வியாழன், 23 ஏப்ரல், 2020

கொரோனாத் தொற்றுநாய் - பகுதி 4


கொரோனா தொற்றுப் பிரச்சனை எப்போது, எவ்வாறு தீரும்? அச்சம் தேவையா? ( பொதுமக்களுக்கான ஒரு பதிவு இது ! அறிவியல்துறைகளை - குறிப்பாக மருத்துவத் துறைகளை - சார்ந்தவர்களுக்கு இது இல்லை!) - பகுதி 4 ...இறுதிப் பகுதி (ஏப்ரல் 22.2020)
--------------------------------------------------------------------------------------
ஒரு பதிவிலேயே கொரோனாத் தொற்றுபற்றிய பொதுவான உண்மைகளை எழுதிவிடவேண்டும் என்று நினைத்துத்தான் தொடங்கினேன். ஆனால் பதிவு ... ஒன்று.. இரண்டு.. மூன்று.. நான்கு என்று நீண்டுவிட்டது! ஆனால் நிச்சயமாக இந்த நான்காவது பகுதியோடு முடித்துவிடுவேன்... கவலைப்பட வேண்டாம் எனது தொந்தரவு பற்றி!
பொதுமக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ... தேவையான உண்மைகளைக் கூறவேண்டும் என்பதே என் பதிவுகளின் ஒரு நோக்கம். மற்றொரு நோக்கம்.... கொரோனாத் தொற்றலை அறிவியல் முறையில் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த வகையான அறிவியல் அடிப்படையிலான புரிதல்... மக்களுக்குக் கொரோனாவை எதிர்த்துநின்று வெற்றிபெறத் தேவையான மனவலிமையையும் .... அறிவியல் அடிப்படையிலான மருத்துவ வழிமுறையின்மீது நம்பிக்கையையும் நிச்சயமாகத் தரும்!
நேற்றைய பதிவில் '' மந்தை அல்லது சமுதாயத் தடுப்பாற்றல் ( Herd Immunity )'' பற்றிய மருத்துவ அறிவியல் கருத்து ஒன்றைக் கூறினேன். கொரோனா போன்ற வைரசுத் தொற்றல்களை முறியடிக்க ஒரே... நிரந்தர .. வழி இந்த ''மந்தைத் தடுப்பாற்றலே'' ஆகும். மற்றவை எல்லாம் தற்காலிகத் தீர்வுகளே! இழப்புகளைக் குறைக்க உதவலாம்...உதவாமலும் போகலாம்!
ஒரு வழி... குறிப்பிட்ட மக்கள் சமுதாயத்தில் .. கொரோனாத் தொற்றுவந்து .. அதை நமது உடலுக்குள் உள்ள நோய்த்தடுப்பாற்றலின் உதவியுடன் முறியடித்து... வெற்றிகொண்டவர்கள் குறைந்தது 70 அல்லது 80 விழுக்காடு நபர்கள் என்ற நிலை வரவேண்டும். இந்த ஒரு நிலையில்.. மீதி நபர்களுக்குக் கொரோனாத் தொற்றல் இருந்தாலும்... அதை அவர்கள் மேற்குறிப்பிட்ட 80 விழுக்காட்டு மக்களுக்குப் பரப்பமுடியாது. கொரோனாத் தொற்றல்பற்றி ஆராய்ந்துள்ள நோய்த்தொற்றியல் நிபுணர்கள் , R0 ( R naught - reproduction number) என்ற ஒரு கணக்கின்படி , ஒரு நபர் இரண்டு பேர்களுக்குப் பொதுவாகப் பரப்பலாம் என்று கூறுகின்றனர். கொரோனாத் தொற்றுடைய ஒருவருக்கு அருகாமையில் நான்கு நபர்கள் இருந்தால்... இரண்டு நபர்களுக்கு அந்தத் தொற்றலை அவர் பரப்பலாம். அதைத் தொடர்ந்து, நோய்த்தொற்றலுக்கு உட்பட்ட அந்த இரண்டுபேர்களும் தங்கள் ''பங்குக்கு'' தலா 2 என்ற கணக்கில் மொத்தம் 4 பேர்களுக்குப் பரப்பலாம். இப்படியே தொடர்ந்தால், இறுதியில் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுவிடுவார்கள்.
