கொரோனா தொற்றுப் பிரச்சனை எப்போது, எவ்வாறு தீரும்? அச்சம் தேவையா? ( பொதுமக்களுக்கான ஒரு
பதிவு இது ! அறிவியல்துறைகளை - குறிப்பாக மருத்துவத் துறைகளை - சார்ந்தவர்களுக்கு
இது இல்லை!) - பகுதி 3 (ஏப்ரல் 21, 2020)
--------------------------------------------------------------------------------------
100 ஆண்டுகளுக்குமேலாக மருத்துவ அறிவியல் துறையில் - குறிப்பாக நோய்த்தொற்றியல் துறையில் (Epidemiology) - '' மந்தைத் தடுப்பாற்றல் ( herd immunity) '' என்ற ஒரு கலைச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ' மந்தை' என்ற சொல் கால்நடைகளின் கூட்டத்தைப் பொதுவாகக் குறிப்பதால் , '' சமூகத் தடுப்பாற்றல் அல்லது மக்கள் தடுப்பாற்றல்'' என்ற சொல்லைச் சிலர் பயன்படுத்துகின்றனர்.
--------------------------------------------------------------------------------------
100 ஆண்டுகளுக்குமேலாக மருத்துவ அறிவியல் துறையில் - குறிப்பாக நோய்த்தொற்றியல் துறையில் (Epidemiology) - '' மந்தைத் தடுப்பாற்றல் ( herd immunity) '' என்ற ஒரு கலைச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ' மந்தை' என்ற சொல் கால்நடைகளின் கூட்டத்தைப் பொதுவாகக் குறிப்பதால் , '' சமூகத் தடுப்பாற்றல் அல்லது மக்கள் தடுப்பாற்றல்'' என்ற சொல்லைச் சிலர் பயன்படுத்துகின்றனர்.
மேற்குறிப்பிட்ட கலைச்சொல்லானது மருத்துவத் துறையில் எதை - எந்தக் கருத்தை
- வெளிப்படுத்தப் பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம். ஒரு தொற்றுநோய் ... ஒரு
குறிப்பிட்ட நாட்டில் வசிக்கும் மக்களைத் தொற்றி, அந்த மக்கள் சமுதாயத்தைப் பாதிக்கிறது
என்று கொள்வோம். தொற்றுநோய் என்றாலே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அந்தத்
தொற்றுநோய் பரவுகிறது அல்லது தொற்றிக் கொள்கிறது என்றுதானே பொருள்! சுற்றுப்புறம், விலங்குகள், பறவைகள் , மனிதர்கள் என்று
எதுவொன்றும் தொற்றுநோயின் மூலமாக அமையலாம். இப்போதுகூடக் கொரோனா வைரசு முதலில்
வௌவாலிலிருந்து மனிதருக்குத் தொற்றி... பின்னர் மனிதரிடமிருந்து மனிதருக்குத்
தொற்றியதாகக் கூறப்படுகிறது.
உயிரினங்களிடையே பலவகையான நோய்த்தொற்றல்கள் தோன்றி நீடித்து
வந்திருக்கிறபோதிலும்.. எவ்வாறு அனைத்து உயிரினங்களும் ... 100 விழுக்காடு ...
சாகாமல் ... உயிருடன் நீடித்துவருகின்றன? இதுதான் இயற்கையின் - குறிப்பாக
உயிரினத்தின் - ''சிதம்பர இரகசியம்'' !
மனிதரின் உடலில் தொற்றுநோய்க்கிருமி ஒன்று ... அது மலேரியாவோ, போலியோவோ, ஃபுளூ காய்ச்சலோ
எதுவோ ஒன்று ... நுழைந்து ... உடல் உறுப்புகளைப் பாதிக்கத் தொடங்கியவுடன்... உடல்
என்ன சும்மாவா இருக்கும்( ''அதன் கைகள் முருங்கைக்காய் பறிக்கவா
போயிருக்கும்?'') தன்னைப் பாதிக்க அல்லது அழிக்க
நுழைந்துள்ள நோய்க்கிருமி எதிரியை எதிர்த்துப் போராடி... தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளாதா? நிச்சயமாகப் போராடும். இங்கு நாம் இரண்டு
முக்கியமான செய்திகளைப் பார்க்கவேண்டும்!
நமது உடலில் தொற்றுநோய்க் கிருமியின் ஊடுருவலுக்கு ... நாம் இடம்
கொடுத்தால்தானே அது ஊடுருவி .. தன் அழிவுவேலையைச் செய்யும்? அந்தக் காலத்தில்
ஒருவருக்குப் பெரியம்மை நோய் ஏற்பட்டுவிட்டால்... அவருடைய வீட்டுக்குவெளியே
வேப்பிலையைக் கட்டிவைத்தார்களே? எதற்காக? வெளியாள்களை எச்சரிக்கத்தானே? '' வீட்டில்
நுழையாதீர்கள். மீறி நுழைந்தால், வீட்டில் பாதிக்கப்பட்டவரின் அம்மைநோய்க்
கிருமி உங்களையும் தொற்றிக்கொள்ளும்''
என்ற எச்சரிக்கைதானே? அதனால்தான் அப்போது
ஆண்ட வெள்ளையர்களை ''மிரட்ட''
நமது மக்கள் பொய்யாகக்கூட ''வேப்பிலையைக்'' கட்டி
விட்டுள்ளார்கள்.ஆகவே, நமது முதல் தடுப்பு .. குறிப்பிட்ட
நோய்க்கிருமி உடலில் ஊடுருவ இடம் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருப்பதுதான்! இதுதான்
கொரோனாவை எதிர்த்துப் போராட நாம் மேற்கொண்டுவருகிற ''சமூக இடைவெளி'' ''முக மறைப்பு'' '' கைத்தூய்மி ( sanitizer ) '' போன்றவையாகும். கொரோனா நமது உடலில் நுழைவதற்கு மூன்று
வழிகள் .. வாய், மூக்கு, கண் ! பிறரின் தும்மல், இருமல், நமது கைகள் ஆகிய
மூன்றும் மிக முக்கியமான பாதைகள் கொரோனாவுக்கு! எனவே அந்த வாசல்களை ... கதவுகளை
... கொரோனாவுக்கு அடைத்துவிடலாம்!
சரி.. ஆனால் இது 100 % சாத்தியமா? நமது கவனக் குறைவால்... கொரோனா
மேற்குறிப்பிட்ட மூன்று வாசல்களில் ஏதாவது ஒன்றின்வழியாக ... நமது உடலுக்குள்
புகுந்துவிட்டால்? அவ்வளவுதானா? கொரோனா தன் அழிவு
வேலையைத் தொடங்கிவிடுமா? சாவுதானா? இல்லை ! நாம் கவனக்குறைவாக இருந்தாலும்..
நமது உடலுக்கு உள்ளேயுள்ள ''தடுப்பாற்றல் இயக்கம் (Immune System)'' கொரோனாவை அப்படியே விட்டுவிடுமா? விடாது! போரிட்டுக்
கொன்றுவிடும்!
உடம்பின் இந்தத் தடுப்பாற்றல் இயக்கம் பின்வருவனவற்றை எல்லாம் சிந்தித்து, செயல்படும்! '' தனக்குள்
நுழைந்திருக்கிற எதிரி யார்? ஏற்கனவே நாம் சந்தித்த எதிரியா? அல்லது புது எதிரியா? பழைய எதிரி என்றால், முன்னர் எப்படிப்
போராடி வெற்றிபெற்றோம்? அந்தப் போர்த்தந்திரத்தைப் பயன்படுத்தி, இப்போது
வெற்றிபெறுவோம் '' என்று முடிவு எடுத்து, முன்னர் பயன்படுத்திய
தனது ''முன்னணி வீரரை'' (antibody) அனுப்பி, அந்த எதிரியை வீழ்த்தும்! இங்கு நம்மை
வியப்பில் ஆழ்த்தும் ஒன்று என்னவென்றால், இந்தத் தடுப்பாற்றல் இயக்கத்தின்
நினைவாற்றல்! ''குறிப்பிட்ட எதிரிக்கு எதிராக முன்னர்
தான் போராடியபோது .. தான் தெரிந்துகொண்ட எதிரியின் பண்புகள்... முன்னர் தனது
முன்னணி வீரர்களில் யாரைப் பயன்படுத்தி , எப்படி வெற்றிபெற்றோம் '' போன்ற
விவரங்களையெல்லாம், அது நினைவில் வைத்திருக்கும்!
