க் கல்விமூலம் கற்றுக்கொள்ளாத ஒரு தமிழரால் இதழ்களில் அல்லது மேடைகளில் பயன்படுத்தப்படுகிற எழுத்துத்தமிழைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவரால் எழுத்துத்தமிழைப் பயன்படுத்தமுடியாமல் இருக்கலாம். ஆனால் புரிந்துகொள்ளமுடியும்.
எனவே , 'தமிழ்மொழி' என்று கூறும்போது எழுத்துத்தமிழ், பேச்சுத்தமிழ் இரண்டுமே அடங்கும். ஒன்றைவிட்டுவிட்டு, மற்றொன்றைமட்டும் தமிழ் என்று கூறுவது சரியில்லை. இரட்டைக்குழந்தைகளில் ஒரு குழந்தையைப் பாராட்டி, மற்றொரு குழந்தையைத் தாழ்வாகப் பார்ப்பது சரியில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக