திங்கள், 27 ஏப்ரல், 2020

மனநோய்களுக்கு எதிரான தடுப்பாற்றல் ( mind immunology system)



மனநோய்களுக்கு எதிரான தடுப்பாற்றல் ( mind immunology system)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று உலகில் ... வளர்ச்சியடையாத நாடுகளில் மக்களுக்குத் தங்களது வாழ்க்கைச் சூழல் காரணமாக.... மன உளைச்சலே அதிகம் என்பதும் எனவே பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் எல்லாம்.. மன உளைச்சலைப் போக்குவதற்கான மருந்துகள் (Psychosomatic drugs) என்ற பெயரில் ஏராளமான மனநோய் மருந்துகளை ( anti-anxiety, anti-depression, anti-insomnia ) உருவாக்கி, அந்த நாடுகளுக்கு விற்றுக் கொள்ளைலாபம் அடித்துவருகிறார்கள் என்பதையே ஆய்வுகள் கூறுகின்றன. எனவே , மக்களிடையே பீதிகளையும் பயத்தையும் மன உளைச்சலையும் உருவாக்குவதே அந்த நிறுவனங்களின் சந்தைக்கான '''மூலதனம்'' என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதை முறியடிக்கும் பணியை நாம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். மக்களுடைய தடுமாற்றம் இல்லாத மன வலிமையே ... எதையும் எதிர்த்துநின்று வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையே அவர்களது வெற்றியைத் துரிதப்படுத்தும்!
மக்களின் மனவலிமையே ... தாங்கள் வாழ்கின்ற இயற்கை, சமுதாயம் ஆகியவற்றின் உள்ளார்ந்த இயக்க விதிகளைப் பற்றிய தெளிவே.... இன்றைய தேக்கநிலை நாளை தகர்க்கப்பட்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கான உயர்நிலைக்குச் செல்லும் என்ற ஆழமான , அறிவுபூர்வமான நம்பிக்கையே ... அவர்களது மனத்தைத் தாக்கும் மனநோய்களுக்கு எதிரான தடுப்பாற்றல் ( mind immunology system) ஆகும். தேவையற்ற பயம், பீதி , தளர்ச்சி, நம்பிக்கையின்மை போன்ற மனத்தைத் தாக்கும் நச்சுக் கிருமிகளை நெருங்கவிடக்கூடாது! பிறருக்குப் பரப்பவும் கூடாது! இந்த நச்சுக் கிருமிகள் கொரோனா வைரசைவிட மிகவும் ஆபத்தானவை!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அரசு மருத்துவத் துறையும் தனியார் (பன்னாட்டு) மருத்துவப் பெருநிறுவனங்களும்! (பகுதி 1)

அரசு மருத்துவத் துறையும் தனியார் (பன்னாட்டு) மருத்துவப் பெருநிறுவனங்களும்! (பகுதி 1)
----------------------------------------------------------------------------------
இன்று நாடெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சூழலில்.... மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள் எந்த அளவு மக்களுக்கு உதவுகின்றன என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்.... பதில் கிடைக்கவில்லை!

