செவ்வாய், 22 ஏப்ரல், 2025

செய்யறிவுத் திறன் மென்பொருளுக்கு அடிப்படையான பெரிய மொழி மாதிரியும் தமிழ்மொழியும் . . .

 

செய்யறிவுத் திறன் மென்பொருளுக்கு அடிப்படையான பெரிய மொழி மாதிரியும் தமிழ்மொழியும் . . .

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜிபிடி, ஜெம்னி, கிளாட், லாமா போன்ற பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models - LLM) இன்று செய்யறிவுத்திறன் மென்பொருள்களுக்கு (Artificial Intelligence - AI ) அடிப்படையான மொழித்திறன் மென்பொருள்கள் ஆகும். நூற்றுக்கணக்கான இயற்கைமொழிகளுக்கு இவை பயன்படுகின்றன.

 

தமிழ்மொழிக்கும் மேற்குறிப்பிட்ட பெரிய மொழி மாதிரிகள் நன்கு பயன்படுகின்றன. ஆனால் பிற ஐரோப்பிய மொழிகளுக்கோ சீனமொழிக்கோ அவை மிகத் திறமையாகப் பயன்படுவதுபோல் . . . தமிழுக்கு முழுமையாகப் பயன்பட மேலும் பல பணிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. மேலே குறிப்பிட்ட பெரிய மொழிமாதிரிகள் எல்லாம் கோடியே கோடி மொழித்தரவுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை; பயிற்றுவிக்கப்பட்டவை (Pre-trained models). கோடியே கோடி டாலர்களை முதலீடு செய்து உருவாக்கப்பட்டவை!

 

மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு மொழிசார்ந்த பணிகளுக்கு மேற்கூறிய மென்பொருள்கள் பயன்படுகின்றன. கட்டணம் இல்லாமல் ஒருவர் பயன்படுத்தவேண்டுமென்றால் , ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொற்கள் அடங்கிய உரைகளையே எழுதவோ, மாற்றவோ, பதிப்பிக்கவோ முடியும். ஓரளவுக்குமேல் பயன்படுத்த நாம் அதற்கு மாதாமாதம் 20-25 அமெரிக்க டாலர்வரை கட்டணம் செலுத்தவேண்டும். மேலும் சில குறிப்பிட்ட மொழிசார்ப் பணிகளை மேற்கொள்ள நிறுவனங்கள் தனியே அதற்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதுபோன்று தனிநபர்கள் கட்டணம் செலுத்துவது கடினம். நமது கண்முன்னே இதுபோன்ற மிகச் சிறப்பான மென்பொருள்கள் இருந்தாலும், கட்டணப் பிரச்சினையால் தனிநபர்கள் செய்யறிவுத்திறன் மென்பொருள்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது.

 

காசு . . . காசுதான். உலகில் சுமார் 10, 15 பன்னாட்டு நிறுவனங்கள் - மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், பேஸ்புக் போன்றவற்றின் உருவாக்கங்களே இவை. இவை அனைத்தும் வணிக மாதிரிகளே (Business Models) !

 

குப்பனும் சுப்பனும் இந்த வணிக மாதிரிகளை முழுமையாகப் பயன்படுத்தமுடியாது! மாறாக, இங்குள்ள பெரிய வணிக நிறுவனங்கள் பணம் செலுத்திப் பயன்படுத்தலாம். அல்லது தங்களுக்குக் கீழே உள்ள நுகர்வோர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு - அதாவது வணிக மாதிரிகளாக மாற்றி - அவர்கள் பயன்படுத்துவதற்கு உதவலாம். மேலும் அவை 'பன்னாட்டு நிறுவனங்களின்' தரகர்களாகவே செயல்படமுடியும்! 

 

மேலும் தமிழ்மொழிக்குத் தேவையான அத்தனை மொழிச்செயல்பாடுகளையும் மேற்கொள்வதற்கு இந்த பெரிய மொழி மாதிரிகள் தற்போதைய நிலையில் உதவுவது இல்லை! இதற்கு இரண்டு காரணங்கள் . . . ஒன்று தமிழில் மின்னிலக்கத் தரவுகள் (Digital Data) போதுமானதாக இல்லை! மற்றொன்று தமிழுக்குச் 'சந்தை மதிப்பு (Market Value) ' இல்லை! எனவே பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது தமிழ்மொழிக்குத் தங்கள் ''காசை'' செலவழிக்கமாட்டார்கள்!

 

அப்படியென்றால் என்ன செய்வது? மேற்கூறிய பயிற்றுவிக்கப்பட்ட பெரிய மொழி மாதிரிகளை மேலும் நுட்பமாகப் (Fine-tuning) பயிற்றுவிக்கவேண்டும். அவற்றின் மொழித்திறனைத் தமிழுக்குத் தேவையான அளவுக்குப் பயன்படுத்த மேம்படுத்தவேண்டும்.

 

சரி . . . நாம் கடுமையாக முயற்சிசெய்து, தேவையான மொழித்தரவுகளைச் சேகரிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இருக்கிற ஏதாவது ஒரு பெரிய மொழி மாதிரியைத் தேர்ந்தெடுத்து, அதை மேம்படுத்தவேண்டும். இவற்றில் பேஸ்புக்கின் 'லாமா' மட்டுமே கட்டற்ற மென்பொருள். மற்றவை அவ்வாறு கிடையாது! ஜிபிடி -யைப் பயன்படுத்த வேண்டும் என்றால் . . . இவ்வளவு சொற்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று அது நிர்ணயித்துள்ளது. மேலும் அவ்வாறு மேம்படுத்தியபிறகும் . . . நடைமுறைப் பயன்பாட்டிலும் இவ்வளவு சொற்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று அது காசு வசூலிக்கும்!

 

'லாமா'-வை மேம்படுத்தவேண்டுமென்றாலும், அந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, தமிழ்மொழித்தரவுகளின் உதவியுடன் மேம்படுத்த பெரிய அளவிலான கணினிக் கட்டமைப்பு வசதி வேண்டும்! இலட்சக்கணக்கில் பணம் தேவை! அல்லது அமேசான் போன்ற நிறுவனங்களின் கணினியைக் குறிப்பிட்ட நேரத்திற்கு 'வாடகைக்கு' எடுத்துப் பயன்படுத்தலாம். அதற்கும் பணம் தேவை!

 

தமிழகத்தின் பெரிய வணிக நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம். ஆனால் வணிக நோக்கில் பயன் உண்டா என்றுதான் அவை சிந்திக்கும்! 'வணிக மாதிரிகளைத்தான்' அவை முன்வைக்கும்!

 

இன்று உலகில் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் செயற்கை அறிவுத்திறனை லாப நோக்கில் பயன்படுத்த முனைகின்றன. ஆனால் ஒரு சாதாரணக் குடிமகனால் அவ்வாறு செய்யமுடியாது. பெரிய அரண்மனையைக் கண்டு, பெருமூச்சு விடுவதுபோல, இந்த மென்பொருள்களையும் கண்டு, பெருமூச்சு விடவேண்டியதுதான்! இவற்றின் திறனைத் தமிழுக்காக மேலும் வளர்க்கவோ, அல்லது பயன்படுத்தவோ . . . பணம் . . . பணம் . . . டாலர்களில் தேவை!

 

தமிழகத்தில் பெரிய மொழி மாதிரியின் தொழில்நுட்பத்திறனைத் தெரிந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அதில் ஐயமே இல்லை! ஆனால் . . . பணம்?

 

இன்றைய செய்யறிவுத்திறன் மென்பொருள் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தி, தமிழ் மக்களுக்காகவோ தமிழ் வளர்ச்சிக்காகவோ செயல்பட . . . இன்று நம்மால் முடியுமா? அல்லது அந்தப் பன்னாட்டு நிறுவனங்களையே எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டுமா?

 

ஆனால் ஒன்று உறுதி . . . தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர் கடைகளின் வணிகத்தை . . . அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றியதுபோல . . . சிற்றுந்து, ஓட்டல் சாப்பாடு சேவை போன்றவற்றை பன்னாட்டு நிறுனவங்கள் கைப்பற்றியதுபோல . . . இனி தமிழுக்கான கணினிவழிச் சேவைகளையும் மென்பொருள் உருவாக்கத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே கைப்பற்றும்! வேறு வகையிலான காலனியமே நீடிக்கும்!

 

எந்தவொரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாம் ஆதரிக்கவேண்டும்! அதில் ஐயம் இல்லை! ஆனால் அந்த வளர்ச்சியை அனைவரும் பயன்படுத்தி . . . உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்றும் தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அது அமையவேண்டும்! தற்போதைய செய்யறிவுத்திறன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி . . . பன்னாட்டு நிறுவனங்களின் காலனிய ஆதிக்கத்தையே கொண்டு வந்து சேர்க்கிறது!

எனவே, செய்யறிவுத்திறன் மென்பொருள்களின் வளர்ச்சியை . . . அரசியல் பொருளாதாரத்தோடு இணைத்துப் பார்க்கவேண்டும்! இது வெறும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை! பன்னாட்டு நிறுவனங்களின் புதியதொரு காலனிய ஆதிக்கம்!

 

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் தேவை! அதேவேளையில் பன்னாட்டு நிறுவனங்களின் காலனிய விரிவாக்கமும் கூடாது!

 

சனி, 22 மார்ச், 2025

தமிழும் ஆங்கிலமும் . . .

 தமிழும் ஆங்கிலமும் . . .

------------------------------------------------
நான் ஒரு மொழியியல் மாணவன்; ஒரு தமிழ் ஆசிரியரும்கூட.
ஐம்பது ஆண்டுகளுக்குமேலாக மொழியியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறேன்! மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு கோட்பாடுகளை விளக்குவதற்கு மொழியியல் அறிஞர்கள் எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் அடிப்படையாகக்கொண்டு தங்கள் ஆய்வுகளை முன்வைக்கமாட்டார்கள். எந்தவொரு மொழியையும் மற்ற மொழிகளைவிடச் சிறப்பான மொழி, உயர்வான மொழி என்று கொள்ளமாட்டார்கள். அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும்!
மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு மொழிகளைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கும். ஒரு கோட்பாட்டை விளக்குவதற்குப் பல மொழிகளை முன்வைத்துக் கருத்து தெரிவிப்பார்கள். எடுத்துக்காட்டாக, முதுபெரும் மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடானது நூற்றுக்கணக்கான மொழிகளுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு முதன்முதலாகப் பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் அவர்கள் அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பேரா. ஹவுஸ்கோல்டர் வழிகாட்டுதலில் முதன்முதலாக மாற்றிலக்கணத்தைத் தமிழ்மொழிக்குச் செயல்படுத்தி, தமிழின் நுட்பங்களை அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கி, (இரண்டாவது) முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையைத் தோற்றுவித்து, மொழியியல் ஆய்வுக்கு வழிகாட்டியவர் பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள். அவர்தான் முதன்முதலாகத் தமிழ்மொழியின் வரலாற்றுச் சிறப்புப்பற்றி அமெரிக்காவின் இந்தியானப் பல்கலைக்கழகத்தில் 1965-இல் உரை நிகழ்த்தினார். பேரா. இ. அண்ணாமலை அவர்கள், பேரா. கு. பரமசிவம் அவர்கள் அமெரிக்காவில் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருபதுக்குமேற்பட்ட மாணவர்கள் (வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள்) அங்குள்ள பேராசிரியர்கள் வழிகாட்டுதலில் மாற்றிலக்கணக் கோட்பாட்டில் ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்களில் சிலர் - பேரா. பொற்கோ, பேரா. இரா. கோதண்டராமன், பேரா. செம்மொழி ராமசாமி. டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பேரா. அரங்கன் அவர்கள். பூனாப் பல்கலைக்கழகத்தில் பேரா. சண்முகம் அவர்கள், திராவிட மொழி ஒப்பாய்வில் இந்தியாவின் தலைசிறந்த மொழியியல் பேராசிரியர் பி.எஸ். சுப்பிரமணியம் அவர்கள் (தெலுங்கு) பேரா, குசலப்ப கவுடா (கன்னடம்) , வழிகாட்டுதலில் பலர் திராவிட மொழி ஒப்பாய்வுகளை மேற்கொண்டார்கள். பேரா. குமாராசாமி ராஜா அவர்கள், பேரா. செ.வை. சண்முகம், பேராசிரியர் பிரபாகர வாரியார் (மலையாளம்), பேரா. க. முருகையன், பேரா. க. பாலசுப்பிரமணியன், பேரா. காமாட்சிநாதன், பேராசிரியர் எம்.எஸ். திருமலை, பேரா. சு. இராசாராம், பேரா, கருணாகரன், பேரா. சீனிவாச வர்மா, பேரா. வ. ஞானசுந்தரம், போன்றோர் வழிகாட்டுதலில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டுதலில் (கேரளப் பல்கலைக்கழகத்தில்) பேரா , அகத்தியலிங்கம், பேரா. இராம. சுந்தரம், பேரா. தாமோதரன், பேரா. பா.ரா. சுப்பிரமணியன் போன்றோர் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மதுரையில் பேரா. முத்துச்சண்முகம், பேரா. இஸ்ரேல், பேரா. விஜயவேணுகோபால், பேரா. நீதிவாணன் போன்றோர் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு வழிகாட்டினர். இப்பட்டியலில் சிலர் விடுபட்டிருக்கலாம்.
இவ்வளவு பேராசிரியர்களையும் நான் மேலே குறிப்பிட்டதின் காரணம் . . . உலகின் பல்வேறு மொழிகளைப்பற்றிய உலக அளவிலான மொழியியல் ஆய்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடவே.
மேலும் இவர்கள் எல்லோரும் தமிழ்மொழி தாண்டி, உலகின் பிறமொழிகளின் மொழியியல் கூறுகளையும் தெரிந்தவர்கள்.
மேற்குறிப்பிட்டவர்களோடு அயல்நாட்டு மொழியியல் பேராசிரியர்கள் எமனோ, பரோவ், ஆஷர், ஆன்ட்ரனோவ், ஜார்ஜ் ஹார்ட், ஜப்பானியப் பேராசிரியர் ஓனோ, ஹெரால்ட் ஷிப்மேன் . . . பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். பேராசிரியர்கள் இரா.பி, சேது, பேரா. வையாபுரி, மு. வ., பேரா. வ. சுப. மாணிக்கம் , பேரா. இலக்குவனார், பேரா. சோ.ந. கந்தசாமி போன்றவர்கள் - தமிழைத்தாண்டி பிறமொழிகளிலும் அறிவுத்திறன் மிக்கவர்கள்; இவர்களும் தமிழின் சிறப்பை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
உலக அளவில் எந்தவொரு மொழியியல் ஆய்வாளரும் எந்தவொரு ஆய்விலும் ஒரு மொழியைவிட இன்னொரு மொழி அமைப்பில் - இலக்கணத்தில் - சிறப்புடையது என்று கூறவில்லை. ஏனெனில் அது உண்மையும் இல்லை! எல்லா மொழிகளும் மனித மூளையில் தோன்றி நிலவுகிற மொழிகளே. மனிதமொழியின் அமைப்பும் செயல்பாடும் அனைவருக்கும் ஒன்றே.
இலத்தீன், கிரேக்கம், தமிழ் போன்ற மொழிகள் நீண்ட வரலாறு உடையவை. அவ்வளவுதான். அதனாலேயே இவை மற்ற மொழிகளைவிட உயர்ந்தது என்பது கிடையாது. அந்தந்த மொழிச்சமுதாயத்தின் தேவைகளை அந்தந்த மொழிகள் நிறைவேற்றுகின்றன.
ஆங்கிலமும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்றுதான். அதன் அமைப்பானது - இலக்கணமானது - பிறமொழிகளைவிடச் சிறந்தது என்று கூறுவதற்கு எவ்வித மொழியியல் சான்றும் கிடையாது. மேலும் கூறப்போனால், ஒரு இளைய மொழி. இன்றைய ஆங்கிலம் 15, 16 ஆவது நூற்றாண்டில் வளர்ந்த ஒரு மொழிதான்.
இவ்வாறு மொழியியல் உண்மைகள் இருக்கும்போது, தமிழ்நாட்டில் கல்விக்குப் பயிற்றுமொழியாக ஏன் ஆங்கிலம் நீடிக்கிறது? தமிழ் ஏன் நீடிக்கவில்லை? மொழி அமைப்பில் - இலக்கணத்தில் - குறைபாடுகள் உண்டா? கிடையாது. கிடையவே கிடையாது.
கல்வியில் மட்டுமல்ல, தமிழகத்தில் பொருள் உற்பத்தி, வணிகம், வழிபாடு, நிர்வாகம் என்று பல துறைகளிலும் ஆங்கிலம் ஆதிக்கம் நீடிப்பதற்கு என்ன காரணம்? ஆறு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சிசெய்த ஆங்கிலேய ஏகாதிபத்தியமே காரணம்! அதன் விளைவாக, இன்றும்கூட ... நாடு அவர்களின் நேரடி ஆட்சியிலிருந்து விடுபட்டபிறகும்கூட . . ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது! இந்த அரசியல், பொருளாதார ஆதிக்கமே ஆங்கிலத்தைத் தமிழ்நாட்டில் அரியாசனத்தில் உட்கார வைத்துள்ளது.
ஆங்கிலத்தால் மேற்கொள்கிற எந்தவொரு மொழிச்செயல்பாட்டையும் தமிழால் மேற்கொள்ளமுடியும். ஆனால் தமிழை இங்கு ஆங்கிலத்திற்கு அடிமையான ஒரு மொழியாக வைத்திருக்கிறோம். இதுதான் உண்மை. ஆங்கிலமொழியின் திறமை காரணம் இல்லை அதற்கு! அதனது நேரடியான, மறைமுகமான அரசியல், பொருளாதார ஆதிக்கமே காரணம்!
எனவே, தமிழால் இன்றே பயிற்றுமொழியாக ஆகமுடியுமா என்று ஐயப்படுவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை! நான் ஆங்கிலத்திற்கோ, இந்திக்கோ, அல்லது எந்தவொரு அயல்மொழிக்கோ எதிரானவன் கிடையாது! அந்தந்த தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழிகளைப் பயன்படுத்தவேண்டும் என்ற ஒரு ஜனநாயக , தேசிய இன உரிமையின் அடிப்படையில்தான் கூறுகிறேன்.
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் மொழியியல் மாணவன் என்ற முறையிலும் . . . தமிழ்நாட்டில் தமிழே பயிற்றுமொழி உட்பட அனைத்துத் துறைகளிலும் நீடிக்கவேண்டும் என்று கூறுகிறேன். அறிவியல் அடிப்படையில்லாத உணர்ச்சியால் சொல்லவில்லை! ஆதாரங்களுடன்தான் - மொழியியல் ஆதாரங்களுடன்தான் - சொல்கிறேன்.

ஆட்சிமொழி, பயிற்றுமொழி தொடர்பாக . . .

 ஆட்சிமொழி, பயிற்றுமொழி தொடர்பாக . . .

-----------------------------------------------------------------------
இந்தியாவின் ஆட்சிமொழி இந்திமொழிதான் என்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே உறுதியாக இருக்கின்றன.
ஆனால் இதுபற்றி அவற்றுடன் கூட்டணிகள் அமைக்கும் கட்சிகள் பேசுவதில்லை. ஒரு முன்நிபந்தனையாக இதை வைக்கலாம். ஆனால் வைப்பது கிடையாது. அவர்களைப்பொறுத்தமட்டில் தேர்தல் கூட்டணி என்பது வேறு! கொள்கை, திட்டம் என்பது வேறு. தேர்தல் வெற்றியே முதன்மையானது.
ஆனால் மொழிதொடர்பான கொள்கையில் மாற்றம் சாத்தியமில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்திபேசாத மக்கள் சிறுபான்மையாக இருந்தாலும்கூட, எல்லோருக்குமான இந்தியக் குடியரசில் அனைத்துமொழிகளுக்கும் சம உரிமை அளிக்கவேண்டும்.
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதிதானே! அதன் மொழி தமிழ்தானே! அதற்கு ஏன் இந்திமொழிக்கு அளிக்கப்பட்டுள்ள ஆட்சிமொழி தகுதி அளிக்கக்கூடாது? எது ஒன்றிலும் , சிறுபான்மை, பெரும்பான்மை அடிப்படையில் பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு குடியரசு முடிவு எடுக்கக்கூடாது!
தமிழ்நாட்டுக்குள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழி என்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இங்குள்ள மாநில அரசுதான் பொறுப்பு. பிறமொழிகளை மாணவர்கள் தங்கள் விருப்பம், தேவை அடிப்படையில் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கவேண்டியதும் மாநில அரசுகளின் பொறுப்புதான்! ஆங்கிலம் உட்பட எந்த ஒரு அந்நிய மொழியையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது என்று நான் கூறவில்லை.
ஆனால் . . . இந்திய அரசியல் சட்டத்தில் தமிழ்மொழியும் ஒரு ஆட்சிமொழியாக இடம்பெறவேண்டும். தாய்மொழி தமிழ்தவிர, பிற மொழிகளை எந்த ஒரு வடிவத்திலும் (இருமொழிக்கொள்கையோ, மும்மொழிக்கொள்கையே) தமிழ்நாட்டில் மேலிருந்து திணிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் கல்வியில் அனைத்து நிலைகளிலும் தமிழே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். சாத்தியம் இல்லை என்று கூறுவது எல்லாம் வெறும் ஏமாற்றும் வேலையே!
மொழிக்கொள்கையில் இரண்டு கூறுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(1) தேசிய இனங்களின் உரிமை என்னும் அடிப்படையில் தமிழ்மொழியும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
(2) தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்வியை அனைத்து நிலைகளிலும் பெறுவதற்கு உரிமை உண்டு. அறிவியல் அடிப்படையிலும் இதுவே சரி!

தொழிற்பெயர் பற்றி . . . தமிழ்மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வைக்கு

 

தொழிற்பெயர் பற்றி . . . தமிழ்மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வைக்கு . . -----------------------------------------------------------------------------------------------------

'நடை' என்பது தொழிற்பெயரா , முழுப்பெயரா என்ற வினாவுக்கு விடை தர முயன்ற வேறு ஒரு பதிவில் நான் மேற்கோள் காட்டிய மூன்று மொழியியல் பேராசிரியர்களின் கருத்துகள் . . .

தமிழ் மாணவர்களுக்குப் பயன்படலாம் என்பதால் அதை இங்குத் தனியாகவும் பதிவிடுகிறேன்.

மொழியியல் பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், பொற்கோ , கு. பரமசிவம் மூவரும் இதுபற்றித் தெளிவாக எழுதியுள்ளார்கள்.

பேரா. அகத்தியலிங்கம் அவர்கள் வினையிலிருந்து பிறக்கும் மூவகைப்பெயர்களைக் குறிப்பிடுகிறார். (1) ஆக்கப்பெயர் ( முழுமையாகப் பெயர்த்தன்மை கொண்ட சொற்களாக மாறியவை - 'ஆக்கம்' , 'அழிவு', 'வாழ்க்கை' ), (2) காலம்காட்டாத்தொழிற்பெயர் ( வினைத்தன்மையும் பெயர்த்தன்மையும் உடைய சொற்கள் - ' வருதல்', 'ஓடுதல்' ,'பேசுதல்') , (3) காலம்காட்டும் தொழிற்பெயர் ( வினைத்தன்மையும் பெயர்த்தன்மையும் உடைய சொற்கள் - ' வந்தது', 'செல்வது', 'பேசுகிறது') என்று வகைப்படுத்தியுள்ளார். ('தமிழ்மொழி அமைப்பியல்' பேரா. அகத்தியலிங்கம் பக்கம் 229-230)

