மார்க்சிய ஆய்வுமுறை
நான் குறிப்பாக, தமிழ் இலக்கியம், மொழி, பண்பாடு, சமூகவியல் போன்ற துறைகளுக்கான மாணவர்களுக்குத் தேவையான ஆய்வுநூல்களைப் பரிந்துரைத்துள்ளேன். நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் எல்லோரும் தங்கள் தத்துவக் கண்ணோட்டத்தில் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். நானும் ஒரு மார்க்சியவாதிதான். வெளிப்படையாகக் கூறுகிறேன்.
நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கல்வித்துறையில் பேராசிரியர்கள். சிறந்த ஆய்வாளர்கள். அவர்கள் மார்க்சிய ஆய்வுமுறைகளைப் பின்பற்றிய காரணத்தால்தான் தங்கள் துறைகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை முன்வைக்கமுடிந்தது. அறிவியலில்கூட ஜே டி பர்னால், ஜோசப் நீதாம் போன்றவர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை முன்வைத்துள்ளார்கள். சமூக இயக்கத்தோடு அறிவியலைப் பிணைத்துப் பார்த்த காரணத்தினால்தான் அவர்களால் தங்கள் துறைகளில் சாதனைபுரிய முடிந்தது.
மார்க்சியமானது பொருளாதாரம், அரசியல் என்பதைத் தாண்டி , எந்த ஒன்றையும் - இயற்கையோ சமுதாயமோ, மனமோ எது என்றாலும் சரி - புறவயமாக ஆய்வுசெய்வதற்கான ஒரு ஆய்வுமுறை. ''இயற்கையின் இயங்கியல் (Dialectics of Nature), லெனினின் ''பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும் ( Materialism and Empirio-criticism) ஆகிய நூல்கள் அறிவியல் ஆய்வுக்கு மிகவும் பயன்படும்.
ஆய்வு மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்கிற நூல்கள் இவை. இவையெல்லாம் மார்க்சிய ஆய்வுமுறைகளை ஏற்றுக்கொண்டவைதான். நான் மறுக்கவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. மூடிமறைக்கப் போர்வைகள் தேவை இல்லை.
என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு ஆய்வுக்கும் மார்க்சிய ஆய்வுமுறை மிகவும் பயன்படும். தாங்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆய்வுமுறைகளை முன்வைக்கிற நூல்களை ஆய்வுமாணவர்களுக்குப் பரிந்துரைக்கலாம். நான் வேண்டாம் என்று கூறவில்லை.
பொருள்முதல்வாதத்தை (Materialism) இயங்கியல் (dialectics) நோக்கில் முழுமைப்படுத்தியது மார்க்சியமே என்பது எனது கருத்து. மார்க்சியத்தின் தத்துவக் கண்ணோட்டம் இயங்கியல் பொருள்முதல்வாதம் (Dialectical materialism) . ஹெகல் (இயங்கியல் கருத்துமுதல்வாதம்) முன்வைத்த இயங்கியலும் பியூர்பக் (இயங்கியலுக்கு அப்பாற்பட்ட பொருள்முதல்வாதம்) முன்வைத்த பொருள்முதல்வாதமும் மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்திற்கு அடிப்படை. இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை முழுமையாக முன்வைத்தது மார்க்சியமே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக