வெள்ளி, 3 ஜூலை, 2020

பேராசிரியர் ஆ. கந்தையா

பேராசிரியர் ஆ. கந்தையா … இலங்கை யாழ்ப்பாணத்தில் மறவன்புலவு என்ற ஊரில் பிறந்த பேராசிரியர் , இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகம், ஆஸ்திரேலியா நாடுகளிலும் தமிழ் ஆய்வாளர்களுக்கு நன்கு தெரிந்தவர். பள்ளிக் கல்வியை இலங்கையில் பெற்ற இவர், 1955 – இல் தமிழ் முதுகலைப் படிப்பிற்காகச் சென்னை வந்து, பச்சையப்பன் கல்லூரியில் பேரா. மு.வ. அவர்களின் மாணவரானார். 1960- இல் முதுகலைப் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பக்தி இலக்கியம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் (1974) பெற்றார். இலங்கையில் கல்விப் பணியில் பல பதவி நிலைகளில் ஈடுபட்டுள்ளார். 1977 ஆம் ஆண்டு களனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவரானார். இலங்கையில் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது “ A Hand Book for Teaching Tamil”, “ Tamil without a Teacher” என்ற இரு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் நாடகங்களை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் பல பணிகளை மேற்கொண்டார். இலங்கை அதிபர் விருதை – ‘கலா கீர்த்தி’ என்ற விருதைப் பெற்ற முதல் தமிழ் கல்வியாளர் இவர். 1984 ஆம் ஆண்டு காமன்வெல்த் நிதி உதவியுடன் இங்கிலாந்தில் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு “ Teaching Tamil at a Distance” என்ற ஆய்வை மேற்கொண்டார். யுனஸ்கோ நிதி உதவி பெற்று, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள திறந்தவெளி, தொலைதூரப் பல்கலைக்கழகங்களை ஆறு மாதங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இலங்கையில் மூன்று பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. லண்டன் பல்கலைக்கழகத்திலுள்ள கீழ்த்திசை மற்றும் ஆப்பிரிக்க ஆய்வு மையம், இலங்கையின் திறந்தவெளிப்பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 1990 – இல் ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்த பேராசிரியர் அங்குத் தமிழ்த்திரைப்படங்களை ஆங்கிலமொழிபெயர்ப்போடு வெளியிடும் பணியையும் மேற்கொண்டார். ‘நாயகன்’ படத்திற்கு அவ்வாறு பணிமேற்கொண்டு, வெற்றியும் பெற்றார். சிட்னிப் பல்கலைக்கழகத்தில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவும்வகையில் ஒலிநாடாக்களுடன் கூடிய நூல்களை ( “ Tamil without a Teacher – Book 1 and 2) வெளியிட்டார். ஆஸ்திரேலியாப் பல்கலைக்கழகங்களில் மொழிப்பயிற்சிக் கூடங்களில் தமிழும் ஒரு மொழியாக இடம்பெறுவதற்கு இவரது முயற்சியும் பணியுமே காரணமாகும். மேலும் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, தமிழ்மொழியே தங்களது வீட்டுமொழி என்று கூறுவதற்கான ஒரு இயக்கத்தையே பேராசிரியர் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் குடிபுகும் முன்னர் 16 நூல்களும் குடிபுகுந்த பின்னர் தமிழர், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் 27 நூல்களும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் கல்விப்பயணம் மேற்கொண்டு, பல ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 3 – ஆம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். தமிழாய்வு, தமிழ்க்கல்வி, தமிழர் நலவாழ்வு, தமிழ்ப் பரப்புரை என்று பல தளங்களில் பேராசிரியர் பணியாற்றியுள்ளார். இவர் தமிழகத்தில் நன்கு அறிமுகமான ‘காந்தளகம்’ திரு. மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களைத் தன் உடன்பிறவா சகோதரர் என்றே கூறுவார். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது (2010வரை) ஒவ்வொரு ஆண்டும் அவர் தமிழ்மொழித்துறைக்கு வருகைபுரிந்து, தமிழ்ப்பணிகளை மேற்கொள்வதை நேரில் கண்டு மகிழ்ந்துள்ளேன். . மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/ukv



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India