தமிழ் படித்தவர்களுக்கு மட்டும்தானா அவலநிலை?
----------------------------------------------------------------------
ஆங்கிலவழிக் கல்வியில் படித்தவர்களுக்குமட்டும் இன்று வேலை வாய்ப்பு இருக்கிறதா? அல்லது இயற்பியல், பொறியியல் படித்தவர்களுக்குமட்டும் வேலை கிடைத்துவிடுகிறதா?
நேற்று ஒரு கணினிப் பொறியியல் படித்தவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் தொகுப்பூதியத்தில் வேலை பார்க்கிறார் . . . அதுவும் அரசுசார்ந்த ஒரு நிறுவனத்தில்! ஐந்து ஆண்டுகளாக ஊதியம் மாதம் 18 ஆயிரம்! அவருடைய நண்பர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரும் அரசு சார்ந்த நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வேலைபார்த்து, இப்போது தொகுப்பூதியம் 30 ஆயிரம்.
கடந்த சில நாள்களாக, தமிழ்நாடு அரசுக் கல்லூரியில் பல ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணிசெய்கிற விரிவுரையாளர்கள் . . . தொகுப்பு ஊதியத்தை அதிகரிக்கச் சொல்லி, நூற்றுக்கணக்கில் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
தற்போது நடுவண் அரசு அல்லது மாநில அரசுகளோ மேற்கொள்கிற திட்டம். .
பல்வேறு பணிகளுக்கு நிரந்தரமாக நபர்களை நியமிக்காமல், அப்பொறுப்பைக் 'குத்தகைக்கு' விடுகிறார்கள் . . . அதுதான் Out Sourcing ! குறிப்பிட்ட பணிகளையும் அதற்கான மொத்தத் தொகையையும் வெளியார் நிறுவனங்களுக்குக் கொடுத்துவிடுவார்கள். அரசுகளுக்கு குறைந்த ஊதியத்தில் தேவையான 'பணிகள்' நடந்துவிடும். கல்வித்துறை, மருத்துவத் துறை என்று பல துறைகளில் 'மௌனமாக' இது நடந்துவருகிறது! தமிழ்நாடும் இதற்கு விலக்கு இல்லை! இதைப்பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் கவலைப்படுவதாக இல்லை!
''வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதற்கு ' அவர்களுக்குத் தெரிந்த 'ஒரே வழி' பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதுதான் .. வ உ சி பிறந்த மண்ணில்கூட! யார் அதிகமாக பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனங்களை இங்குக் கொண்டுவருகிறார்களோ, அவர்கள்தான் 'சிறந்தவர்கள்'! யார் ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மூலதனம் இடுகின்றன? என்பதுதான் இங்குப் பிரச்சினை! இதில்தான் அரசியல் கட்சிகள் போட்டி போடுகின்றன. எதற்காக அந்நியர்களை எதிர்த்துப் போராடி பகத்சிங் உட்பட உயிரிழந்தார்கள் என்பதே மறந்துவிட்டது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக