கருத்தாடல் வெற்றிபெற . . . தேவைப்படும் நான்கு கூறுகள்
-------------------------------------------------------------------------------------------------
பேச்சுவழியோ எழுத்துவழியோ நாம் உரையாடல்களை நிகழ்த்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று . . . ஒருவர் ஒன்றைப்பற்றிய தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது ஆகும். இந்த வெளிப்படுத்தலில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று மற்றவர்களுக்குச் சில செய்திகளை அளிப்பது . . . மற்றொன்று ஒன்றைப்பற்றிய தெளிவைப் பெறுவதற்காக ஒன்றுக்குமேற்பட்டவர்கள் கருத்தாடல்களை மேற்கொள்வது ஆகும்.
மேலும் குறிப்பிட்ட கருத்தாடல் தனது முடிவுக்கு வரும்வரை நீடிக்கவேண்டும் என்பதைக் கருத்தாடலில் ஈடுபடுபவர்கள் மனதில் கொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்பற்றி
சமூகமொழியியலாளர் கிரைஸ் (Grice) என்பவர் நான்கு கருத்துக்களை முன்வைக்கிறார். இவற்றைக் கருத்தாடலின் வெற்றிக்கான ''நல்லுறவுக் கோட்பாடுகள் (Principles of Co-operation)'' என்று அவர் அழைக்கிறார்.
(1) அளவு (Quantity) : ஒருவர் தமக்குமுன் நின்று உரையாடுபவருக்குக் குறிப்பிட்ட ஒன்றைப்பற்றி என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். முன் நிற்பவருக்கு மிகவும் தெரிந்த ஒன்றைக் கூறினாலும், முன் நிற்பவருக்குச் சலிப்பு ஏற்படும். அதேவேளையில் அவருக்குத் தெரியாததை அவருக்குத் தெரியும் என்று கருதி, சிலவற்றைக் கூறாமல் விடுவதும் தவறு ஆகும். அதாவது ஒரு கருத்தை விளக்குவதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் பேசவேண்டும். கூடவோ குறைவாகவோ பேசினால் கருத்தாடல் எதிர்பார்த்த வெற்றியை அடையாது. எனவே இதில் ஒருவர் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
(2) பண்பு (Quality) : அடுத்து, ஒருவர் தமது கருத்தாடலில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தேவையான தரவுகளோடு முன்வைக்கப்படவேண்டும். இவர் கூறுவது உண்மைதான் என்று ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவேண்டும்.
(3) தொடர்பு (Relevancy) : மூன்றாவது, பேசப்படும் கருத்துக்குத் தொடர்பு இல்லாதவற்றைப் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. இதுவும் கருத்தாடலைத் தோல்விக்கே இட்டுச் செல்லும்.
(4) விளம்பும்முறை (Manner): நான்காவது, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஒருவர் தமது உரையாடலில் மேற்கூறிய மூன்று கூறுகளையும் சரிவரப் பின்பற்றினாலும், கருத்தாடலில் தேவையான நெறிமுறைகள், பண்புகளோடு தமது கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும். தமக்கு முன்நிற்பவருக்குப் பேசப்படுகின்ற கருத்தில் தெளிவு இருக்காது, தமக்குத் தெரிந்த அளவு அவருக்குத் தெரியாது என்று கருதிக்கொண்டு கருத்தாடலில் ஈடுபட்டால், உறுதியாகக் கருத்தாடல் தோல்வி அடையும்.
கருத்தாடல்பற்றிய மேற்குறிப்பிட்ட நான்கு கூறுகளையும் பின்பற்றினால் எந்தவொரு கருத்தாடலும் வெற்றிபெறும். குறிப்பாக, ஆய்வுலகத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியும்.
ஒன்றைப்பற்றிய விவாதங்களில் மிக முக்கியமானது . . . ஒருவர் தமது கருத்துக்களை முழுமையாகக் கூற மற்றவர் அவரை அனுமதிப்பதாகும். இடையிடையே குறுக்கீடு கூடாது. அடுத்து, அவர் பேசிமுடித்தவுடன் அவர் கூறிய கருத்துக்கள் இது இதுதான் என்பதை அவரிடம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர் 'நான் அப்படிக்கூறவில்லை, இப்படிக்கூறவில்லை'' என்று கூறுவதற்கு வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்கவேண்டும். அடுத்ததாகத்தான், மற்றவர் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும்.
ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் தேவையானவை மேற்கூறிய கருத்துக்கள் ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக