கொரானாத் தொற்றலை எதிர்த்த போராட்டத்தில்... பொதுமக்களுக்குச் சமூகவிலகல், தூய்மை ஆகியவற்றைப்
பின்பற்றுங்கள் என்று மட்டும் கூறினால் போதுமா அல்லது கொரோனா வைரசின்
பாதிப்புகள்பற்றிய சில அறிவியல் உண்மைகளும் கூறப்படவேண்டுமா? (ஏப்ரல்
21,2020)
-----------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
கனடாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார்
அவர்கள் தற்போதைய கொரோனாத் தொற்றுநோய் எவ்வாறு மனித உடலுக்குள்... குறிப்பாக
நுரையீரலைமட்டும் பாதிக்காமல், இதயம், சிறுநீரகம், இரத்தக்குழாய்கள், மூளை ஆகியவற்றையும்
பாதிக்கிறது என்பதை விளக்கும் ஒரு அறிவியல் கட்டுரையைத் தன் முகநூல் பதிவில்
அறிமுகப்படுத்தியிருந்தார். அதுபற்றித் திரு. ஜெயபாண்டியன் அவர்கள் (
அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர்
பட்டம்பெற்று, பின்னர் ஒரு பெரிய ஆய்வு நிறுவனத்தில்
விஞ்ஞானியாகப் பணியாற்றிய தமிழ் உணர்வும் அறிவியல் தமிழ் ஆர்வமும் உடைய விஞ்ஞானி)
தெரிவித்திருந்த கருத்தையும் அந்தக் கருத்துக்கு நான் அளித்துள்ள பதிலையும்
இங்குத் தருகிறேன். இன்று நமக்குத் தேவைப்படுகிற ஒரு விவாதம் என்பதால் அவற்றை
இங்குப் பதிவு செய்கிறேன்.
//
திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் :
இவையெல்லாம் மருத்துவர்கள் படிக்கவேண்டியவை. நாம் படித்து அச்சுறவேண்டியவையல்ல.
பொதுமக்களுக்கு தரப்பட்ட அறியுறுத்தல்கள் சமூக விலகலும் தூய்மையும் போன்றவையே.
அவற்றை நாம் கடைப்பிடித்தால் போதும்.//
//
ந. தெய்வ சுந்தரம் : திரு. ஜெயபாண்டியன்
கோட்டாளம் ஐயா அவர்களே, தங்களுடைய கருத்துடன் நான்
முரண்படுகிறேன். பொதுமக்கள் முட்டாள் இல்லை. அவர்களுக்கு இயற்கைபற்றியும் மனித
உடல்பற்றியும் பல உண்மைகள் தெரியும். இல்லையென்றால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில்
மனிதசமுதாயம் இயற்கையையும் மனிதனுக்கு எதிரான இயற்கைப் பாதிப்புகளையும்
எதிர்த்துநின்று, போராடி, இன்றைய வளர்ச்சியை எட்டியிருக்கமுடியாது.
பல நோய்களின் பாதிப்புகளையும் அவற்றை எவ்வாறு வெல்வது என்பதையும் மக்கள்
தெரிந்துவைத்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கே இயற்கை, உடம்புபற்றிப் பல
பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றையெல்லாம் அடிப்படையாகக்கொண்டு,,, இன்றைய அறிவியல்
வளர்ச்சியை அவர்களுக்குப் புரியக்கூடிய எடுத்துக்காட்டுகளைக்கொண்டு விளக்கினால், உறுதியாக அவர்கள்
புரிந்துகொள்வார்கள். வெறும் தூய்மை , சமூகவிலகல் என்று மட்டும்
கூறிக்கொண்டிருக்காமல், ஏன் அவை தேவைப்படுகின்றன, அவற்றைப்
பின்பற்றவில்லையென்றால், என்னென்ன பாதிப்புகள் உடம்பில் ஏற்படும்
... எந்தெந்த உறுப்புகளைப் பாதிக்கும் என்பதையெல்லாம் அவர்களுக்குத்
தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அவர்கள் சமூகவிலகல், தூய்மை ஆகியவற்றின்
தேவைகளைப் புரிந்துகொண்டு, பின்பற்றமுடியாது. அறிவியல் ஆய்வுக்
கட்டுரை போன்றோ அல்லது பாடப் புத்தகங்கள்போலவோ இல்லாமல்... அடிப்படை அறிவுடைய
பொதுமக்களுக்கு விளங்கும்வகையில் கருத்தாடலை அமைத்துக்கொண்டு, எந்தவொரு
அறிவியலையும் அவர்களுக்கு விளக்கலாம். அதேவேளையில், மேலும் தெரிந்துகொள்ளவேண்டும்
என்பவர்களுக்கு... நாம் உயர் அறிவியல் கட்டுரைகளை அறிமுகப்படுத்தலாம். உடம்பு
உறுப்புகள்பற்றிய அறிவு... நோய்கள்பற்றிய அறிவு ... பாக்டீரியா, வைரசு பற்றிய
தெளிவு... மருத்துவ வழிமுறைகள்பற்றிய அறிவு ஆகியவற்றைப்பற்றிய அடிப்படை
அறிவுவெல்லாம் நிச்சயமாகப் பொதுமக்களுக்குத் தேவை. அவற்றைப்பற்றிய உயர்மட்ட
அறிவுதான் மருத்துவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். பொதுமக்களுக்கு அடிப்படை அறிவு
அளிக்கப்பட்டிருந்தால், மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு மருத்துவம்
அளிக்க உதவியாக இருக்கும். கொரோனா வைரசு எவ்வாறெல்லாம் பாதிக்கும், இறந்த ஒருவரின்
உடம்பால் இறுமல், தும்மல் ஆகியவற்றின்மூலம் இந்த வைரசைப்
பிறருக்குப் பரப்பமுடியாது என்பதைப் பொதுமக்கள் தெரிந்திருந்தால்.. சென்னையில்
கொரோனாவால் இறந்த ஒரு மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு
தெரிவித்திருக்கமாட்டார்கள்.//
0 கருத்துகள்:
கருத்துரையிடுக