தமிழ்நாட்டு மக்களின் ''கல்விக்கண்களைத் '' திறந்தது யார்? முகநூலின் இன்னொரு பதிவில் நான் பதிவிட்ட ஒரு கருத்து!
----------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி என்ற கற்றல் குறிப்பிட்ட சமுதாய அமைப்பைச் சார்ந்தது. தனிநபர்களின்
விருப்புவெறுப்புக்களைப் பொறுத்தது இல்லை. முதலாளித்துவ சமுதாய அமைப்பில் . . .
நிறம், மதம், மொழி தாண்டி . . . உழைப்புச்சக்தியை விலைகொடுத்து வாங்குவதே முதலாளித்துவ
வர்க்கத்தின் நோக்கம். இந்த நோக்கமும் போக்கும் முதலாளித்துவ சமுதாயத்திற்கு
முந்தைய சமுதாய அமைப்பில் நிலவவில்லை. அதற்குக் காரணம் அவற்றின் அடிப்படைச்
சுரண்டல் தன்மை . . . மனிதனையும் அவனு உழைப்பையும் மொத்தமாக விலைக்கு வாங்குவது
(அடிமைச் சமுதாயம்). அல்லது உழைப்பாளியின் ''உழைப்பை'' விலைக்கு வாங்குவது
(நிலவுடைமைச்சமுதாயம்) என்பதாகும். அதற்கேற்பவே அச்சமுதாயங்களில் ''கல்வி'' ''அறிவு'' ஆகியவை நிறம்,
மதம், மொழி போன்றவற்றைச் சார்ந்து இருந்தன.
அதுபோன்று முதலாளித்துவ உற்பத்திமுறைக்குத் தேவையான ''அறிவு சார்ந்த உழைப்புசக்தியை'' தங்களின் நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்க முதலாளித்துவ
வர்க்கம் விரும்பியது. இந்த ''அறிவுசார்ந்த
உழைப்புச்சக்தியை'' நிறம், மதம், மொழிதாண்டி ''உருவாக்குவதே''
முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கம்.
அதையொட்டியே முறைசார் கல்வி தோற்றுவிக்கப்படுகிறது.
முதலாளித்துவ வர்க்கம் தனது நாடு தாண்டி, காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தும்போது, அந்தக் காலனி நாடுகளிலும் தனக்குத் தேவையான
அளவுக்கு ''முறைசார் கல்வியை''
செயல்படுத்தியது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆங்கிலேய முதலாளித்துவத்தின் ''காலனி ஆதிக்க நோக்கத்தை" நிறைவேற்றுவதற்கு
மெக்காலேயைப்போன்ற ''ஆங்கிலேய
அறிவாளிகள்'' பலர் களம்
இறக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியே இன்று இந்தியாவில் நிலவும் முறைசார் கல்வி. இந்த
முறைசார் கல்வி நிறுவனத்தின் உச்சகட்ட வளர்ச்சி நிறுவனமே ஐ ஐ டிகள்!
மேலும் தற்போதைய ஏகாதிபத்திய வளர்ச்சி நிலையில் . . . உலகெங்கும் உள்ள
ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு இந்திய ''அறிவுசார்ந்த உழைப்பைத் தரும்'' படிப்பாளிகளை இங்கு உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும் ''உற்பத்தி செய்கின்றன''! அவர்களைப் பலவகைகளில் ''பணிசெய் அனுமதி (Work permit) , ஹைச் 1 விசா (H1B
Visa) போன்றவற்றைக் கொடுத்து, இந்தியாவிலிருந்தே கடத்திச்செல்கின்றன ஏகாதிபத்தியங்கள்!
இங்கு நிலவுகிற வேலையில்லாத் திண்டாட்டமும் மேலைநாடுகளில் கிடைக்கிற ''வசதிகளும்'' அதற்கு உதவுகின்றன!
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மாகராஷ்டிரம், குஜராத் போன்ற எந்தவொரு மாநிலமும் விதி விலக்கு இல்லை! இந்த நோக்கில்
தமிழ்நாட்டிலும் தோன்றி வளர்ந்து நீடிக்கிற ''முறைசார் கல்வி வளர்ச்சியைப் '' பார்க்காமல், நீதிக்கட்சி, காங்கிரஸ்கட்சி,
திராவிடக்கட்சிகள் போன்றவைதான்
தமிழ்நாட்டுக்குக் ''கல்விக்கண்''
கொடுத்தார்கள் என்ற அடிப்படையில் விவாதிப்பது .
. . ஏகாதிபத்தியங்களின் காலனி, அரைக்காலனி. நவீன
காலனித்துவ '' மோசடி நோக்கங்களை''
திரையிட்டு மறைப்பதாகவே அமையும். அதுமட்டுமல்ல,
ஆங்கிலேய முதலாளித்துவ, ஏகாதிபத்தியத்தின் காலனித்துவ ''முறைசார் கல்விக்கு'' சாம்பிராணி போட்டவையே மேற்குறிப்பிட்டவை எல்லாம்! அந்தப் ''பட்டத்தையும் மதிப்பையும்'' வேண்டுமென்றால் அவற்றிற்குக் கொடுக்கலாம்!
அவ்வளவுதான்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
எந்தவொரு பிரச்சனையையும் சமுதாயத்தின் இயங்கியல் அடிப்படையில்
ஆய்வுசெய்யவேண்டும் ! அந்த இயக்கத்தின்போது சில தனிநபர்களுக்குச் சில முக்கியப்
பங்கு இருக்கலாம்! அந்த முக்கியப் பங்குகளையும் அவர்களுக்குக் கொடுப்பது அவர்கள்
வாழ்ந்த சமுதாய அமைப்பே என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். அவ்வாறு பார்க்காமல்,
''இவர்'' செய்தார், 'அவர்'' செய்தார் என்று கூறுவது வரலாற்றைத்
தீர்மானிப்பது தனிநபர்கள் இல்லை, மாறாக சமுதாய
அமைப்பே என்பதை மறைப்பதே ஆகும். அறிவியல் கண்டுபிடிப்புகளும் அப்படியே. ஒரு
அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தேவையை உருவாக்குவதும் அதற்குரிய வசதி வாய்ப்புக்களை
அளிப்பதும் அப்போது நிலவுகிற சமுதாய அமைப்பே. ஒரு நியூட்டன் கண்டுபிடிப்பு அல்லது
ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு 10 -ஆம் நூற்றாண்டில்
ஏற்பட்டிருக்கமுடியாது. அப்போது அதற்கான தேவையும் வளரவில்லை . . . அதற்கான வசதி
வாய்ப்புச் சூழலும் கிடையாது!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனித சமுதாயத்தின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் எவ்வாறு நிகழ்கின்றன, அவற்றில் சமுதாய அமைப்பின் பங்கு என்ன, தனிநபர்கள் பங்கு என்ன ஆகியவற்றைத் தெளிவாகப்
புரிந்துகொள்ள ஆர்வமுடைய நண்பர்கள் உறுதியாகப் படிக்கவேண்டிய இரண்டு நூல்கள் . . .
Science and Civilization in Ancient China (by Joseph Needham) , Science
in History ( J D Bernal). இந்தியாவில் நிலவிய
சூழல்பற்றித் தெரிந்துகொள்ள தேபி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைப் படிக்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக