இன்றைய தமிழுக்கு ஒரு புதிய
இலக்கணம் தேவையா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் திரு. மாலன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொல்காப்பியத்திற்குச்
சொன்னது நன்னூலுக்கும் பொருந்துமா? இன்று இன்னொரு நூல் தமிழுக்குத் தேவைப்படுகிறதா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆமாம் நண்பரே. நன்னூல் காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும்
இடையில் சில நூற்றாண்டுகள் இடைவெளி இருக்கிறதே! உறுதியாக நன்னூல் 100 விழுக்காடு
அப்படியே இன்றைய எழுத்துத் தமிழுக்குப் பொருந்தாது. மாற்றங்கள் உள்ளன. மாற்றங்கள்
இல்லையென்றால் தமிழ்ச்சமுதாயமும் மாறவில்லை... வளர்ச்சியடையவில்லை... எனவே தமிழும்
வளர்ச்சியடைவில்லை என்றுதானே பொருள்! இதுபற்றிப் பேராசிரியர் பொற்கோ பின்வருமாறு
கூறுகிறார் - ''தொல்காப்பியர் கால இலக்கியத் தமிழுக்கும்
நன்னூலார் கால இலக்கியத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. அதைப் போலவே இன்றைய
இலக்கியத் தமிழுக்கும் முந்தைய இலக்கியத் தமிழுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவன்
வருகிறான், அவன் வருகின்றான் முதலான தொடர்களிலுள்ள நிகழ்கால
இடைநிலைகளை நாம் பழந்தமிழில் - தொல்காப்பியர் காலத் தமிழில் காண முடிவதில்லை. ஆகவே,
தொல்காப்பியம் என்ற அந்த இலக்கணத்தில் நிகழ்கால இடைநிலைகள்
குறிப்பிடப்படவில்லை. அவர் என்ற சொல் இக்கால இலக்கியத் தமிழில் ஒருவரைமட்டுமே
குறிக்கும். பலரைக் குறிப்பதற்கு அவர் என்ற சொல்லை இன்று நாம் கையாளமுடியாது.
ஆனால் , இடைக்காலத் தமிழிலும் முற்காலத் தமிழிலும் அவர் என்ற
சொல் பலரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டிருக்கிறது. ஆகவே, அவர் என்பது நன்னூலார் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் பலர்பால்
என்று கொள்ளப்படுகிறது. இக்காலத்தில் அவர் என்பதைப் பலர்பால் என்று கொள்ளமுடியாது.
இன்றைய இலக்கியத் தமிழில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நாம்
கருத்தில் கொள்ளவேண்டும். காலந்தோறும் இலக்கிய மொழிநடையிலும் மாற்றம் ஏற்படுகிறது
என்பதை நாம் உணர்ந்துகொண்டு இன்றைய இலக்கியத் தமிழுக்கு ஏற்றவகையில் ஒரு
இலக்கணத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. இன்றைய இலக்கியத் தமிழுக்கு
நன்னூல் என்ற இலக்கணமும் தொல்காப்பியம் என்ற இலக்கணமும் போதுமானதாக அமையவில்லை.
ஆகவே, இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவை'' ( இக்காலத் தமிழ் இலக்கணம். பேரா. பொற்கோ( 2006) ப. 2
0 கருத்துகள்:
கருத்துரையிடுக