தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா?
அதை ஏன் முற்போக்காளர்கள் கண்டிக்கவில்லை?
-----------------------------------------------------------------
நெல்லையில் அண்மையில் நடைபெற்ற ஆணவக்கொலையைத் தொடர்ந்து, மற்றொரு விமர்சனமும் முகநூலில் பார்க்கிறேன். ''தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா?'' என்பதே அந்த விமர்சனத்தின் உள்ளடக்கம்.
நூற்றாண்டுகாலமாகத் தலீத் மக்களின்மீதான பிற சாதியினரின் மிகக் கொடுமையான தீண்டாமையை யாராலும் மறுக்கமுடியாது. ஒரு சாதி, இரண்டு சாதிகள் இல்லை . . . தமிழகத்தில் உள்ள அனைத்து ''மேல்சாதியினரும் இடைச்சாதியினரும்'' தலீத் மக்களிடம் தீண்டாமையைப் பின்பற்றினர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர்களை யாரும் தொடக்கூடக் கூடாது. இந்தச் சாதியினரின் குழந்தைகள் தலீத்களைத் தெரியாத்தனமாக தொட்டுவிட்டால், 'தீட்டு' என்று கூறி, குழந்தைகளின் ஆடைகளைக் களைவதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன்! ஆதிக்கச் சாதியினரின் தெருக்களில் தலீத்கள் காலணிகூட அணிந்துசெல்லக்கூடாது! ஊருக்கு வெளியே தனியே தலீத்களுக்குத் தனிக் குடியிருப்பு! பள்ளிக்கூடங்களில் தனி அமர்வு! கோயில்களில் ஏனைய சாதியினருடன் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்யக்கூடாது!
இதுபோன்ற நிலை தலீத் அல்லாத மேல்சாதியினர், இடைச்சாதியினர் யாருக்கும் கிடையாது என்பதே உண்மை. அவர்களுக்கிடையில் திருமண உறவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் தொடுவதற்குத் தடை இல்லை. இணைந்து பள்ளிகளில் அமரத் தடை இல்லை! கோயில்களில் நுழையத் தடை இல்லை!
தலீத் மக்களும் இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சூழல் அப்போது இருந்தது இல்லை எனக் கருதுகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் தலீத் மக்களிடையே கல்வி, தொழில் போன்றவற்றின் காரணமாக விழிப்புணர்வு வந்துள்ளது. தலீத் இளைஞர்கள் விழிக்கத் தொடங்கினர். கல்வி, தொழில் ஆகியவற்றால் சற்று வாழும் வசதிகளைப் பெற்ற தலீத் இளைஞர்கள் தங்களது முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கொந்தளிக்கத் தொடங்கினர்.
இந்த வளர்ச்சி நிலையில் தலீத் அல்லாத பிற சாதியினரின் குடும்ப வாரிசுகளுடன் கல்வி நிறுவனங்கள், உற்பத்தித் தளங்களில் தலீத் இளைஞர்கள் தொடர்புகொள்ளும் ஒரு வளர்ச்சி நிலை ஏற்பட்டது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு காதல், திருமணங்கள் நீடிக்கத் தொடங்கியுள்ளன. இதை மேல்சாதியினர் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை! தலீத்களைத் தாக்கத் தொடங்கினர். இதுவரை எதிர்த்துப்போராடாத தலீத் மக்கள் இப்போது திருப்பித் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். தலீத் இளைஞர்கள் தங்கள்மீது பிற சாதியினர் வன்முறைத் தாக்குதல் தொடுக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதை விரும்பவில்லை. திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள்.
இதன் பின்விளைவு . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதினர், இடைத்தட்டு சாதியினர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் தொடங்க ஆரம்பித்தது.. இதுபோன்ற தற்காப்புத் தாக்குதல்களில் தலீத் இளைஞர்கள் ஈடுபடும்போது, அவர்களிடையே 'சாதிய உணர்வு' வளரத்தானே செய்யும்! இது அவர்கள்மீது 'திணிக்கப்பட்ட' ஒரு 'கட்டாயச் சூழல்தானே'!
ஒட்டுமொத்தமாகச் சாதிய உணர்வு அடிப்படையில் மேல்சாதியினர், இடைத்தட்டுச் சாதியினர் 'சாதிய ஒடுக்குமுறைகளை' தலீத் மக்களின்மீது ஏவும்போது, தலீத் இளைஞர்கள் தற்காப்புக்காக, சுய மரியாதைக்காக ஒன்றுபட்டு போராடவேண்டிய சூழல் ஏற்பட்டது. தாங்கள் தாக்கப்பட்டால், திருப்பித் தாக்குவோம் என்று தலீத் இளைஞர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதை மனத்தளவில்கூட ஏற்றுக்கொள்ள மேல்சாதியினர் தயார் இல்லை. இதன் விளைவு . . . தலீத் மக்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வன்முறைகளில் ஈடுபடவேண்டிய தேவை அவர்கள்மீது திணிக்கப்பட்டது. இதை நான் சரி என்று கூறவரவில்லை. வர்க்க உணர்வின் அடிப்படையிலான அரசியல் உணர்வு தலீத் மக்களிடையேயும் பிற சாதியின மக்களிடமும் வளராத காரணத்தால், ஆதிக்கச் சாதியினர்களிடையே நீடிக்கிற பணக்காரர்கள் தங்கள் நலன்களுக்காக இப்போராட்டங்களை 'சாதியப் போராட்டங்களாக' வளர்க்கத் தொடங்கினர். எல்லாச் சாதிகளிலும் உள்ள பணக்காரர்கள் தங்கள் தங்கள் சாதிகளில் 'அடியாட்களை' 'கூலிப்படைகளை' வளர்த்துவிடுகிறார்கள். இதை இந்தியச் சமூகத்தின் ஆளும் வர்க்கங்களும் திட்டமிட்டும் 'தூண்டிவிடுகின்றனர்'. அவர்களுக்கு மக்களிடையே வர்க்க அடிப்படையிலான அரசியல் உணர்வு தோன்றி வளர்ந்துவிடக்கூடாது. 'சாதிய மோதலா' அல்லது 'வர்க்க அரசியலா' - எது வளரவேண்டும் என்பதில் ஆளும் வர்க்கங்கள் தெளிவாக இருக்கின்றன!
அதன் விளைவே . . . இன்றைய சாதிய அடிப்படையிலான வன்முறைகள்! எனவே, தலீத் இளைஞர்கள் மத்தியில் இன்று சாதிய உணர்வு நீடிக்கிறது என்றால், அது அவர்களின் 'தற்காப்புக்காக' வளர்ந்துள்ள ஒன்றாகும். இது தவறான ஒன்று என்பது 100 விழுக்காடு உண்மை. மேல்சாதியினரின் சாதியக் கொடுமைகளை எதிர்த்து நிற்க 'சாதிய உணர்வையே' தலீத் மக்கள் கையாளக்கூடாது! மேல்சாதியினரின் சாதிய உணர்வுக்கு மாற்று தலீத் மக்களின் சாதி உணர்வு இல்லை! உண்மையான வர்க்க அரசியல் உணர்வும் அதன் அடிப்படையிலான போராட்டங்களுமே உண்மையான , சரியான வழிமுறைகள்! ஆனால் ஆளும் வர்க்கங்கள் அதுபோன்ற அரசியல் உணர்வுகள் தலீத் மக்களிடையே வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சாதிய அடிப்படையிலான மோதல்கள்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கவலைப்படவும் அவர்களுக்குத் தேவை இல்லை! உழைக்கும் மக்கள் தங்களுக்கிடையே சாதிய அடிப்படையில் மோதிக்கொண்டால் ஆளும் வர்க்கங்களுக்கு நல்லதுதானே! இது பிரித்தாளும் சூழ்ச்சிதானே!
இதிலிருந்து தலீத் இளைஞர்களை மட்டும் அல்லாமல் பிற சாதியின இளைஞர்களையும் அரசியல் படுத்தவேண்டும். இங்குக் கவனமாகப் பார்க்கவேண்டியது ஒன்று. தற்போதைய தேர்தல் அரசியலுக்குச் சாதிய அடிப்படையிலான மோதல்கள் தேவை. எனவே அவை சாதிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தத்தான் செய்யும்.
நான் கூறுவது, சமூக வளர்ச்சிக்கான, உழைக்கும் மக்களுக்கான . . . வர்க்க அடிப்படையிலான அரசியல்!
சாதிய அடிப்படையிலான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியதுதான்! அதற்கு மாற்று வர்க்க அடிப்படையிலான அரசியல் உணர்வுதான்! ஆனால் இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? இதுவே இன்று நம்முன் நீடிக்கிற வினா! விடை தேடலாம்!
என்னுடைய வயது இப்போது 75. கடந்த 65 ஆண்டுகளாக நான் பார்த்த நேரடியான அனுபவமும் (குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்!) , எனது தத்துவ அரசியல் அடிப்படையுமே மேற்கூறிய எனது கருத்துகளுக்கு அடிப்படை.