பேரா. பொற்கோ அவர்கள் 'வினைநடைப்பெயர்' என்று ஒரு வகையைக் குறிப்பிட்டு, அதில் (1) வினையிலிருந்து பிறந்தாலும் முழுமையாகப் பெயர்களாக ஆனவை (பேரா. அகத்தியலிங்கம் கூறியுள்ள ஆக்கப்பெயர்கள்) , (2) வினைத்தன்மையிலிருந்து முழுமையாக விடுபடாத தொழிற்பெயர்கள். அவற்றில் ஒருவகை காலம் காட்டாத் தொழிற்பெயர்; (3) மற்றொன்று காலம் காட்டும் தொழிற்பெயர். (;இக்காலத் தமிழிலக்கணம்' பேரா. பொற்கோ , பக்கம் 94)

பேரா. கு. பரமசிவம் அவர்கள் நான்கு வகைப்படுத்துகிறார்: (1) -அம், -சி, -பு விகுதிகள் உடைய 'ஆட்டம்', 'ஆராய்ச்சி', 'தேய்ப்பு - முழுக்க முழுக்கப் பெயர்ச்சொற்களாகவே அமைபவை (2) -தல் விகுதி பெற்ற 'வருதல்' , 'போதல்', 'பேசுதல்' -முழுக்க முழுக்கத் தொழிற்பெயர்கள் (3) -அல், -கை விகுதி பெற்றவை - 'ஆடல்' , 'நடக்கல்', ;ஆடுகை', 'பாடுகை', 'நடக்கை' - பாதி தொழிற்பெயராகவும் பாதி பெயர்ச்சொல்லாகவும் அமைபவை. (4) அத்தோடு இக்காலத் தமிழில் காலம் காட்டுகிற 'செய்தது', 'செய்வது', 'செய்கிறது' போன்ற தொழிற்பெயர்கள். ('இக்காலத் தமிழ் மரபு' பேரா. கு. பரமசிவம், பக்கம் 102-108).

--------------------------------------------------------------------

'மாடு வந்தது' - 'வந்தது' வினைமுற்று.

'வந்தது எது? - 'வந்தது' வினையாலணையும் பெயர்

'அவர் வந்தது எனக்கு மகிழ்ச்சி' - 'வந்தது' தொழிற்பெயர்.

மூன்றிலும் 'வந்தது' வருகிறது. ஆனால் அவை வேறு வேறு இலக்கணவகை.

'அது' வினைமுற்றில் திணை-எண்-பால் விகுதி.

'அது' தொழிற்பெயரில் தொழிற்பெயர் விகுதி.

'அது' வினையாலணையும்பெயரில் எண்-பால் விகுதி.

தமிழில் காலம் காட்டாத் தொழிற்பெயர் - 'வருதல்' 'போதல்' 'வருகை'

காலம் காட்டும் தொழிற்பெயர் - 'வந்தது' 'பேசியது' 'சென்றது'

வினையாலணையும்பெயரும் காலம் காட்டும். - 'வருகிறவன்' 'வந்தவன்' 'வருபவன்'

'மாடு வந்தது' - 'வந்தது' வினைமுற்று.

'வந்தது எது? - 'வந்தது' வினையாலணையும் பெயர்

'அவர் வந்தது எனக்கு மகிழ்ச்சி' - 'வந்தது' தொழிற்பெயர்.

மூன்றிலும் 'வந்தது' வருகிறது. ஆனால் அவை வேறு வேறு இலக்கணவகை.

'அது' வினைமுற்றில் திணை-எண்-பால் விகுதி.

'அது' தொழிற்பெயரில் தொழிற்பெயர் விகுதி.

'அது' வினையாலணையும்பெயரில் எண்-பால் விகுதி.

தமிழில் காலம் காட்டாத் தொழிற்பெயர் - 'வருதல்' 'போதல்' 'வருகை'

காலம் காட்டும் தொழிற்பெயர் - 'வந்தது' 'பேசியது' 'சென்றது'

வினையாலணையும்பெயரும் காலம் காட்டும். - 'வருகிறவன்' 'வந்தவன்' 'வருபவன்'

 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India