மேற்கண்டவகையில் ... ஒரு குறிப்பிட்ட நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ...
ஒரு குறிப்பிட்ட தொற்றுநோய்க்கிருமியின் ஊடுருவலுக்கு உட்பட்டு... பின்னர் அதைத்
தங்களது உடலின் தடுப்பாற்றல் திறனால் முறியடித்து
இருந்தால்... கவலையே இல்லை அவர்களுக்கு ... அந்த எதிரி மீண்டும் அந்த நாட்டில்
நுழைந்தாலும் ! குறிப்பிட்ட தொற்றுநோய்க்கிருமி எந்த வழியில் தங்கள் உடம்புக்குள்
நுழைந்தாலும்.. அதை எதிர்த்துப் போராடி அவர்கள் வெற்றிபெறுவார்கள்! இதனால் எந்த
ஒருவரும் அந்த நாட்டில் அந்தத் தொற்றுநோய்க் கிருமியால் பாதிக்கப்படமாட்டார்கள்.
இதுவே ''மந்தை அல்லது சமூகத் தடுப்பாற்றல்''
என்று மருத்துவ அறிவியலில்
அழைக்கப்படுகிறது! இங்கு நாம் கவனிக்கவேண்டிய மற்றொரு உண்மை... அனைவருமே இந்தப்
போராட்டத்தில் வெற்றிபெற்று.. உயிர் மீள்வார்கள் என்று கூறமுடியாது! உடல்
வலிமையின்மை, தடுப்பாற்றல் இயக்கத்தின் இயலாமை, ஏற்கனவே இருந்த பிற
நோய்கள் ஆகியவையும் செயல்பட்டு, சிலரோ பலரோ இறந்துபோகலாம்! ஒரு போரில்
வெற்றிபெறும் நாட்டில் போராடிய வீர்கள் அனைவரும் பிழைத்துவருவார்கள் என்று
எதிர்பார்க்கமுடியாது அல்லவா?
அப்படியென்றால்... ஒவ்வொருவரும் அந்தக் குறிப்பிட்ட நோய்க்கிருமியின்
ஊடுருவலுக்கும் பாதிப்புகளுக்கும் உட்பட்டால்தான் ... அதாவது ''அடிபட்டு, உதைபட்டு, வதைப்பட்டு
இருந்தால்தான்'' மேற்கூறிய ''மந்தைத் தடுப்பாற்றல்'' ஆற்றல் அவர்களுக்குக்
கிடைக்குமா? அப்படியென்றால்.. ஒரு நாட்டின் வரலாற்றில்
.. ஒரு குறிப்பிட்ட காலத்தில்.. ஏராளமான உயிர்களைக் காவுகொடுத்துத்தான் ஆகவேண்டுமா? உயிர் இழப்பு
இல்லாமல், இந்த ''மந்தைத் தடுப்பாற்றலை'' மக்கள் பெறமுடியாதா? இங்குத்தான் மருத்துவ
அறிவியலின் தடுப்பூசியின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது! ''சமூக இடைவெளி'' ''முக மறைப்பு'' ''கைத்தூய்மி'' இவையெல்லாம் 'ஆலை இல்லாத ஊருக்கு
இலுப்பைப்பூ சர்க்கரை '' என்பதுபோல்தான்! தற்காலிகப் பயன்கள்தான்!
நிரந்தரத் தீர்வு இல்லை! ஆனால்... தற்காலிகப் பயன்களுக்கும் பயன் உண்டு என்பதையும்
மறுக்கக்கூடாது!
ஆகவே, இரண்டு வழிகளில் நோய்த்தொற்றுக் கிருமிகளை
எதிர்த்து நாம் போராடலாம். ஒன்று, ஊடுருவலுக்கு உட்பட்டு, உடம்பு அதை
எதிர்த்துப் போராடி.. வெற்றிபெற்று .. அதனாலும் இந்தத் தடுப்பாற்றல் திறமையைப்
பெறலாம் ! மற்றொன்று... தடுப்பூசிமூலமும் இந்தத் திறமையைப் பெறலாம்!
இன்றும் கட்டுரை நீண்டுவிட்டது! எனவே, நாளை இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக