சனி, 28 நவம்பர், 2015

பொருள்மயக்கமும் மொழியியலும் - ஒரு எழுத்துவழி உரையாடல்

அமெரிக்காவில் பணிபுரியும் கணினியியல் அறிஞரும் தமிழ்க் கணினிமொழியியலில் மிகுந்த ஆர்வத்துடன் உழைத்துவரும் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் வேறொரு தளத்தில் எழுப்பிய 
ஒரு வினாவையொட்டி, நான் தெரிவித்த கருத்துகளை இங்குத் தொகுத்து முன்வைக்கிறேன் ...மொழியியலில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம். 

திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் : 
-----------------------------------------------------------------
"அவன் பழத்தைத்தின்றிருக்கக்கூடாது." என்ற சொற்றொடரை கருத்திலெடுங்கள்.
இதில் புகாருக்கு எது காரணமாகிநிற்கின்றது.? 
1. பழம் 
2. தின்னப்பட்டசெயல்
தற்காலநடையால் இதற்கு பதிலளிக்கமுடியுமா?

ந. தெய்வ சுந்தரம்: 
--------------------------------------
(1) ஒரு தொடரில் பொருள் மயக்கம் எற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் ( lexical ambiguity) கொண்டிருக்கலாம். அல்லது தொடரமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் (structural ambiguity) கொண்டிருக்கலாம். அல்லது எந்த மொழிவழிச்செயல் ( speech act) என்பதை முடிவுசெய்வதில் குழப்பம் ஏற்படலாம். அல்லது எதை முன்னிலைப்படுத்துகிறோம் ( focus of the utterance) என்பதைத் தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படலாம். இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கான ஒரு துறைதான் கணினிமொழியியல். எனவே ஒரு தொடரின் 
பொருளைத் தெரிந்துகொள்வதற்குக் குறிப்பிட்ட தொடர் (text) , அத்தொடருக்கு முந்திய பிந்திய தொடர் ( co-text), மொழிசாரா புறச்சூழல் (context) ஆகியவை தேவைப்படுகின்றன. இதற்கு ஹாலிடேயின் Functional Grammar அதிகமாகப் பயன்படும். தொடரின் சொற்கள், அமைப்பு கொடுக்கிற பொருளோடு ( Semantics) , பின்புல அறிவும் ( Pragmatics) தேவைப்படுகிறது. மொழியியலின் அடிப்படை நோக்கமே இவற்றை விளக்குவதுதான்.

(2) Active voice, passive voice தொடர்களுக்கு இடையிலும் இந்தப் பொருள் வேற்றுமை உண்டு. செயலை அல்லது செயல் மேற்கொள்ளப்பட்ட பொருள் அல்லது நபரை முன்னிலைப்படுத்தவே passive voice. தொடரின் மொழியமைப்பு - சொல், இலக்கணம் இரண்டும் - தருகிற பொருள், மனிதமூளையின் அறிவு அல்லது சிந்தனைப்புலத்திற்கு ( cofnition domain - domain where knowledge is reprsented) 
அனுப்பப்படுகிறது. இந்தச் சூழல் சாராத (context -independent) தொடர்ப் பொருளானது , சிந்தனைப்புலத்திற்கு அனுப்பப்பட்டு , சூழல்சார்ந்த பொருள் (context dependent) பெறப்படுகிறது. எனவே சாம்ஸ்கி , சிந்தனைப்புலத்திற்கு அனுப்பப்படுகிற அமைப்பை logical form என்று அழைப்பார். இந்த அமைப்பானது அறிவு தேக்கிவைக்கப்பட்டுள்ள ( domain where knowledge is represented) புலத்திற்கு அனுப்பப்பட்டால்தான், தொடரின் முழுப்பொருள் - உண்மையான பொருள் ( intended meaning) தெரியவரும். எனவேதான் கணினிமொழியியலார், மொழியமைப்பு தொடர்பான அறிவு, அறிவுதொடர்பான அறிவு இரண்டையும் 
கணினிக்கு அளிக்கும்போதுதான் முழுப்பொருள் கிடைக்கும் என்று கூறி, அதற்காக உழைத்துவருகின்றனர். மொழியியலிலும் இதற்காகவே கோட்பாடுகள், ஆய்வுமுறைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

திரு. வேல்முருகன் சுப்பிரமணியன்:
----------------------------------------------------------------------
அதுபோன்று சூழல்கள் இல்லாதபோது, ஒரு மொழியிலுள்ள ஒரு சொற்றொடர் 
1. ஒன்றிற்குமேற்பட்டபொருளைக்கொடுக்காமலிருப்பது (or less ambigious) 
2. (logical conclusions) ஏரணத்தின் அடிப்படையில் பலமுடிவுகளைக்கொடுப்பது 
    ஆகியவை அம்மொழியின் வலிமைகளாகக்கருதப்படக்கூடியனவா?

ந. தெய்வ சுந்தரம்: 
-------------------------------------

(3) ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களைத் தருவது, ஏரணத்தை அடிப்படையாகக் கொண்டது - இவையெல்லாம் இயற்கைமொழிகளின் வலிமையே. குறைந்த சொற்கள், இலக்கணத்தை வைத்துக்கொண்டு, பரந்துபட்ட உலகத்தை வெளிப்படுத்துவதுதான் இயற்கைமொழிகளின் சிறப்பும் படைப்புத்திறனும் ஆகும். இந்தத் திறமையைப் பெற்றதுதான் மனித மூளை. ஆனால் இத்திறமை மனித இனத்திற்கே உரிய  ஒன்று ( human species specific - genetically determined, biological endowment.) இயற்கைமொழிகளின் இத்திறமையைக் கணினிக்கு முழுமையாக அளிப்பது ஒருபோதும் முடியாது என்பதே சாம்ஸ்கி 
போன்றவர்களின் கருத்து. எனவேதான, ஒரு சொல்லுக்கு ஒருபொருள், ஒரு தொடரமைப்புக்கு ஒரு விளக்கம் என்று அமைகிற செயற்கை நிரலாக்க மொழிகளை உருவாக்கி, அவற்றின் வழியாகக் கணினியின் செயல்பாடுகளுக்கான நிரல்களை உருவாக்குகிறோம். இயற்கைமொழிகளின் இத்திறமையை விளக்கத்தான் கடந்த 100, 150 ஆண்டுகளாக மொழியியலாளர்கள் முயன்றுவருகின்றனர். பல முனைகளில் ஆய்வு மேற்கொண்டு, பல வகை மொழியியல் கோட்பாடுகளையும் வடிவங்களையும் ( linguistic formalism) முன்வைத்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இன்னும் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. சாம்ஸ்கி தொடர்ந்து தனது கோட்பாடுகளையும வடிவங்களையும் ( 1957, 1965, 1970, 1975, 1979, 1992 ....) மாற்றியும் வளர்த்தும் வருகிறார். மேலும் பலர் பல்வேறு வகை மாற்றுக் கோட்பாடுகளையும் வடிவங்களையும் முன்வைத்துவருகிறார்கள் ( Generalized Phrase Structure Grammar , Lexical functional Grammar, , Head driven Phrase structure Grammar, Tree Adjoining Grammar, Dependency Grammar , Tagmemic grammar, Systemic Grammar, Cognitive grammar, word Grammar .... ) இவற்றையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம், மொழியியலின் நோக்கங்களையும் பயன்பாடுகளையும் 
வெளிப்படுத்தவேண்டும் என்பதேயாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India