ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அரசு மருத்துவத் துறையும் தனியார் (பன்னாட்டு) மருத்துவப் பெருநிறுவனங்களும்! (பகுதி 1)

அரசு மருத்துவத் துறையும் தனியார் (பன்னாட்டு) மருத்துவப் பெருநிறுவனங்களும்! (பகுதி 1)
----------------------------------------------------------------------------------
இன்று நாடெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சூழலில்.... மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள் எந்த அளவு மக்களுக்கு உதவுகின்றன என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்.... பதில் கிடைக்கவில்லை!

சாதாரணவேளைகளில் தனியார் மருத்துவமனைகள் .... தாங்கள் ''உலகத் தரத்திற்கு'' - '' அனைத்து வகையான நவீனக் கருவிகளையும் கொண்டு ... '' மேலைநாடுகளில் மிகவும் சிறப்பான பயிற்சிபெற்ற மருத்துவர்களைக் கொண்டு '' ... எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்று மூலைமுடுக்கெல்லாம் விளம்பரம் செய்கின்றன! 24 X 7 , அதாவது முழுநேரமும் மக்களுக்காகச் '' சேவை செய்கிறோம்'' என்று விளம்பரங்களை வெளியிடுகின்றன! ஒரு தொலைபேசி செய்தால் போதும்.. அடுத்த விநாடியே அவசர சிகிச்சைக்கான மருத்துவப் பணியாளர்களைக்கொண்ட ''ஆம்புலன்ஸ்'' வீட்டு வாசலுக்கே வந்துவிடும் என்று கூறுகின்றன! நெடுஞ்சாலைகளில் ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு உட்பட்டவரை உடனடியாக ஏற்றித் தங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவர.. ஆம்புலன்சுடன் '' காத்துக் கொண்டிருக்கின்றன'' !
இந்த மருத்துவமனைகளுக்கு ஒரு நோயாளி சென்றவுடனேயே .. ஐந்துநட்சத்திர ஓட்டல்களில் தரப்படுகின்ற அறைபற்றிய ஆல்பம் போன்ற ஒன்று அவருக்குத் தரப்படுகின்றது! '' சூபர் டீலக்ஸ்'' '' டீலக்ஸ்'' என்று பலவகைப்பட்ட நோயாளி அறைகளைப்பற்றி விவரங்கள் அளிக்கப்படுகின்றன! அதற்கு அடுத்து, தனி செவிலியர்கள் ஏற்பாடு செய்யலாமா, அல்லது பல நோயாளிகளுக்குக் கூட்டாக நியமிக்கப்பட்டுள்ள செவிலியர் போதுமா என்று கேட்கப்படுகிறது! அடுத்து, பன்னாட்டு காப்பீட்டு நிறுவனப் பணியாளர் வருவார். என்ன வகையான காப்பீடு உள்ளது, குறைந்தது எத்தனை நாள்கள் மருத்துவமனையில் இருந்தால் அதிகமான பணம் கிடைக்கும் என்பதையெல்லாம், மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்கு ''உதவும்வகையில்'' கேட்பார்கள்! இவ்வளவு '' விசாரணையிலும் '' தமிழுக்கு இடமே இருக்காது. ஆங்கிலம்தான்!
மருத்துவமனையில் சேர்ந்தபிறகு... தண்ணீர்கூட ... சாதாரண அரிசிக்கஞ்சிகூட அங்குள்ள ஊட்டச்சத்து நிபுணர்தான் கொடுப்பார்! எவ்வளவு உபசரிப்பு?
அடுத்து, பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த நோயாளியைப் பரிசோதிப்பார்கள், எந்த ஒரு குறிப்பிட்ட நோய் என்று தெளிவாகத் தெரிந்தாலும்கூட! பின்னர், ஒவ்வொரு மருத்துவரும் நோய்பற்றி இறுதியான ஒரு முடிவுக்கு வருவதற்காக.. அந்த மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அத்தனை நவீனக் கருவிகளையும் பயன்படுத்திப் பார்க்கக்கூடியவகையில் பல சோதனைகளுக்குப் பரிந்துரைப்பார்கள். தேவையோ தேவையில்லையோ, நோயின் '' பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்க '' ஏஞ்சியோகிரம், என்டோஸ்கோப்பி, ஸ்கேன் ( எக்ஸ்ரே போதாது என்று, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ , பேட் ) '' என்று சோதனைகள் நடைபெறும். பிறகு நோயாளிக்குச் சிகிச்சை தொடரும்! '' வசதியுள்ள நோயாளியும் '' இனி தனக்குப் பிரச்சனையே இல்லை, உறுதியாகப் பிழைத்துவிடுவோம்'' என்று '' நம்பிக்கை'' கொள்வார்கள்!
இவ்வளவு '' சிறப்பாக '' மக்களைக் கவனிப்பவர்கள்... தற்போதைய கொரோனாத் தொற்றுப் பரவல் நேரத்தில் .... சத்தமே இல்லை! அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பிற மருத்துவப் பணியாளர்களுமே .. தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, கொரோனா நோயாளிகளுடன் தங்கியிருந்து, சிகிச்சை அளித்துவருகிறார்கள்.
இந்தக் கொரோனா நோயாளிகளை .. அரசு அனுமதியுடன்.. தனியார் மருத்துவமனைகள் '' தத்து எடுத்து'' தங்கள் மருத்துவமனைகளில் வைத்து, சிகிச்சை அளிப்பதற்கு , சட்டம் இடம் கொடுக்காதோ என்ற ஐயம் எனக்கு! அந்த மருத்துவமனைகளில் .. மிக விலையுயர்ந்த ... உலகத்தரம் வாய்ந்த வெண்டிலேட்டர்கள் எல்லாம் இருக்குமே! மேலைநாடுகளில் பட்டம்பெற்ற .. சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவ நிபுணர்கள் இருப்பார்களே! அவ்வாறு '' தத்து எடுக்க'' விதிகள் இடம் கொடுக்கவில்லையென்றால், அரசு அனுமதியுடன் அங்குள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று, தங்கள் பணிகளைத் தொடரலாமே!
ஆனால்... நடைமுறையில் இதுபோன்ற ஒரு நிலையைக் காணமுடியவில்லையே? காரணம்... மருத்துவத்துறை என்பது இன்று பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்போன்று... பிற தொழிற்சாலைகள் போன்று... இலாபநோக்கைமட்டுமே அடிப்படையாகக்கொண்ட... ஏகபோக நிறுவங்களாகவே நாட்டில் ஊடுருவியுள்ளன. இந்த பன்னாட்டு மருத்துவத்துறைகளின் நோக்கமானது... நோய்களை முன்கூட்டியே தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்வது இல்லை.. மாறாக, நோய்கள் ஏற்பட்டபிறகு குணப்படுத்துவதற்கான ''பணிகளை'' செய்வதே ஆகும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு... ஏராளமான நவீனச் சோதனைக் கருவிகளையும்... நவீன மருந்துகளையும்... உற்பத்திசெய்து... அவற்றை விற்பதற்காகவே ... இந்த மருத்துவமனைகள் இன்று இயங்குகின்றன! ஒரு கிராமத்தில் அல்லது அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவருக்கு மேற்கூறிய வசதிகள் எல்லாம் கிடையாது. அவரது அறிவும் ஆற்றலுமே அவருக்கு ஆதாரங்கள்! ஆகவே அவருக்கு மக்களிடம் நல்ல பெயரும் இருக்கும். 'இந்த மருத்துவரிடம் செல்லுங்கள் , நல்ல வைத்தியம் பார்ப்பார்'' என்று மக்கள் பொதுவாகக் கூறுவார்கள்! ஆனால் இந்த ஏகபோக பன்னாட்டு மருத்துவமனைகள் ஆதிக்கம்செலுத்தத் தொடங்கியபிறகு.. குறிப்பிட்ட மருத்துவர்கள் பெயர்களை யாரும் சொல்லுவதில்லை. மாறாக, மருத்துவமனைகளின் பெயர்களைக் கூறி, '' இந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள் '' என்று மக்கள் சொல்லக்கூடிய நிலை .. ஒரு அவலநிலை.. இன்று தோன்றி வளர்ந்துள்ளது. அதாவது மருத்துவர்கள் பின்தள்ளப்பட்டு, ஏகபோக மருத்துவமனைகளின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல,, ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதமும் ( தங்கள் நோயாளிகளை அங்குள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்தச் செய்து) , குறைந்தது ஒரு தொகையை மருத்துவமனைக்குச் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால், அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுவிடவேண்டியதுதான்!
மருத்துவமனைகள் மட்டுமல்ல .. மிகப் பெரிய பன்னாட்டு ஏகபோகப் பரிசோதனை நிலையங்களும் இன்று கொடிகட்டிப் பறக்கின்றன! '' புத்தாண்டுக்குக்கூட '' ''சலுகைகள் '' இவை தருகின்றன. இந்தச் சோதனை நிலையங்களுக்குத் தேவையான சந்தைகளை உருவாக்க.. உலக அளவிலான '' சந்தை அல்லது விற்பனை நிபுணர்கள்'' , தனியே மருத்துவம் அளிக்கிற மருத்துவர்களையும், சிறிய அளவிலான மருத்துவ மனைகளையும் '' பல வகைகளில் '' தங்களது பிடிகளில் கொண்டுவந்துவிடுகின்றனர். அவர்களை ஆண்டுதோறும் பிரபல மருத்துவ மாநாடுகளில் ( அயல்நாடுகள் உட்பட) பங்கேற்கத் தங்கள் செலவில் அழைத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு இன்று .... பன்னாட்டு மருத்துவமனைகளும் ஆய்வுக்கூடங்களும் மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உலகையே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்தப் பன்னாட்டு ஆய்வுக்கூடங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள்பற்றி விளக்கமாக அடுத்த பகுதியில் தொடர்கிறேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India