வெள்ளி, 13 நவம்பர், 2015

கணினித்தமிழ் வளர்ச்சியில் தமிழாசிரியர்களின் பங்கு


கணினித்தமிழ் வளர்ச்சியில் தமிழாசிரியர்களின் பங்கு
----------------------------------------------------------------------------------------


திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்கள் ஒரு மடலாடல் குழுவில் எழுப்பிய வினா: வினாவின் முக்கியத்துவம் கருதி, அதை இங்கே எனது விளக்கத்துடன் தருகிறேன்..

தமிழ்த்துறையுடன் கணித்துறையை இணைத்துச் செயலாற்றும் முயற்சி தேவை என்பது இருதுறையிலும் ஆர்வம் உள்ளவர்கள் விழைவு. சிதம்பரத்தில் உத்தமம் மாநாடு நடந்த பொழுது முனைவர் தெய்வசுந்தரத்திடம் சில ஆண்டுகளாகவே உத்தமம் போன்ற நிறுவனம்,கணிமநுட்ப வளர்ச்சியிலேயே கருத்து செலுத்துவதாலும் தமிழ் சார்ந்த கணியமைப்பு தேவை என்பதாலும் அவர் தலைமையில் ஓர் அமைப்பைத் தோற்றுவிக்குமாறு கூறினேன். இவ்வாறான எண்ணம் இருப்பதை நானறிவேன் என்று அவர் சொன்னாலும் வேறுஒன்றும் சொல்லவில்லை. சிங்கப்பூர் உத்தமம் மாநாட்டில் கருத்தரங்க அமர்விலேயே தமிழ் சார்ந்த அமைப்பைத் தொடங்கினால், போட்டி அமைப்பாகக்கருதக்கூடாது என்றும் உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் ஆகியன, கணித்துறையில் தமிழை வளர்க்கவும் கணித்தமிழுக்கான அமைப்பு, தமிழ்த்துறையில் கணித்துறையறிவை வளர்க்கவும் பாடுபட வேண்டும் என்றும் கூறினேன். 

கணித்தமிழ்ச்சங்கத்தில் தொடக்கத்தில் தமிழியல்துறையினர் பங்கேற்பிற்கு வழியில்லாமல் இருந்தது. மறைந்த நண்பர் ஆண்டோ பீட்டர்படிப்படியாகப் பங்களிப்பு விகிதத்தை உயர்த்தினார்.ஆனால், இப்போதைய தலைவரான நண்பர் ஆனந்தன், அண்மையில் சிறப்பாக நடத்திய கருத்தரங்கத்தின் பொழுது, வாணாள் உறுப்பினர்களாகத் தமிழ்த்துறையினர் சிலர் வர விரும்புவதைத் தெரிவித்த பொழுது, முழுமைமயும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாகமாற்ற இருப்பதாகவும் எனவே, தமிழ்த்துறையினர் யாரையும் உறுப்பினராகச்சேர்ப்பதாக இல்லை என்றும் தெரிவித்தார். 

எனவே, கணித்தமிழ் விருதாளர் முனைவர் தெய்வசுந்தரம் கணித்தமிழ்மொழியியல் ஆய்வு நிறுவனம்ஒன்றை அமைக்கஇருப்பது காலத்தின் கட்டாயத்தேவையாகும்.இந்நிறுவனம் சிறப்புற்றோங்க வாழ்த்துகிறேன்.
தொடர்பிலான இரண்டு வேண்டுகோள்கள்.
1. நிறுவனம் சார்ந்த பொது உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு ஒன்றையும் தொடங்கி ஆர்வலர்கள் பங்கேற்பிற்கு வழி வகுக்க வேண்டுகின்றேன்.

2. மொழியியல் துறையினர்மட்டும் கொண்ட அமைப்பாக நிறுவாமல், தமிழ் இலக்கியத்துறையினரையும் ஈடுபாடுகொள்ளச் செய்யும் வகையில் நிறுவனத்தை அமைக்க வேண்டுகின்றேன்.

பாராட்டுகளுடன்
-------------------------------------------------------------------------------------------------

எனது ( ந. தெய்வ சுந்தரம் ) விளக்கம்: 

அன்புள்ள நண்பர் திரு. திருவள்ளுவர் இலக்குவனார் அவர்களுக்கு, தங்கள் மடல் கண்டேன். 
// கணித்தமிழ்ச்சங்கத்தில் தொடக்கத்தில் தமிழியல்துறையினர் பங்கேற்பிற்கு வழியில்லாமல் இருந்தது. மறைந்த நண்பர் ஆண்டோ பீட்டர்படிப்படியாகப் பங்களிப்பு விகிதத்தை உயர்த்தினார்.ஆனால், இப்போதைய தலைவரான நண்பர் ஆனந்தன், அண்மையில் சிறப்பாக நடத்திய கருத்தரங்கத்தின் பொழுது, வாணாள் உறுப்பினர்களாகத் தமிழ்த்துறையினர் சிலர் வர விரும்புவதைத் தெரிவித்த பொழுது, முழுமைமயும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாகமாற்ற இருப்பதாகவும் எனவே, தமிழ்த்துறையினர் யாரையும் உறுப்பினராகச் சேர்ப்பதாக இல்லை என்றும் தெரிவித்தார்.//

திரு. ஆனந்தன் அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார் என்று இப்போதும் நம்புகிறேன். நான் ஒரு தமிழாசிரியன்தான். ஆனால் கணித்தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். உத்தமத்திலும் இருக்கிறேன். தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கும் என்னால் இயன்ற உதவிகளை அளித்து வருகிறேன். 

மீண்டும் கூறுகிறேன், தமிழ்க்கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் என்ற துறை கணினியியல், தமிழ்மொழியியல், மொழியியல், புள்ளியியல், கணிதவியல் போன்ற பல்துறைசார்ந்த ஒரு புதிய துறை. மேலும் இத்துறையில் தமிழ்மொழியியல், மொழியியல்துறை சார்ந்தவர்களின் ஆய்வும் பணியும் மிக அடிப்படையானது. கணினிக்கேற்ற தமிழ்மொழி இலக்கணத்தை வடிவமைத்துக் கொடுப்பது அவர்களது பணி. அவர்கள் அவ்வாறு வடிவமைத்துக் கொடுக்கும்போது, வடிவமைப்பு எவ்வாறு இருந்தால் கணினிக்கேற்றதாக இருக்கும் என்பதைக் கூறுகிற பணியிலும் ( புள்ளியியல், கணிதவியல் துறையினர்க்கும் பங்கு உண்டு) , வடிவமைத்தபிறகு அதை நிரலாக்கம்செய்வதிலும் கணினியியல்துறை சார்ந்தவர்களுக்குரிய பணி. இதில் தெளிவு இருந்தால், யார் பணி முக்கியம் என்ற விவாதமே எழாது. எனது குழுவில் மூன்று பேர்கள் தமிழ்மொழி, மொழியியல் துறையைச் சேர்ந்தவர்கள். மூன்றுபேர்கள் கணினியியல் துறையைச் சேர்ந்தவர்கள். 

ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலர் ( திரு. வள்ளி ஆனந்தம் அவர்கள் இல்லை) தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்களைச் சற்றுக் குறைவாக மதிப்பிடுவதை நானே அனுபவித்திருக்கிறேன். தங்களது பணியில் வெறும் ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது அவர்கள் அறியாமை. ஆனால் அந்த ஒரு சிலருக்காகப் பொதுவாகக் கணினியியல்துறையைச் சேர்ந்தவர்களை நாம் குறைசொல்லக்கூடாது. அமெரிக்காவில் உள்ள திரு. வேல்முருகன் சுப்பிரமணியன், பங்களூரில் உள்ள பேரா. ஏஜி இராமகிருஷணன், எஸ் எஸ் என் பொறியில் கல்லூரி பேரா. நாகராசன் , அம்ரிதா பல்லைக்கழகப் பேராசிரியர் திரு. சோமன் உட்பட கணினியியல் நிபுணர்கள் தமிழ்மொழி, மொழியியல் அறிஞர்களின் பங்கை முழுமையாக உணர்ந்துதான் பேசுகிறார்கள். 

ஆனால் ஒன்று உறுதியாகக் கூறுகிறேன்.,தமிழ்மொழியின் அமைப்பை இலக்கணத்தைப் பற்றிய அறிவுடைய தமிழாசிரியர்களின் பெரும்பங்கே தமிழ்க்கணினிமொழியியல்துறையில் இருக்கிறது. கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத்தின் ஆள்களம் ( domain) மொழி , மொழியறிவே. நான் உத்தமத்தின் உறுப்பினராகவும் இருக்கிறேன். கணித்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறேன். ஆனால் அதேவேளையில் கடந்த சில ஆண்டுகளாகக் கணினித்தமிழ்ப் பேரவை ஒன்று நிறுவி, அதன் சார்பில் இரண்டு மாநாடுகளையும் நடத்தியிருக்கிறேன். அதன் பணி இனி மேலும் விரிவடையும். இது போட்டிச் சங்கமும் இல்லை. இதில் தமிழாசிரியர்கள், மொழியியல் ஆசிரியர்கள், கணினியியல் ஆசிரியர்கள், ஆர்வலர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India