கரோனாவின் உள்ளார்ந்த பண்புக்கூறுகளும் அதன் வெளிப்பாடுகளும்
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
கோவிட்-19 (கரோனா) வைரஸின் உள்ளார்ந்த பண்புக்கூறுகள் பற்றியும், அதனுடைய வெளிப்பாடு அல்லது எச்சரிக்கைக் கூறுகள்பற்றியும், அதற்கான மருந்துகள்பற்றியும் பல கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதையொட்டி எனது கருத்துகள் சில.
சில மருந்துகளைப்பற்றி .... அலோபதி, சித்த, யுனானி, ஆயுர்வேத மருந்துகள் உட்பட சிலவற்றை .... சிலர் கொரனாவுக்கு முன்னிலைப்படுத்துகின்றனர். அவைபற்றிய கருத்துகள் சரியானவையா இல்லையா என்ற விவாதத்திற்கு நான் செல்லவில்லை. அதற்கான மருத்துவ அறிவு எனக்கு இல்லை. ஆனால் ஒன்று.... சில மருந்துகள் சில பிரச்சினைகளுக்கு உடனடியான சில தீர்வுகளைத் தரலாம். அது நல்லதுதான். ஆனால் சிக்கல்.... சில வேளைகளில் அது உள்ளார்ந்த நோயின் வெளிப்பாட்டு அறிகுறிகளைத் தடைசெய்துவிடும். அதனால் அந்த நோய் இல்லை என்று நினைத்துக்கொண்டு, நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடிய ஒரு சூழல் ஏற்படுவதும் உண்டு.
உடலில் ஏற்படும் வலி, வெப்பநிலை, ஒவ்வாமை, இருமல், வாந்தி, பசியின்மை , சிறுநீர், மலம் ஆகியவற்றின் நிறம் மாற்றம் ... இவையெல்லாம் உடலுக்குள் நோய்க்கிருமிகள் புகுந்துள்ளன என்பதற்கான நமது உடல் காட்டும் எச்சரிக்கைகள் ஆகும் . இவற்றின் அடிப்படையிலும், மருத்துவர்கள் தங்கள் சொந்த மருத்துவ அனுபவத்தின் அடிப்படையிலும்தான், அவர்கள் குருதிச்சோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறார்கள். இந்த உடல் காட்டும் எச்சரிக்கைகளை உணர்ந்து, நாம் உடனடியாக நோயின் வேரை அறிந்து, அதை நீக்கத் தேவையான மருத்துவத்தை நாட வேண்டும். உடல் காட்டும் எச்சரிக்கைகள் , இரண்டாவது நிலை பிரச்சினைகள். ஆனால் அந்த எச்சரிக்கைகளுக்கு அடிப்படையானது அல்லது முதல்நிலைப் பிரச்சினை... உள்ளார்ந்த நோய்தான். அதைத் தீர்த்தால்தான் இந்த இரண்டாவது நிலை எச்சரிக்கைச் சிக்கல்களும் தீரும்.
இந்த இரண்டாவது நிலை பிரச்சினைகளுக்கான மருந்துகளால் பயன் கிடையாது என்று நான் கூறவரவில்லை. ஆனால் உடலானது தன்னுள்ளே நுழைந்துள்ள அடிப்படையான நோய்க்கிருமிகளை வெளிக்காட்ட நாம் உதவவேண்டும். அந்த எச்சரிக்கைகளே தோன்றவிடாமல், முன்கூட்டியே அவற்றிற்கான மருந்துகளை மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்ளக்கூடாது. சிலவேளைகளில் அது நமக்குச் சிலவேளைகளில் தீங்குகளை ஏற்படுத்தலாம். அதேவேளையில் பொதுவாக, உடலுக்குப் பொதுவான வலிமையையும், நோய் எதிர்ப்பு வலிமையையும் ... கூட்டக்கூடியவற்றை மருத்துவர்களின் அறிவுரையோடு எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அந்த மருந்துகள் உடல் வெளிக்காட்ட முனையும் எச்சரிக்கைக்குறிகளை வெளிப்படாமல் தடுத்துவிடக்கூடாது. இதில் எச்சரிக்கை தேவை.
எந்த ஒரு நோய்க்கும் அதைத் தீர்க்க மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளின் ( அலோபதி. சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உட்பட) முக்கியத்துவத்தைவிட, அந்த நோயின் அடிப்படையை, தன்மையை, மருத்துவர்கள் கண்டறிவதுதான் மிக மிகத் தேவையானது. அதற்கு மருத்துவர்களுக்கு உதவும்வகையில் நாம் ஒத்துழைக்கவேண்டும். எனவே அலோபதியா, சித்த மருந்தா என்ற விவாதத்தைவிட, மேற்கூறிய அடிப்படைகளைப்பற்றிச் சிந்திப்பதே நல்லது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக