வியாழன், 11 ஜனவரி, 2024

எழுத்துத்தமிழ் இலக்கணமும் கணினித்தமிழ் இலக்கணமும் வேறுபட்டதா?

 எழுத்துத்தமிழ் இலக்கணமும் கணினித்தமிழ் இலக்கணமும் வேறுபட்டதா?

---------------------------------------------------------------------- --------------------------------------------------
பேராசிரியர் நண்பர் நெடுஞ்செழியன் வேலாயுதம் அவர்கள்:
//என்னுடைய கேள்வி என்னவென்றால் கணினிக்காக உருவாக்கப்படும் இந்தத் தோன்றல் விதி, மொழியில் இல்லாத ஒன்றுதானே. எனவே கணினிக்காக உருவாக்கும் இந்தத் தோன்றல் விதியை, மொழி வழக்கைக் காத்தல் பொருட்டு, தோன்றிக் கெடுதல் என கணினிக்கு வழங்கலாமே .//
நான் புரிந்துகொண்டது சரிதான் என்றால், பேராசிரியர் அவர்களின் கருத்து . . .
1) பேச்சுத்தமிழ்தான் எழுத்துத் தமிழுக்கு அடிப்படை; எனவே சில புணர்ச்சி விதிகள் பேச்சுவழக்கில் இல்லையென்றால் அதை ஏன் எழுத்துத்தமிழில் தக்கவைக்கவேண்டும்?
2) கணினிக்கு வேண்டுமென்றால் பொருள் மயக்கம் தோன்றாமல் இருப்பதற்குத் ''தேவையற்ற'' புணர்ச்சி விதிகளை அளிக்கலாம்.
முதல் கருத்துக்கு எனது பதில் நேற்றே கூறியிருந்தேன். தமிழ் ஒரு இரட்டைவழக்குமொழி (diglossic language) . தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து மொழிவழிச் செயல்பாடுகளையும் (language functions) மேற்கொள்வதற்கு பேச்சுத்தமிழும் வேண்டும், எழுத்துத்தமிழும் வேண்டும். எங்குப் பேச்சுத்தமிழ் பயன்படுத்தவேண்டும், எங்கு எழுத்துத்தமிழ் பயன்படுத்தவேண்டும் என்பதை ஒரு தனிநபர் தீர்மானிக்கவில்லை; மாறாக, தமிழ்ச் சமுதாயமே தீர்மானிக்கிறது.
ஆங்கிலம், தமிழ் மொழிகளைப் பொறுத்தமட்டில் எங்கு ஆங்கிலம், எங்குத் தமிழ் என்பதை ஒரு தனிநபர் முடிவு செய்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவர் தனக்கு ஆங்கிலம் தெரியும், தான் படித்தவர் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவார். ஆனால் அது கட்டாயம் இல்லை. தமிழைப் பயன்படுத்தலாம். தடை இல்லை! நீடிக்கின்ற தடைகள் எல்லாம் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டவையே! இதை இருமொழியம் என்று கூறுவார்கள் (bilingualism) .
அல்லது சில இடங்களில் கட்டாயமாக ஆங்கிலமும் சில இடங்களில் கட்டாயமாகத் தமிழும் பயன்படுத்தவேண்டும் என்று சூழல் தோன்றலாம். இதுபோன்ற சூழல் இருந்தால் அதை இரட்டை வழக்கு இருமொழியம் ( Bilingualism with diglossia) என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் இது கிடையாது.
எனவே , இன்றைய சூழலில் பேச்சுவழக்கும் எழுத்துவழக்கும் ஒரே மொழியின் இரட்டைவழக்குகளாகவே நீடிக்கின்றன. இது ஒரு சமுதாயமொழியியல் சிக்கல் (Sociolinguistic problem) . தமிழ்மொழி வரலாற்றில் இந்தச் சூழல் எப்போது தோன்றியது, இது உண்மையில் ஒரு சிக்கலா, சிக்கல் என்றால் எப்படி இதைத் தீர்ப்பது என்பது வேறு ஆய்வு. அதில் நான் இப்போது நுழையவில்லை. ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று இரண்டு தமிழ் வழக்குக்களும் ஒருவருக்குத் தேவை. நாம் இரண்டு வழக்குக்களையும் வைத்துக்கொண்டுதான் இன்று தமிழ்ச்சமுதாயத்தில் செயல்படுகிறோம்.
எழுத்துத்தமிழுக்காகப் பேச்சுத்தமிழ் இலக்கணத்தை மாற்றுவதும் பேச்சுத்தமிழுக்காக எழுத்துத்தமிழ் இலக்கணத்தை மாற்றுவதும் இன்றைய கட்டத்தில் இயலாத ஒரு செயல். நாம் இயற்கையாகப் பேசும்போது, ''நான் படிச்சேன்; நான் உடைச்சேன்; எலெயெப் பறி; ஒலகத்தில் இது இருக்கிறது'' என்று பேசுகிறோம். ஆனால் நம்மை எழுதச்சொன்னால், உறுதியாக நாம் ''நான் படித்தேன்; நான் உடைத்தேன்; இலையைப் பறி; உலகத்தில் இது இருக்கிறது'' என்றுதான் எழுதுவோம்.
அடுத்து, எழுத்துத்தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்குமான இலக்கணங்களில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒலியன் அளவில்தான் (phonological differences) வேறுபாடு. 'இலை' - 'எலெ' - இங்கு 'இ' ஆனது 'எ' ஆக மாறுகிறது; 'படித்தான்' - 'படிச்சான்' - இங்கு இறந்தகால விகுதி -த்த்- என்பது பேச்சுத்தமிழில் -ச்ச்- என்று மாறுகிறது. ஆனால் 'கொடுத்தான்' என்பது 'கொடுச்சான்' என்று மாறாது. 'உண்மை' என்பது 'ஒண்மை' என்று மாறாது. எங்கும் மாறும் , எங்கு மாறாது என்பதற்குத் தெளிவான விதிகள் உண்டு. 'கொடுத்தான்' என்பது 'கொடுச்சான்' என்று மாறாது; 'உண்மை' என்பது 'ஒண்மை' என்ற மாறாது.
மேலும் எழுத்துத்தமிழைப் பள்ளிகளில் முறையாகக் கற்காதவர்களும் தமிழ் நாளிதழ்களை வாசித்துக்காட்டினால் புரிந்துகொள்வார்கள் (Comprehension ability) ; மேடையில் எழுத்துத்தமிழில் பேசினால் புரிந்துகொள்வார்கள். அவர்களால் எழுத்துத்தமிழைப் பயன்படுத்தமுடியாமல் (Performance disability) இருக்கலாம். அவ்வளவுதான்! எனவேதான் எழுத்துத்தமிழ் - பேச்சுத்தமிழைத் தமிழின் இரட்டைவழக்குக்கள் (diglossic language) என்று மொழியியலாளர்கள் அழைக்கிறார்கள். இரு வழக்குக்கள் (two dialects) என்றோ இரு மொழிகள் (two languages) என்றோ அழைக்கவில்லை. ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் அல்லது இரட்டைப் பழங்கள். இரு குழந்தைகளோ அல்லது இரு பழங்களோ இல்லை. இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இது ஒருபுறம் இருக்க . . . இங்குப் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் கூறியது, பேச்சுவழக்கே எழுத்துவழக்குக்கு அடிப்படை என்றும் அதனால் பேச்சுவழக்கில் ஒரு புணர்ச்சி விதி இல்லையென்றால், அதை ஏன் எழுத்துத்தமிழில் பயன்படுத்தவேண்டும்? விட்டுவிடலாமே!
மனிதமூளை அளவுக்குக் கணினிக்கு மொழியறிவு கொடுக்கமுடியாது என்பதால், வேண்டுமென்றால் கணினித்தமிழில் அந்த புணர்ச்சிவிதியை வைத்துக்கொள்ளுங்கள் என்பது அவர் கருத்துபோல் தெரிகிறது.
ஏற்கனவே பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் என்று இருப்பதே ஒரு சிக்கல் என்று நாம் நினைக்கும்போது, மூன்றாவதாகக் கணினித்தமிழ் என்ற ஒரு தனித் தமிழ் உருவாக இடம் கொடுக்கவேண்டுமா?
பேராசிரியர் கூறுவதில் ஒரு உண்மை உண்டு. அதாவது கணினிக்கு ஒரு தொடரின் பொருண்மையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குத் தேவையான உலகறிவு (World knowledge / ontology / Pragmatic knowledge) இல்லாததால், அனைத்து மொழிக்கூறுகளையும் - இலக்கணம் உட்பட - தெளிவாகவும் வெளிப்படையாகவும் (Explicitly) கொடுக்கவேண்டிய சூழல் உண்டு.
ஆனால் இந்தச் சிக்கலைத் தற்போதைய கணினிமொழியியல் (Computational Linguistics) ஆய்வு பெரிய அளவுக்குத் தீர்த்துக்கொள்ளும் திறன் கணினிமொழியியலில் நீடிக்கிறது. ''நான் பழம் சாப்பிட்டேன்'' என்பதில் செயப்படுபொருளான 'பழம்' இரண்டாம் வேற்றுமை உருபை - 'ஐ'- எடுக்காமல் இருந்தாலும் மனிதமூளை தனது உலகறிவைக்கொண்டு ஐயத்தைத் தீர்த்துக்கொள்கிறது; அதுபோல 'மாமா நேற்று வந்தார், அவர் எனக்குப் பரிசு அளித்தார்' என்ற தொடரில் 'அவர்' என்பது யார் என்பதை முந்தைய தொடரிலிருந்து மனித மூளை புரிந்துகொள்கிறது.
ஆனால் கணினி இவ்வாறு புரிந்துகொள்ளமுடியுமா? அதற்குத் தெளிவாக, 'நான் பழத்தைச் சாப்பிட்டேன்' ; 'மாமா நேற்று வந்தார், அந்த மாமா எனக்குப் பரிசு அளித்தார்' என்று கொடுக்கவேண்டாமா? உண்மைதான் . . . இது சிக்கல்தான்!
ஆனால் இன்று கணினிமொழியியலில் இதுபோன்ற பொருள் மயக்கம் (Word sense ambiguity) , இலக்கண மயக்கம் (Grammatical ambiguity) ஆகியவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான மொழியியல் உத்திகள் (Computational linguistic formalisms and disambiguation techniques) தோன்றி நிலவுகின்றன.
இதுபோன்றவற்றைப்பற்றிப் படிப்பதுதான் கணினிமொழியியல் (Computational Linguistics). இந்தத் துறையானது வெறும் கணினியியல் இல்லை; வெறும் மொழியியல் இல்லை. மாறாக, கணினிக்கு மொழியைக் கற்றுக்கொடுப்பதற்கான ஒரு புதிய துறை.
'படித்தான்' என்பதில் -த்த்- என்பது இறந்தகால விகுதி; ஆனால் 'அத்தான்' என்பதில் உள்ள '-த்த்-' இறந்தகால விகுதி இல்லை என்று கணினியால் இன்று தெரிந்துகொள்ளமுடியும். சொற்பொருண்மை மயக்கம் (Word Sense ambiguity) இலக்கண வகைப்பாடு மயக்கம் ( grammatical ambiguity) ,சுட்டுப்பொருள் மயக்கம் ( Anaphora ), தொலைதூரச் சார்பு ( long distance dependency) போன்ற சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதற்கு நிகழ்தகவு இயலைக் (Probabilistic statistics) கொண்டும், ஆழ்நிலை கற்றல் (Deep Learning) , நரம்புப்பின்னல் அமைப்பு (Neural Network) போன்ற பல நுட்பமான உத்திகள் அல்லது வழிமுறைகள் தற்போது கணினிமொழியியல் துறையில் நீடிக்கின்றன.
எனவே, இன்றைய எழுத்துத்தமிழை - அதன் இலக்கண அமைப்பை அடிப்படையாகக்கொண்டே - கணினிக்குக் கற்றுக்கொடுக்கமுடியும். எனவே கணினித்தமிழ் , கணினித்தமிழ் இலக்கணம் என்பதெல்லாம் தேவை இல்லை. எழுத்துத்தமிழையும் எழுத்துத்தமிழாகக் கணினி புரிந்துகொள்ளமுடியும்; அதுபோன்று, பேச்சுத்தமிழையும் பேச்சுத்தமிழாகவே கணினியால் புரிந்துகொள்ளமுடியும்.
மேடைகளில் 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ' என்று பேசப்படுகிற 'முத்தமிழ்' வரிசையில் கணினித்தமிழை வைப்பது சரியில்லை. முத்தமிழ் என்பதுங்கூட தமிழை - பொதுத்தமிழை- எந்தக் கருத்தாடலுக்குப் (Discourse) பயன்படுத்துகிறோம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட வேறுபாடுதான். மூன்றிலும் பொதுத்தமிழ்தான் பயன்படுகிறது. சில சில நடை வேறுபாடு (Stylistic differences) இருக்கும் . கருத்து வெளிப்பாட்டு உத்திகள் மாறுபடும். அவ்வளவுதான். அதுபோல் 'அறிவியல் தமிழ்' என்பதும் ஒரு கருத்தாடல் நடை வேறுபாடுதான். அதிலும் பொதுத்தமிழ்தான் பயன்படுகிறது. அனைத்திலும் பயன்படுகிற தமிழ் இலக்கணம் இன்றைய எழுத்துத்தமிழ் இலக்கணமே. அவற்றிற்கென்று தனி மொழி இலக்கணம் கிடையாது!
விரும்புக
கருத்துத் தெரிவி
பகிர்

புல்தரை? புற்றரை? புல்த்தரை?

 புல்தரை? புற்றரை? புல்த்தரை? - தமிழ் இலக்கணம், மொழியியல் ஆய்வாளர்கள் கவனத்திற்கு ! ( படிப்பதற்குச் சற்றுச் சோர்வாகத்தான் இருக்கும். எனவேதான் ஆய்வாளர்களுக்கு என்று கூறியுள்ளேன்.)

--------------------------------------------------------------------------
கணிதத்தில் ஒன்றிலிருந்து அதில் உள்ள மற்றொன்றை வருவிக்க அல்லது வெளிப்படுத்த derivation -ஐப் பயன்படுத்தும்போது, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லத் தெளிவான கணித விதிகள் இருக்கும். அதுபோன்றதுதான் மொழியிலக்கணமும். தமிழிலக்கணம் இவ்வாறுதான் அமைந்துள்ளது.
புல் + தரை --> புல்+ த் + தரை --> புற்தரை --> புற்றரை . புணர்ச்சி விதிகளின்படி இவ்வாறு வரும். ஆனால் தற்காலத்தமிழில் ''புல்தரை'' என்றே எழுதப்படுகிறது. ஆனால் . . . (1) 'புல்' என்ற பெயர்ச்சொல்லும் 'தரை' என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து தொகையாக மாறும்போது, இடையில் ஒற்று வரவேண்டும். அப்போது அது 'புல்த்தரை' என்று அமையும். (2) இதற்கு அடுத்த கட்டமாக, 'புற்தரை' ; (3) அதற்கு அடுத்த கட்டமாக 'ற்' தனக்கு அடுத்த 'த்' என்பதை 'ற்' என்று மாற்றும் - 'புற்றரை'.
இதை மொழியியலில் Reciprocal assimilation என்று அழைப்பார்கள். அதாவது முதலில் ஒற்று தோற்றம் (புல்த்தரை); அடுத்து, திரிதல் (புற்தரை); மூன்றாவதாக அடுத்து ஒரு திரிபு (புற்றரை).
ஆனால் தற்காலத்தமிழில் 'புற்றரை' என்று எழுதுவது கிடையாது. ஆனால் மேற்கண்ட திரிபுகள் நடைபெறாத நிலையில் . . . புல்த்தரை என்று எழுதினால்தான் பெயர்த்தொகையாக அமையும். (பால் + குடம் --> 'பாற்குடம்' அல்லது 'பால்க்குடம்' (நெல்லை தமிழில்) என்று அமையவேண்டும். அவ்வாறு இல்லாமல் 'பால்குடம்' என்று எழுதுவது சரி இல்லை.)
இரண்டு பெயர்ச்சொல்கள் இணைந்து தொகையாக மாறும்போது ஒற்று மிகவேண்டும். அது மிகுந்தபிறகு, நான் மேலே என் உரையில் கூறியபடி திரியலாம்; அல்லது திரியாமல் இருக்கலாம்; ஆனால் ஒற்று மிகுந்தால்தான் இது பெயர்த்தொகையாக அமையும். இதில் ஏதாவது ஒன்று நடைபெறவில்லையென்றால், பெயர்த்தொகை கிடைக்காது.
(1) ''புல் தரையில் வளர்ந்துள்ளது''
(2) ''மாடு புல்த்தரையில் (புற்றரையில்) படுத்துள்ளது''.
முதல் தொடரில் ''புல்'' எழுவாய். ''தரையில்'' என்பது பயனிலையில் அமைகிற வேற்றுமைத்தொடர்.
இரண்டாவது தொடரில் 'புல்த்தரை'' என்பது பயனிலையில் அமைகிற ஒரு வேற்றுமைத்தொடர். இதில் 'புல்' எழுவாய் இல்லை. 'மாடு' எழுவாய்.
மேற்குறிப்பிட்ட வேறுபாட்டை வெளிப்படுத்த உறுதியாக ஒற்று மிகவேண்டும். அதற்கு அடுத்து திரிவது திரியாதது வேறு ஒரு பிரச்சினை.
இங்கு ஒற்று வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தொகை என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வருகிறது.
ஆகவே , அவ்வாறு இல்லாமல் ''மாடு புல் தரையில் படுத்துள்ளது'' என்று எழுதினால் , பொருண்மை மயக்கம் ஏற்படும். (1) தரையில் மாடு படுத்துள்ளதா (2) புல்த்தரையில் மாடு படுத்துள்ளதா? ''மாடு புல்'' என்பது 'ஆண் பெண்' (ஆணும் பெண்ணும்) என்ற உம்மைபோல 'மாடும் புல்லும்' என்று அமைந்துவிடும்.
இதுபோன்ற இடங்களில் கணினிக்குத் தமிழ் கற்பிக்கும்போது, கணினியானது பொருண்மை மயக்கம் இல்லாமல் மேற்குறிப்பிட்ட தொடர்களைப் புரிந்துகொள்வதற்கு ஒற்று உறுதியாகத் தேவை. மனிதர்களுக்கு உலக அறிவு (Pragmatic knowledge) இருப்பதால் ஒற்று இல்லையென்றாலும், இத்தொடர் அமைகிற மொழிச்சூழல், மொழிசாராப் புறச்சூழல் (linguistic context and nonlinguistic context) வைத்துக்கொண்டு, பொருண்மை மயக்கம் இல்லாமல் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அந்த அறிவு இல்லாத கணினிக்கு 'புல்த் தரை'' அல்லது ''புற்றரை'' என்றே தரவுகளைக் கொடுக்கவேண்டும். இது முழுக்க முழுக்க ஒரு கணித விதி.
தமிழ்க் கட்டமைப்பு அல்லது இலக்கணம் தெளிவான கணித விதிகள்போன்று இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழ், மொழியியல் மாணவர்கள் இதுபோன்று இலக்கணத்தை ஆராய்ந்து படித்தால் சிறப்பாக இருக்கும்.
விரும்புக
கருத்துத் தெரிவி
பகிர்

புதன், 10 ஜனவரி, 2024

நாள்களா? நாட்களா?

 

நாள் + கள் (பன்மைவிகுதி) என்பது நாள்கள் என்று அமையுமா அல்லது நாட்கள் என்று அமையுமா? - ஒரு விளக்கம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெயர்த்தொகைகளில் நடுவில் ஒற்று மிகும். ஏனைய இடங்களில் ஒற்று மிகாது. 'நாள்' 'கள்' இரண்டும் பெயர்ச்சொற்களாக அமைந்து, பெயர்த்தொகை உருவானால், தொகைப் புணர்ச்சி விதியின்படி ஒற்று இடையில் மிகுந்து, , நாள் + க் + கள் = நாள்க்க்ள் என்று அமையும்.

தமிழில் மெய்ம்மயக்க விதிகளில் முதல் மெய்யாக 'ய்' 'ர், 'ழ்' என்பது மட்டுமே அமையமுடியும். பிற மெய்கள் முதல் மெய்யாக வரமுடியாது. எ-கா. வாய்க்கால் (வாய்க்க்ஆல்) , பார்த்தான் (பார்த்த்ஆன்) , வாழ்த்து (வாழ்த்த்உ).

எனவே நாள்+க்+கள் ('நாள்க்க்அள்' ) என்பதில் 'ள்க்' என்பது 'ட்' என்று திரியும். எனவே 'நாட்கள்' என்ற பெயர்த்தொகை கிடைக்கிறது. இரண்டு பெயர்களுக்கும் இடையில் ஒற்று மிகுவது பெயர்த்தொகைக்கே உரிய புணர்ச்சி விதி ஆகும்.

இங்குப் பார்க்கவேண்டியது, 'ள்க்' என்று மெய்ம்மயக்கம் தமிழில் உண்டு - 'கொள்கை'. எனவே நமது எடுத்துக்காட்டில் 'ள்க்' என்பது 'ட்' என்று மாறுவதற்குக் காரணம், தொகை என்ற உறவைக் காட்டுவதற்கே ஆகும். அதேவேளையில் மூன்று மெய்மயக்கங்களில் முதல் மெய்யாக 'ள்' இருக்கமுடியாததால், 'ள்க்' இரண்டும் இணைந்து 'ட்' என்று திரிகிறது.

ஆனால் 'கள்' என்பது இங்குப் பன்மைவிகுதியாக இருந்தால் - அதாவது ஒரு பெயர்ச்சொல்லாக இல்லாமல் இருந்தால் - நடுவில் 'க்' ஒற்று மிகாது. எனவே நாள் + கள்' என்றே அமையும். எனவே இங்கு 'ள்' என்பது 'ட்' என்று திரியாது. ஏற்கனவே கூறியபடி தமிழ் மெய்ம்மயக்கங்களில் 'ள்க்' அனுமதிக்கப்படுகிறது. எனவே இங்கு எந்தவிதத் திரிதலுக்கும் இடம் இல்லை! 'நாள்கள்' என்றே அமையும்.

மூன்று மெய்ம்மயக்கங்களில் முதல் இரண்டு மெய்களும் இணைந்து கீழ்க்கணவாறு திரியும்.

ள் + வல்லினம் --> ட் ( கள் + குடம் --> கட்குடம்)

ண் + வல்லினம் --> ட் ( மண் + குடம் --> மட்குடம்)

ல் + வல்லினம் --> ற் ( கல் + பாறை --> கற்பாறை)

ன் + வல்லினம் --> ற் ( பொன் + காலம் --> பொற்காலம்)

இன்றைய தமிழில் மேற்கூறிய திரிதல்கள் இல்லாமலும் தொகைச் சொற்கள் அமைகின்றன.

கண்பார்வை, பெண்குணம், முன்கோபம், வான்கோழி, புல்தரை, பகல்தூக்கம் - இவற்றில் இரண்டு சொல்களுக்கும் இடையில் ஒற்று மிகவில்லை. ஆனால் ஒற்று மிகுந்தால் அதைத் தவறு என்றும் கூறமுடியாது. 'கட்பார்வை' என்று ஒருவர் எழுதினால் புணர்ச்சிவிதிப்படி சரிதான். இதுபற்றி மேலும் கருதிப்பார்க்கவேண்டும்.

மேலும் தமிழ் இலக்கண ஆய்வாளர்கள் சிலர் ஒரு பெயர்ச்சொல்லை அடுத்து 'கள்' உட்பட எந்த இலக்கண விகுதி வந்தாலும் ஒற்று மிகாது என்றும் கூறுகிறார்கள். தொல்காப்பியம்படி, புணர்ச்சி விதிகள் எல்லாம் இரண்டு சொல்களுக்கு இடையில்தானே ஒழிய, சொல்லுக்கும் விகுதிக்கும் இடையில் கிடையாது என்றும் கூறுகின்றனர். இதையும் கருதிப்பார்க்கவேண்டும்.

(மேற்கூறிய விதியை - மூன்று மெய்ம்மயக்கங்களில் - ய், ர், ல் தவிர , மற்ற இடங்களில் திரிதல் நடைபெறும் என்பதை எனக்குச் சுட்டிக்காட்டியவர் என் நண்பர் கணினி நிரலாளர் திரு. சு. சரவணன் அவர்கள். அவருக்கு நன்றி.)

நாள் + காட்டி என்று இரண்டுசொல்களையும் பெயர்ச்சொற்கள் என்றுகொண்டால் 'நாட்காட்டி' தான் சரி. மற்றொரு கருத்தும் உள்ளது. பெயருக்கும் வினைக்கும் இடையில் ஒற்று மிகாது. 'நாள் - காட்டு' --> நாள்காட்டு என்று வினை உருவாகி, அதன்பின்னர் 'இ' என்ற பெயராக்கவிகுதியை எடுத்தால், 'நாள்காட்டி' என்றுதான் கூறவேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. தமிழில் 'இ' என்பது வினைகளிலிருந்து பெயர்களை உருவாக்கும் விகுதி. படகு+ ஓட்டு --> படகோட்டு + இ --> படகோட்டி. நகம் + வெட்டு --> நகம்வெட்டு --> நக(ம்)வெட்டி.

அறம் + காவல் --> அறக்காவல். இங்கு 'அறம் ' 'காவல்' இரண்டும் பெயர்ச்சொல்கள்.

ஆனால் 'அறங்காவல்' என்ற சொல்லில் அறம் + கா --> அறங்கா என்பது வினை; பின்னர் இதில் 'அல்' என்ற தொழிற்பெயர் விகுதி இணைந்து 'அறங்காவல்' என்று அமைகிறது. இங்கு 'அறக்காவல்' என்று அமையவில்லை. அறங்காவல், அறங்காவலர் என்றுதான் கூறுகிறோம். அறம் + காவல் என்றால் அறக்காவல்; அறம் + காவலர் என்று கொண்டால் அறக்காவலர். ஆனால் இன்று நாம் பயன்படுத்துவது அறங்காவல், அறங்காவலர். இதையும் நண்பர்கள் கருதிப்பார்க்கலாம்.

ஆகவே, நண்பர் மாலன் அவர்கள் கூறுவதுபோல, நாள் + காட்டி என்று பெயர்தொகையாகப் பார்த்தால் நாட்காட்டி என்பதே சரி. ஆனால் நாள் + காட்டு என்று கொண்டு, பின்னர் 'இ' பெயராக்கவிகுதியை இணைத்தால், 'நாள் + காட்டு --> நாள்காட்டு + இ --> நாள்காட்டி. இங்கு திரிதல் கூடாது. இதுபோன்ற சொல்கள் நிறைய இன்று இருக்கின்றன - படகோட்டி, நகவெட்டி, தேரோட்டி, காரோட்டி, மரங்கொத்தி. ஆகவே அடிப்படை வடிவங்கள் என்ன, அவற்றின் இலக்கண வகைப்பாடுகள் என்ன என்று தெரிந்தால்தான் புணர்ச்சியில் தவறு ஏற்படாது.

மரங்கொத்தியா, மரக் கொத்தியா - இரண்டுமே சரிதான், அடிப்படை வடிவங்களை நாம் எப்படி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India