செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சியும் சமுதாயப் பிரச்சினைகளும் . . .
--------------------------------------------------------------------------
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக நிற்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உற்பத்திசக்திகள் வளரவேண்டும்; வளரத்தான் செய்யும். அதை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது. தடுத்துநிறுத்தவும்கூடாது. செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சி வரவேற்கப்படவேண்டியதே! அதில் ஐயமே வேண்டாம்!
சமுதாயத்தில் ஒரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் குறிப்பிட்ட துறைகளில் தேவையான தொழிலாளிகள் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அதேவேளையில் அவ்வாறு உபரியான தொழிலாளிகளை ஏற்றுக்கொள்கிற புதிய தொழில் துறைகள் உருவாகும்போது, சிக்கல் இல்லை!
மேலைநாடுகளில் 17,18 ஆம் நூற்றாண்டுகளில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்போது, உபரி விவசாயிகளை ஏற்றுக்கொள்ள நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகள் பெருகின. எனவே சிக்கல் இல்லை.
ஆனால் . . . 17,18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய நிலைமை தற்போதைய ஏகாதிபத்திய நாடுகளில் இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருபுறம் பெரும் நிறுவனங்களுக்கு லாபம். ஆனால் அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு நஷ்டமும் கஷ்டமும். கடுமையான பொருளாதார நெருக்கடி.
எனவே, பாதிக்கப்படுகிற தொழிலாளிகளை உட்கிரகித்துக்கொள்ளும் அடுத்த நிலை வளர்ச்சி இல்லையென்றால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகத்தான் செய்யும். மேலும் வேலையில்லாதவர்களின் கைகளில் காசு இல்லையென்றால், நுகர்பொருள் வாங்க முடியாது.
அதன் விளைவு . . . நுகர்பொருள் உற்பத்தியும் பாதிக்கப்படும். நுகர்பொருள் பாதிக்கப்படும்போது, அதன் தொடர்ச்சியாக அவற்றிற்குத் தேவையான பெரும் எந்திரங்களை உற்பத்திசெய்யும் பெருந்தொழிற்சாலைகளிலும் பாதிப்பு ஏற்படும். இது ஒரு மிகப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுசெல்வது உறுதி.
ஏகாதிபத்திய நாடுகள் தங்களது பொருளாதார நெருக்கடியை வளர்ச்சியடையாத நாடுகளின் தலையில் கட்டுவார்கள்! மேலும் இந்த நாடுகளிலும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை அமுல்நடத்தும்போது, வேலையில்லாத்திண்டாட்டம் பெருகும். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ( இன்ஃபோசிஸ்ஸில் இப்போது நடந்ததுபோல்) பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இப்போதே மென்பொருள் நிறுவனங்கள் இங்குக் கடுமையான நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டு, பணியாளர்கள் வேலை இழந்துவருகிறார்கள்!
இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகமாகும். அதன் விளைவு, நுகர்பொருள்களின் விலையும் கூடும்! ஒருபுறம் வேலையில்லாத் திண்டாட்டம் . . . மறுபுறம் விலைவாசி ஏற்றம்! வரும் ஆண்டுகளில் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளுக்கு இந்தியா உட்படும்!
ஆனால் இதுபற்றியெல்லாம் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்குக் கவலை இல்லை! இதைப்பற்றிப் பேசக்கூடமாட்டார்கள்! 'தேர்தல் கூட்டணி' . . . 'தேர்தல் வியூகம் . . . இலவசங்கள் அறிவிப்பு! மக்களைத் திசைதிருப்ப '' பெரியார்'' பிரச்சினைகள்! 'திராவிடம் - தமிழம்'' விவாதங்கள்! 'முருகர் கோயிலா, முஸ்லீம் தர்காவா?'' சம்பாதித்து முடித்த நடிகர்களின் அரசியல் பிரவேசம் வேறு!
உறுதியாக, இந்த அவல நிலைக்கு எதிராக மக்கள் விரைவில் திரளுவார்கள் . திரளுவதற்குத் தள்ளப்படுவார்கள்! இது சமுதாயப் புறநிலை விதி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக