வெள்ளி, 10 ஜனவரி, 2025

தொழிற்பெயர் - ஆக்கப்பெயர் . . . ஓர் ஐயம்! இலக்கண ஆய்வாளர்களின் கருத்து தேவை!

 தொழிற்பெயர் - ஆக்கப்பெயர் . . . ஓர் ஐயம்!

இலக்கண ஆய்வாளர்களின் கருத்து தேவை! 

-------------------------------------------------------------------------

சில பாட இலக்கண நூல்களில்  'படிப்பு' 'ஓட்டம்' 'நடை' 'வருகை' 'பயிற்சி' 'முயற்சி ' 'அயர்ச்சி' 'தளர்ச்சி' போன்ற சொற்கள் தொழிற்பெயர்கள் என்று கூறப்பட்டுள்ளன. 'அவ்வாறு இல்லை, வினையிலிருந்து பிறந்திருந்தாலும், இவையெல்லாம் முழுப்பெயர்களாகவே தொடர்களில் செயல்படுகின்றன' என்று வேறு சில நூல்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றிற்கும் தொழிற்பெயர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று கூறப்படுகிறது. இதில் என்ன முடிவு எடுக்கலாம்? 

1) 'படித்தல்' 'ஓடுதல்' 'முயலுதல்' போன்றவை வினையிலிருந்து பிறந்த வினைநடைப்பெயர்கள் - அதாவது தொழிற்பெயர்கள்; இவற்றிற்குப் பெயர்த் தன்மையும் இருக்கிறது - 'வேற்றுமை ஏற்கிறது'!. அதேவேளையில் வினைக்குமுன்னர் வரும் வினையடைகளை ஏற்பதால் வினைப்பண்பும் நீடிக்கிறது. 

'அவன் வேகமாக வருதலை நான் பார்த்தேன்' - இத்தொடரில் 'வருதல்' என்பது இரண்டாம் வேற்றுமை உருபையும் ஏற்கிறது; அதேவேளையில் தனக்குமுன்னர் - பிற வினைச்சொற்களைப்போன்று- வினையடைகளை ஏற்கிறது. பெயரெச்சமோ அல்லது பெயரடையோ முன்னர் வராது.

2) ஆனால் 'முயற்சி' அயர்ச்சி' 'தளர்ச்சி' போன்றவை வினைகளிலிருந்து பிறந்தவை என்றாலும் பெயர்களைப்போன்று வேற்றுமைகளையும் ஏற்கின்றன; தமக்கு முன்னர் 'பெயரடைகளையும்' - 'பெயரெச்சங்களையும்' - ஏற்கின்றன; வினையடைகள் வராது. 

'அவன் படித்த படிப்பை அனைவரும் பாராட்டுகின்றனர்; அது நல்ல படிப்புத்தான்'- இங்குப் 'படிப்பு' என்பது வேற்றுமை உருபையும் ஏற்கிறது; தனக்குமுன்னர் 'படித்த' என்ற பெயரெச்சத்தையும் 'நல்ல' என்ற பெயரடையையும் ஏற்கிறது. வினையடை இதற்குமுன் வராது. 

அதாவது, முழுமையான 'பெயர்ச்சொல்லாக' மாறிவிட்டது. இதை ஆக்கப்பெயர் என்று கூறலாம்; ஆனால் தொழிற்பெயர் என்று கூறவியலாது. 

3) தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் வேற்றுமை உருபுகளை ஏற்பதால் பெயர்த் தன்மையும் கொண்டுள்ளன; ஆனால் தமக்குமுன்னர் வினையடைகளை ஏற்பதால் இன்னும் வினைத்தன்மையையும் இழக்கவில்லை. 

4) ஆனால் ஆக்கப்பெயர்கள் வினைகளிலிருந்து பிறந்தாலும் தொடர்களில் அமையும்போது  முழுமையான பெயர்களாகவே அமைகின்றன. 

ஆகவே, தொழிற்பெயர், வினையாலணையும்பெயர், ஆக்கப்பெயர் மூன்றுமே வினையிலிருந்து பிறந்தாலும் தொடரிலக்கண அடிப்படையில் . . .  தொழிற்பெயரும் வினையாலணையும்பெயரும் +பெயர், +வினை என்ற வகையில்தான் அமைகின்றன; ஆனால் ஆக்கப்பெயர்கள் முழுக்கப் பெயர்களாகவே அமைகின்றன.   

எனவே, 'முயற்சி' 'படிப்பு' 'தளர்ச்சி' போன்றவை அகராதிகளில் முழுப்பெயர் வரிசையில்தான் அமையவேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், 'தொழிற்பெயர்களாகவே நீடித்தால், அகராதிச்சொற்கள் வரிசையில் அவை இடம்பெறாது; இடம்பெறத்  தேவை இல்லை என்றும் கூறமுடிகிறது. 

மேற்குறிப்பிட்ட இரண்டு கருத்துகளில் எதை ஏற்றுக்கொள்ளலாம் என்பதில் எனக்கு ஓர் ஐயம்! இலக்கண ஆய்வாளர்களிடமிருந்து தீர்வு எதிர்பார்க்கிறேன்.

'ஆடல்' பாடல்' என்ற தொழிற்பெயர்கள் தற்போது 'முழுப்பெயர்களாகவே' அகராதிகளில் இடம்பெறுகின்றன. இது சரியா? வருமிடத்தைப்பொறுத்து, தொழிற்பெயராகவும் இருக்கலாம்; முழுப்பெயராகவும் இருக்கலாம். 'பெற்றோர்' என்பது 'பரிசு பெற்றோர்' என்ற தொடரில் வினையாலணையும்பெயராக நீடிக்கிறது; ஆனால் 'நல்ல பெற்றோர்' 'படித்த பெற்றோர்' என்பதில் முழுப்பெயராகவும் நீடிக்கிறது.


---------------

'அவன் வேகமாக வருதலை நான் பார்க்கிறேன்' என்பது தாங்கள் கூறுவதுபோல, இயல்பாக இல்லை! ஆனால் 'அவன் வேகமாக வருவதை நான் பார்க்கிறேன்' என்பது இயல்பாக இருக்கிறது. 'வருதல்' என்பதும் 'வருவது, வருகிறது, வந்தது' ஆகியவையும் தொழிற்பெயர்களாக இருப்பினும். அவற்றிற்கிடையே ஒரு சிறு வேறுபாடும் தெரிகிறது.

வரவு, வருகை ஆகியவை தங்களுக்குமுன்னர் பெயரெச்சம், பெயரடைகளை ஏற்கின்றன; வேற்றுமை உருபுகளையும் ஏற்கின்றன. எனவே, இவற்றை முழுப்பெயர்களாகத்தான் கொள்ளவேண்டும் என நான் கருதுகிறேன்.

ஆனால் 'வரல்' 'வருதல்' 'வருவது' 'வந்தது' 'வருகிறது' என்று ஐந்து தொழிற்பெயர் வடிவங்கள் இருக்கின்றன. இந்த ஐந்துமே தங்களுக்குமுன்னர் பெயரெச்சங்களையோ , பெயரடைகளையோ ஏற்கா. எனவே, இவை தொழிற்பெயர்கள் என அழைக்கப்படலாம். 'வரவு' 'வருகை' இரண்டும் முழுப்பெயர்களாகத்தான் கொள்ளப்படவேண்டுமென நான் கருதுகிறேன்.

'அல்' ஈறுக்கும் 'தல்' ஈறுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டைப் பொற்கோ கூறுகிறார். 'அல்' ஈறு வருகிற எல்லா இடங்களிலும் 'தல்' ஈறு வரமுடியும்; ஆனால் 'தல்' ஈறு வருகிற எல்லா இடங்ஙளிலும் 'அல்' ஈறு வராது.

தரல் - தருதல்; செலல் - செல்லுதல்; கொளல் - கொள்ளுதல். ஆனால் 'படித்தல்' 'நடத்தல்' முதலானவற்றிற்கு இணைகளாக 'அல்' ஈற்றுத் தொழிற்பெயர் வடிவங்கள் இல்லை. இதற்கும் காரணம் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

(வருகை என்பது 'அவன் வருகையில் (வரும்போது) மழை பெய்தது' என்ற தொடரில் வினையெச்சம்; 'அவன் வருகையில் எனக்கு மகிழ்ச்சி' என்ற தொடரில் பெயர்.)

என்னுடைய ஐயம் . . . 'முயற்சி' 'வருகை' 'படிப்பு' 'தளர்ச்சி' போன்றவற்றை முழுப்பெயர்களாகக் கருதி, அகராதியில் இணைக்கலாமா? கூடாதா? என்பதாகும். க்ரியா அகராதியில் இவை முழுப்பெயர்களாகவே கொள்ளப்பட்டு, அகராதியில் இடம் அளிக்கப்பட்டுள்ளன.

-------------------

முழுப்பெயர் - +வேற்றுமை, - காலம் + பெயரெச்சம் (+பெயரடை)

முழுவினை - - வேற்றுமை + காலம் + வினையெச்சம் (+வினையடை)

தொழிற்பெயர் - +வேற்றுமை + காலம் (தல், அல் விகுதி பெறாத தொழிற்பெயர்கள்) + வினையெச்சம் (+வினையடை)

வினையாலணையும்பெயர் - + காலம் + வேற்றுமை +வினையடை (+வினையடை)

+ வேற்றுமை + காலம் என்பதோடு + பெயரெச்சம் (+பெயரடை) என்ற மூன்று கூறுகளும் பெற்றிருந்தால் , முழுப்பெயர்.

+ வேற்றுமை + காலம் + வினையெச்சம் (+வினையடை) என்ற மூன்று கூறுகளும் பெற்றிருந்தால் , அவை 'முழுப்பெயர்கள் ' இல்லை! வினையின் பண்புகளை முழுமையாகக் கைவிடவில்லை.

------------------------


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India