கொரோனா தொற்றுப் பிரச்சனை எப்போது, எவ்வாறு தீரும்? அச்சம் தேவையா? ( பொதுமக்களுக்கான ஒரு
பதிவு இது ! அறிவியல்துறைகளை - குறிப்பாக மருத்துவத் துறைகளை - சார்ந்தவர்களுக்கு
இது இல்லை!) - பகுதி 2. (ஏப்ரல் 20, 2020)
--------------------------------------------------------------------------------------
நேற்று சென்னையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த நரம்பியல் மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம்செய்வதற்குக் கொண்டு சென்றபோது... அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தடைசெய்துள்ளனர்! மிகவும் மனவேதனையைத் தரக்கூடிய ஒரு செய்தி இது! இதுபோன்ற ஒரு அச்ச உணர்வை மக்களிடம் உருவாக்கியவர்கள் யார்? அரைகுறை அறிவுடன் .... தேவையற்ற அச்சத்தை உருவாக்கும் வகையில்... இந்த நோய்த்தொற்றல்பற்றிப் பேசியவர்கள், எழுதியவர்கள்தான் முழுக்க முழுக்கக் காரணம்! இந்தக் கொரோனா வைரசுபற்றிச் சில தவறான தகவல்கள் - மருத்துவ அறிவியலில் மறுக்கப்பட்டுள்ள புரளிகள் - மக்களிடம் சென்றடைந்துள்ளதுதான் காரணம்! இறந்த உடலால் தும்மவும் இறுமவும் முடியாது ! இந்த இரண்டும் இல்லாமல் .... அந்த வைரசு தானாகச் சுற்றியுள்ளவர்களுக்குப் பரவமுடியாது. மேலும் இறந்தவரின் உடம்பு .. உலகச் சுகாதார மையத்தின் அறிவுரைப்படிதான் அடக்கம் செய்யப்படுகிறது!
--------------------------------------------------------------------------------------
நேற்று சென்னையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த நரம்பியல் மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம்செய்வதற்குக் கொண்டு சென்றபோது... அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தடைசெய்துள்ளனர்! மிகவும் மனவேதனையைத் தரக்கூடிய ஒரு செய்தி இது! இதுபோன்ற ஒரு அச்ச உணர்வை மக்களிடம் உருவாக்கியவர்கள் யார்? அரைகுறை அறிவுடன் .... தேவையற்ற அச்சத்தை உருவாக்கும் வகையில்... இந்த நோய்த்தொற்றல்பற்றிப் பேசியவர்கள், எழுதியவர்கள்தான் முழுக்க முழுக்கக் காரணம்! இந்தக் கொரோனா வைரசுபற்றிச் சில தவறான தகவல்கள் - மருத்துவ அறிவியலில் மறுக்கப்பட்டுள்ள புரளிகள் - மக்களிடம் சென்றடைந்துள்ளதுதான் காரணம்! இறந்த உடலால் தும்மவும் இறுமவும் முடியாது ! இந்த இரண்டும் இல்லாமல் .... அந்த வைரசு தானாகச் சுற்றியுள்ளவர்களுக்குப் பரவமுடியாது. மேலும் இறந்தவரின் உடம்பு .. உலகச் சுகாதார மையத்தின் அறிவுரைப்படிதான் அடக்கம் செய்யப்படுகிறது!
உலக அளவில் ... இன்றைய கணக்குப்படி... கொரோனாத் தொற்று ஏற்பட்டவர்கள் 24 இலட்சம்! அதில்
இன்றுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 6 இலட்சத்து 35
ஆயிரம்! இறந்தவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 65 ஆயிரம்! அதாவது
குணமடைந்தவர்கள் 26 %. ; இறப்பு விகிதம் 6.8 %. இது எதைக் காட்டுகிறது? கொரோனா வைரசு உடலில் புகுந்துவிட்டாலே, சாவு என்று நினைக்கத்
தேவையில்லை! மனித உடல் அந்த வைரசை எதிர்த்து நின்று போராடி, வெற்றிபெறும் !
இந்தப் போராட்டத்தில் உடலில் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்கள் ... பொதுவாக 60 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு ... மருத்துவ உதவி அளிக்கப்பட்டாலும்., சிலவேளைகளில் இறப்பு
ஏற்படலாம்! இது எல்லா நோய்களுக்கும்தான் பொருந்தும்!
கடந்த ஐந்து மாதங்களாக .. சீனாவில் ஊகான் பகுதியில் டிசம்பரில் இந்த வைரசு
கண்டறியப்பட்டதிலிருந்து... உலகெங்கும் உள்ள மருத்துவ அறிவியல் துறையைச்
சேர்ந்தவர்களும் பல்வேறு மருந்துத் தயாரிப்பு ஏகபோக நிறுவனங்களும் (இவற்றிற்கு இலாப
நோக்குதான் பிரதான நோக்கம் என்றாலும்) இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியையும் , தொற்று ஏற்பட்டபிறகு
அந்த வைரசை ஒழித்துக்கட்டும் மருந்துகளையும் கண்டறிய 24 மணிநேரமும்
முயன்றுகொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த வைரசுத் தொற்றலைத் தடுத்துநிறுத்தும்
வழிமுறைகள் பலவற்றையும் முன்வைத்து வருகிறார்கள்!
உலகில் ஏற்கனவே தோன்றிய பல வைரசுகளின் தொற்றலைத் தடுத்துநிறுத்துவதற்கான
தடுப்பூசிகளும் பிற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டதால்... அம்மை, தட்டம்மை, போலியோ, ஃபுளூ, எபோலா போன்ற
வைரசுகளின் தொற்றலை மனித சமுதாயம் சிறந்தமுறையில் இன்று தடுத்துநிறுத்தியுள்ளது
என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால்... அதுபோன்ற தடுப்பூசிகளை உருவாக்குவது
என்பது எளிதான செயல் இல்லை! பல ஆண்டுகள் பிடிக்கும்! போலியோ வைரசு 1916 ஆம் ஆண்டு
கண்டறியப்பட்டது. அதனால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டது! ஆனால் அதற்கான தடுப்பூசியை
உருவாக்கிட 50 ஆண்டுகள் தேவைப்பட்டன.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் .. 12 அல்லது 18 மாதங்களில் கொரோனா
வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்கிவிடலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு
நிறுவனம் ( Moderna
Pharmaceutical Company) இதில் முன்னணியில்
இருக்கிறது. சீனா, ஜெர்மனி, ஜப்பான் , இங்கிலாந்து நாடுகளின் விஞ்ஞானிகளும்
தங்கள் முயற்சியில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்குமுன்னர் ... குறிப்பிட்ட வைரசின் புரதத்தையே தனிமைப்படுத்தி...
வலிமையற்றதாக, உடம்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்
மாற்றியமைத்து.. உடலுக்குள் ஊசிகள்மூலம் ஏற்றப்படும். இதனால் உடம்பில் அந்தக்
குறிப்பிட்ட வைரசுக்கான எதிர்ப்பு அல்லது தடுப்பாற்றல் புரதம் தோன்றும். பின்னர்
தடுப்பாற்றல் பெற்ற உடம்பில் குறிப்பிட்ட வைரசு எப்போது ஊடுருவினாலும், உடனடியாக நமது
உடம்பில் உள்ள ... அதற்கு எதிர்ப்பான புரதப் போராளி செயல்பட்டு, அந்த வைரசை உடம்பில்
ஊடுருவிப் பாதிக்கவிடாமல் தடுத்துவிடும்.
தற்போதைய கொரோனா வைரசை ஆராய்ந்த அறிவியலாளர்கள்... அதனை மூன்று பகுதிகளாக
... மூன்றுவகைப் புரதங்களாகப் பகுத்தறிந்து... எந்தப் புரதம் மனித உடம்பில்
முதலில் நுழைந்து, கொரானா வைரசு முழுமையாக ஊடுருவ வழி
அமைத்துக் கொடுக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். அதில் முள்கிரீடம் போன்று
அமைந்துள்ள " Spike Protein" என்பதே நமது உடம்பில் முதலில் தன்னைத்
தடுக்காமல் ''வரவேற்கக்கூடிய'' ஒரு புரதத்தை இனங்கண்டு...
அதன்வழியே கொரோனா நுழைந்து.. பின்னர் நமது திசுவின்(tissue) உயிர்மத்தின் (cell) புறத்தோலைத் (cell membrane) தகர்த்து ... உள்ளே சென்று, தன்னைப் பன்மடங்காகப்
பெருக்கிக்கொள்கிறது. இங்கு நாம் கவனிக்கவேண்டியது .. கொரோனா வைரசால் நமது
உடம்பின் உயிர்மம் இல்லாமல், தன்னை இனப்பெருக்கம் செய்துகொள்ளமுடியாது.
அதாவது பன்மடங்காகப் பெருகமுடியாது. அவ்வாறு பெருகினால்தான், அந்த எண்ணற்ற
வைரசுகள் நுரையீரலையோ, சிறுநீரகத்தையோ, இருதயத்தையோ, மூளையையோ
பாதிக்கமுடியும்.
தற்போது, மருத்துவ அறிவியலாளர்கள் மேற்குறிப்பிட்ட
"spike protein" மரபுக்கூறுகளை ஆராய்ந்து, அதனடிப்படையில்
அதுபோன்ற ஒரு புரதத்தை உருவாக்கி ... நானோத் துகள்களில் (nano particle) , உடம்பில் செலுத்தினால் போதும்... நமது தடுப்பாற்றல்
இயக்கம் அந்தப் புரதத்தை இனங்கண்டு... உடனடியாக அதை எதிர்த்து ... ஊடுருவவிடாமல்
... தடுக்கக்கூடிய எதிர்ப்பாற்றலை உருவாக்கிக்கொள்ளும். கொரோனா வைரசின் ''முன்னணி வீரனை'' நமது உடம்பில் உள்ள
தடுப்பாற்றல் தடுத்து நிறுத்திவிடும். இதனால் கொரோனா வைரசு உடம்பில் ஊடுருவி, தன்னைப் பன்மடங்காகப
பெருக்கிக்கொள்ளமுடியாது!
மேற்குறிப்பிட்ட வழியிலான தடுப்பூசி தற்போது உருவாக்கப்பட்டுவிட்டது. சோதனை
முயற்சிகள் தொடங்கிவிட்டது. 45 தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழுவில்
மூன்று நபர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிட்டது. பின்னர் விலங்குகளுக்குப்
சோதனை செய்யப்படும். பிறகு, பெரிய அளவில் மனிதர்களுக்குச் சோதனை
செய்ய்யப்படும். ஆனால் இந்தத் தடுப்பூசி முழுமையாக நடைமுறையில்
செயல்படுத்தப்படுவதற்கு, இன்னும் 12
அல்லது 18
மாதங்கள் ஆகும்! அதுவரை என்ன செய்வது?
இங்குத்தான் நாம் தடுப்பூசியின் அடிப்படை நோக்கத்தைப்
புரிந்துகொள்ளவேண்டும். இங்குத்தான் நோய்த்தொற்றியல் அறிவியலாளர்களின் கருத்துகளை
அல்லது விளக்கங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்! இந்த அறிவியலின் அடிப்படை ... ''மந்தை அல்லது
தொகுப்புத் தடுப்பாற்றல் '' (" herd or
community immunity ") என்ற
நோய்எதிர்ப்புத்திறன்கொண்ட மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும். இந்த நோக்கத்தை
நிறைவேற்றுவதற்கே தடுப்பூசி ஆய்வும் உற்பத்தியும் ஆகும்! இதுபற்றி விளக்கமாகப்
பார்த்தால் நல்லது என நினைக்கிறேன். ஆகவே நாளை மூன்றாவது பகுதியாக அதுபற்றிய
விளக்கங்களை விவாதிக்கலாம்! முடிந்தவரை மருத்துவ அறிவியலை நான்
புரிந்துகொண்டவரையில் -- எளிமைப்படுத்திக் கூற முயன்றுள்ளேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக