புதன், 17 செப்டம்பர், 2025

சொற்பிழை திருத்தி, ஒற்றுப்பிழை திருத்தி ஆகியவற்றில் சிக்கல்களும் 'செய்யறிவுத்திறனும்' - தமிழ்மொழி ஆய்வாளர்களின் கவனத்திற்கு!

 சொற்பிழை திருத்தி, ஒற்றுப்பிழை திருத்தி ஆகியவற்றில் சிக்கல்களும் 'செய்யறிவுத்திறனும்' - தமிழ்மொழி ஆய்வாளர்களின் கவனத்திற்கு!

-----------------------------------------------------------------------------------------------------
தமிழில் 'ஓட்டு' என்ற வினைச்சொல்லின் 'செய்து வாய்பாட்டு' வினையெச்சம் 'ஓட்டி'. எனவே 'ஓட்டி' என்பதை இங்கு 'ஓட்டு + இ' என்று பிரிக்கவேண்டும்.
பொதுவாக, தமிழில் 'ஓட்டு' ' மாட்டு' 'கொட்டு' போன்ற வினைச்சொற்கள் பெயர்களோடு இணைந்து வினைச்சொற்களாக அமைகின்றன. பின்னர் 'இ' என்னும்பெயராக்க விகுதியுடன் இணைந்து இந்த வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களாக அமைகின்றன.
படகோட்டு (படகு ஓட்டு ) --> படகோட்டி
பாக்குவெட்டு (பாக்கு வெட்டு) --> பாக்குவெட்டி
நகம்வெட்டு (நகம் வெட்டு) --> நகவெட்டி
காரோட்டு, தேரோட்டு, ஈயோட்டு போன்ற பல வினைச்சொற்கள் இவ்வாறுதான் 'இ' விகுதியை எடுத்து, பெயர்ச்சொற்களாக அமைகின்றன.
இங்கு 'படகோட்டு' என்னும் வினைச்சொல்லோடு 'இ' விகுதி இணைந்து பெயராகிறது.
அதேவேளையில் 'அவன் படகு ஓட்டிச் சென்றான்' ' தேர் ஓட்டிச் சென்றான்' என்று இகர ஈற்றுச் செய்து வாய்பாட்டு வினையெச்சத்தொடராகவும் அமைகின்றன.
'ஓட்டி' என்பது 'ஓட்டு' என்ற வினைச்சொல்லின் பெயர் வடிவம் என்று கொள்வதா? அல்லது செய்து வாய்பாட்டு வினையெச்சமாகக் கொள்வதா? 'ஓட்டி' என்பதை அகராதியில் ஒரு தனிப் பெயர்ச்சொல் என்று சேர்க்கலாமா? இகர ஈற்று செய்துவாய்பாட்டு வினையெச்சங்கள் அனைத்திலும் இப்பிரச்சினை தோன்றுகிறது.
'படகோட்டி பேசினான்' - இங்கு 'படகோட்டி' பெயர்ச்சொல்லாக இருந்தால், 'ப்' என்னும் ஒற்றை இணைத்துக்கொள்ளாது.
'அவன் படகோட்டிச் சென்றான்' - இங்கு 'படகோட்டி' என்பது இகர ஈற்று செய்து வாய்பாட்டு வினையெச்சமாக இருப்பதால், ஒற்று மிகுந்துள்ளது.
கணினிக்கு என்ன சிக்கல் என்றால், 'படகோட்டி' பெயரா அல்லது வினையெச்சமாக என்பதை முடிவு எடுக்கவேண்டும். வாக்கியத்தில் 'படகோட்டி' எச்சூழலில் அமைகிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒற்று இடவா வேண்டாமா என்பதை முடிவு செய்யமுடியும்.
'மென்தமிழ்' தமிழ்ச்சொல்லாளரில் இவ்வாறு தொடர்கள் வரும்போது , பயனரிடம் தன் ஐயத்தை முன்வைக்கிறது. பயனர் கொடுக்கும் கருத்தின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கும். இந்த முடிவைப் பொறுத்துத்தான் அது ஒற்று தேவையா இல்லையா என்பதை முடிவு எடுக்கும்.
இதுபோன்று பல சொற்களில் ('பேணி', 'காட்டி' 'பேசி' ) பிரச்சினை தோன்றுகின்றது. இந்தச் சொல்லின் முன்பின் சொற்கள், தொடர்களைப் (Context Window) பொறுத்துத்தான் கணினி முடிவுக்கு வரமுடியும். ஆனால் பயனர்கள் அனைவருக்கும் வெளிப்படையான தமிழ் இலக்கண அறிவு இருக்கிறது என்று கொள்ளமுடியாது. அப்படியென்றால், கணினி நிரல் தானாகவே இந்த ஐயத்திற்கு விடை காணவேண்டும். இதுபோன்ற நீடிக்கிற சிக்கல்களுக்கு - பயனர்களின் உள்ளீடுகள் இல்லாமல் முடிவு எடுப்பதற்கு - செய்யறிவுத்திறன் பயன்படலாம்.
'அவர் வேலை பார்த்தார் - வேலைப் பார்த்தார்'
' அவர் முக்கிய தலைவர் - முக்கியத் தலைவர்'
'மென்தமிழ்' தற்போது பயனர்களின்முன் வைக்கிற ஐயங்களுக்குத் தானாகவே விடை காணவேண்டும். பயனர்களிடம் கேட்கக்கூடாது.
அகராதிச்சொற்களிலும் இதுபோன்ற சிக்கல் உண்டு.
'அவன் பழம் சாப்பிட்டான்' என்பதற்குப் பதிலாக 'அவன் பலம் சாப்பிட்டான்' என்று தட்டச்சு செய்தால், தற்போது கணினி நிரல் இது சரியென்று கருதி விட்டுவிடும். ஏனென்றால் 'பலம்' என்பதும் அகராதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டுமே பெயர்ச்சொற்கள். இதில் சரியான விடைகாணவேண்டுமென்றால், 'பலம்' 'பழம்' என்னும் சொற்களின் முன்பின் சொற்கள், தொடர்கள்பற்றிய அறிவு தேவை. இதுவும் 'மென்தமிழில்' தற்போது ஒரு சிக்கல்.
இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டியது, சொற்பிழை திருத்தி , சந்திப்பிழை திருத்தி என்பவற்றைத் தனிச்சொற்களைமட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கமுடியாது. தொடரியல் தேவை.
சில இடங்களில் பொருண்மையியலும் தேவைப்படும்.
'அது பழக்கூடை' 'அது பழங்கூடை' . இங்குப் 'பழம்' என்பது ஒரு பெயர்ச்சொல்லா அல்லது பெயரடையா என்பதுபற்றித் தெளிவு தேவை .
தொகைச்சொற்களிலும் இதுபோன்ற சிக்கல் நீடிக்கிறது. 'அந்த மண் சட்டியில் இருக்கிறது' - 'அந்த மண்சட்டியில் (மட்சட்டியில்) தண்ணீர் இருக்கிறது'. முதலாவது தொகாநிலைத்தொடர். இரண்டாவது தொகைநிலைத்தொடர்.
இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க , 'செய்யறிவுத்திறன்' வழிமுறை பயன்படலாம்; முயல்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India