வெள்ளி, 5 ஜூன், 2020

பேராசிரியர் ஏ ஆர்ஏ சிவகுமரன்

பேராசிரியர் ஏ ஆர்ஏ சிவகுமரன் … நான் தொடங்கியுள்ள தமிழறிஞர் தொடர் வரிசையில் இவர் நான்காவது தலைமுறையில் வருகிறார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் ( Nanyang Terchnology University - NTU ) சார்ந்த தேசியக் கல்விக் கழகத்தில் ( National Institute of Education – NIE) தமிழ்த்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திவருகிறார். தமிழகத்தைச் சார்ந்தவர். தமிழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றவர். சிங்கப்பூரில் 1992 –க்கு முன்புவரை தமிழ்மொழியில் ஆய்வேட்டை எழுதி முனைவர் பட்டம் பெற இயலாத நிலை இருந்தது. இவரே நன்யாங் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தமிழ்மொழியில் ஆய்வேட்டை அளித்து முனைவர் பட்டம் பெற்றார். ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் (1965-1990) – ஒரு திறனாய்வு ‘ என்ற தலைப்பில் பேரா. சுப. திண்ணப்பன் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்கப்பூர் கல்விக் கழகத்தில் முதன்முதலில் வெளிநாட்டவர்களில் தமிழாசிரியர் பயிற்சிக்கு இவர்தான் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனியாகவும் வேறு பேராசிரியர்களோடு இணைந்தும் இதுவரை எட்டு தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். சில சிறுவர் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சிங்கப்பூர் தவிர மலேசியா, மொரிஷியஸ், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, இந்தோனேஷியா, தாய்லாந்து, கனடா, ரஷ்யா, லண்டன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளையும் முதன்மை உரைகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு தொடர்பான சிறப்புரைகள் ஆற்றியுள்ளார். இவரது கற்பித்தல் உத்திகளின் சிறப்பறிந்து, லண்டன் தமிழமைப்பு 500-க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களுக்குக் கற்பித்தல் உத்திகள் தொடர்பான பட்டறையை நடத்துவதற்கு 2014 ஆம் ஆண்டு இவரை அழைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியத் துறையில் 2013 – இல் வருகைதரு பேராசிரியராக அழைக்கப்பட்டார். சிங்கப்பூரில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறை மறு ஆய்வுக்குழுவில் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படும் தமிழ்மொழிப் பாடநூல்களின் மதியுரைஞராகவும் செயல்பட்டு வருகிறார். திரு லீ குவான் இயூ இருமொழி திட்டவேலை நிதிமதிப்பீட்டுக்குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றிவருகிறார். 2013 -இலிருந்து தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘நவீனத் தமிழாய்வு ‘ என்னும் ஆய்விதழின் பதிப்பாசிரியர் குழுவில் இருந்துவருகிறார். சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் அறங்காவலராகவும் இருந்துவருகிறார். சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் கழகம் இவருக்கு ‘தமிழர் திருநாள் விருது’ வழங்கியுள்ளது. இவர் பணிபுரியும் தேசியக் கல்விக்கழகமும் இவருக்கு ஐந்து முறை நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. நன்யாங் பல்கலைக்கழகமும் இவரது பணியைப் பாராட்டி, இருமுறை நீண்டகாலச் சேவை விருது வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரிந்தாலும் தமிழகத்தை மறக்காமல், பாண்டிச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இளங்கலையில் முதலாவதாக வரும் மூன்று மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தனது பெற்றோர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் சிறப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்திலும் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் தமிழுக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். தற்போது தரவுமொழியியல் ( Corpus Linguistics) அடிப்படையில் தமிழைக் கற்பிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழாய்வாளர் – தமிழ்ப் பேராசிரியர் - சிங்கப்பூரில் இவ்வாறு சிறந்த தமிழ்ப்பணிகளை மேற்கொண்டு வருவது பெருமையாக உள்ளது.


