தமிழ்மொழி - ஆட்சிமொழி
-----------------------------------
'தமிழ்மொழி உட்பட அனைத்து இந்திய மொழிகளும் இந்திய அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும், இந்திமொழிக்குமட்டும் அந்தத் தகுதி ஏன்?' என்பது தொடர்பான உரையாடல் -
எனக்கும் நண்பர் திரு மாலன் அவர்களுக்கும் இடையில்!
----------------------------
'தமிழ் உட்பட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்கு ' என்று தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட கோரிக்கையை நீர்த்துப்போக, நடுவண் அரசு செய்த காரியம், 'தமிழுக்குச் செம்மொழித் தகுதி தருகிறேன்; ஆண்டுக்குச் சில கோடிகள் தருகிறேன், எதையாவது செய்துகொள் ' என்று கூறிவிட்டது. இப்போது தமிழ்மட்டும் இல்லாமல் அநேக மொழிகளுக்குச் 'செம்மொழித்தகுதி' கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து, இப்போது இன்னொன்றைச் செய்துவருகிறது.
'' இந்தி - 22 பிற மொழிகளுக்குச் செயற்கைச் செய்யறிவுத்திறன் மென்பொருள் உருவாக்குகிறோம். 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். இனி. நீங்கள் தமிழில் நடுவண் அரசுக்குக் கடிதங்கள் அனுப்பலாம். நாங்கள் அதை இந்தியில் மொழிபெயர்த்துக் கொள்கிறோம். பதில்களை நாங்கள் இந்தியிலேயே எழுதுவோம். ஆனால் உங்கள் கைக்குத் தமிழிலிலேயே கிடைக்கும். எனவே, இனித் தமிழை ஆட்சிமொழி ஆக்குங்கள் என்ற கோரிக்கை தேவை இல்லை'' -
இதுதான் இன்றைய நிலை.
நண்பர் திரு மாலன் அவர்கள்
--------------------------------------------
செம்மொழி நிறுவனம் 'எதையாவது' செய்யவில்லை. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களை பல (அநேகமாக எல்லா இந்திய மொழிகளிலும்) அயலக மொழிகளிலும் (உதாரணம் மலாய்) பதிப்பித்திருக்கிறது. அண்மையில் கிறிஸ்துவக் கல்லூரி மேனாள் பேராசிரியர் பாலுசாமி (பாரதி புத்திரன்) தேடித் தொகுத்துள்ள இரு அருமையான நூல்களை, 'திருப்புடை மருதூர் ஓவியங்கள்' சமண ஓவியங்கள்; ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறது. கடும் உழைப்பைக் கோரும் நூல்கள் அவை. மொழிமாற்றுக் கருவி தேவைதானே? மொழியின் முதல் நோக்கமே தொடர்புதானே? (communication)
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------
நன்றி நண்பர் மாலன் அவர்களே. தமிழ்மொழி இந்தியாவின் அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு உரிய ஆட்சிமொழி தகுதி கொடுக்கப்பட்டால், செம்மொழி நிறுவனம் என்ன, மேலும் பல நிறுவனங்கள் தமிழுக்கு உருவாக்கப்படும் என்பது தங்களுக்குத் தெரியாதது இல்லை. ஆட்சிமொழியாக இந்தி இருப்பதால் அதன் வளர்ச்சிக்கு எல்லா முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதைத்தான் நான் கூறியுள்ளனே.
இப்போதைய செம்மொழித் தமிழ் ஆய்வு நடுவண் நிறுவனம் தேவை இல்லை, அது ஒன்றும் செய்யவில்லை என நான் கூறவில்லை.
மிக மிக முக்கியமான, முதன்மையான கோரிக்கை, தமிழ்மொழி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்கவேண்டும் என்பதே. அதற்கடுத்த கோரிக்கைகளே மற்றவை எல்லாம்!
1965-இல் நடைபெற்ற மாபெரும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைக்கு நடுவண் அரசு என்ன செய்துள்ளது? இன்றுவரை தமிழினம் முன்வைக்கிற ஆட்சிமொழிக் கோரிக்கையை ஏன் நிறைவேற்றத் தயார் இல்லை? அதற்குத்தான் எனக்கு விடை வேண்டும்.
குழந்தைக்கு 'லாலிபப்பும்' கொடுங்கள். வேண்டாம் என்று நான் கூறவில்லை! முதலில் அது தொடர்ந்து உயிரோடும் நலத்தோடும் நீடிக்கத் தேவையான சத்துணவைக் கொடுத்துவிட்டு, மிட்டாய்களையும் கொடுக்கட்டும் என்றுதான் நான் கூறுகிறேன்.
நண்பர் திரு மாலன் அவர்கள்
----------------------------------------------------------
1.//965-இல் நடைபெற்ற மாபெரும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைக்கு நடுவண் அரசு என்ன செய்துள்ளது?// அப்போது தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டதா? 1950ல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது 15 ஆண்டுகள் வரை இந்தியும், இந்தி வழங்காத மாநிலங்களுக்காக ஆங்கிலமும் அரசின் அலுவல் மொழிகளாக இருக்கும், அந்தப் 15 ஆண்டுகளைப் பயன்படுத்தி அந்த மாநிலங்கள் இந்தி கற்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் முடிவாகியிருந்தது. அந்தக் கெடு 1965 ஜனவ்ரி 25ல் முடிவடைந்தது. அதன்பின் இந்தி மட்டுமே தொடரும் என்ற நிலையில் போராட்டம் நடந்தது. ஆங்கிலமும் தொடர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் விளைவாக அந்த மாநிலங்கள் விரும்பும் வரையில் ஆங்கிலம் தொடரும் எனச் சட்டம் திருத்தப்பட்டது. தமிழோ, பிற மாநில மொழிகளோ அலுவல் மொழி என்ற கோரிக்கை அப்போது வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 2. தமிழகக் அரசியல் கட்சிகள் (தமிழினம் என்று ஒன்று இல்லை) மத்திய அரசில் அங்கம் வகித்திருக்கின்றன. ஒரு கால கட்டத்தில் மத்திய அரசின் பெரும்பான்மை பெறாத நிலையில் அவை தமிழகக் கட்சிகளின் ஆதரவைக் கோரிப் பெற்றன. அந்தக் கோரிக்கைக்குப் பதிலாக அந்தக் கட்சிகள் அமைச்சர் பதவிகளைப் பெற்றன. ஆனால் தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் இல்லையெனில் எங்கள் ஆதரவு இல்லை எனச் சொல்லவில்லை. வாய்ப்பு இருந்த போது அதைக் கோட்டைவிட்டுவிட்டு இப்போது புலம்புவதில் என்ன பயன்? 3. எனக்குத் தெரிந்து செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் போல் இந்திக்கு ஏதும் இல்லை. வேறு அமைப்புகளும் இருப்பதாக நானறியவில்லை.
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------
நான் வலியுறுத்துகிற - முன்வைக்கிற முதல் கோரிக்கை . . . 'தமிழ் உட்பட அனைத்து இந்தியமொழிகளும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும்' . அதையொட்டி நான் கூறவந்தது, சிறு சிறு சலுகைகளைக் கொடுத்துவிட்டு, அடிப்படையான , முதன்மையான பிரச்சினை திசைதிருப்பப்படுகிறதே என்பதுதான்! . அதுபற்றிப் பேசுவோம். நான் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தேவை இல்லை என்று கூறவில்லை.
நடுவண் அரசின் உண்மையான நோக்கம் . . . திசை திருப்புவதே! முதன்மையான கோரிக்கையை மழுங்கடிப்பதே! ஆட்சிமொழித் தகுதியைத் தமிழுக்கு முதலில் அளிக்கட்டும்! அதன்பிறகு என்ன 'மிட்டாய்' கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளலாம்! 'மிட்டாயும்' தேவைதான்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக