கொரோனா தொற்றுப் பிரச்சனை எப்போது, எவ்வாறு
தீரும்? அச்சம் தேவையா? ( பொதுமக்களுக்கான ஒரு பதிவு இது ! அறிவியல்துறைகளை
- குறிப்பாக மருத்துவத் துறைகளை - சார்ந்தவர்களுக்கு இது இல்லை!) - பகுதி 1 .( ஏப்ரல் 19, 2020)
--------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று உலகெங்கும் கொரோனா வைரசுத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,60,207 என்றும் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 1,46,088 என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது 6 . 76 % - சுமார் நூற்றுக்கு ஏழு பேர் இறப்பு! ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 80% குணமடைந்துள்ளார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று உலகெங்கும் கொரோனா வைரசுத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,60,207 என்றும் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 1,46,088 என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது 6 . 76 % - சுமார் நூற்றுக்கு ஏழு பேர் இறப்பு! ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 80% குணமடைந்துள்ளார்கள்.
ஏறத்தாழ 113 நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த வைரசுத்
தொற்றில் 74 % மூன்று நாடுகளில் - அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி - ஏற்பட்டுள்ளது! பொதுவாக 36 -இலிருந்து 65 வயதுவரை
உள்ளவர்களை அதிகமாகப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில விலங்குகளும் இதன்
பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கொரோனாத் தொற்றலால் ஏற்படும் நோய் கோவிட்-19 என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால்
மூச்சியக்கம் (Respiratory
system) கடுமையாகப்
பாதிக்கப்படுகிறது. இதை சார்ஸ் (SARS
- Severe Acute Respiratory Syndrome ) என்று அழைக்கிறார்கள்.
இந்த வைரசுத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில், சளி ஆகியவற்றால் பிறருக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்டவரின் எச்சில்
உள்ள இந்த வைரசு (ஒரு தும்மல் அல்லது இருமலில் 3000 எச்சில்துளிகள்
இருக்கலாம்) மூன்று அடிகள்வரை காற்றில் தொடர்ந்து, மற்றவரின்
மூக்கு, வாய், கண்
வழியே அவருக்கும் தொற்றுகிறது. மூன்று அடிக்குமேல் இந்த எச்சில்வழியே வெளிப்படுகிற
வைரசு, தன் வலிமையை இழந்து தரையில்
விழுந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காற்றில் நச்சு வாயுக்கள் பரவுவது
போன்று இது பரவாது.ஆனால் இந்த வைரசு பட்ட அல்லது விழுந்த தரையில் ஒரு சில
மணிநேரங்களிலிருந்து பல நாள்கள்வரை தன்னைத் தக்கவைத்துக்கொள்ளலாம்! இந்த வைரசு தரை, பலகை, பிளாஸ்டிக் போன்றவற்றில் எவ்வளவு
நேரம் வலிமையுடன் நீடிக்கலாம் என்பதுபற்றிப் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஆனால்
அப்பொருள்கள்மீது கிருமிநாசினி உடனடியாகத் தெளிக்கப்பட்டால், அக்கிருமியைக் கொன்றுவிடலாம் என்றும் கூறப்படுகிறது. அதற்குத்தான்
கைத்தூய்மி (Sanitizer) அல்லது கிருமிநாசினி (anti-germ ) பயன்படுத்தப்படுகிறது!
இந்த வைரசு ஒருவரின் உடலில் 14 நாள்கள்வரை
தங்கியிருந்து, அந்த நாள்களில் எப்போதாவது அவருக்கு
கோவிட் -19 நோயை உருவாக்கலாம்.
இத்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை. அதற்கான
முயற்சிகளைப் பலநாடுகள் இன்று மேற்கொண்டுள்ளன. அதுபோன்று இந்த வைரசால் ஏற்படுகிற
கோவிட்-19 நோய் வந்தபிறகு , அதைக் குணமாக்கும் மருந்துகளும் இன்றுவரை இல்லை!
அப்படியென்றால்... ?
என்னதான் தீர்வு
? வீடுகளில் முடங்கியிருப்பதும், தனிமனித இடைவெளியை மேற்கொள்வதும்தான் தீர்வா? அடுத்து, இந்த வைரசுத் தொற்று ஒருவருக்கு
இருப்பது கண்டுபிடிக்கப்- பட்டால் ,
அவர்
இறந்துதான் ஆகவேண்டுமா?
இல்லவே இல்லை! அச்சம் தேவையில்லை! இதுபற்றி இனிக் கொஞ்சம் விரிவாகப்
பார்க்கலாம்! இந்த வைரசு நமது உடலுக்குள் புகுந்தவுடனேயே ... உடலில் அதை
எதிர்த்துப் போராடும் ஒருவகைப் புரதம் ( புரோட்டின்) , இரத்தித்தில் உள்ள வெள்ளை அணுக்களால் உருவாக்கப்பட்டு, பிளாஸ்மா வாயிலாக உடம்பு எங்கும் கொண்டு செல்லப்படும். நமது உடம்பில்
இதுபோன்று 10 பில்லியன் புரோட்டின்கள்
உருவாக்கப்படலாம். இந்த ஒரு ஒவ்வொரு புரோட்டினும் ஒவ்வொருவகை நோய்க்கிருமியை
எதிர்த்துப் போராடும்.
உடம்புக்குள் எதிரி ஊடுரும்போதுதான், இது
உருவாகும். உருவாகிய பிறகு தனது எதிரியைப்பற்றிப் புரிந்துகொண்டு... நினைவில்
வைத்துக்கொண்டு... மீண்டும் அந்த எதிரி உடலில் ஊடுருவினால் .. உடனே அதை
எதிர்த்துப் போராடும். இதை அடிப்படையாகக்கொண்டுதான், தடுப்பூசி
(vaccine) உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட
எதிரியை ஆய்வகத்தில் கொண்டுவந்து,
அதன் வலிமையை
அல்லது வீரியத்தை மிகவும் குறைத்து,
உடலைப்
பாதிக்காதவகையில் மாற்றி... உடலுக்குள் முன்கூட்டியே செலுத்தப்படும்போது....
உடம்புக்குள் அதை எதிர்த்துப் போராடும் புரதம் உருவாகிவிடும். பின்னர் அந்தக்
குறிப்பிட்ட எதிரி எப்போது உடம்பில் ஊடுருவினாலும் , இந்தப்
புரதம் உடனடியாக அந்த எதிரியைப் போராடி வெற்றிபெறும். அதாவது, குறிப்பிட்ட ஒரு எதிரி உடம்புக்குள் ஊடுருவலாம் என்பதை எதிர்பார்த்து, அதை எதிர்த்துப் போராடி வெற்றிபெற ... முன்கூட்டியே குறிப்பிட்ட
புரதப் போராளியை உருவாக்கி, பழக்கிவைப்பதே இதுவாகும்.
தற்காப்புப் போராளி!
இந்தத் தடுப்பூசி குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு உருவாக்குவதற்கு ..
முதலில் அந்த எதிரிக் கிருமி ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி .. அதன் மரபுக் கூறுகளை
ஆராய்ந்து..வீரியம் குறைந்த அல்லது உடம்பைப் பாதிக்காதவகையில் அதை மாற்றவேண்டும்!
வைரசு ஒரு சிக்கலான ஒன்று. எளிதில் அதை உயிர்ப்பொருளிலிருந்து தனிமைப்படுத்தி, ஆராய்வது கடினம். ஆனால் பாக்டீரியா என்று அழைக்கப்படுவதை எளிதாகப்
பிரித்தெடுத்துவிடலாம்.
இந்தப் பிரச்சினைதான் தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை
உருவாக்குவதில் நீடிக்கிறது! அதுபோன்று இந்த வைரசு உடம்பில் ஆதிக்கம் செலுத்தி, கோவிட் -19 நோயை உருவாக்கியபிறகு... அதைக்
கொல்லக்கூடிய மருந்துகளை உருவாக்குவதிலும் சிக்கல் உள்ளது!
இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் .... தடுப்பூசி இல்லாத நேரத்தில்...
என்ன செய்வது? நிரந்தரமாக இந்த வைரசுத் தொற்றலைத்
தடுக்கமுடியாதா?
முடியும்... நிச்சயமாக முடியும்! அச்சம் தேவையில்லை!
இதுபற்றித் நோய்த்தொற்றியல் மருத்துவ அறிஞர்களின் கருத்தை நாளை
பார்க்கலாம். (தொடரும்)
(நான்
கூறியதில் தவறுகள் இருக்கலாம். நான் அந்தத் துறையைச் சார்ந்தவன் இல்லை! எனவே
தவறுகளைச் சுட்டிக் காட்டினால் எனக்கு மிகவும் உதவும்! திருத்திக் கொள்கிறேன். )
0 கருத்துகள்:
கருத்துரையிடுக