பேராசிரியர் மருதூர் அரங்கராசன்

தமிழ் இலக்கியம், இலக்கணம் இரண்டிலும் தேர்ச்சிபெற்ற ... சமூக உணர்வுடைய .. எனது இனிய நண்பர் பேரா, மருதூர் அரங்கராசன் அவர்களைப்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் இட்ட முகநூல் பதிவை மீள்பதிவு செய்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
பேராசிரியர் மருதூர் அரங்கராசன் ( 1952) … மிக அமைதியாக , ஆனால் மிக ஆழமாகத் தனது தமிழ் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முனைவர் இவர். பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவர். இவருடைய எம்.ஃபில் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘பொருள்கோள்’. முனைவர் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘தமிழில் வேற்றுமை மயக்கம்’. இந்த ஆய்வேடு நூலாக வெளிவந்தபோது, அதற்கு அணிந்துரை அளித்த பேரா. தமிழண்ணல் கூறுகிறார் : “மரபு தவறாத, மொழியியல் அறிவோடு ஆய்வை அணுகுதல் மிகுந்த சிறப்புக்குரியது; பிறர்க்கு வழிகாட்டத்தக்கது… பொற்கோவின் மாணவர் என்பதை இவர் நிலைநிறுத்துகிறார்”. இவருடைய மற்றோர் நூலான ‘ தமிழில் வேற்றுமைகள்’ என்ற நூலுக்கு ஆய்வுரை வழங்கிய பெரும்பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் கூறுகிறார் : “ வேற்றுமைபற்றி மரபு இலக்கண முறையிலும் மொழியியல் பார்வையிலும் மருதூரார் உற்று நோக்குகிறார்”. இவ்வாறு மரபிலக்கணத்தையும் மொழியியலையும் இணைத்து, தமிழ்மொழியை ஆய்கிற சிறந்த ஆய்வாளர்களில் மருதூரார் ஒருவர் என்பதில் ஐயமில்லை. தமிழ் வேற்றுமைகளைப்பற்றி ஒரு முழுமையான ஆய்வாக மேற்கூறிய இரண்டு நூல்களும் அமைந்துள்ளன. தொல்காப்பியரில் தொடங்கி, இன்றைய மொழியியலில் வேற்றுமை இலக்கணத்தைத் தெளிவுபடுத்திய சார்லஸ் ஃபில்மோர் வரை இவர் ஆய்வு விரிந்தமைந்துள்ளது. இவரது மற்றொரு சிறப்பான ஆய்வு நூல் ‘ யாப்பறிந்து பாப்புனைய …’. இந்நூல் யாப்பு அறிந்து மரபுக்கவிதை இயற்ற விரும்புவர்க்கும், யாப்பு அறிந்தபின் புதுக்கவிதை புனைய விரும்புவர்க்கும் உதவும். இந்நூலுக்குப் பேராசிரியர் தி.வே. கோபாலையரும் பேரா. இரா. சாரங்கபாணியும் அணிந்துரைகள் வழங்கியுள்ளதே இந்நூலின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கிறது. இந்நூலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு 2005-இல் வழங்கப்பட்டது. அடுத்து, இலக்கண வரலாறு என்ற வரிசையில் வெளிவந்த ‘பாட்டியல் நூல்கள்’ , ‘‘தமிழில் மரபுத் தொடர்கள்’ என்ற நூல்களெல்லாம் மருதூராரின் தமிழாய்வுத் திறனை வெளிக்காட்டி நிற்கிறது. மாணவர்களுக்குச் சந்தி இலக்கணத்தைக் கற்பிக்கும்போது, ‘சுமை’யாக ஏற்றாமல், ‘சுவை’யாகக் கற்றுக்கொடுக்கும்வகையில் இவர் ‘ தவறின்றித் தமிழ் எழுத’ என்ற நூலை எழுதியுள்ளதாகப் பேரா. ம.ரா.போ.குருசாமி அவர்களும் பேரா. தா.ம. வெள்ளைவாரணனார் அவர்களும் தங்களது அணிந்துரைகளில் கூறியுள்ளனர். ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற ஒரு கவிதை நூலையும் இவர் எழுதியுள்ளார். பள்ளியில் தமிழாசிரியாகப் பணியாற்றி, பின்னர் நெய்வேலி ஜவஹர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி, தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். இவரது இலக்கணப் புலமையை உணர்ந்த சிங்கை சிம் பல்கலைக்கழகம் ( SIM University) கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இவரைச் சிங்கைத் தமிழ் இளங்கலை மாணவர்களுக்குத் தமிழிலக்கணத்தைக் கற்றுக்கொடுக்க அழைத்துக்கொண்டிருக்கிறது. 1978 – 80 –களில் சென்னை உ.வே. சா. நூலகத்தில் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், பேரா. சா.வே.சுப்பிரமணியன், திரு. இராமன் போன்றோர்களுடன் இணைந்து, ஓலைச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் இலக்கணங்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியையும் மேற்கொண்டவர் இவர். ( தமிழிலக்கியம், மரபிலக்கணம், மொழியியல் ஆகியவற்றில் புலமைவாய்ந்த ) பேராசிரியர் பொற்கோவின் ஒரு சிறந்த மாணவர் என்பதை நிலைநாட்டியுள்ள முனைவர் மருதூர் அரங்கராசனை இங்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன்

இன்றைய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்... அவரைப்பற்றி 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் இட்ட முகநூல் பதிவு இது. // தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்த அவருடைய ஆய்வுத்திறனை அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் நேரடியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு விரைவில் ஏற்படும், ஏற்படவேண்டும் என நம்புகிறேன்.// தற்போது மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன் (1959) … இன்றைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியர். நான்கு மாநிலங்கள் ( ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம்) இணைந்து குப்பம் என்ற ஊரில் உருவாக்கியுள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழிகள் ஆய்வு மற்றும் கணினிமொழியியல் துறையின் இன்றைய பேராசிரியர் ... துறைத் தலைவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் முதுகலைப் பட்டமும் (1983) முனைவர் பட்டமும் (1989) பெற்றவர். (மறைந்த) மொழியியல் பேராசிரியர் ஜே. நீதிவாணன் அவர்களின் வழிகாட்டுதலில் “ A Survey of Methods for Teaching Tamil as other Tongue from Primary to Secondary School Level” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1987-89 இரண்டாண்டுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு, 1989 முதல் 2006 வரை கேரளா கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மலையாளத்துறையில் தமிழுக்கான மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் இன்றுவரை திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார். இடையில் இரண்டாண்டுகள் ( 2009-11) போலந்து வார்சாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 2011 –இல் பிராக் சார்லஸ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு மொழியியல் ஆய்வுத்திட்டத்திற்காக சென்றுள்ளார். அகராதியியல், மொழிவளர்ச்சித்திட்டம், சமூகமொழியியல், மொழிபெயர்ப்பியல் ஆகியவற்றில் பல சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். தமிழிலிருந்து மலையாளத்திற்கும் மலையாளத்திலிருந்து தமிழுக்கும் பல மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 2013 – இல் ஆந்திர அரசின் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றுள்ளார். பல முனைவர் பட்ட , எம்ஃபில் பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார். தேசிய அளவிலும் உலக அளவிலும் பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். தொடர்ந்து திராவிடமொழிகள், கணினிமொழியியல் , தமிழிலக்கணம் ஆகியவற்றில் சிறப்பான பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறார். தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்த அவருடைய ஆய்வுத்திறனை அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் நேரடியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு விரைவில் ஏற்படும், ஏற்படவேண்டும் என நம்புகிறேன்.

பேராசிரியர் தனிநாயகம் அடிகளார்

பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ( சேவியர் நிக்கல்ஸ் ஸ்ரனிசுலாசு) ( 1913- 1980) … தமிழ் பயிற்றல் , தமிழாய்வு, தமிழ் நிறுவனங்கள், தமிழிதழ்கள் , தமிழ் மற்றும் தமிழர் உரிமை காப்பு … என்று பல தளங்களில் தமிழ்ப்பணி ஆற்றிய பேராசிரியர். ஈழம் பெற்றெடுத்த பேராசிரியர். இலங்கையிலே பள்ளிக்கல்வியை மேற்கொண்டு, 1934-39 – இல் ரோமில் கிறித்தவப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்று, கிறித்தவக் குருமாராக ஆனார். 1940-45 –இல் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியப்பணியைத் தொடங்கினார். 1945-47 – இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும், தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆய்வு மேற்கொண்டு எம்.லிட்., பட்டமும் ( ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ – “ Nature in Ancient Tamil poetry” ) பெற்றார். 1950-51 – இல் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். பின்னர் 1952-55 –இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1955-57 – இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டுக் கல்வியியலில் முனைவர் பட்டம் ( “Ancient European and Indian Systems of Education compared with Special Reference to Ancient Tamil Education”) பெற்றார். அதே காலகட்டத்தில் ஆக்ஸ்போர்டு வதம் ( Wadham) கல்லூரியில் ஆங்கில இலக்கிய விமர்சனம்பற்றிய பயிற்சியைப் பெற்றார். 1957-61- இல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் 61-69 – இல் மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 69 –இல் அங்குப் பணி ஓய்வுபெற்று, சில ஆண்டுகள் பாரிஸ் மற்றும் வேறு சில அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் தனது தாய்மொழியாகிய தமிழ்தவிர, ஆங்கிலம், மலாய், சிங்களம் உட்பட 13 மொழிகளில் திறன் படைத்தவர் என்பது மிகவும் வியப்புக்குரியது. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய ஆய்வடங்கல் தேவை என்பது அவரது கருத்து. அவரே முன்நின்று அச்சில் ஏறிய தமிழ் நூல்களைப்பற்றிய விவரங்களை உள்ளடக்கிய “ A Reference Guide to Tamil Studies - Printed Books” என்பதை வெளியிட்டார். Tamil Studies Abroad” என்ற ஒரு தொகுதிக்குப் பதிப்பாளராக இருந்தார். “ Tamil Culture” என்ற ஒரு இதழை 1954-இல் தொடங்கி, 1967 வரை அதைப் பொறுப்பேற்று நடத்தினார். 1554 – இல் வெளிவந்த தமிழ் – போர்த்துகீசிஸ் அகராதியைத் தேடிக் கண்டுபிடித்து, அச்சிலேற்றினார். கிறித்தவத் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதற்கான தமிழ் இலக்கியக் கழகத்தை உருவாக்கினார். “ Journal of Tamil Studies “ என்ற ஒரு புதிய ஆய்விதழை 1969-இல் தொடங்கினார். அந்த இதழ் இன்றும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகிறது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் (“ International Association of Tamil Research – IATR) என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பைப் பல பேராசிரியர்கள் துணையுடன் 1964 – இல் தொடங்கினார். 1966 – இல் அதன் சார்பாக முதல் உலகத் தமிழ் மாநாட்டைக் கோலாலாம்பூரில் வெற்றிகரமாக நடத்தினார். பேராசிரியரது தமிழ் ஆராய்ச்சியின் சிறப்புபற்றிப் பேரா. செ. வை. சண்முகம் பின்வருமாறு கூறுகிறார் : ‘அவரது ஆய்வில் என்னைக் கவர்ந்தது அவருடைய சங்க இலக்கிய ஆய்வுகளே. அந்த ஆய்வுகளும் அதைப் பற்றிய வெளிநாடுகளில் செய்த சொற்பொழிவுகளுமே சங்க இலக்கியத்துக்கு உலக இலக்கியத் தகுதி கிடைக்க ஒரு காரணம்’ … ‘ தனிநாயக அடிகள் தமிழ் ஆய்வு இந்திய நிலையிலும் உலக நிலையிலும் பரவ முக்கிய காரணகர்த்தராகவும் இருந்தார். ஐரோப்பிய நூலகங்களில் இருந்த தமிழ் தொடர்பான நூல்களைக் கண்டு தெரிவித்ததன் மூலம் தமிழ் ஆய்வுக்குப் புதிய தரவுகளைத் தேடி தந்த பெருமைக்கு உரியவராகவும் அமைகிறார். அந்த ஆய்வு இன்றும் தொடர்ந்து தமிழுக்குப் புதிய தரவுகளைத் தந்துகொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது’. ஆய்வுகளோடு தன்னைக் குறுக்கிக்கொள்ளாத பேராசிரியர் இலங்கையில் தமிழ்மொழிக் காப்புக்காகப் போராடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற அங்குள்ள அரசின் கொள்கையை எதிர்த்துப் பல தளங்களில் பேராசிரியர் போராடியுள்ளார். தமிழ் வரலாற்றில் பேராசிரியர் தனிநாயகம் அடிகளாருக்குச் சிறப்பான இடம் உண்டு. பேராசிரியர்பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் மலர்களும் வெளிவந்துள்ளன. மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளங்களைப் பார்க்கவும். http://www.ulakaththamizh.org/JOTSpdf/018103113.pdf http://ta.wikipedia.org/s/70zhttp://keetru.com/index.php…


வெள்ளி, 29 மே, 2020

கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கண அறிவும் மொழியியல் அறிவும் தேவையா?

கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கண அறிவும் மொழியியல் அறிவும் தேவையா? ( தமிழ் , மொழியியல் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்களுக்கான பதிவு)
--------------------------------------------------------------------------------
இன்று இயற்கைமொழி ஆய்வு, கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பம் ஆகிய துறைகள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. கணினிக்கு மனித இயற்கைமொழிகளின் அறிவை அளித்து, அதனோடு நாம் நமது இயற்கைமொழிகளில் உரையாடலாமா? எழுத்துமூலம் உரையாடல், பேச்சுமூலம் உரையாடல் இரண்டிலும் நமது மொழிகளைப் பயன்படுத்தமுடியுமா? என்ற வினாக்கள் முன்வைக்கப்பட்டு, 'முடியும்' என்ற விடையும் தரப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கே விண்கலங்களை மிகத் துல்லியமாக நேரம், பிற இயற்கைவிசைகள் ஆகியவற்றைக் கணித்து அனுப்பும்போது, மொழியைக் கணினிக்குப் புரியவைக்கமுடியாதா? நிச்சம் முடியும் ! ஐயமே இல்லை!

வேறு கிரகங்களுக்கு ஏவுகணைகளையும் விண்கலங்களையும் அனுப்புவதற்கு ... பிரபஞ்சம்பற்றியும், அதில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றியும், அவற்றின் வெப்பம், குளிர் நிலைமைகள்பற்றியும் கிரகங்களின் ஈர்ப்பு விசைகள் பற்றியும் பூமியிலிருந்து அவை எவ்வளவு தொலைவில் ( ஒளி ஆண்டுகளில்) இருக்கின்றன என்பதுபற்றியும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு ... அந்த அறிவியல் அறிவின் அடிப்படையில்தான் பிற கிரகங்களுக்கு விண்கலங்களையோ அல்லது மனிதர்களையோ அனுப்பிவைக்கமுடியும். அவ்வாறு மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு அனுப்பும்போதும் எதிர்பாராத எதிர்மறை சக்திகளால் தோல்வியும் அடைகிறோம். இருப்பினும் அடுத்தடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இதுபோன்றதுதான் இயற்கைமொழி ஆய்வும் கணினிமொழியியலும் மொழித்தொழில்நுட்பமும்! நாம் உருவாக்கியுள்ள மின்னணுக் கருவியான கணினிக்கு .. நமது இயற்கைமொழி அறிவைக் கொடுக்கமுடியும்! அதோடு நமது மொழியில் உரையாடமுடியும்! ஐயம் இல்லை! இதற்கான முயற்சிதான் 1920 முதல் இன்றுவரை ... 100 ஆண்டுகளாக.. நடைபெற்று வருகிறது! தானியங்கு மொழிபெயர்ப்புப் பணியைக் கணினியைச் செய்யவைப்பதற்கான முயற்சிக்கு அடிப்படை .. உலக நாடுகளிடையே நடைபெற்ற போர்கள்தான். ஒரு நாடு தன் எதிரிநாட்டின் இரகசியங்களை ... அந்த நாட்டின் மொழியியில் எழுதப்பட்ட இரகசியங்களைப் புரிந்து கொள்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடிக்கணக்கான டாலர்கள் இந்த முயற்சிக்கு ஒதுக்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டில் அதுவரை நடைபெற்ற தானியங்குமொழிபெயர்ப்புப் பணிகள்பற்றி விரிவாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அது தனது அறிக்கையில் ( Automatic Language Processing Advisory Committee - ALPAC Report) இந்த முயற்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நிதி உதவியைப் பார்க்கும்போது.. அதற்கேற்ற வெற்றி கிடைக்கவில்லை என்று கூறியது. மனித மொழிகளின் நுட்பங்களைப்பற்றிய அறிவு மேலும் வளரும்போதுதான், இதுபோன்ற முயற்சிகள் வெற்றிபெறும் என்று கூறியது. இதன் விளைவாக தானியங்கு மொழிபெயர்ப்புக் கணினி உருவாக்கப்பணிகள் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தடைபட்டுநின்றன.
பின்னர் 1970-களில் பல பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் மீண்டும் இந்த முயற்சியில் தீவிரம் காட்டின. அதன் பயனாகவே இன்று கணினிமொழியியல் துறை முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
இருமுனைகளில் கணினிமொழியியல் இன்று வளர்ந்துவருகிறது. ஒரு முனை... இலக்கணம், மொழியியல்வழி ஆய்வு ( linguistic rule -based ). மறுமுனை புள்ளியியல் ஆய்வு (Statistical approach) , செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence), பெருந்தரவக உருவாக்கம் (Big Data Analysis), நரம்புவலைப்பின்னல் (Neural Network), கணினி தானே கற்றல் ( Machine Learning) ஆழ் அமைப்புசார் கற்றல்(Deep learning) போன்ற ஆய்வுமுறைகள். இன்றைக்குக் கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வியக்கத்தக்கவகையில் இருப்பதால்.. கணினியின் சேமிப்புத்திறன் ( Hard disk etc.,), நிரல்களைச் செயல்படுத்தும் நினைவகம் ( RAM) ஆகியவை இன்று இமாலய வளர்ச்சி பெற்றுள்ளதால் மேற்குறிப்பிட்ட இரண்டாவது முனைகளில் இயற்கைமொழி ஆய்வு நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
மேற்கூறியதில் .. இலக்கணம், மொழியியல் நோக்கில் இயற்கைமொழி ஆய்வில் இரண்டு பிரச்சினைகள்.. ஒன்று, குறிப்பிட்ட மொழிபற்றிய ஆழமான ஆய்வு. மனித மூளைக்கு எழுதப்பட்டுள்ள இலக்கணங்கள் கணினிக்குப் போதாது. மூளைக்கு உள்ள உலக அறிவு, பின்புல அறிவு கணினிக்குக் கிடையாது. எனவே எந்த ஒரு மொழிக்கூறையும் கணினிக்கு அளிக்கும்போது, மிக நுட்பமாக ஆய்ந்து அளிக்கவேண்டும். பலவற்றை மூளை தானே தெரிந்துகொள்வதுபோல, கணினியால் தெரிந்துகொள்ளமுடியாது. எனவே மிக நுட்பமாகக் குறிப்பிட்ட மொழிக்கு இலக்கணம் தேவை. இன்று தமிழ்மொழிக்கு ... இன்றைய எழுத்துத்தமிழுக்குக்கூட .. இது இல்லை என்பதே உண்மை. இதுபோன்ற இலக்கணங்களை உருவாக்குவதற்கு இலக்கண அறிவு, மொழியியல் அறிவு, மிகப்பெரிய தரவுகள் ஆகியவை தேவை. கணினிக்கேற்ற அகராதிகள் தேவை. மிக மிக நுட்பமான நிலைகளில் - எழுத்தியல், சொல்லியல், தொடரியல், பொருண்மையியல், சூழல்சார் பொருண்மையியல், கருத்தாடல் ஆய்வு - என்று பல நிலைகளில் குறிப்பிட்ட மொழிகளுக்கு ஆய்வுகள் தேவை. ஆனால் இந்த ஆய்வுகள் கடினமாக இருந்தாலும், பணி வெற்றிகரமாக முடிந்துவிட்டால்... இயற்கைமொழி ஆய்வு மிகச் சிறப்பாகவே அமையும்.
இரண்டாவது பிரச்சினை.. இதற்கு அதிகமான காலம், நிதி, கூட்டு உழைப்பு .. இவையெல்லாம் தேவை. அப்படியென்றால், மேற்குறிப்பிட்ட மொழியறிவையெல்லாம் கணினிக்குக் கொடுத்தால்தான், மொழித்தொழில் நுட்பக் கருவிகள் நமக்குக் கிடைக்குமா? இல்லை. நான் முன்னர் குறிப்பிட்ட மாற்றுவழிகளைப் பயன்படுத்தி, மொழியின் நுட்பங்களைக் கணினிக்குக் கற்றுக்கொடுக்கலாம். ஏராளமான தரவுகளைக் கொடுக்கலாம். மொழியின் ஒரு விதியைக் கற்றுக்கொடுப்பதற்கு, அந்த விதியை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான மொழித் தரவுகளைக் கொடுத்து, புள்ளியியல் அடிப்படையிலோ அல்லது நடைபெற்ற நிகழ்வுகளிலிருந்து புதிய நிகழ்வின் சாத்தியப்பாடுகளைக் கணினியே உணர்ந்துகொள்ள வைக்கலாம் (Probabilistic statistics) .... அதாவது கணினிக்கு நாம் கொடுக்கிற தரவுகளிலிருந்து, விதிகளை அது தானே கண்டறியப் பயிற்சி அளிக்கலாம். குறைபாடுகள் இருக்கலாம்... ஆனால் நுட்பமான மொழி அறிவு ஆய்வுக்குப் பதிலாகப் பிற அறிவியல் துறைகளை - நரம்பியல், புள்ளியியல், செயற்கை அறிவுத்திறன் ஆகிய துறைகளைப் - பயன்படுத்தியும் இயற்கைமொழி ஆய்வை மேற்கொள்ளலாம்.
ஆனால்... எவ்வளவுதான் நாம் இந்த இரண்டாவது முறையைப் பின்பற்றினாலும்... மனித மூளைக்கு உள்ள இயற்கைமொழி அறிவைக் கணினிக்குக் கொடுக்க இயலாது. மனித மூளை புதுப் புது வகைகளில் மொழித்தொடர்களை உருவாக்கக்கூடிய திறன் பெற்றது. ஆனால் அத்தனைக்கும் சில அடிப்படை மொழியியல் கொள்கைகளை அல்லது விதிகளையே பயன்படுத்தி மூளை செய்கிறது. மனித மூளையின் இந்த படைப்பாக்கக் கூறை உள்ளடக்கிய மொழித்திறனை... 100 விழுக்காடு சரியாகக் கொடுக்க இயலுமா? முடியாது என்பது மொழியியல் அறிஞர் சாம்ஸ்கியின் கருத்து. முடியும் என்பது கூகுள் நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவு இயக்குநர் பீட்டர் நார்விக் அவர்களின் கருத்து. பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் ஒன்றைமட்டும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்... பொதுவான (எண்களைக்கொண்ட) தரவுத்தளங்கள் வேறு... மொழித் தரவுத் தளம் வேறு. மொழித் தரவுகளை ஆய்வுசெய்வதற்கு அம்மொழிபற்றிய அறிவு தேவை. நுட்பமான அறிவு தேவை. இவ்விடத்தில் கணினிமொழியியல் பேராசிரியர் ( உலக அளவில் பல்கலைக்கழகங்களில் இத்துறையில் பாடநூலாகப் பயன்படுகிற " Speech And Language Processing" என்ற நூலை மார்ட்டின் என்பவருடன் இணைந்து எழுதியவர்) டேனியல் ஜுராப்ஸ்கி (Daniel Jurafsky ) கூறியுள்ள ஒரு கருத்து .. "What distinguishes language processing applications from other data processing systems is their use of knowledge of language. Consider the Unix wc program, which counts the total number of bytes, words, and lines in a text file. When used to count bytes and lines, wc is an ordinary data processing application. However, when it is used to count the words in a file, it requires knowledge about what it means to be a word and thus becomes a language processing system."
எனவே, தமிழ்க்கணினிமொழியியல் வளர்ச்சிக்குத் தேவை... மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் எந்தவொரு வழிமுறையைப் பின்பற்றி ஆய்வு மேற்கொண்டாலும்... தமிழ்மொழியின் ஆழ அகலங்களைப் பற்றிய மொழி அறிவு தேவை என்பதில் ஐயமில்லை! இங்குத்தான் தமிழ் இலக்கணம், மொழியியல் ஆய்வுமுறை ஆகியவற்றில் மிக நுட்பமான(micro- nano - levels) , மிக ஆழமான ( deep ) ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இவற்றையெல்லாம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல்... தமிழானது இன்றைய கணினி உலக அளவில் தனக்குரிய இடத்தைப் பெறமுடியாது. மின்னணுக் கருத்துப்புலப்படுத்தக் கருவிகளில் ஒரு மொழி இடம் பெறவில்லையென்றால்... அதனுடைய பயன்படுத்தம் மிகக் குறையும். அதன் விளைவு ?
Languages for which no adequate computer processing is being,developed, risk gradually losing their place in the global Information Society, or even disappearing, together with the cultures they embody, to the detriment of one of humanity's great assets: its cultural diversity - Antonio Zampolli,

வியாழன், 28 மே, 2020

பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழ்ப்பணி என்பது தமிழாய்வு, தமிழ்க்கல்வி என்பதோடுமட்டும் நின்றுவிடாமல்... தமிழ்மொழிக்கு எதிரான... தமிழினத்திற்கு எதிரான எந்த ஒரு ஆதிக்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி... அதனையும் எதிர்த்துநின்று செயல்பட வேண்டும் என்பதைத் தமிழாசிரியர்களுக்கு உணர்த்திய பெரும்பேராசிரியர்... தமிழ்ப்போராளி பேரா. சி. இலக்குவனார் அவர்கள். அவர்கள்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் மிகச் சுருக்கமாக பதிவுசெய்த ஒன்றை மீள்பதிவாக இன்று இடுவதில் பெருமையடைகிறேன்...

பேராசிரியர் சி. இலக்குவனார் (1909) … நாடறிந்த தமிழறிஞர். தமிழ்ப்பணி என்பது வெறும் ஆய்வுகள் மட்டுமல்ல, தமிழ்மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களைக் காப்பதும் அதில் அடங்கும் என்பதைத் தனது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டியவர். தமிழ்ப்பேராசிரியர்… தமிழ்ப்போராளி. இவருடைய பெற்றோர் இட்ட பெயர் ‘இலட்சுமணன்’ . இப்பெயரை ‘இலக்குவன்’ என்று மாற்றியமைத்தவர் அறிஞர் . சாமி சிதம்பரனார் ஆவார். பி ஓ எல் (1942) , எம் ஓ எல் ( 1946 – “Origin and Growth of Tamil Language” ), தமிழ் முதுகலை (1951) , முனைவர் பட்டம் (1963 – “Tholkappiyam in English with Critical Studies”) ஆகிய பட்டங்களைப் பெற்று, பல கல்வி நிலையங்களில் - நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி, நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி, விருதுநகர் கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திரா உஸ்மானியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பு உட்பட பல அரசியல்நிலைபாடுகளுக்காகப் பதவியிலிருந்து பலதடவை விலக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளானவர். ஆசிரியப்பணி, படைப்பிலக்கியப் பணி, தமிழ்ப்பாதுகாப்புப்பணி போன்ற பல்வேறு பணிகளுக்கிடையே அவர் குறிப்பிடத்தக்க தமிழ் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது உண்மையில் வியப்புக்குரியதே. தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தேவையான ஆய்வுக்கருத்துரைகளோடு ( அறிஞர் அண்ணாவின் முன்னுரையோடும்) அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. தமிழின் தோற்றம்பற்றியும் வரலாற்றின் ஊடே அதன் வளர்ச்சிபற்றியும் அவர் தெளிவான கருத்துகளைத் தனது எம் ஓ எல் பட்ட ஆய்வேட்டில் வெளிப்படுத்தியுள்ளார். மொழியியல் கண்ணோட்டத்துடன் தமிழின் ஒலியியல், தொடரியல், பொருண்மையியல், உரிச்சொற்கள், இடைச்சொற்கள்பற்றி அவர் தனித்தனியே நூல்கள் ( ஆங்கிலத்தில்) வெளியிட்டுள்ளார். இதன் பயனாகத் தமிழரல்லாதோரும் தமிழ்மொழியின் சிறப்புகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்துள்ளார். படைப்பிலக்கியம், தமிழிலக்கிய ஆராய்ச்சி, வரலாறு, பண்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றிலும் பேராசிரியர் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆங்கிலத்தில் 5 நூல்களும் தமிழில் 14 நூல்களும் இவர் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் (“Dravidian Federation” , Kuralneri” ) தமிழிலும் ( ‘குறள்நெறி’, ‘இலக்கியம்’ ) இதழ்களையும் நடத்திவந்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியும், பல்வேறு தமிழ்ச்சங்கங்கள், கழகங்களுக்குப் பொறுப்பேற்று நடத்தியும் உள்ளார். ‘பெரும்பேராசிரியர்’, ‘முதுபெரும் புலவர்’ உட்பட பல்வேறு சிறப்புப்பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. 1973 செப்டம்பர் 3 ஆம் தேதி ( அகவை 64) மறைந்தார். அவருடைய தமிழ்ப் பணிகளை இன்றும் தொடர்ந்து வருகின்றனர் அவரது மகன்கள் … பேராசிரியர் மறைமலை இலக்குவனார், திரு. திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர். மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும். http://ta.wikipedia.org/s/1amn

பேராசிரியர் . சோ. ந. கந்தசாமி

இலக்கியம், இலக்கணம், தத்துவம் என்று பலதுறை அறிவும் நிரம்பிய ஒரு பெரும்பேராசிரியர் முனைவர் சோ. ந. கந்தசாமி அவர்கள்... 84 வயதை எட்டினாலும், ஆய்வுத்துறையில் இன்றும் தளராமல் பணி செய்துகொண்டிருப்பவர். அவருடைய மாணவர்கள் பலர் இன்று உலகெங்கும் பரவியுள்ளார்கள், அவரைப்பற்றிய எனது 5 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவை மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன்.


பேராசிரியர் . சோ. ந. கந்தசாமி (அகவை 79)… Prof. SNK என்று தமிழுலகத்தில் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் . தமிழாய்வு உலகத்திற்குப் பெரிதும் அறிமுகமான தமிழ்ப்பேராசிரியர். தமிழிலக்கியம், மரபிலக்கணம், மொழியியல், தத்துவம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆங்கிலப் புலமையோடு இந்தி. சமஸ்கிருதம், பாலி ஆகியவற்றிலும் திறன் படைத்தவர். கல்வெட்டுத்தமிழிலும் சிறந்த பயிற்சியுடையவர். 1958 –இல் தமிழில் முதுகலைப் பட்டமும் 1963 – இல் ( ‘A Linguistic Study of Paripatal’ ) எம்.லிட், பட்டமும் 1971- இல் ( ‘Buddhism as Expressed in the Tamil Classics’) முனைவர் பட்டமும் பெற்றவர். பேராசிரியர்கள் அ. சிதம்பரநாதன், தெ.பொ.மீ. ஆகியவர்களிடம் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியவர். 1979 - 85 ஆம் ஆண்டுகளில் மலேசியா கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தில் பணியாற்றினார். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்திலும் முதுநிலை அறிஞராகப் பணியாற்றியுள்ளார். தத்துவத் துறையில் ஆழமான ஆய்வு மேற்கொண்டவர். ‘இந்தியத் தத்துவக் களஞ்சியம்’ என்ற தலைப்பில் மூன்று தொகுப்புகளையும் ‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்’ பற்றி மூன்று தொகுதிகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளார். மொழிபெயர்ப்பில் மிகத் திறன் வாய்ந்தவர். திருமந்திரத்தின் ஒரு தொகுதியையும் சுந்தரர் தேவாரத்தின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், தமிழிலக்கணச் செல்வம் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் வெளியிட்டுள்ளார். புத்தக விமர்சனத்தில் மிகத் திறன் படைத்தவர். கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் தமிழ்நூல்கள்பற்றிக் கருத்துரை வழங்கிவருகிறார். இவரது நூல்களுக்குத் தமிழக அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. அண்ணாமலைச்செட்டியார் விருதும் இவர் பெற்றுள்ளார். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பிய இருக்கையில் பணியாற்றிவருகிறார். இவரது நூல்கள் மற்றும் மேலதிக விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையத் தளங்களையும் நண்பர்கள் பார்க்கலாம்.
http://ta.wikipedia.org/s/57x http://muelangovan.blogspot.in/2008/08/15121936.html


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India