வியாழன், 23 ஏப்ரல், 2020

கொரோனாவும் பொருளாதார நெருக்கடியும்- பகுதி 3


ஊரடங்கு நீடிப்பும் சாதாரண மக்களின் பாதிப்பும் ... (கொரோனாவும் பொருளாதார நெருக்கடியும்- 3).(ஏப்ரல் 13, 2020)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊரடங்கு நீடிப்பு என்பது நிச்சயமாகக் கொரோனாத் தொற்று பரவலைத் தடுக்கும் என்பதில் ஐயம் இல்லை! நிச்சயமாக இன்றைய நிலையில் தேவையான ஒன்றுதான்! இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை!
வசதி உள்ளவர்களுக்கு இந்த ஊரடங்கானது அவர்கள் வெளியே செல்வதற்கும் , தங்கள் தொழில்களைத் தொடர்வதற்கும் , விமானத்தில் உலகப் பயணங்களைத் தொடர்வதற்கும் , திரைப்படம், கிரிக்கெட் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடையாக உள்ளது! அவ்வளவுதான்!
ஆனால்...? ஆனால்...? சாதாரண மக்களின் நிலை ? அமைப்புசாரத் தொழிலாளிகளின் நிலை? தொழிற்சாலைகளில் தற்காலிகத் தொழிலாளிகளின் நிலை? சிறுவியாபாரிகள், நடைபாதைக்கடை வியாபாரிகள்...கையேந்தி ஓட்டல் நடத்துநர்கள்? தானி (ஆட்டோ), சிற்றுந்து (கார்) சரக்குந்து ஓட்டுநர்கள் (டெம்போ) ஓட்டுநர்கள்? கட்டுமானத் தொழிலாளிகள்? முடி திருத்துநர்கள்? சலவைத் தொழிலாளிகள்? கிராமங்களில் சிறு விவசாயிகள்? காய், பூ, கீரை விற்பவர்கள்? நடைபாதைவாசிகள்? மேலும் பல அமைப்புசாராத் தொழிலாளிகள்? பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது...
இவர்களுக்கெல்லாம் எவ்விதப் பொருளாதாரப் பாதுகாப்பும் இன்று உலகில் கிடையாது என்பதே உண்மை. அரசுகளும் அரசியல் கட்சிகளும் வசதியுள்ளவர்களும் .. மேற்குறிப்பிட்ட மக்களுக்கு .. ஒரு நேரம் சோறு இடலாம். அவ்வளவுதான்!
அடுத்து... பெரிய பெரிய தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளிகள்... நிச்சயமாகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்! வேலைக் குறைப்பு... வேலை நேரம் நீடிப்பு.. ஊதிய உயர்வு நிறுத்தம்.. போனசு நிறுத்தம் ... அடுக்கிக்கொண்டே செல்லலாம்!
மேற்கூறிய நிலையெல்லாம் உலகில் இல்லையென்றால்.... ஒரு மாதம் என்ன, ஒரு வருடம்கூட ஊரடங்கை நீடிக்கலாம்! இதுபோன்ற நெருக்கடி நிலைகளில் ... தேவையான கையிருப்பும் ( உற்பத்திப் பொருள், விவசாயப் பொருள், பிற பொருள்கள், நாட்டின் பிற வருமானம் இன்ன பிற ) நாடுகளில் இருக்கவேண்டும்... பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றை உடைய மனித சமுதாயம் மேற்கூறியவற்றை உருவாக்கியிருக்கமுடியாதா?
ஒரு போர் ஏற்படும்போது... ஒரு நாட்டின் இராணுவமானது... தனக்குத் தேவையான தளவாடங்களைப் போதிய அளவு கையிருப்பில் வைத்திருக்கவேண்டுமென்று... கோடியே கோடி டாலர்களை அள்ளிக்கொட்டும் நாடுகள்.. இதுபோன்ற இயற்கைச்சீற்றங்களால் பெரும் நெருக்கடி ஏற்படும்போது... அவற்றால் மக்கள் பாதிக்காமல் இருக்க.. கோடியே கோடி டாலர்களைச் செலவழித்து.. தேவையானவற்றைச் சேமித்து வைத்திருக்கமுடியாதா? முடியும். நிச்சயமாக முடியும்! ஆனால் ... தற்போது ஏன் அது முடியாமல் இருக்கிறது? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தைச் சற்று ஆராய்ந்தால்தான் விடை கிடைக்கும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India