சாதாரணவேளைகளில் தனியார் மருத்துவமனைகள் .... தாங்கள் ''உலகத் தரத்திற்கு'' - '' அனைத்து வகையான நவீனக் கருவிகளையும் கொண்டு ... '' மேலைநாடுகளில் மிகவும் சிறப்பான பயிற்சிபெற்ற மருத்துவர்களைக் கொண்டு '' ... எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்று மூலைமுடுக்கெல்லாம் விளம்பரம் செய்கின்றன! 24 X 7 , அதாவது முழுநேரமும் மக்களுக்காகச் '' சேவை செய்கிறோம்'' என்று விளம்பரங்களை வெளியிடுகின்றன! ஒரு தொலைபேசி செய்தால் போதும்.. அடுத்த விநாடியே அவசர சிகிச்சைக்கான மருத்துவப் பணியாளர்களைக்கொண்ட ''ஆம்புலன்ஸ்'' வீட்டு வாசலுக்கே வந்துவிடும் என்று கூறுகின்றன! நெடுஞ்சாலைகளில் ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு உட்பட்டவரை உடனடியாக ஏற்றித் தங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவர.. ஆம்புலன்சுடன் '' காத்துக் கொண்டிருக்கின்றன'' !
இந்த மருத்துவமனைகளுக்கு ஒரு நோயாளி சென்றவுடனேயே .. ஐந்துநட்சத்திர ஓட்டல்களில் தரப்படுகின்ற அறைபற்றிய ஆல்பம் போன்ற ஒன்று அவருக்குத் தரப்படுகின்றது! '' சூபர் டீலக்ஸ்'' '' டீலக்ஸ்'' என்று பலவகைப்பட்ட நோயாளி அறைகளைப்பற்றி விவரங்கள் அளிக்கப்படுகின்றன! அதற்கு அடுத்து, தனி செவிலியர்கள் ஏற்பாடு செய்யலாமா, அல்லது பல நோயாளிகளுக்குக் கூட்டாக நியமிக்கப்பட்டுள்ள செவிலியர் போதுமா என்று கேட்கப்படுகிறது! அடுத்து, பன்னாட்டு காப்பீட்டு நிறுவனப் பணியாளர் வருவார். என்ன வகையான காப்பீடு உள்ளது, குறைந்தது எத்தனை நாள்கள் மருத்துவமனையில் இருந்தால் அதிகமான பணம் கிடைக்கும் என்பதையெல்லாம், மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்கு ''உதவும்வகையில்'' கேட்பார்கள்! இவ்வளவு '' விசாரணையிலும் '' தமிழுக்கு இடமே இருக்காது. ஆங்கிலம்தான்!
மருத்துவமனையில் சேர்ந்தபிறகு... தண்ணீர்கூட ... சாதாரண அரிசிக்கஞ்சிகூட அங்குள்ள ஊட்டச்சத்து நிபுணர்தான் கொடுப்பார்! எவ்வளவு உபசரிப்பு?
அடுத்து, பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த நோயாளியைப் பரிசோதிப்பார்கள், எந்த ஒரு குறிப்பிட்ட நோய் என்று தெளிவாகத் தெரிந்தாலும்கூட! பின்னர், ஒவ்வொரு மருத்துவரும் நோய்பற்றி இறுதியான ஒரு முடிவுக்கு வருவதற்காக.. அந்த மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அத்தனை நவீனக் கருவிகளையும் பயன்படுத்திப் பார்க்கக்கூடியவகையில் பல சோதனைகளுக்குப் பரிந்துரைப்பார்கள். தேவையோ தேவையில்லையோ, நோயின் '' பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்க '' ஏஞ்சியோகிரம், என்டோஸ்கோப்பி, ஸ்கேன் ( எக்ஸ்ரே போதாது என்று, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ , பேட் ) '' என்று சோதனைகள் நடைபெறும். பிறகு நோயாளிக்குச் சிகிச்சை தொடரும்! '' வசதியுள்ள நோயாளியும் '' இனி தனக்குப் பிரச்சனையே இல்லை, உறுதியாகப் பிழைத்துவிடுவோம்'' என்று '' நம்பிக்கை'' கொள்வார்கள்!
இவ்வளவு '' சிறப்பாக '' மக்களைக் கவனிப்பவர்கள்... தற்போதைய கொரோனாத் தொற்றுப் பரவல் நேரத்தில் .... சத்தமே இல்லை! அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பிற மருத்துவப் பணியாளர்களுமே .. தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, கொரோனா நோயாளிகளுடன் தங்கியிருந்து, சிகிச்சை அளித்துவருகிறார்கள்.
இந்தக் கொரோனா நோயாளிகளை .. அரசு அனுமதியுடன்.. தனியார் மருத்துவமனைகள் '' தத்து எடுத்து'' தங்கள் மருத்துவமனைகளில் வைத்து, சிகிச்சை அளிப்பதற்கு , சட்டம் இடம் கொடுக்காதோ என்ற ஐயம் எனக்கு! அந்த மருத்துவமனைகளில் .. மிக விலையுயர்ந்த ... உலகத்தரம் வாய்ந்த வெண்டிலேட்டர்கள் எல்லாம் இருக்குமே! மேலைநாடுகளில் பட்டம்பெற்ற .. சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவ நிபுணர்கள் இருப்பார்களே! அவ்வாறு '' தத்து எடுக்க'' விதிகள் இடம் கொடுக்கவில்லையென்றால், அரசு அனுமதியுடன் அங்குள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று, தங்கள் பணிகளைத் தொடரலாமே!
ஆனால்... நடைமுறையில் இதுபோன்ற ஒரு நிலையைக் காணமுடியவில்லையே? காரணம்... மருத்துவத்துறை என்பது இன்று பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்போன்று... பிற தொழிற்சாலைகள் போன்று... இலாபநோக்கைமட்டுமே அடிப்படையாகக்கொண்ட... ஏகபோக நிறுவங்களாகவே நாட்டில் ஊடுருவியுள்ளன. இந்த பன்னாட்டு மருத்துவத்துறைகளின் நோக்கமானது... நோய்களை முன்கூட்டியே தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்வது இல்லை.. மாறாக, நோய்கள் ஏற்பட்டபிறகு குணப்படுத்துவதற்கான ''பணிகளை'' செய்வதே ஆகும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு... ஏராளமான நவீனச் சோதனைக் கருவிகளையும்... நவீன மருந்துகளையும்... உற்பத்திசெய்து... அவற்றை விற்பதற்காகவே ... இந்த மருத்துவமனைகள் இன்று இயங்குகின்றன! ஒரு கிராமத்தில் அல்லது அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவருக்கு மேற்கூறிய வசதிகள் எல்லாம் கிடையாது. அவரது அறிவும் ஆற்றலுமே அவருக்கு ஆதாரங்கள்! ஆகவே அவருக்கு மக்களிடம் நல்ல பெயரும் இருக்கும். 'இந்த மருத்துவரிடம் செல்லுங்கள் , நல்ல வைத்தியம் பார்ப்பார்'' என்று மக்கள் பொதுவாகக் கூறுவார்கள்! ஆனால் இந்த ஏகபோக பன்னாட்டு மருத்துவமனைகள் ஆதிக்கம்செலுத்தத் தொடங்கியபிறகு.. குறிப்பிட்ட மருத்துவர்கள் பெயர்களை யாரும் சொல்லுவதில்லை. மாறாக, மருத்துவமனைகளின் பெயர்களைக் கூறி, '' இந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள் '' என்று மக்கள் சொல்லக்கூடிய நிலை .. ஒரு அவலநிலை.. இன்று தோன்றி வளர்ந்துள்ளது. அதாவது மருத்துவர்கள் பின்தள்ளப்பட்டு, ஏகபோக மருத்துவமனைகளின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல,, ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதமும் ( தங்கள் நோயாளிகளை அங்குள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்தச் செய்து) , குறைந்தது ஒரு தொகையை மருத்துவமனைக்குச் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால், அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுவிடவேண்டியதுதான்!
மருத்துவமனைகள் மட்டுமல்ல .. மிகப் பெரிய பன்னாட்டு ஏகபோகப் பரிசோதனை நிலையங்களும் இன்று கொடிகட்டிப் பறக்கின்றன! '' புத்தாண்டுக்குக்கூட '' ''சலுகைகள் '' இவை தருகின்றன. இந்தச் சோதனை நிலையங்களுக்குத் தேவையான சந்தைகளை உருவாக்க.. உலக அளவிலான '' சந்தை அல்லது விற்பனை நிபுணர்கள்'' , தனியே மருத்துவம் அளிக்கிற மருத்துவர்களையும், சிறிய அளவிலான மருத்துவ மனைகளையும் '' பல வகைகளில் '' தங்களது பிடிகளில் கொண்டுவந்துவிடுகின்றனர். அவர்களை ஆண்டுதோறும் பிரபல மருத்துவ மாநாடுகளில் ( அயல்நாடுகள் உட்பட) பங்கேற்கத் தங்கள் செலவில் அழைத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு இன்று .... பன்னாட்டு மருத்துவமனைகளும் ஆய்வுக்கூடங்களும் மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உலகையே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்தப் பன்னாட்டு ஆய்வுக்கூடங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள்பற்றி விளக்கமாக அடுத்த பகுதியில் தொடர்கிறேன்!

சனி, 25 ஏப்ரல், 2020

கொரோனாத் தொற்று நோய் பிரச்சனையில் கவனத்தில் கொள்ளவேண்டியவை


கொரோனாத் தொற்று நோய் பிரச்சனையில் கவனத்தில் கொள்ளவேண்டியவை
-------------------------------------------------------------------------------------------------------------------------------
1)
கொரோனா வைரசு தொற்று ஒருவருக்கு ஏற்படுவதாலேயே , அவருடைய உடல்நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ... நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சியக்கமே முழுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பில் சென்று முடியும் என்று நினைப்பது சரியல்ல. மாறாக, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அந்த வைரசை எதிர்த்துப் போராடி , அந்த வைரசின் தொற்றிலிருந்து அவர் விடுதலை அடையலாம்.
2) அடுத்து, அந்த நபர் தொற்று என்று தெரிந்தவுடனேயே மருத்துவர் கண்காணிப்புக்குச் சென்றுவிட்டால், அவருடைய உடல் எதிர்ப்பு ஆற்றலுக்குத் துணையாக, பிற மருத்துவ உதவிகளை மருத்துவர் அளித்து, அவரை அத்தொற்றிலிருந்து காப்பாற்றலாம். இதுவே தற்போது பெரும்பாலும் நடைபெறுகிறது. அதாவது, இந்த வைரசால் ஏற்படும் தீவிர நோயையே வரவிடாமல் தடுத்துவிடலாம்.
3) இதையும் தாண்டி, அவருக்கு இந்த வைரசால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட்டாலும், தகுந்த மருத்துவ உதவிகளைக் கொண்டு, அவரைக் காப்பாற்றி, குணப்படுத்தமுடியும். இதற்கு அவரது உடம்பும் சற்று உதவவேண்டும். வயது முதிர்ச்சி, உடம்பில் ஏற்கனவே நீடிக்கிற பிற பாதிப்புகள் இந்த வைரசின் நோயைத் தாங்கமுடியாமல் உடலைப் பாதிக்கலாம். ஆனால் இதைவிட மோசமான நோய்களைக்கூட இன்றைய மருத்துவம் குணமாக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
4) எனவே கொரோனா வைரசுப் பிரச்சினையில் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது.... ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டால், அவரைத் தகுந்த மருத்துவத்தால் குணப்படுத்தமுடியும். ஆனால் அவரால் இந்த வைரசு பிறருக்குத் தொற்றுவதை .. பரப்புவதைத்... தடுப்பதுதான் பெரிய பிரச்சினை! இதில் பெரும்பங்கு மக்கள் கைகளில்தான் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடமிருந்து இது மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பதற்குத் தேவையானவற்றையும், அதுபோலத் நோய்த்தொற்று இல்லாதவர்கள் நோய் உள்ளவரிடமிருந்து தங்களுக்குப் பரவாமல் இருப்பதற்குத் தேவையானவற்றையும் கடைப்பிடித்தால் போதும். சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படவேண்டும். இதில் அரசின் பங்கும் உண்டு.
5) மேற்குறிப்பிட்டவகையில் மக்கள் செயல்பட்டால், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால்தான் இதற்கு விடிவு என்று நினைக்கவேண்டியதில்லை. ஊரடங்கும் தேவையில்லை. தொழில்களை மூடவேண்டியதும் இல்லை!
6) தடுப்பூசி போன்று மற்றொரு வழியும் இதற்கு உண்டு. ஆனால் அதனால் சற்று இழப்பு அதிகம் ஏற்படும். மக்கள் ( பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் இருவரும்) மேற்கூறப்பட்ட எதையும் பின்பற்றமாட்டோம் என்று கூறினால்... வைரசு பாதித்தால் பாதிக்கட்டும் என்று நினைத்தால்.... வைரசுத் தொற்று அதிகமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையவர்கள் அதை எதிர்த்துப் போராடி, வெளிவந்துவிடுவார்கள். முடியாதவர்கள் பாதிப்புக்கு உட்பட வேண்டியிருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் ''மந்தை அல்லது சமுதாய நோய்த் தடுப்பாற்றல்'' ஏற்பட்டு, தடுப்பூசி செய்கிற பணியை இந்த இழப்பு செய்யும். ஆனால் இதைச் செய்யலாம் என்று பரிந்துரைப்பது முறையல்ல. எனென்றால் யார் பாதிக்கப்படுவார்கள், யார் பாதிக்கப்படமாட்டார்கள் என்று சொல்லமுடியாது. ''நானோ எனது குடும்பத்தாரோ பாதிக்கப்படக்கூடாது, மற்றவர்கள் பாதிக்கபடுவது பற்றி எனக்குக் கவலை இல்லை'' என்று யாராவது சொன்னால் அது, மனிதத் தன்மை இல்லையே!
7) எனவே, தற்போதைய தீர்வு .... நோய்த் தொற்று பரவுவதைத் தடுத்துநிறுத்துவதே ஆகும். இது முறையாக நடந்தால்... நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்து.. குணப்படுத்தி .. வெளிக்கொணரமுடியும்! இந்த வைரசு தொற்றுப் பரவலின் சங்கிலியைத் துண்டிப்பதே இன்றைக்குச் சிறந்த. நம்முன் இருக்கிற.. ஒரே வழி!


கணினிவழியாகத் தமிழ்ப்புணர்ச்சி

கணினிவழியாகத் தமிழ்ப்புணர்ச்சி
-----------------------------------------------------------

தமிழ்ப் புணர்ச்சி விதிகள் ... ஒலியனியல் (எழுத்தியல்), உருபனியல்( சொல்லியல்), தொடரியல், பொருண்மையியல் ஆகிய நான்கு இயல்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த எழுத்துக்கு அடுத்து இந்த எழுத்து வந்தால் என்பதைப்பற்றிமட்டும் பொறுத்தது இல்லை. நமது இலக்கண ஆசிரியர்கள் இதைத் தெளிவாக உணர்ந்துதான் .... உயிர் + உயிர், உயிர் + மெய், மெய்+உயிர், மெய் + மெய் என்று மட்டும் சொல்வதோடு நிறுத்தாமல், நிலைமொழிச் சொல்லின் இலக்கணவகைப்பாடு என்ன, வருமொழிச் சொல்லின் இலக்கணவகைப்பாடு என்பதையும் ( பெயரா, வினையா, வினையெச்சமா, எந்தவகையான வினையெச்சம், வினையடையா, பெயரடையா, பெயரெச்சமா) , இரண்டு சொல்களுக்கு இடையேயுள்ள உறவு வேற்றுமை உறவா அல்லது வேற்றுமை அல்லாத அல்வழி உறவா என்பதையெல்லாம் பார்க்கவேண்டும் என்று கூறிச்சென்றுள்ளார்கள். குற்றியலுகரப் புணர்ச்சிக்கே தனி இயல் வகுத்துள்ளார்கள். இதையும் தாண்டி, சொல்களின் பொருண்மைக்கும் பங்கு இருக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்கள். விதிவிலக்குகளையும் கூறிச்சென்றுள்ளார்கள். அதாவது, புணர்ச்சிக்குத் தேவையான அடிப்படையான கோட்பாடுகளை .. அன்றைய தமிழுக்குச் செயல்படுத்தி .... தெளிவாக விளக்கியுள்ளார்கள். அவற்றை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு... இன்றைய தமிழுக்குச் செயல்படுத்தவேண்டும். மேலும் இதுபற்றிய இன்றைய மொழியியல் கோட்பாடுகளையும் தெரிந்துகொள்ளவேண்டும். இவற்றைக் கணினிப்படுத்துவதில் சிக்கலே இல்லை..... சிக்கல், மேற்கூறிய அறிவுகளையெல்லாம் தெளிவாக வாங்கிக்கொண்டு, அவற்றை எவ்வாறு ஒழுங்குபடுத்தி... கணினி நிரல்களாக ஆக்குவது என்பதில்தான் உள்ளது.

தமிழின் சொல் அமைப்பு விதிகளின் சிறப்பு...

தமிழின் சொல் அமைப்பு விதிகளின் சிறப்பு...
--------------------------------------------------------------


என்னைப் பொறுத்தவரையில் தமிழ்மொழியின் சொல்லமைப்பு மிக மிகத் தெளிவான கணிதவிதிகளைக் கொண்டிருக்கின்றன. கூட்டுச்சொல்கள் - பெயர்த்தொகை, கூட்டுவினைகள் போன்றவை - தங்களது அமைப்பில் மொழியின் பொருண்மையையும் சொல்லாக்க விதிகளையும் அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. எனவே தமிழ்ச்சொல்லின் மொழியசை, சொல்லில் தலைச்சொல்லும் விகுதிகளும் வருகின்ற முறை , அடிச்சொல், விகுதிகள் ஆகியவற்றின் பொருண்மை, செயல்பாடு ஆகியவை எல்லாம் தமிழ் அமைப்பின் கணிதத்தன்மையை வெளிக்காட்டி நிற்கின்றன. இவற்றில் பல விதிகள் உலகப் பொது விதிகளாகவும் இருக்கின்றன என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது ஆகும். ஒரு எடுத்துக்காட்டு..... ஒரு பெயர்ச்சொல்லோடு பன்மை விகுதியும் வேற்றுமை விகுதியும் சேரும்போது, பன்மைவிகுதிக்குப்பிறகுதான் வேற்றுமை விகுதி சேரும். ஏனென்றால், குறிப்பிட்ட பெயர்ச்சொல்லின் பொருளை விரிவாக்குகின்ற பன்மை விகுதியானது பெயர்ச்சொல்லோடுநேரடித் தொடர்பு உடையது. அதாவது, உருபன் (சொல்) தொடர்புடைய ஒன்று. ஆனால் வேற்றுமை விகுதி அந்தப் பெயர்ச்சொல்லையும் அது பயின்றுவருகிற தொடரின் வினைச்சொல்லுக்கும் இடையிலான ஒரு தொடரியல் உறவைக் குறித்துநிற்கிறது. எனவே பெயர்ச்சொல்லுக்கு மிக அண்மையில் பன்மைவிகுதியும், அதன்பிறகு வேற்றுமைவிகுதியும் அமைகிறது. அதுபோலத்தான் வினைமுற்றிலும். படி த்த் ஆன் என்பதில் கால விகுதி நேரடியாக வினையின் பொருளை- இலக்கணப்பொருளை- கூட்டுகிறது. ஆனால் திணை எண் பால் விகுதியானது எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் இடையிலான ஒரு தொடரியல் உறவைக் குறித்துநிற்கிறது. எனவே, காலவிகுதிதான் வினைக்கு அருகாமையில் இருக்கும். அதையடுத்துத்தான் திணை எண் பால் விகுதி வரும். இதுபோன்று எத்தனையோ சிறப்புகளைத் தமிழ் அமைப்பில் காணலாம். ஆனால் இன்றைய எழுத்துத்தமிழ்பற்றிய ஆய்வு போதுமான அளவுக்கு வளரவில்லை. பழந்தமிழுக்கான இலக்கணங்களுக்குமட்டுமே அதிகக் கவனம் செலுத்துகிறோம். பழந்தமிழ் இலக்கணங்கள் பெருமளவில் இன்றைய தமிழுக்குப் பொருந்திவந்தாலும், இன்றைய தமிழில் பல புதிய நுட்பங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. மேலும் பழந்தமிழ் இலக்கணநூல்களின் அருமையான நுட்பங்களையெல்லாம் இன்றைய மொழியியல் நோக்கில் பார்க்கும்போது, அவற்றின் சிறப்பு மேலும் தெரிகிறது. ஆனால் இதுபோன்ற ஆய்வுகள் தமிழகத்தில் போதுமான அளவுக்கு வளரவில்லை. எனவே கணினித்தமிழ் வளர்ச்சிக்கான மொழியறிவு முன்வைக்கப்படவில்லை. இதுவே கணினித்தமிழ் ஆய்வில் ஈடுபடுகிற கணினித்துறை அறிஞர்களுக்குப் பிரச்சினையாக நீடிக்கிறது. எனவே புள்ளியியல், machine learning, deep learning போன்றவற்றின் துணையை நாடுகிறார்கள். எனவே சில சிக்கல்கள் நீடிக்கின்றன. மொழியமைப்பு விதிகளை அடிப்படையாகக்கொண்டு, கணினித்தமிழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்கலாம்.
கணினிமொழியியல் ஆய்வில் மொழியமைப்புசார்ந்த ஆய்வு ( Empirical approach) , புள்ளியியல் சார்ந்த ஆய்வு ( Statistical approach , செயற்கை அறிவுத்திறன், நரம்பியல்வலைப்பின்னல் சார்ந்த ஆய்வு ( Artificial Intelligence / Neural Net work approach) ஆகிய மூன்றுமே பயனுள்ளவைதான். ஐயமில்லை. ஆனால் மொழியின் அமைப்பை மிக ஆழமாக ஆராய்ந்து, அதன் நுட்பங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால், அதனடிப்படையில் கணினிமொழியியல் ஆய்வை மேற்கொண்டு, மேலும் அதற்குத் துணையாக - சோதனை, வலுவூட்டல் போன்றவற்றிற்கு - பிற அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம் என்பதே எனது கருத்து.

வியாழன், 23 ஏப்ரல், 2020

வரவேற்கவேண்டிய தமிழ் நாடு அரசின் 'ஆரோக்கியம்'' திட்டம்!

வரவேற்கவேண்டிய தமிழ் நாடு அரசின் 'ஆரோக்கியம்'' திட்டம்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டுவது ... கொரோனாத் தொற்றுக்கு எதிரான இன்றைய போராட்டத்தில் முக்கியமானது என்ற கருத்தை இன்று தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்துவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.
பன்னாட்டு நிறுவனங்களின் லாபநோக்கைமட்டுமே கொண்ட மருந்துகளைமட்டுமே சார்ந்திருக்காமல்... எவ்வாறு மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டலாம் என்று சிந்திப்பது நல்லதுதானே! இதை எவ்வாறு கூட்டுவது என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம். அது வேறு!
கபசுர நீர், நிலவேம்பு நீர் போன்றவை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற கருத்து நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியதே ! இன்றைய நவீன மருத்துவம் வளர்ச்சியடைவதற்குமுன்னால்... மக்கள் இதுபோன்ற நோய்த்தடுப்பு ஆற்றலைத் தரும் இயற்கைப் பொருள்களைத்தான் - மஞ்சள், மிளகு, வெந்தயம், இஞ்சி, சுக்கு, வேப்பிலை , தூதுவளை, கண்டங்கத்திரி, துளசி, முருங்கையிலை போன்றவற்றைத்தான் பயன்படுத்தி வந்தார்கள் என்பதே உண்மை!
ஆனால் மிக முக்கியமானது.... அடித்தட்டுச் சமுதாயத்தில் வறுமையில் வாடுகிற ... பசியின் கொடுமையில் சிக்கித் தவிக்கிற மக்களுக்கு மூன்று நேரமும் சத்துள்ள உணவு கிடைக்க வழிசெய்வதே முதல் படி. இதுதான் உடம்பின் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு அடிப்படை! குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தனிக் கவனம்! முதிய வயதிலும் தளர்ந்த உடம்புடன் கடினமான உடலுழைப்பை மேற்கொள்ளவேண்டிய இன்றைய சூழலை இல்லாமல் ஆக்குதலும் இதில் அடங்கும!
அதற்கு அடுத்தபடி.... வசிக்கும் வீடுகள்! மூட்டைப்பூச்சி, கொசு போன்ற நோய்த்தொற்று பரப்பும் சூழல் இல்லாத வசிப்பிடம்! கழிவறை வசதி! சுத்தமான தண்ணீர்!
மூன்றாவது... வசிக்கும் சுற்றுப்புறச் சூழல்! மாசுபடியாத காற்றோட்டமுள்ள.... சாக்கடைப் பிரச்சினை இல்லாத ... குப்பையில்லாத தெருக்கள்!
நான்காவது, மக்களின் உடல்நலனை அவ்வப்போது கவனித்து... தேவையான மருத்துவச் சோதனைகளுடன்... தேவையான மருத்துவ உதவி அளித்தல்!
இவற்றையெல்லாம் இன்று மக்களுக்கு வழங்கிட தற்போதைய பொருளாதார அமைப்பு இடம் அளிக்குமா? அது வேறு பிரச்சினை! இளைஞர்கள் சிந்திக்கட்டும்!
ஆனால்... இயற்கையான உடம்பின் நோய்த்தடுப்பு ஆற்றல் மிக மிக முக்கியமானது என்ற கருத்து இன்று முன்னிலைப்படுத்தப்படுவது வரவேற்கவேண்டிய ஒன்றே! அதில் ஐயம் இல்லை

கரோனாவின் உள்ளார்ந்த பண்புக்கூறுகளும் அதன் வெளிப்பாடுகளும்

கரோனாவின் உள்ளார்ந்த பண்புக்கூறுகளும் அதன் வெளிப்பாடுகளும்
-------------------------------------------------------------------------------------------------------------------
கோவிட்-19 (கரோனா) வைரஸின் உள்ளார்ந்த பண்புக்கூறுகள் பற்றியும், அதனுடைய வெளிப்பாடு அல்லது எச்சரிக்கைக் கூறுகள்பற்றியும், அதற்கான மருந்துகள்பற்றியும் பல கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதையொட்டி எனது கருத்துகள் சில.
சில மருந்துகளைப்பற்றி .... அலோபதி, சித்த, யுனானி, ஆயுர்வேத மருந்துகள் உட்பட சிலவற்றை .... சிலர் கொரனாவுக்கு முன்னிலைப்படுத்துகின்றனர். அவைபற்றிய கருத்துகள் சரியானவையா இல்லையா என்ற விவாதத்திற்கு நான் செல்லவில்லை. அதற்கான மருத்துவ அறிவு எனக்கு இல்லை. ஆனால் ஒன்று.... சில மருந்துகள் சில பிரச்சினைகளுக்கு உடனடியான சில தீர்வுகளைத் தரலாம். அது நல்லதுதான். ஆனால் சிக்கல்.... சில வேளைகளில் அது உள்ளார்ந்த நோயின் வெளிப்பாட்டு அறிகுறிகளைத் தடைசெய்துவிடும். அதனால் அந்த நோய் இல்லை என்று நினைத்துக்கொண்டு, நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடிய ஒரு சூழல் ஏற்படுவதும் உண்டு.
உடலில் ஏற்படும் வலி, வெப்பநிலை, ஒவ்வாமை, இருமல், வாந்தி, பசியின்மை , சிறுநீர், மலம் ஆகியவற்றின் நிறம் மாற்றம் ... இவையெல்லாம் உடலுக்குள் நோய்க்கிருமிகள் புகுந்துள்ளன என்பதற்கான நமது உடல் காட்டும் எச்சரிக்கைகள் ஆகும் . இவற்றின் அடிப்படையிலும், மருத்துவர்கள் தங்கள் சொந்த மருத்துவ அனுபவத்தின் அடிப்படையிலும்தான், அவர்கள் குருதிச்சோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறார்கள். இந்த உடல் காட்டும் எச்சரிக்கைகளை உணர்ந்து, நாம் உடனடியாக நோயின் வேரை அறிந்து, அதை நீக்கத் தேவையான மருத்துவத்தை நாட வேண்டும். உடல் காட்டும் எச்சரிக்கைகள் , இரண்டாவது நிலை பிரச்சினைகள். ஆனால் அந்த எச்சரிக்கைகளுக்கு அடிப்படையானது அல்லது முதல்நிலைப் பிரச்சினை... உள்ளார்ந்த நோய்தான். அதைத் தீர்த்தால்தான் இந்த இரண்டாவது நிலை எச்சரிக்கைச் சிக்கல்களும் தீரும்.
இந்த இரண்டாவது நிலை பிரச்சினைகளுக்கான மருந்துகளால் பயன் கிடையாது என்று நான் கூறவரவில்லை. ஆனால் உடலானது தன்னுள்ளே நுழைந்துள்ள அடிப்படையான நோய்க்கிருமிகளை வெளிக்காட்ட நாம் உதவவேண்டும். அந்த எச்சரிக்கைகளே தோன்றவிடாமல், முன்கூட்டியே அவற்றிற்கான மருந்துகளை மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்ளக்கூடாது. சிலவேளைகளில் அது நமக்குச் சிலவேளைகளில் தீங்குகளை ஏற்படுத்தலாம். அதேவேளையில் பொதுவாக, உடலுக்குப் பொதுவான வலிமையையும், நோய் எதிர்ப்பு வலிமையையும் ... கூட்டக்கூடியவற்றை மருத்துவர்களின் அறிவுரையோடு எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அந்த மருந்துகள் உடல் வெளிக்காட்ட முனையும் எச்சரிக்கைக்குறிகளை வெளிப்படாமல் தடுத்துவிடக்கூடாது. இதில் எச்சரிக்கை தேவை.
எந்த ஒரு நோய்க்கும் அதைத் தீர்க்க மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளின் ( அலோபதி. சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உட்பட) முக்கியத்துவத்தைவிட, அந்த நோயின் அடிப்படையை, தன்மையை, மருத்துவர்கள் கண்டறிவதுதான் மிக மிகத் தேவையானது. அதற்கு மருத்துவர்களுக்கு உதவும்வகையில் நாம் ஒத்துழைக்கவேண்டும். எனவே அலோபதியா, சித்த மருந்தா என்ற விவாதத்தைவிட, மேற்கூறிய அடிப்படைகளைப்பற்றிச் சிந்திப்பதே நல்லது.

வழிவழிவந்த மருத்துவமும் அதன் இன்றைய தொடர்ச்சியும்!

வழிவழிவந்த மருத்துவமும் அதன் இன்றைய தொடர்ச்சியும்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பல நூற்றாண்டுகளாக மனிதசமுதாயம் பயன்படுத்திவந்த சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற மருத்துவத்தின் சிறப்புகளை நாம் மறக்கக்கூடாது. மறுக்கக்கூடாது. அதற்கு நான் கூறுகிற காரணம்... நமது இன்றைய மருத்துவ அறிவியல் வானில் இருந்து குதித்தது இல்லை. பல நூற்றாண்டுகளாக மனிதசமுதாயம் உருவாக்கிப் பயன்படுத்திய மருத்துவ அறிவின் தொடர்ச்சிதான். அந்த மருத்துவ அறிவுதான் நமது சமுதாயத்தைப் பாதுகாத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. வரலாற்றில் எவ்வளவோ நோய்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் எவ்வாறு தீர்க்கப்பட்டன? அன்றைய மருத்துவ அறிவுதானே! எனவே தமது முன்னோரின் மருத்துவ அறிவு ... அறிவுதான் என்பதை மறுக்கக்கூடாது. அதேவேளையில் அதை இன்றைய அடுத்த கட்டத்திற்குக் கொண்டுவந்ததும் நமது சமுதாயம்தான். இது ஒரு தொடர்ச்சிதான். வளர்ச்சிதான். இன்றைய அறிவியலின் வளர்ச்சி முந்தைய சமுதாயத்தின் அறிவின் தொடர்ச்சியும் வளர்ச்சியும்தான் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். வரலாற்றில் மருத்துவம் உட்பட அனைத்து அறிவியல்களும் தொடர்ந்து மாறியும் வளர்ச்சியும் அடைந்து வருகின்றன என்பதே அறிவியல் வளர்ச்சிக் கோட்பாடு! எனவே நமது முன்னோரின் மருத்துவ அறிவை ஏளனமாகவோ, அடிப்படை இல்லாததாகவோ நாம் நிச்சயமாகப் பார்க்கக்கூடாது.

கொரோனா வைரசுபற்றிய தவறான கருத்துகள்

கொரோனா வைரசுபற்றிய தவறான கருத்துகள்
--------------------------------------------------------------------------------------
(உலக நலவாழ்வு மையம் - WHO - World Health Organization.)
--------------------------------------------------------------------------------------
1) 5 ஜி அலைபேசி வலைப்பின்னல் வழியாகக்
கொரோனா வைரசு பரவும் என்பது உண்மை
இல்லை.
2) மிக வெப்பமான காற்று அல்லது வானிலை
நிலைமை அல்லது 25 டிகிரி C வெப்பம்
ஆகியவற்றில் கொரோனா வைரசு இறந்துவிடும்
என்பது உண்மை இல்லை.
3) ஒருவருக்குக் கொரோனா வைரசு தொற்றிவிட்டால்,
அவர் வாழ்நாள் முழுவதும் அது உடலில் தங்கி-
விடும் என்பது உண்மை இல்லை!
4) ஒருவர் 10 விநாடிகளுக்குமேல் தும்மல் அல்லது
இருமல் இல்லாமல் மூச்சை அடக்கிக்கொண்டால் ,
வைரசுத் தொற்றல் இல்லை என்று கொள்ளலாம்
என்பது உண்மை இல்லை.
5) மது (ஆல்கஹால்) அதிகமாகக் குடித்தால்
கொரோனா தொற்றாது என்பது உண்மை இல்லை.
6) மிகக் குளிரான வானிலைச் சூழல் அல்லது பனியில்
கொரோனா தொற்றாது என்பது உண்மை இல்லை.
7) சூடான தண்ணீரில் குளித்தால் கொரோனா
தொற்றாது என்பது உண்மை இல்லை.
8) கொசுக்கடி மூலம் கொரோனா தொற்றும் என்பது
உண்மை இல்லை.
9) கைகளை உலரவைக்கும் கருவி (hand dryer)
கொரோனாவைத் தடுக்கும் என்பது உண்மை
இல்லை.
10) புற ஊதாக் கதிர் ஒளியை (ultra-violet rays-
UV) உடம்பில் பாய்ச்சி, கொரோனாவைத்
தடுக்கலாம் என்று நினைத்தால், அது தோல்
பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
11) தெர்மல் மானிட்டர் என்ற காய்ச்சலைக்
கண்டுபிடிக்கும் கருவியானது காய்ச்சலுக்கான
சூடு இல்லை என்று காட்டியவுடன், கொரோனாத்
தொற்றல் இல்லை என்று நினைக்கவேண்டாம்.
ஏனென்றால், கொரோனா வைரசு உடனடியாகப்
பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சரியல்ல. இரண்டு
நாள்களிருந்து 10 நாள்கள்வரை அது தன்
செயலைக் காட்ட, காலம் எடுத்துக்கொள்ளலாம்.
12) உடம்பின்மீது ஆல்கஹால் அல்லது ஸ்பிரிட்டை
ஊற்றிக்கொண்டால், கொரோனா தொற்றாது
என்பது உண்மை இல்லை.
13) நிமோனியா அல்லது ப்ளூ காய்ச்சலுக்குப்
பயன்படும் தடுப்பூசிகள் கொரோனாவைத்
தடுக்கும் என்பது உண்மை இல்லை. ஆனால்,
பொதுவாக, மூச்சியக்க நோயால் பாதிக்கப்-
பட்டவர்கள், அதைக் கட்டுப்படுத்தப் பயன்படும்
தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
14) மூக்குக்குள் உப்புநீரைக்கொண்டு அடிக்கடி
சுத்தம் செய்தால் கொரோனா தொற்றாது என்பது
சரியில்லை.
15) வெள்ளைப்பூண்டில் சில கிருமி எதிர்ப்புத் திறன்
உள்ளது என்பதில் உண்மை இருந்தாலும்,
கொரோனைத் தொற்றலை அது தடுக்கும்
என்பதில் உண்மை இல்லை.
16) வயதானவர்களையே கொரோனா தொற்றும்;
இளவயதினரைப் பாதிக்காது என்பது சரி இல்லை.
17) பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் கொரோனா
வைரசைக் கொல்லாது. ஆனால், கொரோனாவால்
பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, பிற உடல்
பாதிப்புகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம்.
18) கொரோனாவுக்கென்று இன்றைய மருத்துவ
உலகில் மருந்துகள் இன்னும் மருந்து உருவாக்கப்-
படவில்லை.
-------------------------------------------------------------------------------------
எனவே, தற்போதைய நிலையில் கொரோனாத் தொற்றலைத் தடுக்க....
1) அடிக்கடி கைகளைச் சோப்புகொண்டு கழுவ-
வேண்டும்.
2) தனிமனித இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.
3) கண்கள், வாயைத் தொடுவதைத்
தவிர்க்கவேண்டும்.
4) மூச்சியக்கத் தூய்மையைக் (Respiratory hygiene) கடைப்பிடிக்க-
வேண்டும்

கொரோனாத் தொற்று - நம்பிக்கை தரும் விவரங்கள்.

கொரோனாத் தொற்று ... நம்பிக்கை தரும் விவரங்கள்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்துவருபவர்கள் விகிதம்தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதாவது, கொரோனா வைரசை எதிர்த்து , மனிதரின் நோய்எதிர்ப்புத் திறன் (human body immune system) நன்றாகவே போராடி வெற்றிபெற்றுவருகிறது. இறந்தவர்களின் வயது, பிற நோய்களின் பாதிப்புகள் , மருத்துவ வசதி போதுமான அளவு கிடைக்காதது ஆகியவற்றைக் கணக்கில்கொண்டால், இறப்புக்கு ஆளாகியவர்கள் விகிதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
எனவே, மக்கள் இன்றைய ஊடகங்களின், குறிப்பாகத் தொலைக்காட்சிகளின் பீதி கிளப்பும் பரபரப்புச் செய்திகளைப் புறம்தள்ளி, நம்பிக்கையுடன் ... ஆக்கபூர்வமான கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இன்றைய தேவை!
தடுப்பூசிக் கண்டுபிடிப்பும் , சமுதாயத்திற்குத் தேவையான தேவையான தூய்மைச்சூழல் , மருத்துவ வசதி, மக்களது நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கத் தேவையான உணவு, நல்ல மனநிலை ஆகியவை அனைத்தும் முறையாக மக்களுக்குக் கிடைத்தால், கொரோனா என்ன வேறு எந்தவொரு நோய்க்கிருமிப் பாதிப்பும் உலகில் இருக்காது. அதற்கு என்ன தேவை என்பதை இன்றைய இளைஞர் சமுதாயம் சிந்திக்கவேண்டும்! இயற்கை அறிவியல், சமூக அறிவியல் இரண்டையும் இரண்டு கைகளில் ஏந்திப் போராடவேண்டும்! அவர்கள் கைகளில்தான் எதிர்கால உலகம் இருக்கிறது!
தமிழகத்தில் நல்ல முன்னேற்றமே கிடைத்துவருகிறது என்பது ஒரு முக்கியமான செய்தி! இன்னும் சற்று மக்கள் ஒத்துழைத்தால், தடுப்பூசியின் வரவுக்குமுன்னாலேயே ''மந்தை அல்லது சமூகத் தடுப்பாற்றலை (herd immunity) " பெருமளவுக்கு உருவாக்கவிடலாம்!
---------------------------------------------------------------------------------
உலக அளவில் ....
பாதிக்கப்பட்டுள்ளோர் ... 26,37,673
குணமடைந்தோர் .... 7,17,525 ..... 27 %
இறப்பு ..... 1,84,217 ....... 7%
-------------------------------------------------------------------------------------
இந்திய அளவில் ....
பாதிக்கப்பட்டுள்ளோர் ... 20,471
குணமடைந்தோர் ... 3,960 ... 19.3 %
இறப்பு .... 652 ... 3.18 %
-------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு அளவில் ....
பாதிக்கப்பட்டுள்ளோர் .... 1629
குணமடைந்தோர் .... 662 ... 40 %
இறப்பு .... 18 .....1.1 %

தொற்றுநோய்க்கு நிரந்தரத் தீர்வு என்ன?

தொற்றுநோய்களுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?
----------------------------------------------------------------------------------
தொற்று நோய்கள் உட்பட அனைத்து நோய்களின் பாதிப்புகளையும் எதிர்த்துப் போராட .... அறிவியல் வளர்ச்சி நிச்சயமாகப் பெரும் அளவு உதவும் என்பதில் ஐயம் இல்லை!
ஆனால்.. தற்போதை அரசியல் பொருளாதாரச் சூழலில்... இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு.... மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் தங்களது ஏகபோகத்திற்கு உட்படுத்திக்கொண்டு... கொள்ளை லாபம் அடித்துக்கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியையே லாபம் ஈட்டும் தொழில்நிறுவனங்களாக மாற்றியுள்ளன!
மக்களிடையே தேவையற்ற பீதிகளையும் உயிர்ப்பயத்தையும் தங்களது ஊடகங்களின் வழியே உருவாக்கி... அவற்றையும் தங்களது சந்தைக்கான ''மூலதனமாக'' பயன்படுத்துகின்றன! இதுவே உண்மை! .
மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டுவதற்கான சத்துணவு, வாழ்விடத் தூய்மை ஆகியவற்றை அதிகரிப்பதற்குப பதிலாக...
மருந்துகளையும் மருத்துவமனைகளையுமே சார்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றன.
எனவே... மக்களுக்கு இன்றைய தேவைகள்... அறிவியல் வளர்ச்சி மக்களுக்கானதாக இருக்கவேண்டும்,, ஏகபோக நிறுவனங்களின் லாபத்திற்காக இருக்கக்கூடாது!
அடுத்து, முடிந்த அளவு மக்களின் உடல் நோய் எதிர்ப்புத் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் தேவையான வாழ்க்கை (உணவு, இருப்பிடம், சுற்றுப்புறத் தூய்மை ) கிடைக்கவேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாகும்.

கொரோனாவும் மக்கள் ஒற்றுமையும்


"'உலக மக்களே, ஒன்றிணையுங்கள்'"
''
உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்'" (ஏப்ரல் 3, 2020)
---------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று கரோனாவை எதிர்த்து , உலகெங்கும் மக்கள் ... ஒன்றிணைந்து போராடவேண்டிய ஒரு சூழல்! நாடு , இனம் தாண்டி... உலக அளவில் மக்கள் ஒன்றிணையவேண்டுமா, அப்படி ஒரு சூழல் வருமா என்ற வினாவிற்கு இன்று விடை ! ஆம் ஒன்றிணைந்துதான் ஆகவேண்டும்!
1857-இல் காரல் மார்க்ஸ் - எங்கல்ஸ் முன்வைத்த முழக்கம்.... '' உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்' ! இன்று இயற்கையின் மோசமான ஒரு விளைவை --- கரோனா - எதிர்த்து ... போராடி ... வெற்றிபெற 'உலக மக்களே ஒன்றிணையுங்கள்' என்ற முழக்கம் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கிறது!
இந்தக் கரோனா மனித சமுதாயத்தை அழித்துவிடமுடியாது. இது ஒரு சவால் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனித சமுதாயம் இதில் நிச்சயமாக வெற்றிபெறும்!
இந்தக் கரோனாவால் விரைவில் விளையப் போகும் மிகப் பயங்கரமான ... உலக அளவிலான பொருளாதார நெருக்கடி... 'உலகத் தொழிலாளர்களே , ஒன்றிணையுங்கள்' என்ற முழக்கத்தை .... உலகெங்கும் ஒலிக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை. நாடு, இனம் தாண்டி... இந்தக் குரல் ஒலிக்கும் ! ஒலிக்கவேண்டும்!
இப்போது தேவை .... 'நாம்' என்பதுதான்! 'நாங்கள்' இல்லை! (ஏப்ரல் 1, 2020)
-----------------------------------------------------------------------------------
முன்நோக்கிச் செல்கிற சமுதாய இயக்கத்தின்போது .... சமுதாயப்பொருளாதார அடிப்படையில் ....( சாதி, மத அடிப்படையில் இல்லை!) பலவேளைகளில் 'நாங்கள்' 'நீங்கள்' என்ற வேறுபாடு கண்டிப்பாகத் தேவைப்படும். அதுபோன்ற வேளைகளில் ''இந்த வேறுபாடு தேவையில்லை'' என்று யாரும் கூறினால், அவர்கள் மற்ற தரப்பினரை ஏமாற்ற முயல்கிறார்கள் என்றே ஆகும். ஏமாற்றுவேலையாகவே அமையும்.
அதுபோல, சிலவேளைகளில் ... அனைத்து வேறுபாடுகளையும் கடந்து... ' நாம்' என்பது மட்டுமே தேவைப்படும். குறிப்பாக, பொது எதிரிக்கு எதிராகப் போராடும்போது, 'நாம்' என்பதுமட்டுமே தேவைப்படும். இப்போது, கரோனா வைரஸ் பொது எதிரி. எனவே 'நாம்' மட்டுமே இப்போது தேவை! அனைத்துத் தரப்பினரும் இணைந்து போராடவேண்டிய தேவை. எனவே சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ... அனைவரும் இணைந்து போராடவேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும் ? பெரும்பான்மையாக இருக்கிற உழைக்கும் மக்கள் உயிருடன் நீடித்தால்தானே இன்றைய சமுதாயம் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியும்?

கரோனாவைவிட மிக மிக ஆபத்தானது ??? (1 ஏப்ரல், 2020)
-------------------------------------------------------------------------
டெல்லி மாநாட்டில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 1131. அடையாளம் காணப்பட்டவர்கள் 515. ஏனைய 616 நபர்களும் உடனடியாகத் தங்கள் இருப்பிடம்பற்றித் தகவல் அளித்தால், தமிழ்ச்சமுதாயத்திற்கு மிக மிக நல்லது. மருத்துவர் திரு அன்புமணியின் அன்பான வேண்டுகோள். இது பாராட்டுக்குரிய ஒன்று.
அடையாளம் காணப்பட்டவர்களில் நேற்று 56 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 50 பேருக்குக் கரோனா தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு செய்தி!
இதில் நாம் மிகவும் கவனிக்கவேண்டியது..... கரோனா தொற்று இருந்தாலே, இறப்புதான் என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. முறையான சிகிச்சையின்மூலம் பெரும்பாலானோர் நலம்பெற்று இல்லம் திரும்பியுள்ளனர். 4 விழுக்காடு மட்டுமே இழப்பு! எனவே கரோனாத் தொற்றை இனம் கண்டறிவதும் , அதற்கான முறையான சிகிச்சை பெறுவதுமே முக்கியம்.
இதில் மேலும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியது..... இந்தப் பிரச்சினையை யாரும் மதம்சார்ந்த ஒன்றாகக் கொண்டு, பேசக்கூடாது. அவ்வாறு செய்வது கரோனாவைவிட மிக மோசமான சமூகவிரோதச் செயலாகும். கரோனாவைவிட மக்களை மிகவும் பாதிக்கும் ஒரு செயலாகும்.

கொரோனாவும் பொருளாதார நெருக்கடியும் - பகுதி 6

ஊரடங்கு நீடிப்பு ..... வெளிப்படும் அரசியல் பொருளாதாரம்!(ஏப்ரல் 12, 2020)
-------------------------------------------------------------------------------------------------------------
ஊரடங்கு நீடிக்கக்கூடாது என்பதில் சாதாரண மக்களைவிட... தொழில் அதிபர்களே உறுதியாக இருப்பார்கள்.
கணினிநிறுவனங்கள் தங்களுடைய பணிகளை ... பொறியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே செய்வதற்கு அனுமதிக்கமுடியும். அதிலும் பல சிக்கல்கள் அவர்களுக்கு உண்டு. குறிப்பிட்ட பணிகளை முடித்தால்தான், அந்த நிறுவனங்களின் முதலாளிகள், தாங்கள் சார்ந்துள்ள நுகர்வாளர் நிறுவனங்களிலிருந்து பணம் பெறமுடியும். ஆனால் வீடுகளில் பொறியாளர்களுக்குத் தேவையான இணைய இணைப்பு போன்ற வசதிகள் போதுமானதாக இருக்காது. எனவே அதிக நேரம் பணிசெய்யப் பணியாளர்கள் கட்டாயப்படுத்தபடுகிறார்கள். இது ஒருபுறம்.
மற்றொரு புறம்... பெரிய ஆலை, பொருள் உற்பத்தி நிறுவனங்கள்.... இந்த நிறுவனங்கள் தங்கள் இயந்திரங்களைத் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்து, உற்பத்தியைத் தொடரமுடியாது. எனவே ஒவ்வொரு நாளும் தற்போது அவர்களுக்கு... அவர்கள் நோக்கில்... இழப்புதான்! எனவே அவர்களே அரசாங்கத்திற்கு நெருக்கடிகொடுத்து, ஊரடங்கை விரைவில் விலக்க வைத்துவிடுவர்கள். நமக்குக் கவலை வேண்டாம்!!!. முதலில் ''முக்கிய'' தொழில்கள் இவை இவை என்று முடிவுசெய்து, அவற்றைத் திறக்க வைப்பார்கள். பின்னர், அதற்குத் தேவையான ''சார்தொழில் '' நிறுவனங்களையும் திறக்கவைப்பார்கள். பின்னர் உற்பத்தி செய்த பொருள்களை மக்கள் வாங்கினால்தானே அவர்களுக்கு லாபம் ... பணமாக ... கிடைக்கும். எனவே வணிக நிறுவனங்களும் திறக்கப்படும். கவலை வேண்டாம்!
இங்குதான் அரசியல் பொருளாதாரமே வெளிப்படுகிறது!

மேலும் இந்தியப் பொருளாதார உற்பத்தியுடன் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள் பின்னிப்பிணைந்த்துள்ளன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு இந்திய மக்களின் உழைப்பும்('உழைப்பு சக்தி'') தேவை... வாங்கும் சக்தியும் .. சந்தையும் தேவை! எனவே தற்போது அவற்றிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை இந்திய மக்களின்மீது ஏற்றும் என்பதில் ஐயம் இல்லை!

கொரோனாவும் தமிழ் நாட்டு மக்களும்...
-------------------------------------------------------------------------------------
பிசிஆர் சோதனையில் 10-க்கு 1 என்று அடிப்படையில் நோய்த்தொற்று உறுதியாகக்கொண்டிருக்கிறது. 10,655 சோதனையில் 1075 நபர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் நோய்க்கடுமைக்கு உட்பட்டவர்கள் அதிகம் இல்லை என்பதும் ஒரு ஆறுதல் தரும் செய்தி. தொற்று உள்ளவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவம் மூலம் குணமடைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் சென்னைகோவை, சேலம்,என்று நகர்ப்புறங்களில்தான் ... வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றால் தொற்று உள்ளவர்கள் இருக்கிறார்கள். மற்றும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 1200 பேரில் ஏறத்தாழ 750 பேர்களுக்கு தொற்று உறுதியாக உள்ளது. புறநகரங்கள், கிராமப்புறங்களில் பாதிப்பு இல்லை என்பதாகத் தெரிகிறது.
அங்கு எல்லாம் ஊரடங்குப் பிரச்சினைதான் தொழில்களை மிகவும் பாதித்துள்ளது. சிறு, நடுத்தர விவசாயிகள்( காய்கனிகள், பூக்கள் ....) பிற அமைப்புசாராத் தொழில் வினைஞர்கள் மிகவும் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நகர்ப்புறங்களிலும் அமைப்புசாராத் தொழில்களில் உள்ளவர்கள் ( மின்வேலை செய்பவர்கள், தண்ணீர்க்குழாய் வேலைசெய்பவர்கள், ஊர்தி ஓட்டுபவர்கள், இரயில் நிலையங்கள் போன்றவற்றில் சுமைத்தூக்கும் தொழிலாளிகள் போன்ற வேலைகளில் உள்ளவர்கள்) வேலையின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பெரிய ஆலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளிகள் பிரச்சினை வேறு! அது மொத்த உற்பத்தியையே பாதிக்கும் என்பதோடு, உழைப்புச்சக்திச் சுரண்டலும் இனி அதிகமாகும். வேலையில்லா மக்கள் கூட்டம் பெருகும். இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, ஆலை அதிபர்கள் குறைந்த ஊதியத்தில் தொழிலாளிகளைப் பயன்படுத்த முனைவார்கள்.
எனவே தமிழ் நாட்டில் ... நோய்த்தொற்று தொடர்பாக அதிக அச்சம் தேவையில்லை.. கவனமும் தூய்மையும் கூடல் இடைவெளியும் தேவை. விரைவில் தொற்று அச்சத்திலிருந்து வெளிவந்துவிடலாம். பொருளாதாரச் சிக்கல்கள்தான் அதிகமாகும்!

நடுத்தர வர்க்கங்களுக்கு உள்ள மற்றொரு பிரச்சினை ... கடன் அட்டைப் பிரச்சினை ஆகும்! குளிர்சாதனங்கள், தொலைக்காட்சிப்பெட்டிகள், துணிமணிகள், நகைகள் போன்ற நுகர்பொருள்களை உற்பத்திசெய்பவர்கள்... தங்கள் பொருள்களை விற்றால்தானே... லாபம் ஈட்டமுடியும்? அதற்கு மக்களுக்கு வாங்கும் சக்தி தேவையல்லவா? ஆனால் மக்களுக்கு வருமானம் போதுமான அளவில் இல்லை! அதனால் உற்பத்தியாளர்களே வங்கிகளின் ''உதவிகளோடு'' கடன் அட்டைகளை வழங்குதல், மாதத்தவணைகளில் வாங்குதல் போன்றவற்றின்மூலம் மக்களைப் பொருள்கள் வாங்கத் தூண்டுகிறார்கள். மக்களின் ''வாங்கும் சக்தியை '' கூட்டுவதற்காக இந்தக் கடன் அட்டைகள் வழங்கியுள்ளார்கள். மேலும் வீட்டுமனை நிறுவனங்கள் இவர்களுக்கு வங்கிகள்மூலம் கடன் உதவி அளித்து வீடுகளை வாங்கவைக்கிறார்கள். இவற்றில் சிக்கிக்கொண்ட நடுத்தரவர்க்க மக்கள் தற்போது மிகவும் இன்னல் அடைகிறார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான்!

//அவசர நிலையில் பொருளாதாரம்
கரோனாவால் அமெரிக்காவில் வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 4 வாரங்களில் 1.7 கோடி போ் வேலையிழப்புக்கான நிவாரணம் கோரி விண்ணப்பித்துள்ளனா். ‘அமெரிக்காவின் பொருளாதாரம் அவசர நிலையில் உள்ளது. ஆபத்தான வேகத்தில் மோசமடைந்து வருகிறது’ என ஃபெடரல் ரிசா்வ் வங்கித் தலைவா் ஜெரோம் ஹெச்.பவல் தெரிவித்திருக்கிறாா். பொருளாதார சரிவை ஈடுசெய்வதற்காக 2 டிரில்லியன் டாலா் புதிய கடன் திட்டங்களை அமெரிக்காவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.//

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India