செவ்வாய், 22 நவம்பர், 2016

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (2)

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (2)
-------------------------------------------------------------------------------------
நேற்று பார்த்த வினைக்கூறு துணைவினைகளிலிருந்து (Aspects) மாறுபட்ட மற்றொரு வகைத் துணைவினைகள் தமிழில் உள்ளன.

'' மழை வரப்போகிறது''
''அவர் கீழே விழப்பார்த்தார்''
''மழை வரக்கூடும்''
''நாளை நான் அவரைப் பார்க்கவேண்டும்''
''அவர் நாளை வரமாட்டார்''
''அவர் இன்று வரவில்லை''

மேற்கூறிய தொடர்களில் வினைமுற்றுகளின் அமைப்பானது முதன்மைவினை + துணைவினை என்று உள்ளது.
முதன்மைவினையானது ''செய / செய்ய'' வினையெச்ச வாய்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. அதையடுத்து ''போ'', ''பார்'' ''கூடு'' ''வேண்டும்'' ''மாட்டு'' ''இல்லை'' என்பவை வருகின்றன. இவை துணைவினைகள் ஆகும். அதாவது இவற்றிற்கு அகராதிப் பொருள் கிடையாது. மாறாக, இலக்கணப்பொருளே உண்டு.
இவை துணைவினைதான் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு நாம் செய்யவேண்டியது.... முதன்மைவினைக்கும் இவற்றிற்கும் இடையில் வேறு ஏதாவது அகராதிச்சொல்லைச் சேர்க்கமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
''மழை வர இன்று போகிறது'' என்றோ, ''நான் அவரைப் பார்க்க இன்று வேண்டும்'' என்றோ, '' அவர் வர நாளை கூடும்'' என்றோ சொல்லமுடியாது!
ஆனால் '' பார்க்கவாவேண்டும்?'' ''பார்க்கத்தான்வேண்டும்'' ''பார்க்கவேவேண்டும்'' என்று இலக்கணப்பொருள்களைத் தரும் இடைச்சொற்களைச் சேர்க்கலாம்!
ஆனால் இந்தத் துணைவினைகள் எல்லாம் தமிழில் முதன்மை வினைகளாகவும் வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. அவ்வாறு வரும்போது அவற்றிற்கு அகராதிப்பொருள் உண்டு.
'' மாடு போகிறது''
'' அவர் என்னைப் பார்த்தார்''
'' கூட்டம் நன்கு கூடியது''
''எனக்கு இலக்கணப்புத்தகம் வேண்டும்''
''சட்டையை அங்கே மாட்டு''
''அது அங்கு இல்லை''

மேற்கூறிய துணைவினைகள் நாம் ஏற்கனவே பார்த்த வினைக்கூறு ( Aspects) என்ற இலக்கணப்பொருளிலிருந்து மாறுபட்ட ஒரு இலக்கணப்பொருளைத் தருகின்றன. வினைக்கூறுகள் ஒரு வினைநிகழ்ச்சி எவ்வாறு நடைபெற்றது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இந்தத் துணைவினைகள் பேசுவோரின் மனநிலையையும் விருப்பங்களையும் காட்டுகின்றன. எனவே இவற்றை வினைநோக்கு என்று பேரா. பொற்கோ அழைக்கிறார். ஆங்கிலத்தில் இது "" Modal" என்று அழைக்கப்படுகிறது.
இந்த வினைநோக்குத் துணைவினைகள் எல்லாம் முதன்மைவினைகளின் செயவென் வினையெச்ச வாய்பாட்டு வடிவங்களுடன்தான் சேர்ந்து வரும். மேலும் கால இடைநிலைகள், திணை எண் பால் விகுதிகளை ஏற்கும்.
அவற்றில் ''போ'' ''பார்'' ''கூடு'' ஆகியவை வல்லின எழுத்துகளில் தொடங்குவதால், முதன்மைவினைகளுக்கும் இவற்றிற்கும் இடையில் வல்லொற்று மிகும்!
''வரப்பார்த்தான்'' '' வரக்கூடும்'' ''வரப்போகிறது''
ஆங்கிலத்தில் உள்ள " may, might, can, could, should, must , ought, need "" ஆகியவே எல்லாம் வினைநோக்குத் துணைவினைகளே! ஆங்கிலத்தில் இந்தத் துணைவினைகள் வரும்போது, முதன்மைவினைகள் வினையின் முதல் வடிவத்தில்தான் வரும். இறந்தகால வடிவமோ அல்லது பிற வினையெச்ச வடிவங்களோ வராது.
"He may go .... He must go .... He can go .... He should go"
ஆனால் "have" "has" "had" என்ற வினைக்கூறுத் துணைவினைகள் வரும்போது, முதன்மைவினைகள் வினையெச்சவடிவமான " Past Particple / Passive Participle" வடிவங்களில்தான் வரவேண்டும என்பதைக் கவனிக்கவும் (have gone, has gone, had gone, is killed, was eaten). ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. இதுவே கணிதப்பண்பு!
தமிழில் வினைக்கூறுத் துணைவினைகள் வரும்போது முதன்மைவினைகள் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வரவேண்டும் என்றும் வினைநோக்குத் துணைவினைகள் வரும்போது முதன்மைவினைகள் ''செய, செய்ய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வரவேண்டும் என்றும் தமிழில் இலக்கணம் அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும் . கணிதப்பண்பு உடையதாகும். தமிழ்க்கணினிமொழியியலுக்கு ஏற்ற ஒன்றாகும்!

திங்கள், 21 நவம்பர், 2016

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (1)

தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (1)
-------------------------------------------------------------------------------------
(1) வினைக்கூறு ( Aspectuals) :

''கண்ணன் பட்டம் விட்டார் ''
''கண்ணன் வந்துவிட்டார்''

முதல்தொடரில் ''விட்டார்'' என்பது ''விடு'' என்ற முதன்மைவினையின் வினைமுற்று ஆகும்.
இரண்டாவது தொடரில் ''வா'' என்பதுதான் வினைநிகழ்ச்சியைக் குறிக்கும் முதன்மைவினை. அதோடு இணைந்துவரும் ''விட்டார்'' என்பது அந்த வினைநிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காகப் பயன்படுகிற ஒரு துணைவினையாகும்.
இந்தத் துணைவினைக்கு அகராதிப்பொருள் கிடையாது. மேலும் ''வந்துவிட்டார் என்பதில் ''வந்து'' என்பதற்கும் ''விட்டார்'' என்பதற்கும் இடையில் அகராதிப்பொருளைக் காட்டும் ஒரு சொல்லைச் சேர்க்கமுடியாது. ஆனால் இலக்கணப்பொருளைக் காட்டும் இடைச்சொற்களைச் சேர்க்கலாம் (வந்தேவிட்டார் என்பதில் இடையில் ஏகாரம் சேர்கிறது. வந்தாவிட்டார் என்பதில் ஆகாரம் சேர்கிறது).
இதுபோன்ற துணைவினைகள், விகுதிகளை ஏற்பதில் முதன்மைவினைகளாகப் பயன்படும்போது எந்த இடைநிலைகள், திணை எண் பால் விகுதிகளை ஏற்குமோ, அவற்றையே ஏற்கும். (''வந்துவிடுகிறார், வந்துவிட்டார், வந்துவிடுவார்). இதுபோன்று வினைக்கூறுகளைக் காட்டும் துணைவினைகள் சில:
''அவர் வந்துகொண்டிருக்கிறார் '' (கொண்டிரு'')
''அவர் வந்திருக்கிறார் '' ( ''இரு'')
''அவர் வந்துவிட்டார் '' (''விடு'')
''அவர் செய்துபார்த்தார்''(''பார்'')
''அவர் செய்துகாட்டினார்'' (''காட்டு'')
''அவர் வாங்கிக்கொண்டார்'' (''கொள்'')
''அவர்கள் அடித்துக்கொண்டார்கள்'' (''கொள்'')
''அது தொலைந்துபோயிற்று '' (''போ'')
''அவர் வந்துதொலைத்தார்'' (''தொலை'')
''நான் வாங்கிவைக்கிறேன்'' (''வை'')
''அவர் கொடுத்தருளினார்'' (''அருள்'')
''அவர் பல ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டுவந்தார்'' (''வா'')

மேற்கூறியவற்றில் சிலமுக்கியச் செய்திகளை அறிந்துகொள்ளவேண்டும். வினைக்கூறுகளைத் தெரியவைக்கும் இந்தத் துணைவினைகள் முதன்மைவினைகளோடு இணையும்போது, முதன்மைவினைகள் எல்லாம் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சங்களாகவே வரும். இது ஒரு கணிதப்பண்பு!
அடுத்து, முதன்மைவினைகளுக்கும் இந்த துணைவினைகளுக்கும் இடையே அகராதிப்பொருள் தரும் வேறு எந்தச் சொல்லும் வரமுடியாது. ஆனால் இலக்கணப் பொருள்களைக் காட்டும் இடைச்சொற்கள் வரலாம்.
''அவர் வந்தேவிட்டார்'' , '' அவர் வாங்கித்தான்வைத்தார்''.
அடுத்து, நாம் கவனிக்கவேண்டியது, முதன்மைவினைகளையும் துணைவினைகளையும் பிரித்து எழுதக்கூடாது. தமிழில் இலக்கணச் சொற்களெல்லாம் பெரும்பாலும் தாம் இணையும் முதன்மைச்சொற்களோடு இணைந்துதான் வரும்.
இப்போது சந்திவிதிகளுக்கு வருவோம். முதன்மைவினைகள் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வருகின்றன. இவை வன்தொடர்க்குற்றியலுகரச் சொற்களாக இருந்து, அடுத்து வரும் துணைவினைகள் வல்லொற்றுகளில் தொடங்கினால் ( கொண்டிரு, கொள், பார், காட்டு,தொலை), ஒற்று மிகும். இதில் தவறு செய்யக்கூடாது. இது ஒரு கட்டாயச்சந்தி!
''அவர் படித்துக்கொண்டிருக்கிறார்''
''அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்''
''அவர் படித்துக்காட்டினார்''
''அவர் எனக்குப் படித்துக்காட்டினார்''
''அவர் செத்துப்போனார்''
''அவர் கேட்டுத்தொலைத்தார்''

(2) வினைப்பாங்கு ( Voice):
'' பூனை எலியைக் கொன்றது'' - செய்வினை (Active voice) 
''எலி பூனையால் கொல்லப்பட்டது'' - செயப்பாட்டு வினை ( Passive voice)

தமிழில் செயப்பாட்டுவினைமுற்றில் செயப்பாட்டுவினையைக் காட்டும் சொல்லாக ''படு'' என்பது அமைகிறது. இதுவும் ஒரு துணைவினையாகும்.
''படு'' என்பது முதன்மைவினையாகவும் தமிழில் இருக்கிறது.
'' குழந்தை தாயை மிகவும் படுத்துகிறது'' ... இங்கு ''படு'' என்பது முதன்மைவினை.
செயப்பாட்டுவினைச்சொல்லை உருவாக்கப் பயன்படும் ''படு'' என்ற துணைவினையானது இணையும்போது, முதன்மைவினையானது ''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களாகவே இருக்கும்! இதில் மாற்றம் கிடையாது. இது ஒரு கணிதப்பண்பு!
''சொல்லப்பட்டது''
''உடைக்கப்பட்டது''
''எழுதப்பட்டது''

''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களையடுத்து, வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வந்தால் வல்லொற்று மிகும் என்று முன்பு பார்த்துள்ளோம். எனவே இங்கு ''படு '' என்பது வல்லினத்தில் தொடங்கும் சொல்லாக இருப்பதாலும், அது இணைகிற முதன்மை வடிவம் ''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவத்தில இருப்பதாலும், இங்கு ஒற்று மிகும். இதில் தவறு செய்யக்கூடாது. இது ஒரு கட்டாயச்சந்தி!
மேற்கூறிய துணைவினைகள் எல்லாம் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் முதன்மைவினைகளாகமட்டுமே இருந்திருக்கலாம். பின்னர், தேவைகளைமுன்னிட்டு, அவை இலக்கணப் பண்புகளைக் காட்டும் துணைவினைகளாகவும் - இலக்கணச் சொற்களாகவும் - மாறியிருக்கின்றன. இதையே முன்னர் ''இலக்கணமயமாக்கம்'' என்று பார்த்துள்ளோம். ஆனால் இவை இலக்கணச் சொற்களாக மாறியபிறகும், விகுதிகள் ஏற்கும் தங்கள் பண்புகளில் முதன்மைவினைகள்போன்றே செயல்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
ஆகவே, வினைக்கூறுகளைக் காட்டும் துணைவினைகள் வந்தால், முதன்மைவினைகள் தங்களது ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில்தான் அமையும்!
வினைப்பாங்கைக் காட்டும் ''படு'' என்ற துணைவினை வரும்போது, முதன்மைவினையானது ''செய'' வாய்பாட்டு வடிவத்தில்தான் வரும். ஒரு மிக அருமையான கணிதப்பண்பை - இலக்கண ஒழுங்கமைவை - இங்கு நாம் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் "has, have,had " ( Perfect Aspectuals) வரும்போது முதன்மைவினைகள் வினையின் மூன்றாவது வடிவமாகிய "Past Participle" வடிவத்தில்தான் வரும். ( ""He has gone", "I have spoken" " they had written")
Passive Voice வரும்போதும், முதன்மைவினைகள் Past Participle"' வடிவத்தில்தான் வரும். ("It is written" "He was killed"") எனவே ஆங்கிலத்திலும் துணைவினைகள் சேரும்போது, முதன்மைவினைகள் வினையெச்ச வடிவங்களையே எடுக்கின்றன ( வினைமுற்று தனித்து வருவதுபோல வராது ) என்பது கவனிக்கத்தக்கது!
வினைநோக்கு ( Modals) என்ற துணைவினைகள்பற்றி அடுத்து எழுதுகிறேன்.

சனி, 19 நவம்பர், 2016

தமிழில் பின்னொட்டுகளின்பின் (Postpositions) ஒற்று மிகுதல்

தமிழில் பின்னொட்டுகளின்பின்  (Postpositions)ஒற்று மிகுதல்
---------------------------------------------------------------------------
தமிழில் சில வேற்றுமை உருபுகளின்பின் சில பின்னொட்டுகள் என்னும் விகுதிகள் இணைந்து, வேற்றுமைப்பொருளை அல்லது வேற்றுமை உறவுகளை ( Casal relations) மாற்றியமைக்கும்.

''அவனைப் பார்த்தேன்'' ... ''அவனைப்பற்றிப் பேசினேன்''
''ஐ'' என்ற வேற்றுமை உருபு வரும்போது, ''அவன்'' என்பதற்கும் ''பார்த்தேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு வேறு! ''ஐப்பற்றி'' என்று வரும்போது, ''அவன்'' என்பதற்கும் '' பேசினேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு. அதாவது தொடரின் பொருள் வேறுபடுகிறது.
பிற்காலத் தமிழில் - குறிப்பாகத் தற்காலத் தமிழில் - ''பற்றி'' போன்ற பல பின்னொட்டுகள் அல்லது விகுதிகள் தோன்றியுள்ளன. இதில் மேலும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று... ''பற்றி '' என்பது '' பற்று'' என்ற முதன்மை வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லின் வடிவம். ஆனால் ''பற்றி'' என்ற முதன்மை வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வினையெச்சமும் , ''பற்றி'' என்ற ''ஐ'' வேற்றுமைக்கு அடுத்து வருகிற பின்னொட்டு அல்லது விகுதியும் வேறு வேறு. வரலாற்று ரீதியில் உறவு  - "தொப்புள்கொடி உறவு'' -    உள்ளது. அவ்வளவுதான்.
''அவனது கரங்களைப் பற்றிக்கொண்டு பேசினேன்''
''அவனது கரங்களைப்பற்றிப் பேசினேன்''

இரண்டு தொடர்களுக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
இதுபோன்று பல இலக்கணச் சொற்கள் ( பின்னொட்டுகள், விகுதிகள்) ஏற்கனவே தமிழில் நீடிக்கிற முதன்மை வினைச்சொற்களிருந்து - அகராதிச்சொற்களிலிருந்து - தோன்றியுள்ளன. சொற்பொருளைக் குறிப்பதிலிருந்து மாறி, இலக்கணப் பொருளைக் குறிக்கப் பயன்படுகிறது. இதை ''இலக்கணமயமாக்கும் '' ( Grammaticalization) என்று அழைப்பார்கள்.
ஆனால் இவ்வாறு அகராதிச் சொற்களிலிருந்து இலக்கணச் சொற்கள் மாறியபிறகும் தொடர்ந்து , முந்தைய முதன்மைச் சொற்களின் சில இலக்கணப் பண்புகளைத் தொடர்ந்து பெற்றுவரும். இங்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கிற ''பற்றி''- அப்படித்தான். ''பற்றி'' என்ற செய்துவாய்பாட்டு வினையெச்ச வன்தொடர்க்குற்றியலுகரச் சொல்லின்பின் வல்லினத்தை முதன்மையாகக்கொண்ட வருமொழி வந்தால் ஒற்று மிகும் என்று முன்பு பார்த்துள்ளோம்.
''அவனது கரங்களைப் பற்றிப் பேசினேன்'' (அதாவது அவனது கரங்களைப் பிடித்துக்கொண்டு பேசினேன்).
அந்த வினையெச்ச விதியானது , ''பற்றி'' என்ற வேற்றுமைக்கான பின்னொட்டு வரும்போதும் செயல்படுகிறது.
''அவனைப்பற்றிப் பேசினேன்'' ( I talked about him).
இவ்வாறு 'இரண்டாம் வேற்றுமையாகிய 'ஐ' - யோடு இணைந்து தற்போது தமிழில் நிலவுகின்ற பின்னொட்டுகளுக்குப்பின் வல்லொற்று மிகும்.
''அவனைக்குறித்துப் பேசினேன்'' (''குறி'')
''அவனைநோக்கிப் போனேன்'' (''நோக்கு'')
''அதைச்சுற்றிக் கூட்டமாக இருந்தது'' (''சுற்று'')
''அவன் வகுப்பைவிட்டுப் போய்விட்டான்''.(''விடு'')
''அதையொற்றிப் பேசினேன்'' (''ஒற்று'')
''அதைப்பொறுத்துப் பேசலாம்'' ('பொறு''
''அவனைப்பொறுத்தவரைத் தரமே முக்கியம்''

இதுபோன்று சில முதன்மைவினைகளின் ''செய'' வாய்பாட்டு வினையெச்சங்களும் பின்னொட்டுகளாக வருகின்றன. எனவே அவற்றிற்குப் பின்னும் வல்லொற்று மிகும். இவற்றில் சில ''ஐ'' வேற்றுமைவிகுதிக்குப்பின்னும் , சில ''க்கு'' என்ற நான்காம் வேற்றுமைக்குப்பின்னும் சில உடைமை வேற்றுமைக்குப்பின்னும் வரும்.
பின்கண்டவற்றில் ''ஆகு'' என்பதன் செய வாய்பாட்டு வினையெச்ச வடிவத்துடன் (''ஆக'') சில சொற்கள் இணைந்து, பின்னொட்டுகளாகப் பயின்றுவருகின்றன. எனவே இங்கும் வல்லொற்று மிகும்.
நான்காம் வேற்றுமைக்குப்பின்னர் (''கு,க்கு'')
--------------------------------------------------------
''அவனுக்காகக் காத்திருக்கிறேன்'' 
 ''அவர்மூலமாகப் பணம் வாங்கினேன்'' 
 ''பணத்திற்குப்பதிலாகப் பொருளைக் கொடுக்கவும்''
''அவர்வாயிலாகச் செய்தி அனுப்பினேன்'' 
 ''அதற்குமாறாகப் பேசாதே'' 
 ''வீட்டுக்குநேராகப் போகவும்''

உடைமை வேற்றுமைக்குப்பின்னர் (''இன், அது'')
--------------------------------------------------------- 
''என்வாயிலாகக் கொடுத்துவிடவும்''
''அதன்மூலமாகக் கொடுத்துவிடவும்''
''அந்தச் சந்தின்வழியாகப் போகவும்''

ஆனால் சில பின்னொட்டுகள், அவற்றின் முந்தைய வினைகளின் பெயரெச்ச வடிவத்தில் வருகின்றன. பெயரெச்சத்திற்குப் பின்னர் வல்லொற்று மிகாது ( சில விதிவிலக்குகள் உண்டு. அதைப் பின்னர் பார்க்கலாம்.)
''உரிய'' ''உள்ள'' ''தகுந்த'' ''உடைய'' ...... இவை பெயரெச்சங்கள். ஆனால் இவை வேற்றுமைகளுக்குப் பின்னர் பின்னொட்டுகளாக அமையும்போது, வல்லொற்று மிகாது.
''அவனுக்குரிய பொருள் இது''
''அவனுக்குள்ள குணம்''
''அவனுக்குத்தகுந்த பண்பு''
''அவனுடைய பணி இது''

ஆகவே வேற்றுமைகளுக்குப் பின்னர் வருகின்ற பின்னொட்டுகள், தமது வடிவங்களில் செய்து வாய்பாட்டு வன்தொடர்க்குற்றியலுகர வடிவம், செய வாய்பாட்டு வினையெச்ச வடிவம் ஆகியவற்றில் அமைந்தால், அவற்றின் பின்னர் வல்லினங்களை முதலாகக்கொண்ட வருமொழிகள் வந்தால் வல்லொற்று மிகும். பின்னொட்டுபற்றிய ஒரு தெளிவான ஆய்வை முன்வைத்தவர் பேராசிரியர் பொற்கோ அவர்களே!

வியாழன், 17 நவம்பர், 2016

தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!

தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!
-----------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் தமிழ்ச் சொற்களின் அமைப்பை மொழியசை அடிப்படையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில செய்திகள்!

தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் வரும்போது, ஒரு கட்டுப்பாடு உள்ளது. முதல் அசையைத் தவிர ஏனைய அசைகள் எல்லாம், தவறாமல் அசைத் தொடக்கத்தைப் - ஒரு மெய் எழுத்தைப் - பெற்றிருக்கவேண்டும்! அவ்வாறு மெய் வராத அசைகள் ஏதாவது இருந்தால், அந்த இடத்தில் ஒரு மெய் சேர்க்கப்படும்.
(1) தெரு + ஆ = தெருஆ* = த்எ - ர்உ - ஆ
இந்தச் சொல்லில் மூன்றாவது அசையில் உச்சியாகிய உயிர் மட்டுமே உள்ளது. இது தமிழ் மொழியசை அமைப்பு விதிக்கு எதிரானது. எனவே அங்கு ஒரு மெய் எழுத்தைச் சேர்க்கிறோம். இங்கு ''வ்'' என்ற மெய் சேர்கிறது.
தெருவா = த்எ - ர்உ - வ்ஆ
அடுத்து ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.
(2) இலை + ஆ = இலைஆ = இ - ல்ஐ - ஆ
இங்கு முதல் அசையில் அசைத் தொடக்கம் இல்லை. ஆனால் இது மொழியசை விதிக்கு எதிரானது இல்லை! ஆனால் மூன்றாவது அசையில் அசைத் தொடக்கம் - மெய் - இல்லை. அதைச் சரிசெய்ய , ''ய்'' மெய் சேர்க்கப்படுகிறது.
இலையா = இ - ல்ஐ - ய்ஆ
இதுதான் உடம்படுமெய் என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இவ்வாறு முதல் அசையைத் தவிர ஏனைய அசைகளில் அசைத் தொடக்கமாக மெய் வராமல் இருந்தால், அதை முறைப்படுத்த ''ய்'' ''வ்'' என்ற மெய்கள் உதவுகின்றன!
(3) அது + ஆ : இங்கு நிலைமொழியின் இறுதியில் முற்றியலகரம் வருகிறது. எனவே இச்சொல் ''ஆ'' என்ற வருமொழி விகுதியோடு இணையும்போது, முற்றியலுகரம் நீங்காது ( ஆனால் குற்றியலுகரம் நீங்கும் .. ''விட்டு ஓடும்'')! எனவே ''வ்'' உடம்படுமெய் உதவுகிறது.
அதுவா - அ -த்உ - வ்ஆ
(4) கல் + ஐ : இது கல்ஐ என்று அமைந்தால் ( க்அல் - ஐ) இரண்டாவது அசையில் தொடக்கம் இல்லை. இது விதி மீறலாகும். எனவே ''ல்'' என்ற மெய் ஒற்று இரட்டித்து, ''கல்லை'' என்று அமைகிறது!
கல்+ ஐ = கல்லை - க்அ ல் - ல்ஐ
எனவே உடம்படுமெய்யின் தேவைபற்றிய விதியே இதிலும் செயல்டுகிறது.
(5) அயல்மொழிச்சொல் தமிழில் ஊடுருவும்போதும் அசைவிதி மீறப்படாது. தமிழில் முதல் அசையில் (மெய்) குறில் அமைந்தால், அதையடுத்து ''ர்'' ''ழ்'' வராது.
''அர்த்தம்'' = அர்த் -த்அம் .
இங்கு முதலசையில் தொடக்கம் இல்லை. ஆனால் உச்சியானது குறில் அகரம். அதற்கு அடுத்து ஒடுக்கமாக ''ர்த்'' என்ற மெய் ஒற்றுகள் வருகின்றன. இது தமிழ் அசைவிதிக்கு எதிரானது. எனவே 'ர்'' உடன் உகரத்தைச் சேர்க்கிறோம். இதனால்,
அ -ர்உத் -த்அம் என்று அசையமைப்பு மாறுகிறது. ''கர்த்தா'' என்பது ''கருத்தா' என்று மாறும்.
(6) ''ஓராயிரம் '': '' ஒரு ஆயிரம்'' என்ற தொடர், ஒரு சொல்நீர்மையாக மாறும்போது, ஒரு முக்கியமான மாற்றம் ஏற்படுகிறது.
ஒருஆயிரம் ----- > ஒர்ஆயிரம் (வருமொழியில் உயிர் ''ஆ'' வரும்போது, நிலைமொழி இறுதியிலுள்ள உயிர் ''உ'' மறைகிறது.)
ஒர் -ஆ -ய்இ -ர்அம் ...... இங்கு முதலசையில் (ஒ) குறிலையடுத்து ''ர்'' மெய் ஒற்று வருகிறது இது அசைவிதி மீறலாகும். ஆனால் நெடிலையடுத்து ''ர்'' ஒற்று வரலாம். எனவே ''ஓராயிரம் '' என்ற மாறுகிறது.
ஓர் - ஆ -ய்இ-ர்அம் ...... இப்போது அசைவிதி சரியாகவிட்டது. ''ஓராயிரம் '' கிடைத்துவிட்டது. ஒரு சொல்நீர்மையாக மாறும்போது ஏற்பட்ட மாற்றம் இது! ஆனால் பின்னர் சிலர் அதைப் பிரித்து எழுதும்போது, ''ஓர் ஆயிரம் '' என்று எழுதியிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் backformation என்று அழைப்பார்கள்.ஆனால் சிலர் கூறும் கருத்து .. '' அடுத்த சொல் உயிரில் தொடங்கினால் முதல்சொல்லில் ''ஒ'' குறில் வரக்கூடாது. நெடிலே - ''ஓ'' தான் வரவேண்டும்'' . ஆனால் அசையமைப்பு அடிப்படையில் ஒரு சொல்நீர்மையாக இரண்டு சொற்கள் ( ஒரு ஆயிரம் ) இணையும்போது ஏறபட்ட மாற்றமே என்பது எனது கருத்து!
(6) ''ன்'' உடம்படுமெய்: தமிழில் செய்து வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களைப் பெறுவதற்கு, வினையடியோடு இறந்தகால விகுதிகளை இணைத்து, அவற்றோடு ''உ'' -வை இணைப்போம். ''படி-த்த் - உ' (படித்து). இங்கு இறந்தகால இடைநிலை வல்லின ஒற்றில் முடிந்ததால், குற்றியலுகரம் சேர்க்கப்படுகிறது. ''ஓடு+இன்+ஆன்'' என்ற வினைமுற்றுக்கு, செய்து வாய்பாட்டு வினையெச்சமாக ''ஓடின்'' என்பது வரவேண்டும். ஆனால்''ஓடி'' என்றுதான் வருகிறது. எனவே இறந்தகால விகுதியாக ''இ'' மட்டுமே. அப்படியென்றால், ''ன்'' என்பது என்ன? வினைமுற்றில் திணை எண் பால்விகுதிகள் ஆகாரத்தில் தொடங்குவதால் (ஆன், ஆள், ஆர், அது, அன) இறந்தகால விகுதிகளுக்குப்பின்னர், ''ன்'' ''ய்'' என்ற உடம்படுமெய்கள் தோன்றுகின்றன.
ஓடு -இ -ன்-ஆன் = ஓடினான் ; ஓடு -இ-ய்-அது = ஓடியது
எனவே ''ய்'' ''வ்'' போன்று ''ன்'' ஒற்றும் உடம்படுமெய்யாக வருகிறது. பேரா. சோ.ந. கந்தசாமி அவர்கள் 'இந்தோ+ ஆசியா = இந்தோனேசியா'' என்ற எடுத்துக்காட்டை எனக்குத் தந்து உதவினார். (ஆங்கிலத்திலும் ய்,வ் உடம்படுமெய்கள் உண்டு. Two eggs, three eggs என்பவற்றைச் சேர்த்து இடைவெளியில்லாமல் சொல்லிப்பாருங்கள். twovegs, threeyeggs என்று வரும்)
இதுபோன்று மொழியசை அமைப்பு விதிகள் மீறப்படாமல் இருப்பதற்காகவே பல சந்தி விதிகள் செயல்படுகின்றன என்பது எனது கருத்து. தற்போது மொழியியலில் " Optimality Theory" என்ற ஒரு கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோட்பாடானது மொழியசைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் சுமார் 20 ஆண்டுகளுக்குமுன் ( சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையில் நான் பணியாற்றியபோது) நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் தமிழுக்கு அந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்தி, மேற்கூறியவற்றை விளக்கினேன். பேராசிரியர்கள். ச. அகத்தியலிங்கம், பேரா. ச வே சுப்பிரமணியம், சோ.நா. கந்தசாமி, பொற்கோ உட்பட பல தமிழ், மொழியியல் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

புதன், 16 நவம்பர், 2016

தமிழில் மொழியசை விதிகள்

தமிழில் மொழியசை விதிகள்
 ------------------------------------------------------------------
தமிழ்ச் சொற்களில் ஓரசைச் சொற்களும் பல அசைகளைக்கொண்ட சொற்களும் இருக்கின்றன.

ஆ, ஈ, தா, பல், ஆண் - இவை அனைத்திலும் ஒரு உயிர் ஒலிதான் உள்ளது. ஆகவே இவை ஓரசைச் சொற்களே!
''ஆ'', ''ஈ'' இரண்டிலும் அசையின் உச்சியாகிய உயிருக்கு முன்னால் தொடக்கமாகவும், பின்னால் ஒடுக்கமாகவும் எந்தவொரு மெய்யும் வரவில்லை. எனவே இவற்றில் அசையின் உச்சி மட்டுமே அமைந்துள்ளது.
0 - ஆ -0 ; 0 - ஈ - 0;

''தா'' என்ற சொல்லில் த் என்று தொடக்கமாக ஒரு மெய்யும் அதையடுத்து ஆ என்ற உச்சியும் வருகின்றன.
த் - ஆ - 0;

''பல் '' என்ற சொல்லில் ப் என்ற தொடக்கமும் அ என்ற உச்சியும் ல் என்ற ஒடுக்கமும் வருகின்றன. 
ப் - அ - ல்;

''பார்த்-தான்'' என்ற சொல்லில் முதல் அசையில் தொடக்கமாக ''ப்' என்ற மெய்யும், அதையடுத்து உச்சியாக ''ஆ'' என்ற உயிரும் , அதையடுத்து ஒடுக்கமாக ''ர்த்'' என்று இரண்டு மெய்களும் வருகின்றன.
ப் -ஆ - ர்த் ;

தமிழில் அசையின் தொடக்கமாக ஒன்றுக்கு மேற்பட்ட மெய்கள் வராது. ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு, மூன்று மெய்கள் வரலாம் ( plan, screw).
ஆனால் தமிழில் அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வரலாம். அந்த இரண்டு மெய்களில் முதல் மெய்யாக ''ய்'' ''ர்'' ''ழ்'' ஆகியவற்றில் ஏதாவது ஒன்றே வரும். 
வாழ்த்-து ; பார்த்-து; வாய்க்-கால் . இவை இரண்டும் ஈரசைச் சொற்கள்! இடையில் உள்ள கோடு, அசைகளைப் பிரித்துக் காட்டுகிறது!

ஆனால் இறுதிஅசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் தமிழில் வராது. சொல்லிடையில் மட்டுமே ஒடுக்கத்தில் இரண்டு மெய்கள் வரலாம்.
சொல் முதல் எழுத்துகள்;
------------------------------------------
அடுத்து, தமிழ்ச்சொற்களில் முதல் அசையில் ( இது முக்கியம்) தொடக்கமாக மெய்யொலி வந்தால் எந்தெந்த மெய்கள் எல்லாம் வரும் என்பதை இலக்கண ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். க்,ச்,த்,ப் .... ஞ்,ந்,ம் ... ய்,வ் . மொத்தம் ஒன்பது மெய்கள்! இவைதான் சொல்முதல் எழுத்துகள் என்று கூறப்படுகின்றன. இன்றைய தமிழில் ர், ல் என்பவையும் அயல்மொழிக் கலப்பினால் வருகின்றன (ரப்பர், ரோடு, லட்டு, லட்சணம்). தமிழ் விதிப்படி இது தவறே!

சொல்லின் முதல் அசையில் தொடக்கமாக மெய் வராமல், உச்சியாகிய உயிர் மட்டும் தமிழில் வரலாம். 12 உயிர்களில் எதுவென்றாலும் வரலாம்.
சொல் இறுதி எழுத்துகள்:
---------------------------------------------
தமிழ்ச் சொற்களில் இறுதி அசையின் ( இது முக்கியம்) ஒடுக்கத்தில் மெய்கள் வந்தால், அவை ண்,ம்,ன் ... ய், ர், ல், ழ், ள் ( மொத்தம் எட்டு மெய்கள்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.. இவைபோக பழந்தமிழில் ஞ், ந், வ் ஆகியவையும் ( உறிஞ், பொருந், தெவ்) வரலாம். இவை இலக்கணத்தில் சொல்லிறுதி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இரண்டு மெய்கள் இறுதி அசையின் ஒடுக்கமாக வராது.

அதுபோன்று சொல் இறுதி அசையில் மெய்கள் ஒடுக்கமாக வராமல், உச்சி மட்டுமே வருமேயானால், ''எ'' என்ற உயிரைத்தவிர ஏனைய 11 உயிர்களும் வரலாம். ''எ'' -வில் தமிழில் எந்தச் சொல்லும் முடிவதில்லை!
இவ்வாறு தமிழ் இலக்கண ஆசிரியர்கள் சொல் முதல் அசையில் வருகிற தொடக்கம் (மெய்), உச்சி (உயிர்) பற்றியும் சொல் இறுதியில் வருகிற ஒடுக்கம் (மெய்), உச்சி (உயிர்) ஆகியவைபற்றித் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மெய் மயக்கங்கள்:
------------------------------
அடுத்து, அவர்கள் கூறியுள்ளது மிக முக்கியமானது ஆகும். சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் அமைந்தால், முந்தைய அசையின் ஒடுக்கமாக ஒரு குறிப்பிட்ட மெய் வந்தால், அதற்குப் பிந்தைய அசையின் தொடக்கமாக எந்த மெய் வரலாம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதை அவர்கள் மெய் மயக்கங்கள் என்று கூறியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக ஒரு அசையில் ''க்'' என்ற மெய் அசையின் ஒடுக்கமாக அமைந்தால் அதற்கு அடுத்த அசையின் தொடக்கமாக ''க்'' மட்டுமே அமையலாம். ''அக்கா'' என்ற சொல்லில் (அக் - க்ஆ ) முதல் அசை ''க்'' இல் முடிகிறது. அடுத்த அசை ''க்'' -இல் தொடங்குகிறது. வேறு எந்த மெய்யும் அடுத்த அசையின் தொடக்கத்தில் வராது.
உடனிலை மெய் மயக்கம்:
-----------------------------------------
இவ்வாறு ஒரே மெய்கள் வருவதை உடனிலை மெய்ம்மயக்கம் என்ற அழைப்பார்கள். க்,ச்,ட், த், ப் ,ற் (ஆறு வல்லினங்கள்) ..... ஞ்ஞ், ங்ங், ண்ண், ந்ந், ம்ம், ன்ன் (ஆறு மெல்லினங்கள்) ... ய்ய், ல்ல், வ்வ், ள்ள் ( நான்கு இடையினங்கள்) ஆகிய 16 மெய்கள் மட்டுமே இவ்வாறு வரும் ( அக்காள், அச்சம், பட்டம், பத்து, கப்பல் , குற்றம் .... மஞ்சை, இங்ஙனம், வண்ணம், முந்நூறு, அம்மா, அன்னை ... வெய்யில், எல்லாம், கொவ்வை, பள்ளம்) . ர், ழ் இரண்டுமட்டும் இவ்வாறு வராது. அதாவது ர் -ஐ அடுத்து இன்னொரு ''ர் வராது. ''ழ்'' ஐ அடுத்தும் இன்னொரு ''ழ்'' வராது!

வேற்றுநிலை மயக்கம்:
------------------------------------------
அவ்வாறு இல்லாமல், ஒரு அசையின் ஒடுக்கமாக வருகிற ஒரு குறிப்பிட்ட மெய்யுக்கு வேறுபட்ட ஒரு மெய் அடுத்த அசையின் தொடக்கமாக வரலாம். ஆனால் அதற்கும் கட்டுப்பாடு உண்டு. ''ட்'' என்பது முந்தைய அசையின் ஒடுக்கமாக இருந்தால், அடுத்த அசையின் தொடக்கமாக ''க்'' ''ச் '' ''ப்'' வரலாம் ( வேட்கை, கட்சி, தட்பம்) . வேறு எந்த மெய்யும் வராது. 'ட்த்'' , ட்ற்'' போன்றவற்றைத் தமிழில் பார்க்கமுடியாது. அவ்வாறு வந்தால் அது தமிழ்ச்சொல் இல்லை என்ற முடிவுக்கு வரலாம். இதுபோன்றவற்றை இலக்கண ஆசிரியர்கள் வேற்றுநிலை மயக்கங்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மெய்யுக்கும் இவ்வாறு அடுத்த எந்த மெய் வரும் என்பதைத் தெளிவாக இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.

இரண்டு மெய்கள் ஒடுக்கமாக வருதல்:
-------------------------------------------------------------
ஒரு அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வந்தால், அதன் முதல் மெய்யாக ''ய்'' ''ர்'' ''ழ்'' ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுதான் வரும். அடுத்த மெய்யாக ''ய்'' க்குப்பின் ம், ந்,ஞ்,ங்,ப்,த்,க்,ச் ஆகியவையும் ''ர்'' க்குப்பின் ந், ஞ், ங், ப், த், க், ச் ஆகியவையும் ''ழ்'' க்குப்பின் ம்,ந்,ஞ்,ங்,ப்,த்,க்,ச் ,ஆகியவையும் மட்டுமே வரும்.

இந்த இரண்டு மெய்கள் ஒடுக்கமாக வருகிற அசைக்கு அடுத்த அசையின் தொடக்கமாக , அந்த இரண்டாவது மெய்யோ அல்லது அதன் இன மெய்யோ வரலாம். வேறு எதுவும் வரமுடியாது. பேரா. பொற்கோ கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள்:
மெய்ம்மை, மொய்ம்பு,செய்ந்நன்றி, பாய்ந்தான், ஐஞ்ஞூறு, வேய்ஞ்சினை, வேய்ங்குறை, வாய்ப்பு, மொய்த்தது, வாய்க்கால், பாய்ச்சி, சேர்ந்து, ஈர்ஞ்சுனை, ஈர்ங்கை, தவிர்ப்பு, பார்த்து, சேர்க்கை, வளர்ச்சி, பாழ்ம்புதூர், சூழ்ந்து, பாழ்ஞ்சுனை, பாழ்ங்கிணறு, காழ்ப்பு, வாழ்த்து, வாழ்க்கை, வீழ்ச்சி.
மேற்கூறியவற்றில் பல இன்றைய தமிழில் வருவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். 
 மேலும் சொல்லின் இறுதி அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வராது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே, தமிழ்ச் சொற்கள் மேற்கூறிய விதிகளுக்கு - மொழியசை விதிகளுக்கு - உட்பட்டே அமையமுடியும். மாறாக அமைந்தால், அது தமிழ்ச் சொல் இல்லை என்ற முடிவுக்கு வரலாம். தமிழில் புதிய சொற்களை உருவாக்கும்போது, மேற்குறிப்பிட்ட அசைவிதிகளுக்கு - தமிழ் மரபுக்கு - உட்பட்டே உருவாக்கவேண்டும்.
இந்த மொழியசை விதிகளைத் தக்கவைக்கவே உடம்படுமெய் போன்ற சந்திவிதிகள் நிலவுகின்றன. நாளை அதுபற்றிப் பார்க்கலாம்!
இன்றும் கட்டுரை தவிர்க்க இயலாமல் நீண்டுவிட்டது! ஒரு பதிவில் ஒரு கருத்தை முழுமையாகக் கூறிவிட வேண்டும் என்ற அடிப்படையே ( ''பேராசையே'') இதற்குக் காரணம்! மன்னிக்கவும்! தவறு ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டவும்! தமிழ்க் கணினிமொழியியலுக்கு இது மிகவும் பயன்படும்!

தமிழில் மொழியசையும் யாப்பசையும்!

தமிழில் மொழியசையும் யாப்பசையும்! 
--------------------------------------------------------------------------------------
யாப்பிலக்கணத்தில் நேரசை, நிரையசை என்று பாரக்கிறோம். இதை யாப்பசை ( Prosodic Syllable) என்று கூறலாம். செய்யுள்களின் அமைப்பு அல்லது ஓசைக்கு இந்த அசை என்ற அலகு மிக அடிப்படையானது.
நேரசையில் ஒரு உயிர் மட்டுமே வரும் ( உல-கு, உல-கம், பா, பால்). கு, கம் என்பதில் ஒரு உயிரே வருகின்றது.
நிரையசையில் இரண்டு உயிர்கள் வரும் ( படி, படம், நிலா, விளாம்). இது யாப்பசையின் விதிகள்!
மொழியசை ( Linguistic Syllable) என்ற ஒன்று எல்லா மொழிகளிலும் உள்ளது. உயிரை அடிப்படையாகக்கொண்டே இந்த மொழியசை அமைகிறது. ஒரு உயிர் இருந்தால் ஒரு அசை. இரண்டு உயிர்கள் இருந்தால் ஈரசை. முதலில் குறிப்பிட்ட யாப்பு நேரசையில் ஒரு உயிரே இருக்கிறது. எனவே இது மொழியசை போன்று அமைந்துள்ளது. ஆனால் நிரையசையில் இரண்டு உயிர்கள் உள்ளன. எனவே மொழியசைப்படி, இது இரண்டு அசைகளைக் கொண்டது.
ஏன் உயிரை அடிப்படையாகக்கொண்டு மொழியசை அமைகிறது? உயிர் எழுத்துகள் தனித்து இயங்குபவை. காரணம், மூச்சுக்குழாயிலிருந்து வாயில் நுழைகிற காற்று, தடைசெய்யப்படாமல், அதில் ஒரு பேச்சொலி பிறந்தால், அது உயிர் ஒலி. வாயைத் திறந்து காற்றை வெளிவிட்டாலே உயிர் பிறந்துவிடும். தமிழில் 12 உயிர்களும் இத்தகையதே!
ஆனால் மெய் ஒற்று அவ்வாறு இல்லை. தமிழில் 18 மெய் ஒற்றுகளும் மூச்சுக்குழாயிலிருந்து வாயில் நுழைகிற காற்றைத் தடை செய்வதால் பிறக்கிற ஒலிகளாகும். பல வகைத் தடைகளுக்கேற்ப , பலவகை மெய்கள் அமைகின்றன. இங்குக் கவனமாகப் பாரக்கவேண்டியது.. மெய்களுக்கான காற்று தடைசெய்யப்படுவதால், அந்த மெய்கள் நமது காதில் விழாது. அதற்கு நாம் வாயைத் திறந்து, அந்தக் காற்றை வெளியிடவேண்டும்.
ஆனால் வாயைத் திறந்தாலே உயிர் ஒலி பிறந்துவிடும். எனவேதான் எந்தவொரு மெய் எழுத்தும் ஏதாவது ஒரு உயிரோடுதான் பிறக்கும். ''க்'' என்பதைக் கூறிப் பாருங்கள்! ஒன்று முதலில் ''இ' என்ற உயிரொலியோடுதான் ''இக்'' என்று கூறுவீர்கள் அல்லது ''அ'' என்ற உயிரொலியோடுதான் 'க'' என்று கூறுவீர்கள். உயிர் ஒலி தனித்து இயங்குவதற்கும், மெய்யானது உயிரைச் சார்ந்து இயங்குவதற்கும் இதுதான் அடிப்படை.
ஒரு சொல்லை நாம் கூறும்போது, அந்தச் சொல்லில் எத்தனை உயிர் ஒலிகள் இருகிறதோ, அத்தனை தடவை நாம் வாயைத் திறந்து காற்றுக் கற்றை அல்லது காற்றுக்கொத்தை வெளியிடுகிறோம். வாய்த் திறப்பின் எண்ணிக்கையை உயிர் ஒலிகள்தான் தீர்மானிக்கின்றன. மெய் ஒலிகள் இல்லை !
இப்போது மொழியசைக்கு வருவோம்! ஒரு உயிரொலிக்கு முன்னும் பின்னும் மெய் ஒலிகள் வரலாம். உயிரொலிக்கு முன்னால் வரும் மெய்யை அசையின் தொடக்கம் (Onset) என்றும் பின்னால் வரும் மெய்யை அசையின் ஒடுக்கம் ( Coda) என்றும் அழைப்பார்கள். அசையின் உயிரைச் சிகரம் அல்லது உச்சி ( Peak) என்று அழைப்பார்கள். ஆகவே அசையின் உறுப்புகள் மூன்று - தொடக்கம், உச்சி, ஒடுக்கம்!
ஒரு மொழியசையில் உச்சி நிச்சயமாக இருக்கும். இருக்கவேண்டும். ஆனால் அசையின் தொடக்க மெய்யோ, அல்லது ஒடுக்க மெய்யோ வரலாம், வராமலும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ''ஈ'' ''ஆ'' என்ற தமிழ்ச்சொற்களில் உச்சி - உயிர் மட்டுமே வந்துள்ளது. ''போ'' ''வா'' ''தா'' என்பவற்றில் தொடக்கம், உச்சி இரண்டும் வருகின்றன. ஆனால் ஒடுக்கம் இல்லை. ''ஆள்'' , ''ஊர்'' ஆகியவற்றில் உச்சி, ஒடுக்கம் இரண்டும் இருக்கின்றன. ஆனால் தொடக்கம் இல்லை. ''பல்'' ''கால்'' ஆகியவற்றில் தொடக்கம், உச்சி, ஒடுக்கம் மூன்றும் வருகின்றன.
தமிழில் ஒரு மொழியசையின் தொடக்கமாக ஒரு மெய் மட்டுமே வரமுடியும். ஆனால் ஒடுக்கத்தில் இரண்டு மெய்கள் வரலாம் ''வாழ்த் - து, வாய்க் - கால், பார்த் -தான் ஆகிய மூன்று சொற்களிலும் முதல் அசைகளில் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வருவதைப் பார்க்கலாம்.
எனவே எழுத்துகள் ( உயிர், மெய் ) பொருள் தரும் சொற்களாக அமையும்போது, மொழியசைகளாக அமைந்துதான், சொற்களாக மாறுகின்றன. எவ்வாறு சொற்கள் (Words)தொடர்களாக ( Phrase) அமைந்து, பின்னர் வாக்கியமாக ( clause/ sentence ) அமைகிறதோ, அதுபோல எழுத்துகளும் மொழியசைகளாக அமைந்துதான் சொற்களாக மாறுகின்றன. அதாவது ஒரு சொல்லில் தனி எழுத்துகளுக்கும் சொல்லுக்கும் இடையில் அசை - மொழியசை- என்ற ஒரு அலகு - அமைப்பு உள்ளது.
ஒவ்வொரு மொழியும் தனக்கென்று மொழியசை அமைப்பு விதிகளைக் கொண்டுள்ளது. மொழிகளிடையே வேறுபாடுகளுக்கு முதல் காரணம், மொழியசை அமைப்பே!
தமிழ்மொழியில் மொழியசையின் தொடக்கத்தில் ஒரு மெய்தான் வரும் என்று பார்த்தோம். ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு, மூன்று மெய்கள் வரலாம் .... slip, plot இரண்டு மெய்கள், screw மூன்று மெய்கள் தொடக்கமாக அமைகின்றன. ஒடுக்கத்தில் ஆங்கிலத்தில் இரண்டு மெய்கள் வருவதுபோல ( camp, womb) தமிழிலும் இரண்டு மெய்கள் வரலாம் ( வாழ்த்-து, வாய்க்-கால்). ஆங்கிலத்தில் சில மெய்கள்கூட அசை உச்சியாக வரும். bootle என்ற சொல்லின் உச்சரிப்பில் இரண்டாவது அசையில் ஒரு மெய்மட்டுமே உச்சியாக அமைகிறது.
தமிழ் மொழியசைகளில் எந்த ஒலிகள் - எழுத்துகள் - தொடக்கத்தில் வரலாம், ஒடுக்கத்தில் வரலாம், உச்சியாக வரலாம் என்பதை விளக்குவதே தொல்காப்பியரின் நூன்மரபு, மொழிமரபு இயல்களும் நன்னூலாரின் எழுத்தியலும் ஆகும். . மொழியசை என்று தொல்காப்பியரோ நன்னூலாரோ நேரடியாகக் கூறவில்லை. ஆனால் சொல்முதல், சொல் இறுதி, மெய் இரட்டித்தல் ( உடனிலை மயக்கம், வேற்றுநிலை மயக்கம்) ஆகியவைபற்றி விரிவாகக் கூறியுள்ளார்கள். கட்டுரை நீண்டுவிட்டது மன்னிக்கவும். நாளை தொடரலாம்!
தமிழ்ச் சந்தி விதிகளுக்கு ஒரு மிக முக்கியமான அடிப்படை இந்த மொழியசை அமைப்புக் கட்டுப்பாடுகள் அல்லது விதிகளே ஆகும்!

செவ்வாய், 15 நவம்பர், 2016

சந்தி - உடம்படுமெய்

5) நாம் முன்பு பார்த்துள்ள ஆறு கட்டாயச் சந்தி 
விதிகளுடன் இன்று மேலும் ஒன்றைச் 
சேர்த்துக்கொள்ளலாம்.
தமிழில் ஒரு சொல்லுக்குள் ஒரு உயிர் எழுத்தை 
அடுத்து இன்னொரு உயிர் எழுத்து வராது. அவ்வாறு வருமிடத்தில் அந்த இரண்டு உயிர்களுக்குமிடையில் ஒரு இடையின மெய் - ''ய்'' அல்லது ''வ்'' - தோன்றும். இந்த இரண்டு மெய்களின் தோற்றத்தையே உடம்படுமெய் தோற்றம் என்று இலக்கணத்தில் அழைக்கின்றனர்.
''கிளி'' என்ற சொல்லோடு ''ஆ'' என்ற வினா விகுதி இணையும்போது, ''கிளியா? '' என்று அமைகிறது.
கிளி +ய்+ஆ = கிளியா?
''பூ'' என்ற சொல்லோடு '''ஆ '' என் வினா விகுதி இணையும்போது, ''பூவா?'' என்று அமைகிறது.
பூ + வ்+ ஆ - பூவா?

இ , ஈ , ஐ, ஏ (4 உயிர்கள்) - நிலைமொழி இறுதி:
---------------------------------------------------
தமிழில் நிலைமொழிகளின் இறுதியில் இ, ஈ, ஐ, ஏ ஆகிய உயிர்களில் ஏதாவது ஒன்று வந்து, வருமொழியில் ஏதாவது ஒரு உயிரைக்கொண்டு தொடங்கும் விகுதி வந்து ஒரு சொல்லாக அமையும்போது, இடையில் ''ய்'' உடம்படுமெய் தோன்றும்.
கிளி + ஆ = கிளியா? (''இ'' இறுதி)
தீ + ஆ = தீயா? (''ஈ'' இறுதி) 
வளை + ஓசை = வளையோசை (''ஐ'' இறுதி)
பொருளே + இல்லை = பொருளேயில்லை (''ஏ'' இறுதி)

அ, ஆ, ஊ, ஓ ( 4 உயிர்கள்) - நிலைமொழி இறுதி:
-------------------------------------------------------------------------------
தமிழில் நிலைமொழிகளின் இறுதியில் அ,ஆ, ஊ, ஓ ஆகிய உயிர்களில் ஏதாவது ஒன்று வந்து, வருமொழியில் ஏதாவது உயிரைக்கொண்டு தொடங்கும் விகுதி வந்து ஒரு சொல்லாக அமையும்போது, பெரும்பாலும் இடையில் ''வ்'' உடம்படுமெய் தோன்றும். சில இடங்களில் யகரமும் வரலாம்.
வர + இல்லை = வரவில்லை (''அ'' இறுதி)
மா + இல் = மாவில் (''ஆ'' இறுதி)
பூ + இதழ் = பூவிதழ் (''ஊ'' இறுதி)
கோ + இல் = கோவில் / கோவில் (''ஓ'' இறுதி)
எ, ஒ , ஔ என்ற மூன்று உயிர்களும் நிலைமொழியின் இறுதியில் வருவது இல்லை. (ஔ என்பதும் கௌ, வௌ என்பதும் ஓரெழுத்து ஒருமொழிகளில் தவிர, வேறு எந்த இடத்திலும் சொல்லின் இறுதியில் வருவது கிடையாது - சிங்கப்பூர் சித்தார்த்தன்)

முற்றியலுகரம் நிலைமொழி இறுதியாக வரும்போது...
--------------------------------------------------------------------------------------
அது + அல்ல = அதுவல்ல
அது + உம் = அதுவும்
சில இடங்களில் இறுதிக் குற்றியலுகரம்போன்று உடம்படுமெய்யும் வரும்.
அது + ஏ = அதுவே ....... அது + ஏ = அதே
அது + அல்ல = அதுவல்ல --- அது+ அல்ல = அதல்ல
ஆனால் நடு, மடு,வடு போன்ற சொற்களில் உடம்படு மெய் தவறாமல் வருகிறது. ( சிங்கப்பூர் சித்தார்த்தன்)
மடு + ஆ = மடுவா 
வடு + ஆ = வடுவா 
பசு + எங்கே = பசுவெங்கே ;
கொசு + எங்கே = கொசுவெங்கே
இவ்வாறு உயிரை அடுத்து உயிர் வரும்போது, இடையில் உடம்படுமெய்கள் - ய்,வ் ஏன் வருகின்றன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். தமிழின் ஒரு மிகச் சிறப்பான பண்பு அது!
இன்று சிலர் ''குடிஅரசு'' ''வாழைஇலை'' என்றெல்லாம் எழுதுகிறார்கள். இது தவறு. ''குடியரசு'' ''வாழையிலை'' என்றுதான் எழுதவேண்டும்.
'குற்றியலுகரப் புணர்ச்சிபற்றியும் தனியே எழுதவேண்டும்!
மொத்தம் உயிர் 12 (+ஆய்தம்)! இவற்றில் .....
இ, ஈ, ஐ, ஏ, ----- அ, ஆ, ஊ, ஓ ----- முற்றியலுகரம்
-------- குற்றியலுகரம் என்று நான்கு பிரிவுகளாகப் பார்க்கலாம். ஏனைய எ,ஒ, இரண்டும் நிலைமொழியின் இறுதியில் வருவதில்லை! ஔ என்பது ஓரெழுத்து ஒருமொழியில் மட்டுமே வரும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India