வியாழன், 23 ஏப்ரல், 2020

கரோனாவும் பொருளாதார நெருக்கடியும் - பகுதி 2


பொருளாதாரப் பிரச்சினையில் ஆர்வம் உள்ளவர்களுக்குமட்டும்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கரோனாவும் பொருளாதார நெருக்கடியும் (2) (ஏப்ரல் 5, 2020)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதிர்பாராதவிதமாக , உலகின் மூலைமுடுக்கெல்லாம் அனைவரையும் பாதிக்கின்ற ஒரு பிரச்சனையாகக் கரோனா தொற்றல் இன்று நீடிக்கிறது !
இன்றைக்குக் கரோனா தொற்றலைத் தடுக்கிற எதிர்ப்புமருந்தோ, அல்லது அந்த நோய் ஒருவரைத் தொற்றியபிறகு 100 விழுக்காடு அந்த நோயிலிருந்து அவர் வெளிவரத் தேவையான மருந்தோ இல்லாத ஒரு அவலநிலை! நோய்க்கு உட்பட்டவர் பிழைக்கலாம், சாகலாம், எதுவும் சொல்லமுடியாது என்ற ஒரு அவலநிலை! உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்ற ஒரு நிலை! இந்தத் தொற்றலை ஒரு முடிவுக்குத் தற்போது கொண்டுவரமுடியுமா என்ற ஐயத்தில் அனைவரும் இருக்கிற ஒரு அவலநிலை!
'' வளர்ச்சியடைந்த நாடுகள் நாங்கள்.... ஒருபுறம் , செவ்வாய் கிரகத்திலும் கொடி நாட்டுவோம்.... மறுபுறம், உலகின் எந்த மூலைமுடுக்கிலும் ... ... எங்கள் எதிரி ஒருவர் இருந்தால் ... பின்லேடனோ, சதாம் உசேனோ, ஈரானின் இராணுவத் தளபதியோ ... யாராக இருந்தாலும்... மிகத் துல்லியமாகக் கொன்று குவிப்போம் !'' என்று ''மார்தட்டிக்கொண்டிருக்கிற ' அமெரிக்கா வல்லரசே இன்று ... ''அடுத்தவாரம் இந்தநாளில் எவ்வளவு இறப்பு ஏற்படும் என்பதைக் கணிக்கமுடியவில்லை' என்று அலறிக்கொண்டிருக்கிறது!' . ஒரு நாட்டுக்குத் (பிரான்சு போன்ற நாடுகளுக்கு) தேவையான மருந்துகளையும், முகக்கவசங்களையும் கொண்டுசெல்கிற கப்பல்களை ... கடலிலேயே கடற்கொள்ளையர்கள்போல ... வழிமறித்து, 'பறித்துச் செல்கிற ஒரு நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது!
ஆனால் ஒன்று நிச்சயம், மனித சமுதாயம் அழிந்துவிடாது! ஆனால்... இன்று .. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையையும் உழைப்பாளியையும் சுரண்டி வாழ்ந்துவருகிற வர்க்கங்களும் அவற்றிற்குக் காவலாளிகளாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசுகளும்... இந்த நோயை எதிர்ப்பதற்கான அறிவியலை ஏன் உருவாக்கவில்லை? ஆயிரம் காரணங்கள் கூறலாம் ! மக்களுக்கான அறிவியல், மருத்துவம் என்ற நோக்கில் (கியூபா போன்று) இவையெல்லாம் செயல்பட்டிருந்தால்... இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை!
சரி.. அடுத்த பிரச்சினை! பொருளாதாரத் தேக்கம்... சரிவு .. அதலபாதாளத்தைநோக்கிய ஒரு சரிவு! நிச்சயம் நடக்கும்! கார்பரேட் நிறுவனங்களுக்குத் தங்கள் ''தொழிலை'' தொடர்ந்து லாபகரமாக நடத்துவதில் பிரச்சினை! 1930 -இல் ஏற்பட்ட சரிவைவிட... 2008 இல் அமெரிக்காவில் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியைவிட... மிகமிக மோசமான நிலைக்குப் பொருள் உற்பத்திசெல்லும்.. தொழிற்சாலைகள், வங்கிகள், பங்குச் சந்தைகள், விற்பனைச் சந்தைகள் அனைத்தும் பாதிக்கப்படும். ஆனால் தங்கள் அரசுகளின் - தங்களுக்கான அரசுகளின் - உதவிகளோடு... (2008 -இல் பாதிக்கப்பட்ட அமெரிக்க வங்கிகளுக்கு அமெரிக்க அரசு ''உதவி'' செய்ததுபோல) தொழில் அதிபர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து தற்காலிமாக வெளிவர முயல்வார்கள். தங்கள் 'சுமைகளை'' மக்கள்மீது ஏற்றி, சமாளிக்க முயல்வார்கள்! அவர்களுக்கான பொருளாதார அறிஞர்கள் ( கீனெஸ் போன்றவர்கள்) சாதாரண மக்களைப் பணயம் வைத்து, தற்காலிகத் தீர்வுகளை முன்வைப்பார்கள்! அவர்களுக்கு நோபல் பரிசும் கொடுக்கப்படும்! இது ஒருபுறம் இருக்கட்டும்!
ஆனால் கரோனாவின் பாதிப்புகளோடு, மேற்குறிப்பிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளையும் இறுதியாகச் சுமக்கப் போகிறவர்கள் யார்? தொழிலாளிகள்.. விவசாயிகள்.. சிறுதொழில்முனைவோர்கள்.. கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள்.. பொறியியலாளர்கள்... பிற பணிகளை மேற்கொள்கிற இடைத்தட்டு மக்கள்!
மிகமோசமான பாதிப்புகளுக்கு இவர்கள் உட்பட இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தோடு.. மேலும் மேலும் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். அல்லது ஊதியம் குறைக்கப்படுவார்கள். அன்றாடத் தேவைகளின் விலைவாசிகூட வானளவு உயரும்!
தொழில் அதிபர்களுக்கு வங்கி கடன் கொடுக்கும். அரசுகள் வரிகளைக் குறைக்கும். ஆனால் மேற்குறிப்பிட்ட சாதாரண மக்களுக்கு? யார் உதவுவார்கள்? கரோனா நோய்த் தொற்றல் பிரச்சினை தீர்க்கப்பட்டபிறகு... வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி இருக்கும்? வேலை இழப்பு இருக்குமா? வேலை வாய்ப்பு கிடைக்குமா? ஊதியம் குறையுமா? போனஸ் கிடைக்குமா? விலைவாசி குறையுமா?
இவைபோன்ற பிரச்சனைகளைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டும. கரோனா நோய் தீர்ந்துவிடும்.. ஆனால் மேற்கூறிய பொருளாதார நோய்கள் ???
இதுபற்றியெல்லாம் நாம் சிந்திக்கவேண்டும். வழிமுறைகளை அறியவேண்டும். இதைவிட்டுவிட்டு... கரோனாவைப்பற்றிமட்டும் சிந்தித்துக்கொண்டு இருக்கக்கூடாது! ''யானை வரும் பின்னே, மணி ஓசை வரும்முன்னே'! தற்போதைய கரோனா வெறும் மணியோசைதான்! சந்திக்கப்போகிற பொருளாதாரப் பிரச்சினைகள்தான் மதம் பிடித்த யானை! தொடர்ந்து விவாதிக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India