இவ்வாறு இல்லாமல், கொரோனாத் தொற்றுடைய ஒருவருக்கு முன்னால் நிற்கிற 4 நபர்களில் 3 பேர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆனால் அதை உடலின் நோய்த்தடுப்பாற்றல் வலிமையால் வெற்றிகொண்டவர்கள் என்றால், ஒருவர்தான் மாட்டிக்கொள்வார். இப்படியே இது தொடர்ந்தால் ... கொரோனாத் தொற்றின் பரவல் குறைந்துவிடும். இதுதான் ஒருவகையான ''மந்தைத் தடுப்பாற்றல்''!
ஆனால் இதுமாதிரி அந்தச் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலை எற்படுவதற்குமுன்னால்... உயிரிழப்பு பல ஆயிரங்களாக இருக்கவேண்டியிருக்கும். . அதாவது, ஒரு தலைமுறையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் ஏனையோர் நோய்த்தடுப்பாற்றல் வலிமையால் உயிரைத் தக்கவைத்தவர்களாகவும் அமைந்து... அடுத்த தலைமுறையினரின் பாதிப்பைக் குறைக்கலாம்.
அறிவியல் வளர்ச்சி இன்றுபோல் ஏற்பட்டிராத முந்தைய சமுதாயங்களில் இதுபோன்று பல நோய்களுக்கு மனித சமுதாயம் உட்பட்டு.. உயிரிழப்பும் நடந்து.. வெற்றி பெறுதலும் தொடர்ந்துதான்,, சமுதாயம் அழியாமல் வளர்ந்து வந்திருக்கவேண்டும்! ஆனால் இன்று அதுபோல உயிரிழப்பை அனுமதிக்கலாமா? யார் இந்த ''தியாகத்தை'' செய்வது? நானா ? நீங்களா?
ஆனால் அதற்கு மாற்றுவழிகளை இன்றைய அறிவியல் வளர்ச்சி நமக்கு அளித்துள்ளது. அதுதான் தடுப்பூசித் தடுப்பாற்றல்! முன்னர் நாம் பார்த்த அந்த நான்கு பேரில் மூன்றுபேருக்குக் கொரோனாத் தடுப்பூசியின் உதவியுடன் கொரோனாத் தடுப்பாற்றலை அவர்களின் உடல்களுக்கு அளித்திருந்தால்.. கொரோனாவை நுழையவிடாமல் தடுத்து, வெற்றிபெறக்கூடிய திறமையை உடலின் நோய்த்தடுப்பாற்றல் இயக்கத்திற்குக் கொடுத்துவிட்டால்... ? உயிரிழப்பைத் தடுத்துவிடலாமே! எனக்காக நீங்களும் அல்லது உங்களுக்காக நானும் உயிரை இழக்கவேண்டாமே! ''மந்தைத் தடுப்பாற்றலை'' அறிவியல்வழி கொண்டுவந்துவிடலாமே!
இந்தக் கொரோனாத் தொற்று இன்று உலகளவில்.. நாடுகளின் எல்லைகளைத் தாண்டி... தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது! இதைத்தான் ஆங்கிலத்தில் Pandemic என்று அழைக்கிறார்கள்! எனவே உலக அளவில் இந்தத் தடுப்பூசிவழித் தடுப்பாற்றலை மக்களுக்கு அளிக்கவேண்டும்!
இந்தவகையான தடுப்பூசியை உருவாக்க இன்று உலகெங்கும் 75-க்குமேற்பட்ட நிறுவனங்கள் - பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் மருந்து நிறுவனங்கள் - தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. கொரோனா வைரசின் மரபுக்கூறுகளையும் (genome properties) அமைப்பையும் இயக்கத்தையும் இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்துவிட்டனர்.
இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான உண்மை... கொரோனா வைரசு ஒரு உயிர்மம் அல்லது உயிர்க்கூறு (cell ) இல்லை; தன்னைத் தானாகவே பெருக்கிக்கொள்ளமுடியாது! (ஆனால் பாக்டீரியா ஒரு செல். அது தானாகவே தன்னைப் பெருக்கிக்கொள்ளும் ஆற்றல் உடையது!). ஆர் என் ஏ (RNA) என்று அழைக்கப்படும் ஒரு வகை அமிலமே இது. அது தன்னால் தன்னைப் பெருக்கிக்கொள்ளமுடியாது. அதற்கு ஒரு செல் தேவை. இப்போது நமது செல்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.
அதற்கு முதலில் நமது செல்லுக்குள் நுழையவேண்டுமே? கொரோனா வைரசின் ஒருவகை புரதம்தான்(spike protein) அதற்கு உதவுகிறது! அதுதான் நமது செல்லின் மேற்புறத்தில் உள்ள ஒரு புரதக் ''காவலனை'' ஏமாற்றி, செல்லுக்குள் புகுந்துவிடுகிறது. புகுந்தபிறகு, தனது மேலுடையைக் கழற்றிவைத்துவிட்டு, நமது செல்லின் இயக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. தனக்கான செல்களை உருவாக்கவும் பெருக்கிக் கொள்ளவும் தேவையான '' கட்டளைகளை'' நமது செல்லுக்கு அளித்து , நமது செல்களின் வளர்ச்சியைத் தடுத்துநிறுத்தி... தன்னைப் பெருக்கிக்கொண்டு... நமது உடலைப் பாதிக்கிறது! அப்படியென்றால்.. நாம் அதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?
கொரோனா வைசின் மரபுக்கூறுகள் இப்போது நமக்குத் தெரிந்துவிட்டதால்.... அதற்கான ''வழியை'' உருவாக்கிக்கொடுக்கிற புரதத்தைக் கண்டுபிடித்துவிட்டதால் ... அந்த அறிவை நமது உடம்பின் தடுப்பாற்றல் இயக்கத்திற்கு ( Body Immune System) ... பல வழிகளில் ... கொரோனாவின் ஊடுருவலையோ அல்லது நமது செல்லைலைக் கட்டுப்படுத்துகிற திறமையையோ, அல்லது அதனுடைய பெருக்கத்தையோ தடுக்கும் திறனை அளிக்கும் தடுப்பூசியை உடலில் செலுத்தினால்... நமது உடலின் உள்ளார்ந்த நோய்த்தடுப்பாற்றல் இயக்கத்திற்கு உதவி செய்தால்... கொரோனாத் தொற்றையும் அதன் பாதிப்பையும் முறியடித்துவிடமுடியும்.
தற்போது உலகில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொரோனா வைரசு எதிர்ப்புத் தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொண்டு, இறுதி வெற்றியையும் அடைந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் கொரோனாவின் வெவ்வேறு முனைகளைத் தாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளன. பழைய முறைகளில் இல்லாமல்... இன்றைய அறிவியல் வளர்ச்சியின் உதவியினால்... புதுவழிகளில் தடுப்பூசிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. முதல்கட்டச் சோதனைக்கே இரண்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. வெற்றி நெருங்கிக்கொண்டிருக்கிறது ! இன்னும் சில மாதங்கள் ஆகும்! கொரோனா வைரசை மனிதசமுதாயம் முறியடித்துவிடும்! அதுவரை நாம் தற்காலிகத் தீர்வுகளை -- தனிமனித இடைவெளி, முகமறைப்பு, கைத்தூய்மை போன்றவற்றின் மூலமாகத்தான்... கரோனா வைரசுத் தொற்றலிருந்து பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் உருவாக்கத்தில் ... பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் இலாபநோக்கின் காரணமாக.. மிகக் கடுமையான போட்டியும் நடந்து கொண்டிருக்கின்றன! யார் முதலில் தடுப்பூசியை சோதனைகளுக்குப்பிறகு அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார்களோ... அவர்களுக்கு உலகம் முழுவதும் இதுவரை இல்லாத ''மிகப் பெரிய சந்தை'' காத்துக்கொண்டிருக்கிறது!
இன்றைய அறிவியல் வளர்ச்சியானது உலக அரசியல் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டது இல்லை! ஆனால் இப்போது நான் எழுதுவது மருத்துவ அறிவியல் தளம். எனவே மேற்கூறிய பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகப் போட்டிகள்பற்றி இந்தத் தொடரில் எழுதப்போவதில்லை. ஆனால் மற்றொரு தளத்தை.... ''கொரோனாவும் பொருளாதாரச் சிக்கலும்'' என்ற தளத்தை எனது முகநூலில் ஏற்கனவே அறிமுகப்படுத்தி, மூன்று பதிவுகளை இட்டுள்ளேன். அதில் இதைத் தொடர்கிறேன். இந்தப் பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India