பள்ளிக்கல்வியில் மும்மொழித்திட்டம் எதற்கு?
--------------------------------------------------------------------------
'நாங்கள் மூன்றாம் மொழியாக இந்திமொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறவில்லை . . . தாய்மொழி, ஆங்கிலம் அல்லாத ஏதாவது ஒரு மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் கூறுகிறோம்' என்று நடுவண் அரசின் அமைச்சர் கூறுகிறார். எனவே இது 'இந்தித்திணிப்பு இல்லை' என்று கூறுகிறார்.
மூன்றாவது மொழிக்கு என்ன தேவை? ஆனால் புதிய கல்விக்கொள்கை (மும்மொழித்திட்டம் என்று முதலில் எழுதிவிட்டேன். அது தவறு. அதைச் சுட்டிக்காட்டிய பேரா. கோ. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி) என்பது 2010 -ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது. அப்போது இருந்த நடுவண் அரசு காங்கிரஸ் அரசுதான். எனவே, மும்மொழித்திட்டம்பற்றித் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலைபாடு என்ன?
அடுத்து, புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழியே குறைந்தது ஐந்தாவது வகுப்புவரை நீடிக்கவேண்டும் என்பதுபற்றித் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழ் நாடு அரசு ஆகியவற்றின் நிலைபாடு என்ன?
மொழிக்கொள்கையில் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் . . .
தமிழ்நாட்டில் தமிழ்மொழியே பள்ளிகளில் பயிற்றுமொழி என்பதை முழுமையாகத் தமிழ்நாடு அரசு அமுல்படுத்தவேண்டும். ஆங்கிலத்தை அருகருகே வைத்துக்கொண்டு, தமிழைப் பயிற்றுமொழியாகச் செயல்படுத்துவது கடினமே.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்திலும் தமிழ்மொழியே - தமிழ்மொழிமட்டுமே - பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்பதில் உறுதி தேவை.
ஆங்கிலம் ஒரு விருப்பமொழியாகமட்டுமே நீடிக்கவேண்டும். பயிற்றுமொழியாக நீடிக்கக்கூடாது.
அப்போதுதான் மாணவர்களின் அறிவுத்திறனும் வளரும். தமிழ்மொழியும் தனக்குரிய மதிப்பைப் பெறமுடியும்.
அடுத்து, உயர்கல்வியிலும் அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தமிழ் பயிற்றுமொழியாக ஆக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் - பெயரளவுக்கு இல்லாமல் - மிகத் தீவிரமாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆங்கிலமும் அயல்மொழியே என்ற உணர்வும் தெளிவும் இங்கு ஏற்படவேண்டும்.
மூன்றாவது மொழியும் கட்டாயத் தேவை இல்லை! இரண்டாவது மொழியும் கட்டாயத் தேவை இல்லை! மேலும் உறுதியாக ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கக்கூடாது.
தேவைப்படுபவர்களுக்கு ஆங்கிலத்தை ஒரு மொழியாக நன்கு கற்றுக்கொடுக்கட்டும். தமிழில் படித்த பாடங்களை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தும் திறன் மாணவர்களுக்கு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட வகுப்புவரை - அல்லது உயர்நிலைப்பள்ளிவரை - ஆங்கிலத்தை ஒரு பொதுநிலையில் (English for General Purpose - General English) கற்றுக்கொடுக்கட்டும்.
உயர்கல்விக்குச் செல்லும்போது, துறைசார்ந்த ஆங்கிலக்கல்வியை அளிக்கட்டும். 'அறிவியலுக்கான ஆங்கிலம்' 'பொருளாதாரத்திற்கான ஆங்கிலம்' 'இலக்கியத்திற்கான ஆங்கிலம்' என்று English for Special Purpose (ESP) , English for Science and Technology (EST) என்ற அடிப்படையில் கற்றுக்கொடுக்கலாம்.
பயிற்றுமொழிக்கும் மொழிக்கல்விக்கும் இடையில் உள்ள வேறுபாடு தமிழ்நாட்டில் சரியாக உணர்த்தப்படவில்லை! துறைரீதியான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிற அல்லது கற்றுக்கொள்கிற மொழியே பயிற்றுமொழி! அவ்வாறு இல்லாமல் ஒரு மொழியை மொழியாக - மொழித்திறனுக்காக - கற்றுக்கொள்கிற மொழிக்கல்வி வேறு! இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
இதுதான் சரியான - ஜனநாயக முறையிலான - கல்விக்கொள்கையாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக