புதன், 25 ஆகஸ்ட், 2021

''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி! ''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி!

 ''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி!

   ''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி!

---------------------------------------------------------------------

உரைநடைத் தமிழ் 18-ஆம் நூற்றாண்டில் தோன்றவதற்குமுன்னர், பெரும்பாலான தமிழ்ப் படைப்புகள் (இலக்கியம், தத்துவம் உட்பட) செய்யுள்நடைகளில்தான் இருந்துவந்துள்ளன. செய்யுள் நடைகளில் யாப்பு இலக்கணம் பின்பற்றப்பட்டது. 

ஆகவே யாப்பை முறையாகப் பயன்படுத்தும்வகையில் - அசை, சீர், தளை ஆகியவை சரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் - சொற்கள் பல இடங்களில் இணைத்தும் பிரித்தும் பயன்படுத்தப்பட்டன. நிலைமொழிச்சொல்லின் ஒரு பகுதியானது வருமொழியின் முதல்பகுதியாக அமைவது உட்பட பல நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. 

ஆனால் இன்றைய உரைநடைத் தமிழில் அவ்வாறு பயன்படுத்துவது மிகவும் குறைந்திருந்தாலும், முந்தைய பாதிப்புகள் இன்னும் நீடிக்கின்றன. 

இங்கு நான் ஒரு முன்மொழிவை வைக்கிறேன்.

'அறிவியற்றமிழ்' 'மக்கட்தொகை' என்று எழுதுவதற்குப்பதிலாக, 'அறிவியல் தமிழ்' 'மக்கள் தொகை' என்று பிரித்து எழுதினால் பல சிக்கல்கள் தீரும். 'சொல்லெளிமை' என்பதைச் 'சொல் எளிமை ' என்றும் 'பல்லழகாக' என்பதைப் 'பல் அழகாக' என்றும் 'பொதுவழியல்ல' என்பதை 'பொதுவழி அல்ல' என்றும் 'நாடென்று' என்பதை 'நாடு என்று' என்றும் 'நண்பருக்கில்லை' என்பதை 'நண்பருக்கு இல்லை' என்றும் பிரித்து எழுதலாம். 

அவ்வாறு இல்லாமல் செய்யுள்களில் இணைத்து எழுதுவதுபோன்று எழுதுவது தேவை இல்லை. ஆனால் நம்மை அறியாமலேயே நமது நடையில் ஆங்காங்கே சேர்த்து எழுதும் வழக்கம் நீடிக்கிறது. 

இன்று தேவைப்படாத புணர்ச்சி விதிகள் தவிர்க்கப்படலாம். தமிழ் கற்பவர்களுக்கும் எளிது. தானியங்கு மொழிபெயர்ப்பு போன்ற கணினிவழித் தமிழுக்கும் எளிது. 

தமிழ்மொழியைத் திட்டமிட்டு அடுத்த நிலைப் பயன்பாடுகளுக்கு வளர்த்தெடுக்கவேண்டும். ஆனால் இந்தச் செயலைத் தனிநபர்கள் மேற்கொள்வதைவிட, அரசாங்கமே முன்முயற்சி எடுத்து, தமிழ் அறிஞர்கள் குழு அமைத்து, இன்றைய உரைநடைத் தமிழ் எவ்வாறு அமையலாம், அமையவேண்டும் என்பதை இறுதி செய்து... 'இவ்வாறுதான் பாடநூல்கள் அமையவேண்டும, இவ்வாறுதான் இதழ்கள் அமையவேண்டும் என்று கூறலாம். 

ஒரு சொல்லோடு இணைகிற விகுதிகளை அச்சொல்லோடுதான் இணைத்து எழுதவேண்டும் (நான் செய்து பார்த்தேன் என்று எழுதாமல் 'செய்துபார்த்தேன்' என்று எழுதவேண்டும். இங்குப் 'பார்த்தேன்' என்பது இலக்கணவிகுதி. 'நான் வந்துசாப்பிட்டேன்' என்பதை 'நான் வந்து சாப்பிட்டேன்' என்று பிரித்துத்தான் எழுதவேண்டும். வந்து, சாப்பிட்டேன் இரண்டும் வெவ்வேறு சொற்கள். பொருள் தெளிவுதான் இங்கு தேவை. பொருள் மயக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது.

கணினிமொழியியல், தரவுமொழியியல் ஆகியவற்றின் உதவிகளோடு தமிழ் ஆய்வு மேற்கொள்ளும்போது, நான் சந்திக்கிற சிக்கல்களின் அடிப்படையில் இதைக் கூறுகிறேன். தரவுகளைக் கணினிக்கு ஆய்வுக்கு அனுப்புவதற்குமுன், இதுபோன்ற 'தரப்படுத்தம் ( normalization) செய்யவேண்டிய தேவை தற்போது உள்ளது. ஆனால் முன்னர் கூறியவகையில் 'தமிழ்நடைத் தரப்படுத்தம்' முன்வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். 

இவ்விடத்தில் நாம் 'தொகைச்சொற்களைப்' பிரித்து எழுதக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் பொருள் மாறிவிடும். 'வானிலை' என்பதை 'வான் நிலை' என்றோ, 'பல்கலைக்கழகம்' என்பதைப் 'பல்கலைக் கழகம்' என்றோ பிரித்து எழுதக்கூடாது. எனவே தனிச்சொல், தொகைச்சொல், தொகைச்சொற்களுக்குள்ளே நீடிக்கிற புணர்ச்சி விதிகள், இரண்டு சொற்களுக்கிடையே உள்ள புணர்ச்சிவிதிகள் என்றெல்லாம் ஆய்வுசெய்து இப்பணியை மேற்கொள்ளலாம். தமிழ்மொழியின் உள்ளார்ந்த பண்புகளுக்கும் சிறப்புகளுக்கும் பங்கம் விளைவிக்காமல் இப்பணியை மேற்கொள்ளவேண்டும். இதற்குத் தெளிவான 'தமிழ்மொழி மேம்பாட்டுத் திட்டம் தேவை.


தமிழுக்கான புதிய இலக்கணம்...

------------------------------------------------------------------------

இரண்டொரு நாள்களுக்குமுன் நான் தமிழ் உரைநடைக்குப் புதிய இலக்கணம் தேவை என்று கூறியிருந்தேன். அதுபற்றிய மேலும் சில கருத்துக்கள்....

நான் புதிய இலக்கணம் என்று கூறுவது, தற்கால உரைநடைத்தமிழில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு இலக்கணம் என்பதே ஆகும். 

தற்காலத் தமிழானது ஒரு புதிய தமிழ் இல்லை. மாறாக, தனது வரலாற்று வளர்ச்சியில்  தமிழ்மொழியானது ,  தமிழ்ச்சமூகத்தின் பதிய கருத்துப்புலப்பாடுகளின் தேவைகளையொட்டி ...  தனது சொல்வளத்திலும் இலக்கணவளத்திலும் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் தமிழ் வரலாற்றில் தமிழ்மொழியானது தனது தொடர்ச்சியில் இடைவெளி இல்லாமல் வளர்ந்துவந்துள்ளது. அவ்வாறு கருதும்போது, பழைய தமிழ்தான் இன்றைய தமிழ்.

செய்யுள் ஊடக வடிவில்மட்டுமே இருந்துவந்த தமிழ்.. இன்று உரைநடை  என்ற ஊடகத்தில் மிக வேகமாக வளர்ந்துள்ளது என்பது உண்மை. 

அதேவேளையில் சில மாற்றங்களையும் வளர்ச்சியையும் உள்ளடக்கி வளர்ந்துள்ள தமிழ்தான்  இன்றைய தமிழ் என்பது ஆகும்.  மறுப்பின் மறுப்பு (negation of negation)  என்ற அறிவியல்விதிப்படி தமிழ் வளர்ந்துள்ளது. சிலவற்றைவிட்டுவிட்டு... சிலவற்றை இணைத்துக்கொண்டு...தமிழ்மொழி வளர்ந்துள்ளது. 

அவை எவை என்பதைத் தமிழ் ஆய்வுலகம் அறிவியல்பூர்வமான ஆய்வின் அடிப்படையில் தெளிவுபெறவேண்டும்.  தனிநபர் விருப்பு, வெறுப்புக்கு இங்கு இடம் தரக்கூடாது. 

மேலும் இன்றைய தமிழ்மொழியானது பெரும்பாலும் தனது முந்தைய கட்டத்தின் இலக்கணத்தை.... கட்டமைப்பை ... பெரும்பாலும் தக்க வைத்துக் கொண்டுதான் வந்துள்ளது. எனவேதான் தமிழ் தமிழாகத்தான் நீடிக்கிறது. வேறுமொழியாக மாறவில்லை. இதுவே தமிழ்மொழியின் சிறப்பு என்று நான் கருதுகிறேன்.  

மேற்குறிப்பிட்ட நோக்கில்தான் நான் கூறிய புதிய இலக்கணம் அமைகிறது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India