வியாழன், 8 ஜூலை, 2021

மொழியியல் தமிழாய்வுக்கு எதிரானதா?

 வினா : மொழியியல் தமிழ்மொழிக்கு எதிரானது, அது உண்மையான தமிழ்மொழி ஆய்வுக்கு எதிரானது என்று கூறப்படும் கருத்து சரியா?

விடை: இல்லை. பிற அறிவியல்கள்போன்று சமூக வளர்ச்சியில் தேவையையொட்டித் தோன்றி வளர்ந்துள்ள ஒரு அறிவியல்தான் மொழியியல். குறிப்பிட்ட மொழிபற்றிய ஆய்வாக இல்லாமல், பொதுவாக ‘மனித மொழி’ என்பதை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கின்ற ஒரு அறிவியலே இது. ஆய்வுகளுக்குக் கருதுகோள்களை முன்வைப்பது, அவற்றின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது, அந்த ஆய்வுகளின் அடிப்படையில் மொழிபற்றிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் முன்வைப்பது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் மொழியியல். மொழியின் அமைப்பைப்பற்றி மட்டுமல்லாமல், மொழிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு, மொழிக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு, மொழிக்கும் மனித மனத்திற்கும் உள்ள தொடர்பு என்று பல முனைகளில் வளர்ந்துள்ளது மொழியியல். இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டில்தான் இத்துறை அறிமுகமாகியது. பூனே டெக்காண் கல்லூரியில்தான் இந்த அறிவியலைப் பயிற்றுவிக்கும் கோடைகாலச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. அதில் பயின்ற அல்லது பயிற்சியாளராகப் பணியாற்றிய பேராசிரியர்கள் தெ.பொ.மீ., வ.அய். சுப்பிரமணியம், முத்துச்சண்முகம்பிள்ளை, பி ஹைச் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் தென்னகத்தில் இந்தத் துறையைப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தினார்கள். தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கேரளப் பல்கலைக்கழகத்திலும் ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் மொழியியல் துறைகள் நிறுவப்பட்டன. அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்ப் பேராசிரியர்களாக உருவாகியிருந்த அகத்தியலிங்கம், இ. அண்ணாமலை, கு. பரமசிவம், இராம. சுந்தரம், குமாரசாமி ராஜா, தாமோதரன், செ.வை. சண்முகம், காமாட்சிநாதன், க. முருகையன், பா.ரா. சுப்பிரமணியன், இஸ்ரேல், விஜயவேணுகோபால் போன்றோர் தமிழ்மொழியை மொழியியல் அடிப்படையில் ஆராயத் தொடங்கினர். பேரா. வ. அய். சுப்பிரமணியம, அகத்தியலிங்கம், கு. பரமசிவம் போன்றோர் அமெரிக்காவிற்குச் சென்று சிறப்புப் பயிற்சிபெற்றார்கள். பின்னர் அவர்களின் மாணவர்களாகப் பேராசிரியர்கள் எம் எஸ் திருமலை, நீதிவாணன், கருணாகரன், சீனிவாசவர்மா, பொற்கோ, ஆர். கோதண்டராமன், ஞானசுந்தரம், கி. ரங்கன், ராஜாராம் போன்றார் மொழியியல் பயிற்சிபெற்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்ப்புலவர் படிப்பு பெற்றவர்கள். திராவிடமொழி ஒப்பிலக்கணம், தமிழ்மொழி வரலாறு, இன்றைய தமிழ் இலக்கணம், சங்கத்தமிழ் வரலாறு, பிற காலகட்டத் தமிழிலக்கியங்களின் மொழி ஆய்வு என்று பல்வேறு தலைப்புகளில் தமிழின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். உலகமொழிகள், திராவிடமொழிகள், சங்கத்தமிழ், இன்றைய தமிழ் என்ற பல தலைப்புகளில் பேரா. அகத்தியலிங்கம் தமிழை ஆராய்ந்து, நூல்கள் வெளியிட்டுள்ளார். பொற்கோ இன்றைய தமிழுக்கான இலக்கணம், தமிழை அயல்நாட்டவர்க்குக் கற்பித்தல் , தமிழுக்கும் ஜப்பானியமொழிக்கும் இடையில் உள்ள உறவு போன்ற தலைப்புகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றிய பேரா. வ.அய். சுப்பிரமணியம் தமிழாய்வை எவ்வாறு வளர்த்தெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்கள் அரசுகளின் உதவிகொண்டு, குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தையே உருவாக்குவதில் அவர் பெரும்பங்காற்றினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வரலாற்றைப் பேரா. தெ.பொ.மீ. முன்வைத்தார். இன்றும் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ஜெர்மனி , அமெரிக்கா, கனடா, போலந்து போன்ற பல நாடுகளில் தமிழ்மொழியைப் பயிற்றுவித்து வருபவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டில் மொழியியல் பயின்ற பேராசிரியர்கள்தான். இன்றைய தமிழுக்கான ஒரு சிறந்த அகராதியை அளித்த கிரியா அமைப்பில் அதற்காக உழைத்தவர்கள் பெரும்பாலும் மொழியியல் பின்னணி உள்ளவர்கள்தான். கணினித்தமிழிலும் மொழியியல் கல்வி பெற்றவர்கள் இன்று அளித்துவருகிற பங்கு தெரிந்ததே. இவ்வாறு தமிழ்மொழி ஆய்வுக்கும், தமிழ்க்கல்விக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு அளித்துவருகிற பேராசிரியர்கள் பலர் மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, மொழியியல் தமிழுக்கு எதிரானது என்று எவ்வாறு கூறமுடியும்? மேற்குறிப்பிட்ட மொழியியலார்கள் எல்லோரும் தமிழ் மொழியுணர்விலோ, மொழிக்காப்பிலோ குறைந்தவர்கள் அல்லர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India