நாள் + கள் (பன்மைவிகுதி) என்பது நாள்கள் என்று அமையுமா அல்லது நாட்கள் என்று அமையுமா? - ஒரு விளக்கம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெயர்த்தொகைகளில்
நடுவில் ஒற்று மிகும். ஏனைய இடங்களில் ஒற்று மிகாது. 'நாள்' 'கள்' இரண்டும் பெயர்ச்சொற்களாக அமைந்து, பெயர்த்தொகை உருவானால், தொகைப் புணர்ச்சி விதியின்படி ஒற்று இடையில் மிகுந்து, , நாள் + க் + கள் = நாள்க்க்ள் என்று அமையும்.
தமிழில் மெய்ம்மயக்க விதிகளில் முதல் மெய்யாக 'ய்' 'ர், 'ழ்' என்பது மட்டுமே அமையமுடியும். பிற மெய்கள் முதல் மெய்யாக வரமுடியாது. எ-கா. வாய்க்கால் (வாய்க்க்ஆல்) , பார்த்தான் (பார்த்த்ஆன்) , வாழ்த்து (வாழ்த்த்உ).
எனவே நாள்+க்+கள் ('நாள்க்க்அள்' ) என்பதில் 'ள்க்' என்பது 'ட்' என்று திரியும். எனவே 'நாட்கள்' என்ற பெயர்த்தொகை கிடைக்கிறது. இரண்டு பெயர்களுக்கும் இடையில் ஒற்று மிகுவது பெயர்த்தொகைக்கே உரிய புணர்ச்சி விதி ஆகும்.
இங்குப் பார்க்கவேண்டியது, 'ள்க்' என்று மெய்ம்மயக்கம் தமிழில் உண்டு - 'கொள்கை'. எனவே நமது எடுத்துக்காட்டில் 'ள்க்' என்பது 'ட்' என்று மாறுவதற்குக் காரணம், தொகை என்ற உறவைக் காட்டுவதற்கே ஆகும். அதேவேளையில் மூன்று மெய்மயக்கங்களில் முதல் மெய்யாக 'ள்' இருக்கமுடியாததால், 'ள்க்' இரண்டும் இணைந்து 'ட்' என்று திரிகிறது.
ஆனால் 'கள்' என்பது இங்குப் பன்மைவிகுதியாக இருந்தால் - அதாவது ஒரு பெயர்ச்சொல்லாக இல்லாமல் இருந்தால் - நடுவில் 'க்' ஒற்று மிகாது. எனவே நாள் + கள்' என்றே அமையும். எனவே இங்கு 'ள்' என்பது 'ட்' என்று திரியாது. ஏற்கனவே கூறியபடி தமிழ் மெய்ம்மயக்கங்களில் 'ள்க்' அனுமதிக்கப்படுகிறது. எனவே இங்கு எந்தவிதத் திரிதலுக்கும் இடம் இல்லை! 'நாள்கள்' என்றே அமையும்.
மூன்று மெய்ம்மயக்கங்களில் முதல் இரண்டு மெய்களும் இணைந்து கீழ்க்கணவாறு திரியும்.
ள் + வல்லினம் --> ட் ( கள் + குடம் --> கட்குடம்)
ண் + வல்லினம் --> ட் ( மண் + குடம் --> மட்குடம்)
ல் + வல்லினம் --> ற் ( கல் + பாறை --> கற்பாறை)
ன் + வல்லினம் --> ற் ( பொன் + காலம் --> பொற்காலம்)
இன்றைய தமிழில் மேற்கூறிய திரிதல்கள் இல்லாமலும் தொகைச் சொற்கள் அமைகின்றன.
கண்பார்வை, பெண்குணம், முன்கோபம், வான்கோழி, புல்தரை, பகல்தூக்கம் - இவற்றில் இரண்டு சொல்களுக்கும் இடையில் ஒற்று மிகவில்லை. ஆனால் ஒற்று மிகுந்தால் அதைத் தவறு என்றும் கூறமுடியாது. 'கட்பார்வை' என்று ஒருவர் எழுதினால் புணர்ச்சிவிதிப்படி சரிதான். இதுபற்றி மேலும் கருதிப்பார்க்கவேண்டும்.
மேலும் தமிழ் இலக்கண ஆய்வாளர்கள் சிலர் ஒரு பெயர்ச்சொல்லை அடுத்து 'கள்' உட்பட எந்த இலக்கண விகுதி வந்தாலும் ஒற்று மிகாது என்றும் கூறுகிறார்கள். தொல்காப்பியம்படி, புணர்ச்சி விதிகள் எல்லாம் இரண்டு சொல்களுக்கு இடையில்தானே ஒழிய, சொல்லுக்கும் விகுதிக்கும் இடையில் கிடையாது என்றும் கூறுகின்றனர். இதையும் கருதிப்பார்க்கவேண்டும்.
(மேற்கூறிய விதியை - மூன்று மெய்ம்மயக்கங்களில் - ய், ர், ல் தவிர , மற்ற இடங்களில் திரிதல் நடைபெறும் என்பதை எனக்குச் சுட்டிக்காட்டியவர் என் நண்பர் கணினி நிரலாளர் திரு. சு. சரவணன் அவர்கள். அவருக்கு நன்றி.)
நாள் + காட்டி என்று இரண்டுசொல்களையும் பெயர்ச்சொற்கள் என்றுகொண்டால் 'நாட்காட்டி' தான் சரி. மற்றொரு கருத்தும் உள்ளது. பெயருக்கும் வினைக்கும் இடையில் ஒற்று மிகாது. 'நாள் - காட்டு' --> நாள்காட்டு என்று வினை உருவாகி, அதன்பின்னர் 'இ' என்ற பெயராக்கவிகுதியை எடுத்தால், 'நாள்காட்டி' என்றுதான் கூறவேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. தமிழில் 'இ' என்பது வினைகளிலிருந்து பெயர்களை உருவாக்கும் விகுதி. படகு+ ஓட்டு --> படகோட்டு + இ --> படகோட்டி. நகம் + வெட்டு --> நகம்வெட்டு --> நக(ம்)வெட்டி.
அறம் + காவல் --> அறக்காவல். இங்கு 'அறம் ' 'காவல்' இரண்டும் பெயர்ச்சொல்கள்.
ஆனால் 'அறங்காவல்' என்ற சொல்லில் அறம் + கா --> அறங்கா என்பது வினை; பின்னர் இதில் 'அல்' என்ற தொழிற்பெயர் விகுதி இணைந்து 'அறங்காவல்' என்று அமைகிறது. இங்கு 'அறக்காவல்' என்று அமையவில்லை. அறங்காவல், அறங்காவலர் என்றுதான் கூறுகிறோம். அறம்
+ காவல் என்றால் அறக்காவல்; அறம் + காவலர் என்று கொண்டால் அறக்காவலர். ஆனால் இன்று நாம்
பயன்படுத்துவது அறங்காவல், அறங்காவலர். இதையும் நண்பர்கள் கருதிப்பார்க்கலாம்.
ஆகவே, நண்பர் மாலன் அவர்கள் கூறுவதுபோல, நாள் + காட்டி என்று பெயர்தொகையாகப் பார்த்தால் நாட்காட்டி
என்பதே சரி. ஆனால் நாள் + காட்டு என்று கொண்டு, பின்னர் 'இ' பெயராக்கவிகுதியை இணைத்தால், 'நாள் + காட்டு --> நாள்காட்டு + இ --> நாள்காட்டி. இங்கு திரிதல் கூடாது. இதுபோன்ற சொல்கள் நிறைய
இன்று இருக்கின்றன - படகோட்டி, நகவெட்டி, தேரோட்டி, காரோட்டி, மரங்கொத்தி. ஆகவே அடிப்படை வடிவங்கள் என்ன, அவற்றின் இலக்கண வகைப்பாடுகள் என்ன என்று தெரிந்தால்தான்
புணர்ச்சியில் தவறு ஏற்படாது.
மரங்கொத்தியா, மரக் கொத்தியா - இரண்டுமே சரிதான், அடிப்படை வடிவங்களை நாம் எப்படி எடுக்கிறோம் என்பதைப்
பொறுத்து!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக